Saturday, 9 April 2022

இரசிய விமானங்களுக்கு சவாலான Starstreak ஏவுகணைகள்

  


உக்ரேனுக்கு பிரித்தானியா 2022 மார்ச் மாதம் இனாமாக வழங்கிய உக்ரேனியப் படையினர் இரசியாவின் MI-24 உலங்கு வானூர்தியை சுட்டு விழுத்தியதில் இருந்து Starstreak ஏவுகணை படைத்துறை நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரேனியர்களுக்கு அவர்களின் அயல் நாடு ஒன்றில் வைத்து பிரித்தானியப் படைத்துறை நிபுணர்கள் Starstreak ஏவுகணைகளை இயக்குவதற்கு பயிற்ச்சி வழங்கியிருந்தனர். Starstreak ஏவுகணைகளைப் பெட்டியில் எடுத்துச் சென்று ஒரு சில நொடிகளில் பொருத்த முடியும். உக்ரேனியர்களால் சுடப்பட்ட இரசியாவின் உலங்கு வானூர்தி Starstreak ஏவுகணையால் இரண்டு துண்டங்களாக தரையில் விழுந்தது. இது முதன் முதலாக உக்ரேனியர்கள் ஏவிய Starstreak ஏவுகணையால் வீழ்த்தப்பட்டுள்ளது.

MANPAD – MAN PORTABLE AIR DEFENCE SYSTEM

குறுகிய தூர ஏவுகணை, இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய MANPAD ஏவுகணைகள் வகையைச் சார்ந்தது. இதைத் தோளிலும் வானூர்திகளை இலக்கு வைத்து செலுத்தலாம். ஒரு முக்காலியிலும் வைத்து செலுத்தலாம். தாங்கிகள் கவச வண்டிகள் சிற்றூர்திகள் போன்றவற்றில் வைத்தும் இவற்றை செலுத்தலாம் என்பது மட்டுமல்ல உலங்கு வானூர்தி மற்றும் கடற்கலன்களிலும் இருந்து இவற்றை ஏவு எதிரியின் உலங்கு வானூர்தி மற்றும் தாழப்பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தலாம். இரசியர்களிடம் வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற Smart bombsஇற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள படியால் அவர்களின் உலங்கு வானூர்திகளும் விமான ங்களும் தாழப்பறந்தே குண்டுகளை வீசுகின்றன.

நகர்சார் போரில் சிறப்பாக செயற்படும்

பிரித்தானியாவின் Starstreak ஏவுகணைகள் நகர்சார் போரில் சிறப்பாகச் செயற்படக் கூடியவை. அவற்றை மாடிக்கட்டிடங்கள், மொட்டை மாடிகள் போன்றவற்றில் மறைந்திருந்து செலுத்தி எதிரியின் வானுர்திகளை அழிக்கலாம். Starstreak ஏவுகணைகள் லேசர் கதிகளால் வழிகாட்டப்படுபவை என்பதால் அவை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. இந்த ஏவுகணை வீசமுன்னர் வீசப்படும் லேசர் ஒளிக்கதிர்கள் வலிமைகுறைந்தவையாக இருப்பதால் அவற்றை எதியின் வானூர்திகளால் உணர முடியாமல் இருக்கும். இவற்றால் தாக்கப்படும் போது உடன் சேதம் (Collateral Damage) குறைந்த அளவிலேயே இருக்கும். சிறிய ஆளிலிவிமானங்களையும் இவற்றால் அழிக்கலாம்.

MACH-3 ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகம்

ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. அதாவது மணித்தியாலத்திற்கு 3700கி.மீ வேகம். தற்போது உலகெங்கும் உள்ள குறுந்தூர ஏவுகணைகளுக்குள் இது மிக வேகமான ஏவுகணை. எழுகிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்குகளை அழிக்கவல்லது. இரசிய விமானிகள் தங்களது விமானத்தின் பறப்பு பாதையை சடுதியாக திசை திருப்புவதில் வல்லவர்கள். அவர்களின் விமான இயந்திரங்களும் அதற்கு ஏற்ப வடிவைக்கப்பட்டுள்ளவை. அதை vector thrust engine என்பார்கள். ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் Starstreak ஏவுகணைகள் அவர்கள் விமானத்தை திசை திருப்ப முன் அதை அழித்துவிடும். அமெரிக்காவின் Stinger Missiles ஒலியிலும் பார்க்க 2.54 மடங்கு வேகம். மணித்தியாலத்திற்கு 3136கிமீ வேகம்

Starstreak இரண்டு நிலைகளைக் கொண்ட ஏவூர்தி ஓடிகளைக் கொண்டது (Two stage solid propellant rocket motor) ஒன்று பிரிக்கும் முறைமை மற்றது மூன்று உயர் அடர்த்தியான குண்டுகளைக் கொண்டது. அவை மூன்று துளைகளை இட்ட பின்னர் குண்டு வெடிக்கும்.

பழைய விமானங்களைக் கொண்டது உக்ரேன் விமானப்படை. இரசிய வானூர்திகள் உக்ரேனில் வானாதிக்கம் செலுத்தாமல் இருக்க வலிமை மிக்க வான் பாதுகாப்பு உக்ரெனுக்கு அவசியம். ஆனால் நேட்டோ நாடுகள் தொலை தூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்காமல் இருக்கின்றன. அதிகமான Stinger Missilesஉம் Starstreak missilesஉம் உக்ரேனியர்களுக்கு கிடைக்கும் போது இரசிய உழங்கு வானூர்திகள் அங்கு செயற்பட முடியாமல் போகலாம். இரசியாவின் முன்னணி விமானங்கள் உயரத்தில் இருந்தே செயற்பட வேண்டியிருக்கும்.


Thursday, 7 April 2022

இரசியாவின் SU¬-35 விமானத்தை சுட்டுவீழ்த்திய உக்ரேன்

  


இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU­-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU­-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது.

கடுமையாக விமர்சிக்கப்படும் இரசியா

இரசியாவின் SU­-35 போர்விமானம் எதிரியின் ரடார்களுக்கு புலப்படமாட்டாது என இரசியர்கள் பறைசாற்றியிருந்தனர். அதனால் அதை உக்ரேனுக்குள் பறக்க விட்டு அங்குள்ள ரடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு முறைமைகளை அழிப்பது என்ற நோக்கத்துடன் உக்ரேனுக்குள் சென்ற போதே அது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரேனுக்குள் சென்ற இரசியப்படையினர் பல தாங்கிகளையும், உலங்கு வானூர்திகளையும் ஆளணியையும் இழந்து பல படைத்துறை நிபுணர்களின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற வேளையில் இரசியா தனது மிக உயர் தொழில்நுட்ப விமானத்தை இழந்திருப்பது அவர்களுக்கும் மேலும் அவமானகரமாக அமையும். இரசியாவின் வலிமை மிக்க Mi-28 உலங்கு வானூர்தி ஒன்று பிரித்தானியாவின் தோளில்காவும் ஏவுகணைச் செலுத்தியில் இருந்து உக்ரேனியர்கள் ஏவிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில நாட்களில் SU­-35 போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

சீனா தனக்கு பாடம் என்கின்றது

இரசியாவின் Su-35 சுட்டு வீழ்த்தப்பட்சதை செய்தியாக வெளியிட்ட சீனாவின் South China Morning Post ஊடகம் அது சீனாவிற்கு ஒரு பாடம் என்கின்றது. Su-35 விமானம் ஆபத்தான வகையில் தாழப் பறந்தமையே சுடப்பட்டமைக்கான காரணமாக அது தெரிவிக்கின்றது. SEAD என்னும் Suppression of Enemy Air Defence நடவடிக்கையில் ஈடுபட்ட போதே Su-35 சுட்டு விழ்த்தப்பட்டதாக பல்கேரிய ஊடகம் சொல்கின்றது. SEAD நடவடிக்கையின் போது விமானங்கள் எதிரியின் வான் பாதுகாப்பு முறைமை, தொடர்பாடல் முறைமை, கண்காணிப்பு முறைமை போன்றவை அழிக்கப்படும். 

உன் கைப்பிள்ளை உன்னையே சரித்தது

The Drive என்ற இணையத்தளம் இரசியா தனது புதிய 9K37BUK வான் பாதுகாப்பு முறைமையை உக்ரேனில் பாவிப்பதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனின் தென்பகுதியில் உள்ள Kherson நகரைக் கைப்பற்றுவதற்கு இரசியாவிற்கு வான் ஆதிக்கம் தேவைப்பட்ட போது 9K37BUK உக்ரேன் போர் முனையில் பயன்படுத்தப்பட்டது என்றது The Drive. Kyiv Independent என்னும் உக்ரேனிய ஊடகம் 2022 ஏப்ரல் 3-ம் திகதி உக்ரேனில் செயற்பட்டுக் கொண்டிருந்த இரசியாவின் 9K37BUK என்னும் வான் பாதுகாப்பு முறைமை ஒன்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனியர்கள் தமது சிறப்புப் படையணி ஒன்றை 9K37BUK ஐக் கைப்பற்ற அனுப்பினார்கள் என்றும் அது வெற்றிகரமாக தங்கள் பணியை முடித்தனர் என்றும் உக்ரேனியர்கள் தெரிவிக்கின்றனர். அதைக் கைப்பற்றிய பின்னர் அதி அழிக்க வந்த அழிக்க வந்த இரசியாவின் Su-35 ஐ உக்ரேனியர்கள் முந்திக் கொண்டு அழித்து விட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:

1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை

2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை

3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)

4.  மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)

5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).

 

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானப் பிரச்சனை.

ஒற்றை விமானி மூலம் இயக்கப்படும் Su-35 மணிக்கு 1500மைல்கள்(2400கிமீ) வேகத்தில் 2200மைல்கள் (3600கிமீ) தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கக் கூடியது. 2014-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கும் Su-35 வானில் இருந்து வானிற்கும் வானில் இருந்து தரைக்கும் ஏவக் கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். ஐந்தாம் தலைமுறைப் போர் வானூர்திகளின் முக்கிய திறன் அவற்றை எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாமையே. அதனால் அவற்றை Stealth (புலப்படா) என அழைப்பர். இரசியாவான் இன்னும் முழுமையான புலப்படாப் போர்வானுர்திகளை இரசியாவால் உருவாக்க முடியவில்லை. இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. இதனால் இரசிய இந்தியக் கூட்டு ஐந்தாம் தலைமுறைப் போர்வானூர்தி உருவாக்கும் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. Su-35 முதற் பறப்பைச் செய்த போது அதை 4++தலைமுறைப் போர் விமானம் என்றே புட்டீன் அறிவித்தார். பின்பு இரசியா முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57ஐ உருவாக்கியது. அது இன்னும் போதிய எண்ணிக்கையில் உருவாக்கப்படவைல்லை. முன்மாதிரி விமானங்கள் தான் உருவாக்கப்பட்டன.

உக்ரேனியர்கள் பிரித்தானியாவின் தோளில் வைத்துச் செலுத்தப்படும் Starstreak missiles ஐப் பாவித்து இரசியாவின் Mi-28 உலங்கு வானூர்தி ஒன்றையும் 2022 ஏப்ரல் மாதத்தில் சுட்டு வீழ்த்தியமையும் இரசியாவிற்கு அவமானமாக அமைந்தது. இரசியாவின் போர் விமானங்கள் எப்போதும் excellent manoeuvrability and thrust vectoring engines கொண்டவை என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் வானில் வைத்து எதிரி விமானங்கள் மோதிக் கொள்ளும் நாய்ச் சண்டையில் (Dog fight) எப்போதும் இரசிய விமானிகளும் விமானங்களும் சிறப்பாக செயற்படும். உக்ரேனில் இரசியாவின் படைக்கலன்களுக்கு ஏற்படும் பின்னடைவு இரசியாவின் படைக்கல விற்பனையை பெருமளவில் பாதிக்கும் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.

Tuesday, 5 April 2022

உக்ரேன் போர் தாங்கிகளை செல்லுபடியற்றதாக்கிவிட்டதா?

  


உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion Tactical Groupsஐ இரசியா நகர்த்தியுள்ளது. ஒரு பட்டாலியன் குழுவில் 10 தாங்கிகள் மற்றும் 30 கவச வண்டிகள் இருக்கும். மொத்தம்1200 தாங்கிகளையும் 3600 கவச வண்டிகளையும் இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. உக்ரேனிடம் 2,500 தாங்கிகள் உள்ளன. ஐரோப்பாவில் 5,000இற்கும் மேற்பட்ட போர்த்தாங்கிகள் உள்ளன. உலகெங்கும் மொத்தம் 54,000 உள்ளன. பெரிய துப்பாக்கி, துருப்புக்களுக்கு பாதுகாப்பு கடினமான நிலத்தில் பயணித்தல் போன்றவை தாங்கிகளின் முக்கிய அம்சங்களாகும். எதிரியின் காலாட் படைகளை எதிர்கொள்ள சிறந்தவையாக தாங்கிகள் கருதப்படுகின்றன. அவர்களின் காப்பரண்களை தாங்கிகளால் அழிக்க முடியும். எண்பது ஆண்டுகளாக காலாட் படையினரின் முக்கிய படைக்கலன்களாக இருந்த எழுபது தொன் எடை கொண்ட தாங்கிகள் உக்ரேன் போரின் போது செல்லுபடியற்றதாகிவிட்டனவா எனற கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இரசியப் படையினர் உக்ரேனினுடனான முதல் மூன்று வாரப் போரில் 270 தாங்கிகளை இழந்துள்ளனர். இவை தாங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து ஐயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் மேலும் 326 தாங்கிகளை இழந்தனர். இதனால் தாங்கிகளை தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகளும் ஆளிலிவிமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளும் தாங்கிகளின் வலிமை மீது ஐயத்தை எழுப்பியுள்ளது.

தானூர்தி அணியும் (Motorised Unit) இயந்திரமய அணியும் (Mechanised Unit)

முதலில் போர்த்தாங்கிகளைப் பாவித்த நாடு பிரித்தானியா. 1916-ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவால் போர்த்தாங்கிகள் பாவிக்கப்பட்டன. தாங்கிகளை தரையில் நகரும் போர்க்கப்பல்கள் என பிரித்தானியவர் அப்போது விபரித்தனர். முதலில் அவற்றின் பாவனையைக் கைவிட்ட நாடு நெதர்லாந்து 2011இல் கைவிட்டது. பின்பு அது ஜெர்மனியிடமிருந்து குத்தகைக்கு 18 தாங்கிகளைப் பெற்றுள்ளது. சுடுதிறன், தப்புதிறன், நகரும் திறன், தகர்க்கும் திறன் ஆகியவை தாங்கிகளின் சிறப்பு அம்சங்களாகும். தானூர்தி அணி (Motorised Unit) பார ஊர்திகளால் நகர்த்தப்படுபவை. இயந்திரமய அணி (Mechanised Unit) கவச வண்டிகள் மூலம் நகரும் காலாட் படையணியாகும். கவச வண்டிகளின் மிகச் சிறந்த வடிவம் தாங்கிகளாகும். 2014-ம் ஆண்டு இரசியர்கள் தமது T-72 தாங்கிகளுடன் இலகுவாக உக்ரேனை ஆக்கிரமித்தனர். பெரும்பாலான தாங்கிகள் 120மிமீ குண்டுகளை வீச வல்லன. இரண்டாம் உலகப் போரில் விமானங்களை அழிக்கவும் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் Battle of Kursk

உலக வரலாற்றில் அதிக தாங்கிகள் இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயன்ற போது பயன்படுத்தப்பட்டன. 1943-ம் ஆண்டு இரசியாவின் Kursk நகரில் இரண்டு நாடுகளிடையே நடந்த போரில் ஆறாயிரம் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. இரசியர்கள் ஜெர்மன் தாங்கிகளுக்கு அண்மையில் சென்று கண்ணி வெடிகள அவற்றின் சில்லுச் சங்கிலிகளின் இடையே வீசி அவற்றைச் செயலிழக்கச் செய்தனர். ஹிட்லரின் படையினர் Tiger, Panther, Ferdinand ஆகிய தாங்கிகளையும் இரசியர்கள் T-14 தாங்கிகளையும் பாவித்தனர். ஹிட்லரின் படையினரின் தாங்கிகள் வலிமை மிக்கனவாயும் பெரிய அளவிலான குண்டுகளை வீசக் கூடியவையாகவும் இருந்தன. வலிமை குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் இரசியர்கள் ஜெர்மனியரிலும் பார்க்க இரண்டு மடங்கு தாங்கிகளைப் பாவித்தனர். ஜெர்மனியர்களிடம் 1400 தாங்கிகளும் இரசியர்களிடம் 3600தாங்கிகளும் இருந்தன. இரசியர்கள் தங்கள் தாங்கிகளை நிலைத்தின் கீழ் மூடி வைத்து சுடு குழாயை மட்டும் வெளியில் தெரிய வைத்திருந்து ஜெர்மனியர்கள் அண்மையில் வரும்போது சுட்டுத்தள்ளினார்கள்.

தங்கிகளின் வலிமையற்ற தன்மைகள்

கரந்தடிப் படையினருக்கு எதிராக தாங்கிகள் முன்பு சிறப்பாக செயற்பட்டன. கரந்தடிப் படையினர் வலிமை மிக்க கண்ணிவடிகளால் செயலிழக்கச் செய்யப்படக் கூடியவை. ஈழ மண்ணிற்கு அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலைப்படையினர் கண்ணி வெடிகளைத் தவிர்ப்பதற்காக தெருக்களால் பயணிப்பதைத் தவிர்த்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டு பயணித்தன. ஒரு கட்டத்தில் அகப்படும் பொது மக்களை தாக்கி வீழ்த்தி விட்டு அவர்கள் மேல் தாங்கிகளைச் செலுத்திக் கொன்றன. ஈழப் போராளிகள் கண்ணி வெடிகளால் எதிரிகளின் தாங்கிகளைத் தகர்த்தனர். கைப்பற்றியும் உள்ளனர். ஆர்.பி.ஜீ என்னும் வீசு குண்டுகள் மூலமும் பழைய தாங்கிகளை அழிக்க முடியும். தாங்கிகளில் இருந்து வெளிவரும் உயர் வெப்பம் அவற்றை இனம்காண இலகுவானதாக இருக்கின்றது. அதனால் வெப்பத்தைத் தேடியழிக்கும் ஏவுகணைகள் (Heating seeking missiles) அவற்றை இலகுவாக அழிக்கின்றன.  அமெரிக்காவின் Javelin, பிரித்தானியாவின் NLAW ஆகிய தோளில் வைத்துச் செலுத்தப்படும் ஏவுகணைகளும் துருக்கியின் TB-2 Drones என்னும் ஆளிலிவிமானங்களில் இருந்து ஏவும் சிறிய ஏவுகணைகளும் இரசிய தாங்கிகளை வேட்டைக்காரன் பன்றைகளைச் சுடுவது போல் சுட்டு அழிக்கின்றன. அது மட்டுமல்ல அது பயணிக்கும் இடங்களில் தாங்கிகள் விட்டுச் செல்லும் தடயங்கள் அவற்றை இனம் காண உதவுகின்றன. அமெரிக்காவின் ஒரு தாங்கி பத்து மில்லியன் பெறுமதியானது. இரசியாவின் தாங்கிகளான T-14 Armata நான்கு மில்லியன் பெறுமதியானது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் Fallujah மீட்புப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக் ஆகிய நாடுகளின் படைகள் வெற்றி பெற்றமைக்கு அமெரிக்காவின் ஏப்ராம் தாங்கிகள் முக்கிய பங்கு வகித்தன.  ஆனாலும் அமெரிக்காவின் ஏப்ராம் (M1Abrams) தாங்கிகளையும் பிரட்லி (M2 Bradley) தாங்கிகளையும் நூறு டொலர் பெறுமதியான வெடிபொருட்களால் இஸ்லாமியப் போராளிகள் தகர்த்தனர். போரியல் நிபுணராகிய Michael Peck: Tanks may be the star player, but war is a team game. அமெரிக்காவின் Apache உலங்கு வானூர்திகள் தாங்கிகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவை. தாங்கிகள் அதிக அளவு எரிபொருளைப் பாவிப்பன. அவற்றிற்கு எரிபொருள் மீள்நிரப்ப எரிபொருள் தாங்கிகள் அவற்றைத் தொடந்து கொண்டிருக்க வேண்டும்.

பல நாடுகள் தாங்கிகளைக் கைவிடுவதிலும் பார்க்க அவற்றை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடுத்த தலைமுறை தாங்கிகளை உருவாக்குகின்றன. 1980களில் உருவாக்கிய தாங்கிகள் பெரிஸ்கோப்களை பாவித்தன. தற்போது தாங்கிகளில் 360பாகையும் சுற்றிப் பார்க்கக் கூடிய உணரிகள் உள்ளன. எதிர் காலத்தில் போர்த்தாங்கிகளில் இருந்து பறந்து செல்லும் சிறிய ஆளிலி வானூர்திகள் தாங்கிகளின் கண்களாக மூலை முடுக்கு மேடு பள்ளம் எல்லாம் மறைந்து இருக்கும் எதிரிகளை இனம் காணும். பெரிய காத்திரமான உருவம் கொண்ட தாங்கியுடன் செல்லும் படையினருக்கு மனவலிமை கிடைக்கின்றது என்பது உண்மை. அதே போல எதிரிக்கு அச்சத்தையும் கொடுக்கக் கூடியது. போரை விரும்பும் நாடுகள் மேலும் வலிமைப்படுத்தப் பட்ட இலத்திரனியல் போர் செய்யக் கூடிய புதிய தாங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இன்னும் பல பத்து ஆண்டுகளில் காலட்படையினரின் கவசமாக இருக்கும்.

இரசியாவின் மிகச் சிறந்த தாங்கியான T-14 Armata உக்ரேன் போரில் பயன்படுத்தப்படவில்லை. இரசியாவிடம் போதிய அளவு T-14 கையிருப்பில் இல்லை. 

Sunday, 3 April 2022

உக்ரேனில் இரசியாவின் நிலை சீனாவின் தைவான் கொள்கையை மாற்றுமா?

  


உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்ததுடன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்களில் ஒரு நாடாக உறுப்புரிமை பெற்றுள்ளது. தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. வத்திக்கான உட்பட 15 நாடுகள் மட்டும் தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எந்த ஒரு நேட்டோ நாடும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் போரை சீனாவும் தைவானும் உன்னிப்பாக கவனிக்கின்றன. இரசியா வேறு சீனா வேறு அது போலவே உக்ரேன் வேறு தைவான் வேறு. 1992இல் சீனாவினதும் இரசியாவினதும் பொருளாதாரம் ஒரே அளவிலானதாக இருந்தன ஆனால் 2022இல் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க சீனாவினது பத்து மடங்கு பெரியது. 

வளம் மிக்க சீனா

உக்ரேனில் ஒரு நீண்ட காலப் போர் செய்ய இரசியாவால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தைவான் மீது போர் தொடுத்தால் அது எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் சீனாவால் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவிடம் பல தரப்பட்ட புதிய படைக்கலன்கள் இருந்தாலும் அவை போதிய எண்ணிக்கையில் இல்லை. ஆனால் சீனாவிடம் தைவானுடன் போர் செய்யக் கூடிய அளவு படைக்கலன்கள் இருக்கின்றன. போர் என்று ஆரம்பித்தால் மேலும் படைக்கலன்களை குறுகிய கால எல்லைக்குள் உற்பத்தி செய்து குவிக்கும் வளங்கள் சீனாவிடம் உள்ளன.

இரசியாவின் நகர்விலும் பார்க்க சீன நகர்வு கடினமானது

உக்ரேனுக்கு இரசியா தரைவழியாக படைகளை நகர்த்தியது. ஆனால் சீனா தைவானிற்கு 160கிலோ மீட்டர் நீளக் கடலை தாண்ட வேண்டியுள்ளது. கடல் தாண்டி படைகளை கொண்டு போய் இறக்க முன்னரே கடலில் வைத்து ஒரு போரை தைவானால் தனித்தும் செய்ய முடியும். உக்ரேன் இரசியா மீது ஏவுகணைகளை வீசவில்லை. ஆனால் தைவான் சீனாவின் ஹொங் கொங் மற்றும் ஷங்காய் உட்பட பொருளாதார கேந்திரோபாய நிலைகளை தாக்குவதற்கு என தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேன் போரை  தைவானியர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று உக்ரேன் நாளை தைவான் என்ற தலைப்பில் பல கலந்துரையாடல்களை தைவானியர்கள் செய்து வருகின்றார்கள். சீனா தலையிடுமா? தைவான் தயாரா? அமெரிக்கா உதவி செய்யுமா? என்பவை பற்றிய விவாதங்களே தைவானில் பரவலாக அடிபடுகின்றது. தங்கள் தற்பாதுகாப்பிற்கு தற்சார்பு நிலை அவசியம் என்பதை தைவானியர்கள் உணர்ந்துள்ளனர். அமெரிக்காவை நம்பியிருக்காமல் தாம்மைத்தாமே பாதுகாக்க வேண்டும் என பல தைவானியர்கள் நினைக்கின்றார்கள். உக்ரேனிற்கு புட்டீன் படை அனுப்பியவுடன் தைவானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உக்ரேனியர்கள் தனியே இல்லை தைவானியர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள் என்ற பதாகையும் காணப்பட்டது.

ஆழமறியாத இரசியா போல் ஆழமறியாத சீனாவா?

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்தால் அது அமெரிக்காவின் கவனத்தை சிதறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டுரைகள் மேற்கு நாட்டு ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா பகுதியாக ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனியர்களிடையே இரசிய குரோதத்தை அமெரிக்கா வளர்த்து வைத்துள்ளது என்பது இரசியப் படையினர் உக்ரேனுக்குள் சென்ற பின்னர்தான் இரசிய அதிபர் புட்டீன அறிந்து கொண்டார். இரசியப் படைகளை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று புட்டீன எதிர்பார்ந்திருந்ததாக மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏமாற்றத்தால் இரசிய உளவுத்துறையின் இயக்குனரையும் அவரது உதவியாளரையும் புட்டீன் வீட்டுக் காவலில் வைத்தார் என்று கூடச் சொல்லப்படுகின்றது. தைவானியர்களின் நிலைப்பாடு தொடர்பாக சீனா எந்த அளவு அறிந்து வைத்திருக்கின்றது?

உன்னிப்பாக அவதானிக்கும் சீனா

உக்ரேன் எல்லையில் இரசியப் படைகள் 2021-22இல் குவிக்கப்பட்ட போது சீனாவின் முன்னணி ஊடகங்களான Xinhua, CGTV, People’s Daily ஆகியவை மௌனமாகவே இருந்தன. ஆனால் உக்ரேன் போர் நிலவரங்களை சீனா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. இரசியப் படைகள் உக்ரேனில் இருந்து தோல்வியடைந்து வெளியேறினால் அது இரசியப் பாதுகாப்பு மற்றும் கேந்திரோபாய நலன்களைப் பொறுத்தவரை பாதிக்கிணறு தாண்டியது போலாகும். இரசியா இலகுவில் உக்ரேனில் இருந்து வெளியேற மாட்டாது. அல்லது ஏதாவது ஒரு போலி வெற்றியைச் சொல்லிக் கொண்டு இரசியா அங்கிருந்து வெளியேறலாம். அது இன்னும் சில வாரங்களில் இரசியா செய்ய வேண்டும். இரண்டும் தைவான் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சீனாவை ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வைக்கும். வலிமை மிக்க காத்திரமான தயாரிப்பை செய்த பின்னரே சீனா தைவானை ஆக்கிரமிக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.

உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்த மேற்கு

அமெரிக்கா உட்பட எல்லா மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்துள்ளன. தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதே நிலைப்பாடு இருக்குமா? தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை வலியுறுத்தி அங்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லந்து ஆகிய நாடுகள் தம் கடற்படையை அனுப்பியதுடன் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை நடத்தின. அமெரிக்காவின் நேட்டோ பங்காளிகளின் உக்ரேன் தொடர்பான நிலைப்பாட்டிலும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டில் தைவான் தொடர்பாக ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் எடுத்துள்ளன. இருபத்தியாறு துறைமுகங்களைக் கொண்ட தைவான் தீவை சீனா கைப்பற்றுவது பசுபிக் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஒரு கடற்படையை சீனா உருவாக்கி அதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஜப்பான் தைவானை சீனா கைப்பற்ற முயன்றால் அதன் மீது தாக்குதல் செய்வதற்கு தயாராக தைவானிற்கு அண்மையாக உள்ள தீவுகளில் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தனது கடற்படையையும் வலிமைப் படுத்தியதுடன் தனது துறைமுகங்களை ஒஸ்ரேலியா பாவிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இரசியர்களுக்கு இருக்கும் போர் முனை அனுபவம் சீனர்களுக்கு இல்லை என்பதையும் சீனா நன்கறியும். இரசியாவை சுற்றி வர உள்ள அமெரிக்கப் படைத்தளங்களிலும் பார்க்க வலிமை மிக்க படைத்தளங்கள் சீனாவை சுற்றி வர அமெரிக்கா வைத்திருக்கின்றது. நீண்ட காலப் போரில் ஈடுபடும் தைவானால் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதில் சீனாவிற்கு தான் பெருமளவு பாதிப்பு இருக்கும். உக்ரேன் மீது இரசியா படையெடுத்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னள் படைத்துறை அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் தைவானுக்கு அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் அழிவைப் போல் சீனாவிற்கு எதிரான போர் உருவக்க மாட்டாது.

வ்உக்ரேனில் இரசியாவுடன் நேரடி மோதலை அமெரிக்கா தவிர்த்துக் கொண்டிருப்பது. தைவானைக் கைப்பற்ற முயற்ச்சிக்கும் சீனாவுடன் நேரடி மோதலை செய்வதற்காகவா என்பதை சீனா சிந்திக்கும். சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உக்ரேனின் அனுபவத்தை வைத்து மீள் பரிசீலனை செய்து பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையை உக்ரேனியர்களின் உறுதிப்பாடும் இரசியாவின் திட்டமிடல் தவறுகளும் ஏற்படுத்தியுள்ளன. பல பாடங்களை போர் அனுபவமில்லாத சீனா கற்றுக் கொள்ல வேண்டியிருக்கும். சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியா இணைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் நாளை தள்ளிப்போடும். அந்தக் கால இடைவெளியில் தைவானியர்களும் உக்ரேனிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...