Friday, 4 March 2022

உக்ரேனில் காதாநயகனான துருக்கியின் ஆளிலிவிமானம்

  


ஒவ்வொரு போரிலும் ஒரு படைக்கலன் போரின் திசையை மாற்றி வியக்கவைக்கும். இதுவரை நடந்த இரசிய உக்ரேன் போரில் கதாநாயகனாகத் திகழ்வது துருக்கியின் ச்ஆளிலிப் போர்விமானமாகும். இவற்றில் இருந்து வீசப்படும் மலிவான ஏவுகணைகள் இரசியாவின் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான இரசிய தாங்கிகளை அழித்துக் கொண்டிருக்கின்றன. இரசியப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொடுத்த ஜவலின், NLAW ஆகிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளிலும் பார்க்க துருக்கியின் Bayraktar TB-2 இரசியாவிற்கு அதிக இழப்பை குறைந்த ஆபத்துடன் ஏற்படுத்துகின்றன. உக்ரேனிடமிருக்கும் பாதுகாப்பற்ற ஆளிலிவிமானங்களை போர் ஆரம்பித்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் குருவி சுடுவது போல இரசியப்படையினர் சுட்டுத்தள்ளி விடுவார்கள் என சில படைத்துறை நிபுணர்கள் எதிர்பார்த்தனர். 

பலரதப்பு பாராட்டு

படைத்துறை ஊடகங்களில் இருந்து நிதித்துறை ஊடகங்கள் வரை பல ஊடகங்கள் Bayraktar TB-2ஐப் பற்றி சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் ஆளிலிப் போர்விமானங்களை துருக்கி வாங்க முற்பட்ட போது அவை துருக்கியுடன் தொடர்பில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய்ச் சேரும் என்பதால் அமெரிக்கா விற்பனை செய்ய மறுத்தது. அதைத்தொடர்ந்து துருக்கி தானே அவற்றை உற்பத்தி செய்யத் தொடங்கியது. முதலில் குர்திஷ் போராளித் தலைவர்களைக் கொல்ல துருக்கி தனது ஏவுகணை தாங்கிச் செல்லும் ஆளிலிகளிப் பயன்படுத்தியது. அதில் கிடைத்த அனுபவம் துருக்கியை உலகின் முன்னணி ஆளிலி உற்பத்தி நாடாக்கியது. தற்போது Bayraktar TB-2 துருக்கியின் “தேசம் பெருமை” ஆக கருதப்படுகின்றது.

வழிகாட்டல் ஏவுகணைகள்

துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலி விமானங்கள் 25கி.மீ(15.5மைல்) தொலைவில் உள்ள இலக்குகளையும் இனம் காணக்கூடிய சிறந்த ஒளிப்பதிவுக் கருவிகளைக் (Camera) கொண்டவை. இனங்காணல், வேவுபார்த்தல், போன்றவற்றைச் செய்யக் கூடிய வகையில் அவற்றில் உள்ள ஒளிப்பதிவுக் கருவிகளின் துளைகள் (aperture) அகலமானவையாக உள்ளன. அந்த ஒளிப்பதிவுக் கருவிகள் மிக உயரமான இடத்தில் குளிரான சூழலிலும் சிறப்பாகச் செயற்படும். மணித்தியாலத்திற்கு 80மைல் வேகத்தில் நான்கு திறன் – வழிகாட்டல் ஏவுகணைகளைச் (Smart laser guided missiles) சுமந்து கொண்டு பறக்கக் கூடியவை. தாங்கிச் செல்லக் கூடிய மொத்த எடை 121 இறாத்தல். இயந்திர வலு 105 குதிரைவலு. 25,000 அடி உயரத்தில் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் பறக்கக் கூடியவை, Tactical Block 2 என்பதன் சுருக்கமே TB2. அவற்றின் மற்ற சிறப்பம்சங்கள்:

     Low Light (LL-NIR) Camera
    Common FOVs for IR, HDTV and LL-NIR Cameras
    Laser Range Finder and Target Designator
    Laser Pointer and Illuminator
    Internal Boresight Unit
    All-Digital Video Pipeline
    Advanced Image Processing
    Multi Target Tracking
    Simultaneous Target Tracking on IR, HDTV
    and LL-NIR Videos
    Accurate Target Geo-Location
    Determination of Coarse and Speed of
    Moving Target
    Inertial Measurement Unit (IMU)
    Accurate Stabilization
Bayraktar TB-2 ஆளிலிவிமானம் நிலக்கட்டுப்பாட்டகம், தரவுமுனையம், தூரக்காட்சியமைப்பு (remote display) முனையம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. அமெரிக்காவின் பிரபலமான MQ-9 Reaper ஆளிலிவிமானத்துடன் ஒப்பிடுகையில் பாரம் குறைந்ததும் மலிவானதுமாகும். உக்ரேனிடம் 25 Bayraktar TB-2 ஆளிலிவிமான ங்கள் உள்ளன. மேலும் பலவற்றை உக்ரேன் துருக்கியிடமிருந்து வாங்கவிருக்கின்றது.

களம் பல கண்ட Bayraktar TB-2

துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிகள் சிரியா, லிபியா ஆகிய நாடுகழ்ளின் போர் முனையில் இரசிய தாங்கிகளுக்கும் கவச வண்டிகளுக்கும் எதிராக சிறப்பாகச் செயற்பட்டவை.. அஜர்பைஜானுக்கும் ஆர்மினியாவிற்கும் இடையில் நடந்த போரில் துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிகள் ஆர்மினியாவிடமிருந்த பல இரசியத் தாங்கிகளைத் துவம்சம் செய்த போது உலகப் படைத்துறை நிபுணர்கள் ஆச்சரியப்பட்டனர். அதன் பின்னர் கனடா துருக்கிக்கு Bayraktar TB-2இற்கான ஒளிப்பதிவுக் கருவிகளை விற்பனை செய்வதை தடை செய்தது. அதனால் சிறந்த ஒளிப்பதிவுக் கருவிகளை துருக்கியே உற்பத்தி செய்கின்றது.

இரத்தம் குடித்த Bayraktar TB-2

இரசியாவின் போர்த்தாங்கிகளுக்கும் கவச வண்டிகளுக்கும் எரிபொருள் மீள்நிரப்புவதற்கு வந்த பல எரிபொருள் வண்டிகளை Bayraktar TB-2 ஆளிலிகள் தாக்கி எரிய வைத்தன. இதனால் பல கவச வண்டிகளையும் தாங்கிகளையும் இரசியப் படையினர் எரிபொருல் இல்லாததால் நடுவழியில் விட்டு தப்பி ஓடினர். இரசியப் படையினரின் முன்னேற்றம் தடைபட்டமைக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. 

இரசியாவின் S-400 தோற்கடிக்கப்பட்டதா?

இரசியா உக்ரேன் – பெலரஸ் எல்லையில் தனது S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உக்ரேனின் வான்வெளியை கண்காணிக்க நிறுத்தியுள்ளது. இருந்தும். Bayraktar TB-2 ஆளிலிவிமானம் இரசிய போர்த்தாங்கிகளையும் கவச வண்டிகளையும் தாக்கியழிக்கின்றது. சிறிய Bayraktar TB-2 ஆளிலிவிமானங்களை இரசியாவின் S-400ஆல் அழிக்க முடியாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

துருக்கி ஆளிலி விமானத்துறையில் பெறும் அனுபவமும் வெற்றியும் அது இனி வெளிநாடுகளில் போர்விமானங்களை வாங்கத் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா துருக்கி உட்பட பல நாடுகளுடன் இணைந்து உருவாக்கிய F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை துருக்கி இரசியாவிடமிருந்து S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதால் துருக்கிக்கு விற்பனை செய்ய மறுத்து விட்டது. இதனால் துருக்கி தானே TF-X என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்தை உருவாக்குகின்றது. அத்திட்டம் 2025இல் நிறைவேறும் எனச் சொல்லப்படுகின்றது. துருக்கிக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையில் வளரும் நட்பு இந்தியாவைச் சிந்திக்க வைக்கும்.

Thursday, 3 March 2022

இரசியப் படையினர் உக்ரேனில் திணறுகின்றனரா?

  


“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள் உக்ரேனை ஆக்கிரமிக்க முயலும் இரசியப் படையினரைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. உலகின் இரண்டாவது பெரிய இரசியப் படைத்துறை 2021 மார்ச் மாதத்தில் இருந்து உக்ரேன் எல்லைகளில் இரசியா படை குவித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு திட்டமிட்ட நகர்வு. 2014இல் உக்ரேனியர்களும் அவரது நட்பு நாடுகளும் எதிர் பாராத விதமாக புட்டீன் செய்த படை நகர்வு வலுவான எதிர்ப்பின்றி நேர்த்தியாக நிறைவேற்றப்பட்டது. 2014 ஏப்ரலில் செய்யப்பட்ட நகர்வைப் போலவே 2022 பெப்ரவரியில் செய்யப்பட்ட நகர்வும் நன்கு திட்டமிடப்பட்டது. முந்தையது இரகசியமான நகர்வு. எதிரி தகவல்களை இணைய வெளி மூலம் திருடாமல் இருக்க தட்டச்சுகளைப் பாவித்து பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு தொலைநகல் மூலம் பரிமாறப்பட்டன. பிந்தைய நகர்வு பகிரங்கமாகச் செய்யப்பட்டது. எதிரியும் தயார் நிலையில் இருந்தான்.

தாமதம் ஏன்?

கடந்த பத்து ஆண்டுகளாக இரசியாவிற்கு ஆட்சேர்ப்பு மற்றும் புதிய படைக்கல இணைப்பு எனப்பல தீவிர நடவடிக்கைகளை புட்டீன் எடுத்திருந்தார். இரசியப் படையினர் கைப்பற்றிய பிரதேசம் பற்றிய படங்களைப் பார்க்கும் போது இரண்டு நாட்களின் பின்னர் முன்னேற முடியாமல் தவிக்கின்றார்கள் போலிருக்கின்றது. பிழையான போர்த்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் ஒரு சிறந்த படையினர் தவிக்கின்றனரா? சரியான போர்த்திட்டத்தை ஒரு மோசமான படையினரால் நிறைவேற்ற முடியவில்லையா? அல்லது ஒரு மோசமான போர்த்திட்டத்தை ஒரு திறனற்ற படையினரால் நிறைவேற்றவே முடியவில்லையா? இரசியாவின் செஸ்னியா பிரதேசம், ஜோர்ஜியா, சிரியா, உக்ரேனின் கிறிமியா ஆகியவற்றில் நடந்த போர்களில் இரசியப் படைகள் சிறப்பாகச் செயற்பட்டன. ஆனால் 1979இன் பின்னர் ஒரு வலிமை மிக்க எதிரியுடன் இரசியப் படையினர் முதற்தடவையாக 2022 பெப்ரவரி 24-ம் திகதியில் இருந்து மோதுகின்றனர். இரசியப் படையினர் முன்னேற முடியாதபடியால் இரசியா கொத்தணிக் குண்டுகள் காற்று அகற்றும் குண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட குண்டுகளைப் பாவிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

உக்ரேனியர்களின் கடும் எதிர்ப்பு

முதல் இரண்டு நாட்களும் உக்ரேனியப் படையினர் போராடியதிலும் பார்க்க அதிக உக்கிரமாக உக்ரேனியப் படையினர் போராடத் தொடங்கியுள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. 2014-ம் ஆண்டின் பின்னர் உக்ரேனியப் படையினருக்கு அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாட்டுப் படையினரும் தீவிர பயிற்ச்சி வழங்கியுள்ளனர். ஆனாலும் அவர்கள் வழங்கிய படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பாதுகாப்பு படைக்கலன்கள் மட்டுமே கேந்திரோபாய தாக்குதல் படைக்கலன்கள் அல்ல. நெடுந்தூர ஏவுகணைகள் உக்ரேனியர்களுக்கு வழங்கப்படவில்லை. தோளில் வைத்து வீசும் குறுந்தூர ஏவுகணைகள் தான வழங்கப்பட்டன.

உதவாக்கரையில் தொடங்கிய போர்

உக்ரேனின் தலைநகருக்கான குறுகிய தூரம் பெலரஸ் எல்லையில் இருந்து இருப்பதால் அங்கு படையினரைக் இரசியா குவித்தது. உக்ரேன் – பெலரஸ் எல்லையில் உள்ள அணுக்குண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட செர்னோபில் என்ற மக்கள் வசிக்காமல் நாற்புறமும் சுவர் கட்டி மூடிய நகரை இரசியப் படைகள் முதலில் கைப்பற்றினர். 2022 ஜனவரி 17-ம் திகதியில் இருந்து 38 நாட்கள் இரசியப் படையினர் பெலரஸில் காத்திருந்தனர். போதிய வசதிகள் இன்றி அவர்கள் பெலரஸில் காத்திருந்தமையால் சலிப்படைந்தனரா?

விநியோக (Logistics) வலுவில்லையா?

படையினருக்கான விநியோகம் என்பதில் இரசியப் படையினர் எப்போது திறமையற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என பல படைத்துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஜெனரல் ஒமர் பிரட்லி என்ற அமெரிக்கப் படைத்துறை அதிகாரி “கற்றுக் குட்டிகள் மூலோபாயம் பற்றிப் பேசுவார்கள். நிபுணர்கள் விநியோகம் பற்றிப் பேசுவார்கள்” என்றார். இரசியர்கள் தாம் கற்றுக் குட்டிகள் என உக்ரேனில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நலிவுப் புள்ளியை அறிந்த உக்ரேனியர்கள் இரசியாவின் விநியோகச் சேவைகள் மீது தமது தாக்குதலை தீவிரப்படுத்தினர். விநியோக வண்டிகள் அழிப்பதற்கு இலகுவானவை என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் உக்ரேனுக்குச் சென்ற இரசியப் படையினருக்கு தேவையான உணவு, சுடுகலன்கள், உதிரிப்பாகங்கள் போன்றவை சீராக விநியோகிக்கப் படவில்லை. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இரசியாவின் விநியோக முறைமையைப் பற்றி மோசமாக விபரிப்பதை நம்பக் கூடாது என விவாதிக்கலாம். ஆனால் சீன ஊடகமான South China Morning Post 2022 மார்ச் 2-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனில் விநியோகப் பிரச்சனையை எதிர் கொள்கின்றனர் என செய்தி வெளியிட்டுள்ளது. 

விநியோகம் சரி ஆனால் நினைத்தது நடக்கவில்லை

இரசியர்களுக்கு எப்போதும் தமது திட்டமிடலில் பெரும் நம்பிக்கை உண்டு. ஐந்தாண்டு திட்டங்கள் பல கண்டவர்கள். அவர்களின் திட்டப்படி 48 மணித்தியாலத்தில் உக்ரேனியப் படையினர் சரணடைவார்கள் அல்லது தப்பி ஓடுவார்கள். அதனால் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள், சுடுகலன், சாப்பாடு ஆகியவற்றுடன் மட்டும் சென்றார்கள். உக்ரேனியர்களின் எதிர்ப்பு எதிர்பார்த்ததிலும் உக்கிரமாக இருந்தது. இதனால்தான் இரசியப் படைகள் பின்னடைவைச் சந்திக்கின்றன என்ற கருத்தும் உண்டு.

தரை-விமானப் படைகளிடை ஒருங்கிணைப்பு இல்லையா?

கீவ் நகருக்கு தெற்கே உள்ள Hostomel விமான நிலையத்தை கைப்பற்ற முன்னரே அங்கு II-76 என்னும் துருப்புக்காவி விமானங்கள் இரண்டை இரசியா தரையிறக்க முயன்ற போது அவை சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை ஒவ்வொன்றிலும் நூறு படையினர் இருந்தனர். இரசியாவின் தரைப்படைக்கும் விமானப் படைக்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு செயற்பாடு இல்லை என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். நேட்டோவிற்கு சொந்தமான பல வான்சார் முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு ஆளிலி விமானங்கள் (air-borne early warning & control -AEW&C) உக்ரேன் நகர்களை வட்டமிட்டபடியே இருக்கின்றன. அதை இரசியாவால் முன் கூட்டியே அறிய முடியவில்லை. உக்ரேனியர்கள் கைது செய்த இரசியப் படையினரில் பலருக்கு தாம் ஏன் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டோம் என்பது தெரியாது என உக்ரேன் தெரிவித்தது.

எதிர்பாராதவற்றை எதிர்கொள்ள முடியவில்லையா?

எந்த ஒரு படை நகர்விலும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். அப்போது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இரசியப் படையினர் 2014-ம் ஆண்டு உக்ரேனை ஆக்கிரமித்த போது எதிர் கொள்ளாத எதிர்ப்பை. 2022இல் சந்திக்கின்றனர். இது இரசிய படைத்தளபதிகள் எதிர்பார்த்திருக்க வேண்டிய எதிர்ப்பு. ஆனால் எதிர்பாராத எதிர்ப்பைச் சந்திக்கின்றார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட படையினரில் பெரும்பாலானவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஓராண்டு பயிற்ச்சி மட்டும் பெற்றவர்கள் என மேற்கு நாட்டு படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனித்து சென்ற தாங்கிகள்

போர்த்தாங்கிகள் காலாட் படையின் அல்லது வான் படையின் பாதுகாப்புடன் செல்வது வழமை. ஆனால் உக்ரேனுக்குள் இரசிய தாங்கிகள் வேறு பாதுகாப்பின்றிச் சென்றன. அதனால் துருக்கி கொடுத்த Bayrakrar TB2 ஆளிலி போர்விமானங்களில் இருந்து வீசிய ஏவுகணைகள், அமெரிக்கா கொடுத்த ஜவலின் ஏவுகணைகள் பிரித்தானியா கொடுத்த NLAW ஏவுகணைகள் ஆகியவை பல இரசிய தாங்கிகளை அழித்தன. தற்காலத்தில் போரின் முக்கிய பங்கு வகிப்பன வான்மேன்மையும் (Air superiority) வானாதிக்கமும் (Air dominance) ஆகும் இவை இரண்டையும் இரசியா நிலைநிறுத்தக் கூடிய வகையில் போதிய விமானப் படை அதனிடமிருந்த போதிலும் இரசியா தேவையான விமானங்களை உக்ரேனுக்கு அனுப்பவில்லை. இரசிய தாங்கிகள் பெரும்பலும் பகல் நேரத்தில் தமது நகர்வுகளைச் செய்வதால் பல இழப்புக்களைக் சந்திக்கின்றன. இரவில் பார்க்கக் கூடிய கருவிகள் தாங்கிகளில் பொருத்தப்படவில்லை. அவற்றிற்கு இரசியாவில் தட்ட்டுப்பாடு எனச் சொல்லப்படுகின்றது. 

பொறியியல் பிரிவு (Engineering Division)

படைத்துறையில் பொறியியல் பிரிவு (Engineering Division) முக்கிய பங்காற்றுகின்றது. இதில் பல்வேறுபட்ட துறைகள் உள்ளன. அதில் ஒன்று படையினரைன் போக்கு வரத்துக்கு வசதிகள் செய்வது. படையினரின் நகர்வைத் தடுக்க பாலங்கள் உடைக்கப்பட்டால் இந்தப் பிரிவினர் துரிதமாக பாலம் அமைத்துக் கொடுப்பர். தேவையான போது புதிய பாலங்களையும் அமைத்துக் கொடுப்பர். உக்ரேனியப் படையினர் இரசியப் படையினரின் முன்னேற்றங்களைத் தடுக்க பாலங்களை தகர்த்த போது இரசியாவால் புதிய பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது  என்பது இரசியப் படையினரின் இன்னொரு நலிவற்ற புள்ளியாக கருதப்படுகின்றது. 

புட்டீனுக்கு மட்டுமே தெரிந்த புதிர்

இரசியா தனது முழு வலிமையுடன் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தினால் அதிக உயிரழப்பு ஏற்படும். அதனால் உலகெங்கும் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை புட்டீன் உணர்ந்து தனது போர் முறையை வகுத்துள்ளாரா? நேட்டோ படையினர் ஈராக்கிலும் லிபியாவிலும் செய்தது போல் முதலில் வான் தாக்குதலால் எதிரியின் படைவலிமையை முற்றாக சிதைப்பது என்ற வழியை அவர் ஏன் பின்பற்றவில்லை? உயிரிழப்பைத் தவிர்க்கவா அல்லது அவரிடம் சரியான உளவுத்தகவல் இல்லையா? ஆனாலும் இரசியா தனது புதிய போர்விமானங்களான SU-35, SU-57, Checkmate போன்ற விமானங்களை ஏன் போரின் ஆரம்பத்தில் களமிறக்கவில்லை? ஏன் பரந்த அளவில் ஆளிலிப்போர்விமானங்கள் பாவிக்கப்படவில்லை? இவற்றிற்கான விடை புட்டீனுக்கு மட்டுமே தெரியும்.

இரசியப் படையினரின் முன்னேற்றம் தாமதப் பட்டாலும் அவர்கள் முன்னேறிய இடங்களை உக்ரேனியர்களால் 2022-03-03 வரை திரும்பக் கைப்பற்றவில்லை. இரசியா இனி மூர்க்கத்தனமாக தாக்கும். அதை முன் கூட்டியே அறிந்த நேட்டோ நாடுகள் போர்க்குற்றம் எனப் பேசத் தொடங்கிவிட்ட்னர். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் 02-03-2022 தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

முந்தைய கட்டுரைகள்:

1. புட்டீனின் உயிருக்கு ஆபத்தா?: https://www.veltharma.com/2022/02/blog-post_28.html

2. உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்:  https://www.veltharma.com/2022/02/blog-post_26.html

3. உக்ரேனில் அமெரிக்க Javelins, இரசிய T-90 Tanks, பிரித்தானிய NLAW: https://www.veltharma.com/2022/02/javelins-t-90-tanks-nlaw.html

4. புட்டீனின் இரண்டாம் சோவியத் ஒன்றியம்:  https://www.veltharma.com/2021/12/blog-post_30.html

Monday, 28 February 2022

புட்டீனின் உயிருக்கு ஆபத்தா?

  புட்டீன் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற செய்தியை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் பரப்புகின்றன. புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பிய நான்காம் நாள் இரசியா மீதான பொருளாதாரத் தடையை மேற்கு நாடுகள் அதிகரித்த போது புட்டீன் தன்னுடைய அணுக்குண்டு வீசும் படைப்பிரிவை உயர் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மேற்கு நாடுகளில் அவரது மன நிலை குறிந்த செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கியுள்ளன. வெள்ளை மாளிகை, அமெரிக்க மூதவை, பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித் எனப் பலரும் புட்டீனின் மன நலம் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள்.

கைவீச்சு குறைந்து விட்டதாம்!

பிரித்தானிய வானொலி ஒன்று புட்டீன் பற்றி நரம்பியங்கியல் (Nurology) நிபுணர் ஒருவரை பேட்டியும் கண்டது. அவர் புட்டீன் நடக்கும் போது அவரது வலது கையின் வீச்சு தூரம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டு போவதை வைத்துக் கொண்டு புட்டீனின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் புட்டீன் தற்போது இருக்கும் மனநிலையில் அவர் மற்றவரகளின் ஆலோசனைகளைக் கேட்க மாட்டார் என்றார். தனக்கு plastic surgery செய்து முகச் சுருக்கமின்றி இளமையாகத் தோற்றமளிக்கும் புட்டீன் தொடர்ச்சியாக steroid என்னும் மருந்தை உட்கொள்கின்றார் என்றும் செய்திகள் அடிபடுகின்றன. Steroid உட்கொள்பவர்களுக்கு irritability, anxiety, aggression, mood swing, manic symptoms and paranoia ஆகியவை ஏற்படும். அமெரிக்கவின் Newsweek சஞ்சிகை புட்டீனை வஞ்சமாகப் புகழ்ந்து எழுதிய கட்டுரையில் இரசியாவைக் கண்டு உலகம் அஞ்ச வேண்டும் என்ற தனது நோக்கத்தை புட்டீன் உக்ரேனில் நிறைவேற்றி விட்டார் என்கின்றது. அவர் செஸ்னியா, ஜோர்ஜியா, சிரியா, கிறிமியா ஆகியவற்றில் செய்த படை நடவடிக்கைகள் வெற்றியில் முடிந்ததையும் அச்சஞ்சிகை சுட்டிக் காட்டுகின்றது.

நுண்ணறிவாளி புட்டீன்

சோவியத் ஒன்றிய காலத்தில் பொருளாதாரம் படித்தவர் புட்டீன். சோவியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய அம்சம் நீண்ட காலத் திட்டமிடல். பொருளாதாரம் படித்துவிட்டு சோவியத்தின் உளவுத்துறையான கேஜிபியில் பணிபுரிந்தவர் புட்டீன். அத்துடன் குங்ஃபு விளையாட்டில் தேர்ச்சி பெற்று கறுப்பு பட்டி வென்றவர். நன்கு சதுரங்கம் ஆடக் கூடியவர். இவற்றால புட்டீன் நீண்ட காலத் திட்டமிடல், எதிரியின் தகவல்களை அறிந்து கொள்ளுதல், எதிரியும் நகர்வுகளை முன் கூட்டியே திட்டமிட்டு தன் நகர்வுகளை, தன் நகர்வுக்கு எதிரியின் நகர்வு எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றுள்ளார். அதனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை Genius – நுண்ணறிவாளன் என விபரித்தார்.

20-ம் நூற்றாண்டின் விபத்தை புட்டீன் சரி செய்வாரா?

1991-ம் ஆண்டு ஜெர்மனியை கிழக்கு என்றும் மேற்கு என்றுப் பிரித்த பேர்லின் சுவர் தகர்க்கப்படும் போது சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு ஜெர்மனியில் உளவாளியாகப் பணிபுரிந்தவர். எந்த சுவர் விழக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் பணி செய்தாரோ அதே சுவர் அவர் கண்முன் சரிந்தது. அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியமும் சரிந்தது. பனிப்போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் வெற்றி பெற்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இரசியாவிடமிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைந்தன. பனிப்போருக்குப் பின்னரான கிழக்கு ஐரோப்பிய நிலையை புட்டீன் ஏற்றுக் கொள்ளவில்லை, இது நம்ம ஏரியா. இது எதிரிகளிடம் போவதா என புட்டீன் மனதுக்குள் கொதித்தார். 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார் அரசியல் விபத்து சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்றார் புட்டீன்.

இரசியப் பொருளாதாரத்தை மீட்ட புட்டீன்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசிய அதிபராக வந்த பொறிஸ் யெல்ஸ்ரினின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக வலென்ரின் யுமாசேவ் என்பவர் இருந்தார். அவருடைய மகளையெ யுமாசேவ் திருமணம் செய்தார். யுமாசேவ் முலமாக யெல்ஸ்ரினுக்கு விளடிமீர் புட்டீன அறிமுகமானார். அவரது நிர்வாகத்தில் பணியும் புரிந்தார். 1999 ஓகஸ்ட் மாதம் புட்டீனை யெல்ஸ்ரின் தலைமை அமைச்சராக்கினார். 1998இல் மோசமான பொருளாதார நெருக்கடியை இரசியா சந்தித்தது. அதிலிருந்து இரசியாவை புட்டீன் சாதுரியமாக மிட்டெடுத்தார். அதில் முழு மகிழ்ச்சி அடைந்த யெல்ஸ்ரின் புட்டீனிடம் இரசியாவை 1999 டிசம்பரில் ஒப்படைத்தார். அன்றில் இருந்து இன்றுவரை இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் விளடிமீர் புட்டீன் இருக்கின்றார். இரசிய அதிபர் தொடர்ச்சியாக இரண்டு தடவை பதவி வகிக்கலாம் என்ற அரசியலமைப்பை புட்டீன் மாற்றி தன் ஆயுள் முடியும் வரை தான் பதவியில் இருக்க வழி செய்தார்.

கொள்ளையர்களைக் கொள்ளையடித்தார்?

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் செல்வங்களை கொள்ளையடித்து பலர் பெரும் செல்வந்தரானார்கள். அவர்களை ஆதரத்துடன் பிடித்த புட்டீன் சிலரை சிறையில் அடைத்தார். மற்றவர்களிடம் உங்களையும் இப்படி அடைப்பேன் என மிரட்டினார். அவர்கள் தம் செல்வத்தை புட்டீனுடன் பகிர்ந்து கொண்டார்கள் அதனால் புட்டீன உலகின் முன்னணி செல்வந்தரானார். அவரது சொத்து மதிப்பு $190பில்லியன் எனக் கருதப்படுகின்றது. எல்லாச் செல்வந்தர்களையும் சிறையில் அடைத்தால் இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது புட்டீனுக்கு தெரியும்.

உறுதி மொழி வேறு உடன்படிக்கை வேறு

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவிற்கும் சோவியத் அதிபர் மிக்கையில் கோர்பச்சேவிற்கும் இடையில் தொடர் பேச்சு வார்த்தையில் நடந்தது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் பேக்கர் கோர்பச்சேவிடம் உரையாடும் போது அமெரிக்கா கிழக்கு ஜெர்மனியை மட்டும் தான் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கும். அதைத் தாண்டி ஒரு அங்குலம் கூட கிழக்கு நோக்கி நேட்டோ நகராது எனச் சொல்லியிருந்தார். அதன் பின்னர் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் வார்சோ ஒப்பந்த நாடுகளுமாக 14 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. 2014 உக்ரேனின் கிறிமியாவை இரசியா கைப்பற்றிய போது ஜேம்ஸ் பேக்கர் தான் பேச்சு வார்த்தையின் போது சொன்னதை உடன்படிக்கையாக கருத முடியாது என்றார்.

ஜோர்ஜியாவிற்கும் உக்ரேனுக்கும் பாடம்

2006இல் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகிய ஜோர்ஜியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது விளடிமீர் புட்டீன் அதை ஆக்கிரமித்து துண்டாடினார். அதே போல 2014இல் உக்ரேனைத் துண்டாடினார். அத்துடன் உக்ரேன் அடங்கவில்லை. உக்ரேன் அதிபர் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரேனின் அரசிலமைப்பு திருத்தப்பட்டது. அதனால் சினமடைந்த புட்டீன 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்குள் மீண்டும் இரசியப் படையை அனுப்பினார்.

மேற்கு நாடுகள் புட்டீன் மீது தனிப்பட்ட பொருளாதாரத் தடை விதித்தன. அவரது சொத்துக்கள் எங்கு இருக்கின்றன என்பது பற்றி மேற்கு நாடுகளால் அறிய முடியவில்லை. பனிப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிலவிய பாதுகாப்பு ஒழுங்கை புட்டீன் தகர்த்து விட்டார். 2022 பெப்ரவரி 27-ம் திகதி பிரித்தானிய வானிலியின் நேயர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் புட்டீனின் தலைக்கு ஏன ஒரு விலை குறிக்கக் கூடாது என பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித்திடம் கேள்வியை முன் வைத்தார். அதற்கு அவர் நேரடியான் பதில் கொடுக்காமல் அப்படி ஒரு விலையும் குறிக்கப்படவில்லை என்றார். இப்போது பல மேற்கு நாட்டு ஊடகங்களில் போர் நடப்பது உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் அல்ல என்றும் போர் உக்ரேனுக்கும் புட்டீனுக்கும் இடையில்தான் நடக்கின்றது என்றும் பரப்புரைகள் நடக்கின்றன. புட்டீனுக்கு எதிராக இரசியர்களை கிளர்ச்சி செய்யும் நோக்கத்துடனேயே இரசியாமீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படுகின்றன. பொருளாதாரத் தடைகளைப் பார்த்து புட்டீன பின் வாங்கக் கூடியவர் அல்லர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. லிபியாவின் கடாஃபிக்கும் ஈராக்கின் சதாம் ஹுசேனுக்கும் நடந்தது  புட்டீனுக்கும் நடக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...