Thursday, 13 January 2022

"இந்தியாவே வெளியேறு” இயக்கம் மாலைதீவில் தீவிரமாகின்றது

 

 

முன்னாள் மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அவர்கள் “இந்தியாவே வெளியேறு” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்த இயக்கத்திற்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. மாலை தீவு இலங்கை நகர் கொழும்பில் இருந்து தென் மேற்காக 843 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 914 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்ற ஒரு சிறிய தீவுக் கூட்டமாகும். இந்து மாக்கடல் பிரதேசத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாகப் போட்டி போடும் நிலையில் மாலை தீவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது.

மாலைதீவின் வரலாறு

கிமு 300இற்கு முன்பு இருந்தே தமிழர்கள் மாலைதீவில் வாழ்ந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் ஆளப்பட்ட மாலை தீவு 12-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடாக்கப்பட்து. மாலைதீவை 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1953-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் கீழ் ஒரு குடியரசாகியது. 1965-இல் மாலைதீவு முழுமையான சுதந்திர நாடாகியது. சிறிய நாடக இருந்த போதிலும் உலக அரங்கில் அது தனது செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டியது. பொதுநலவாயம், சார்க், கூட்டுச்சேரா அமைப்பு போன்றவற்றில் உறுப்புரிமையும் பெற்றது. 1980இல் இருந்து அது உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக மாறியது. அதன் பொருளாதாரம் மீன்வளத்திலும் உல்லாசப் பயணத்திலும் தங்கியுள்ளது. 150 தீவுகளைக் கொண்ட மாலைதீவின் நிலப்பரப்பு 90,000 சதுர கிலோ மீட்டராகும். அங்கு 540,000 மக்கள் வசிக்கின்றனர். மாலை போன்ற தோற்றம் கொண்ட தீவுக் கூட்டம் என்பதால் மாலை என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே அது மாலைதீவு என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதேவேளை மஹால் என்ற அரபுச் சொல்லில் இருந்து திரிபடைந்து மாலைதீவு என்னும் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது. மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இருந்தார். 2018இல் நடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

சீன மாலைதீவு நட்புறவுப் பாலம்

மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் இருந்த போது மாலைதீவின் இரண்டு முக்கிய தீவுகளான மாலேயையும் ஹுல்ஹூலேயையும் இணைக்கும் நீண்ட நான்வழிச் சாலைகளைக் கொண்ட பாலம் ஒன்று சீனக் கடனில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்திற்கு சீன-மாலைதீவு நட்புறவுப் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது 1972-ம் ஆண்டு உருவான சீன மாலைதீவு நட்புறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. சீனாவின் Belt & Road Initiative திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட இந்தப் பாலம் மாலைதீவு மக்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அப்துல்லா யாமீன் அப்துல் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியபடியால் அமெரிக்காவும் இந்தியாவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் இறங்கின. மாலைதீவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல நூறு மில்லியன் டொலர் பெறுமதியான் கடனை சீனாவிடமிருந்து அப்துல்லா யாமீன் அப்துல் பெற்றுக் கொண்டார். அவர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த அப்துல்லா யாமீன் அப்துல் 2018 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் தோல்வியடைந்தார். இந்தியாவிற்கு சார்ப்பான மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் இப்ராஹிம் சொலி வெற்றியடைந்து நாட்டின் அதிபரானார்.

சீனக் கடன்

அஹமட் சியாம் என்ற மாலைதீவுத் தொழிலதிபருக்கு மாலைதீவு அரசின் உறுதியின் பேரில் 127.5மில்லியன் டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி ஓர் ஆடம்பர உல்லாச விடுதி கட்டுவதற்கு வழங்கியிருந்தது. தனக்கு வேண்டிய ஆட்சியாளர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் விசனமடைந்த சீனா 2020இல் கடனை அஹமட் சியாம் அல்லது மாலைதீவு அரசு திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை செய்தது. 2020இல் கொவிட்-19 தொற்று நோயால் மாலைதீவின் உல்லாசப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தனியார் கடனுக்கு அரசு உறுதி வழங்குவது எங்கும் எப்போதும் இல்லாத ஒன்றாகும். சீனக் கடன் பொறி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடன் வாங்கிய தொழிலதிபர் அஹமட் சியாமின் கட்சியும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீர் அப்துல்லின் கட்சியும் கூட்டணியாக இயங்கின. இதனால் அரசு வழங்கிய உறுதி ஓர் ஊழலாகக் கருதப்பட்டது. மாலைதீவு அரசுக்கு சீனா வழங்கிய கடன் 1.5 பில்லியன் டொலர். மொத்த தேசிய உற்பத்தியாக 3.9 பில்லியன் டொலரைக் கொண்ட மாலைதீவுக்கு இது ஒரு பாரிய கடன் சுமையாகும். அரசின் உறுதி மொழியில் தனியாருக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு என்பது பற்றி சரியான தகவல் இல்லை.

இந்தியா முதன்மையானது இந்தியாவே வெளியேறு என மாறியது

2018-ம் ஆண்டு சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த இந்திய மற்றும் அமெரிக்க சார்பு இப்ராஹிம் மொஹமட் சொலியின் முதல் வெளிநாட்டுப்பயணம் இந்தியாவிற்கானதே. அவரது கொள்கையும் “இந்தியா முதன்மையானது” என அழைக்கப்பட்டது. இந்தியா அவருக்கு 1.4 பில்லியன் டொலர் கடனை வழங்கியதுடன் மாலைதீவின் கடற்படைத் துறைமுகத்தை அபிவிருத்து செய்யும் பொறுப்பையும் இந்தியா பெற்றுக் கொண்டது. புதிய இந்திய சார்பு அதிபர் பழைய சீன சார்பு அதிபரை 2018-ம் ஆண்டு பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைத்தது. 2021 நவம்பர் மாதம் அந்த சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லாவை மாலைதீவு நீதிமன்றம் விடுதலை செய்தது. 2018-ம் ஆண்டு இந்திய சார்பு அதிபர் மொஹமட் சொலி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு அவ்வப்போது சீன சார்புக் கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சியின் ஏற்பாட்டில் நடந்து வந்தன. அது பின்னர் “இந்தியாவே வெளியேறு” என்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது. மாலைதீவுக் கடற்படைத்தளத்தில் இந்தியக் கடற்படையினர் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து நிலை கொண்டிருப்பதாக மாலைதீவில் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

“இந்தியாவே வெளியேறு” இயக்கத்தை மாலைதீவில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அதிபர் யாமீன் அப்துல் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு சீனா மறைமுகமாக உதவி செய்தால் அவரால் இதை ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் இட்டுச் செல்ல முடியுமா?. 2018இல் மாலைதீவில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவும் உறுதுணையாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தியாவிடம் அதன் சுற்றவுள்ள நாடுகளைக் கையாளும் திறன் இல்லை.

Tuesday, 11 January 2022

மேதகு மோடிக்கு கீழ்தகு தமிழ் அரசியல்வாதிகளின் கடிதம்

ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து இந்திய தலைமை அமைச்சர் திரு மோடி அவர்களுக்கு 2022-01-11-ம் திகதி அனுப்பிய கடிதத்தினை கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror நாளிதழ் அனுப்ப முதலே அம்பலப் படுத்தியுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் சார்பில் திரு மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகம் சார்பில் திரு செல்வம் அடைக்கலநாதன், மக்களாட்சி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் திரு த சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். கடிதம் பகிரங்கப்படுத்தப் பட்டமை தமிழ் அரசியல்வாதிகளிடையே காட்டிக் கொடுப்போர் உள்ளனர் என்பதையும் அவர்களது கீழான நிலையையும் அம்பலப்படுத்துகின்றது.

இந்திய உத்தரவின் படி இந்தியாவிடம் கோரிக்கை

1987-ம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை இந்திய அமைதி உடன்பாட்டின் படி இலங்கை அரசியலமைப்பு யாப்பிற்கான 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் அப்போது எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் போராளி அமைப்புக்களும் அவை தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு அல்ல என நிராகரித்திருந்தன. அதை ஓரளவிற்காகவது நடைமுறைப்படுத்த 26 ஆண்டுகள் எடுத்தன. வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபை முதல்வராக இருந்தவர்கள் அதனால் தமிழர்களுக்கு பயனில்லை எனக் கூறியிருந்தனர். ஒற்றையாட்சி அரசியலமைப்பு யாப்பின் கீழ் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் சாத்தியம் இல்லை என்பதை இரண்டு தட்வைகள் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்தச் சூழலில் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் படி இந்தியா விடுத்த உத்தரவின் படி இந்தியாவுடம் கோரிக்கை வைப்பது எழு தமிழ் கட்சிகளின் கீழான நிலையை எடுத்தியம்புகின்றது.

தும்புக்கட்டால் தொடமாட்டேன் என்றவருக்கு Suitcase?

தமிழ் கட்சிகளை கடந்த இரு ஆண்டுகளாக சந்தித்த இந்திய அரசுறவியலாளர்களும் (Diplomats) இந்திய அரசியல்வாதிகளும் எல்லா ஈழத் தமிழ்கட்சிகளும் ஒன்று பட்டு 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவிடம் முன் வைக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் உத்தரவிட்டிருந்தனர். நேற்று வரை தமிழ்த்தேசியக் கூட்டமைபின் தலைவர் திரு சம்பந்தன் 13வது திருத்தத்தை தும்புக்கட்டால் (துடைப்பக்கட்டை) கூட தொட மாட்டென் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். 2021 டிசம்பரில் இருந்து ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் இந்தியாவிற்கு எல்லாக் கட்சிகளும் இணைந்து ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அவர்களுடன் இணைய தமிழரசுக் கட்சி மறுத்து வந்தது. ரெலோ முன்னடுப்பதால் அதன் தலைமையில் செயற்பட தமிழரசுக் கட்சி செயற்பட மறுப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. திரு சுமந்திரன் அமெரிக்கா சென்று உரையாடல் நடத்தியமைக்கு போட்டியாக ரெலோ அமைப்பினர் ஒரு நாடகம் அரங்கேற்றி தங்களை மக்களிடையே பிரபலப்படுத்த முயற்ச்சிக்கின்றார்கள் எனவும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

சட்ட அறிவும் பட்டறிவும் உள்ள விக்கி ஐயா

மாகாண சபையின் அதிகாரங்களைப் பற்றி புரிந்து கொள்ளக் கூடிய சட்ட அறிவும் அதில் முதலமைச்சராக இருந்த படியால்  நடைமுறையில் அதற்கு இருக்கும் சிக்கல்கள் பற்றியும் பட்டறிவும் உள்ளவர் விக்கினேஸ்வரன் ஐயா. அவர் மேதகு மோடியைச் சந்தித்த போது பதின்மூன்றாக திருத்தம் தீர்வாகாது என எடுத்து உரைத்தவர் அவர். அவரும் அத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும் படி கோருக் கடிதத்தில் கையொப்பமிட்டமை ஆச்சரியம்ம் அளிக்கின்றது. 2007-2009இல் இனக்கொலை நடந்த போது உறக்க நிலையில் இருந்த விக்கி ஐயா அரசியலுக்கு வந்தவுடன் அவர் குங்குமப் பொட்டு இட்டிருப்பதாலும் சித்தார் வாசிக்கக்கூடியவராக இருப்பதாலும் அவர் நம்மவர் என ஒரு வட இந்திய ஊடகம் எழுதி இருந்தது. அதன் தாற்பரியம் இப்போது புரிகின்றது. சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தீர் ஐயா!

கடிதத்தில் உள்ளவற்றில் கவனிக்கப்பட வேண்டியவை:

1. இந்தியா 40 ஆண்டுகளாக தமிழர்களின் பிரச்சனைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வுகாண சுறுறுப்பாக செயற்பட்டு வருகின்றது. – பந்தி-2

2. 13வது திருத்தம் ஒற்றையாட்சியின் கீழ் அறிமுகப்படுத்தப் பட்டமையினால் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்படவில்லை. மாறாக பணிப்பரவலாக்கம்தான் செய்யப்பட்டது. – பந்தி-3

3. இணைப்பாட்சி கட்டமைப்பை நோக்கி நகரும் முயற்ச்சிகள் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன – பந்தி 4

இவற்றைத் தொடர்ந்து 13இலும் அதிக அதிகாரம் கொண்ட தீர்வுக்கு எடுத்த முயற்ச்சிகள் கடிதத்தில் அடுக்கிச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியா அவ்வப்போது வெளிவிட்ட கருத்துக்களும் அடங்கியுள்ளன.

கடிதத்தில் 13-03-2015இல் இலங்கை நாடாளுமன்றத்தில் திரு மோடி உரையாற்றும் போது சொன்ன பச்சைப் பொய்யும் உள்ளது:

·         இன்று இந்திய (மாநில) அரசுகளை வலிமையாக்குதல் எனது உயர் முன்னுரிமையாக இருக்கின்றது. நான் கூட்டுறவு இணைப்பாட்சியில் உறுதியான நம்பிக்கை உள்ளவன். நாம் (மாநில) அரசுகளை தேசிய முடிவெடுக்கும் செயற்பாட்டில் முறைசார் பங்காளிகளாக ஆக்குகின்றோம்.

திரு மோடி தொடர்ச்சியாக மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றார். முக்கியமாக இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு யாப்பின் 370து பிரிவினை அவரது அரசி நீக்கி கஷ்மீர் மக்கள் 70 ஆண்டுகளாக வைத்திருந்த அதிகாரத்தைப் பறித்துள்ளார். அவர் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பவர்.

பல வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லுதல் தமிழ் அரசியல்வாதிகள் வழமையாக வைக்கும் ஒப்பாரியாகும். அந்த ஒப்பாரியை திரு மோடிக்கு எழுதிய கடிதத்திலும் உள்ளடக்கியுள்ளனர். அவர்கள் மோடியிடம் வைக்கும் ஒட்டு மொத்தக் கோரிக்கையும் ஒரு பந்தியில் அடங்கியுள்ளது:

 

·         fully implement the provisions of the Thirteenth Amendment to the Constitution 

·         implement the clear commitments made by all sections of government from 1987 onwards and enable the Tamil speaking peoples to live with dignity, self-respect, peace and security in the areas of their historic habitation, exercising their right to self-determination within the framework of a united, undivided country. 

 

இத்தகைய சூழலில் இலங்கை அரசிடம் அதன் வாக்குறுதிகளை காப்பாற்றும் படி வலியுறுத்துமாறு மேதகு தங்களைக் கோருகின்றோம்:

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத நாட்டில் தன்மானத்துடனும், தன்-மரியாதையுடனும், அமைதியாகவும் பதுகாப்பாகவும் தங்கள் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடத்தில் வாழ்வதற்கும் தங்கள் உரிமைகளையும் தன்-முடிபுகளையும் (சுயநிர்ணய உரிமை) செயற்படுத்துவதற்கு 1987இல் இருந்து எல்லா அரசின் பிரிவினரும் செய்த வாக்குறுதிகளின்படி 13-ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தவும்.

கடிதத்தின் பின்னிணைப்பாக அவசரமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஏழு அம்சக் கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளன:

1 13திருத்தமும் மாகாண சபையும்

2. மொழி உரிமையும் 16-ம் திருத்தமும்

3. குடிப்பரம்பல், காணி அபகரிப்பு, எல்லை மாற்றம்

4. குடியுரிமையும் சமத்துவமும்

5. பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதியாகவுள்ளோர்

6. தேர்தல் சீர் திருத்தம்

7. ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் எண்ணக்கரு

உண்மையில் பார்க்கப் போனால் கடிதத்தில் உள்ளவற்றிலும் பார்க்க பின்னிணைப்பில் உள்ளவைதான் தமிழ் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. ஒற்றையாட்சிக்குள் இவை எதுவும் நிறைவேற்றப் பட முடியாது. இலங்கை அரசியலமைப்பு யாப்பின் 20-திருத்தம் 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் வழுவிழக்கச் செய்து விட்டது. 2003-ம் ஆண்டு மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை எனவும் 2006-ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தவை செல்லுபடியற்றது என்றும் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 13-ம் திருத்தத்தை செல்லாக் காசாக்கிவிட்டது.

கடிதத்தில் விடுபட்டவை.

1. 2009-ம் ஆண்டு முடிவடைந்த இனவழிப்பு போரிற்கு சிங்களத்திற்கு சார்பான இந்தியாவின் பங்களிப்பு தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.

2. 2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் போரின் போது இலங்கைப் படையினர் மனித உரிமைகள் மீறியமையைக் கண்டிக்க கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையை பாராட்டும் தீர்மானமாக இந்தியா மாற்றியமை தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.  

3. இலங்கை அரசு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ச்சியாக மீறுகின்ற போதிலும் இலங்கையுடன் இந்தியா நல்ல உறவை வளர்ப்பதாக இந்தியா சொல்லிக் கொண்டிருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.

4. இலங்கைப் போர்க்குற்றவாளிகளை/இனக்கொலையாளிகளை பன்னாட்டு சட்டங்கள் முன்னிறுத்தி தண்டிப்பதற்கு இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு தடையாக இருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது

தமிழர்களிடையே உள்ள இந்த விரக்திகளை சீனர்கள் தமக்கு சாதகமாக்கி தமிழர்களை இந்தியாவிற்கு எதிராகத் திருப்பி தமிழர் நிலங்களில் சீனாவின் கேந்திரோபாய நிலைகளை அமைக்கும் அபாயம் உள்ளது.

இவற்றை மேற்கூறிய ஏழு கட்சியினரும் தமது கடிதத்தில் உள்ளடக்கத் தவறியமை அவர்களது அரசுறவியில் அறிவின்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. அவர்கள் இந்தியாவிடம் ஒரு மண்டியிடுகின்ற நிலையிலேயே தம் கடிதத்தை வரைந்துள்ளனர். 

கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரே ஒரு வழி நாட்டைப் பிரிப்பதுதான்.

கடிதத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்:

 https://www.dailymirror.lk/recomended-news/Seven-Tamil-Parties-Seek-Modis-Help-for-Implementing-13-A-in-Full/277-228622

Monday, 10 January 2022

சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் ஜப்பான் ஒஸ்ரேலிய ஒப்பந்தம்

  

பெல்ஜியம், நெதர்லாந்து, போலாந்து, ஆர்ஜெண்டீனா, கனடா, பிரேசில், மெக்சிக்கோ, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை நடு-வலிமை நாடுகள் எனச் சொல்லலாம். இந்த நாடுகள் தமக்கு இசைவான வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்கின்றன. அவ்வப்போது நடு-வலிமை நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்வதுண்டு. இந்தியாவும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தங்களை (Reciprocal Access Agreements) 2020-ம் ஆண்டு செய்தன. அதன் படி இரண்டு நாடுகளும் ஒன்றின் தளங்களை மற்றது தனது படைத்துறையின் வான்கலன்களை, கடற்கலன்களை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும், மீள்நிரப்பல் செய்யவும் பாவிக்க முடியும். இந்தியா இதே போன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் செய்திருந்தது. 2022 ஜனவரி 6-ம் திகதி ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தைச் செய்துள்ளன.

ஒஸ்ரேலிய – ஜப்பானிய உறவு

ஒஸ்ரேலியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை. ஜப்பான் கிழக்கில் உள்ள ஒரு மேற்கு நாடாக கருதப்படுகின்றது. ஒஸ்ரேலியா மேற்கு நாட்டவர் குடியேறி ஆட்சி செய்யும் கிழக்கு நாடு. 2017-ம் ஆண்டில் இருந்தே ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தை செய்யும் பேச்சு வார்த்தையை செய்து வந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு அந்தப் பேச்சு வார்த்தை ஜப்பானில் உள்ள இறப்புத் தண்டனைச் சட்டத்தால் தேக்க நிலையை அடைந்திருந்தது. ஆனால் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தலால் இரு நாடுகளும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் தமக்கிடையிலேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இன்னும் ஒரு மைல் கல்லைத் தாண்டியுள்ளன.

கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயற்ச்சி

நாடுகளுக்கிடையிலேயான உறவுகளின் உச்ச நிலையை கூட்டு (Alliance) எனவும் அதற்கு அடுதத நிலையை கேந்திரோபாய பங்காண்மை (Strategic Partnership) எனவும். அதனிலும் கீழான நிலையின் உள்ள உறவை பங்காண்மை எனவும். மிகக் குறைந்த உறவை நட்பு நாடு எனவும் வகைப்படுத்தலாம். கூட்டு நாடுகள் எச்சூழலிலும் ஒரு நாட்டுக்கு மற்ற நாடு உதவும். கூட்டு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எல்லா படைத்துறைத் தொழில்நுட்பத்தையும், உளவுத்தகவல்களையும் அவை தடையின்றிப் பகிர்ந்து கொள்ளும். உதாரணமாக அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவு கூட்டு உறவாகும். ஆனால் அமெரிக்கா F-22 போர் விமானத்தை பிரித்தானியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேந்திரோபாய பங்காண்மையில் பல வகையில் இரு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். உதாரணம கட்டார் – அமெரிக்க உறவு. அவை பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பிராந்திய அமைதி தொடர்பாகவும் ஒத்துழைக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கேந்திரோபாய பங்காணமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பங்காண்மையில் இருக்கும் நாடுகள் குறித்த சில வகைகளில் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். நட்பு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உலக அரங்கில் அனுசரணையாக நடந்து கொள்ளும். ஒஸ்ரேலிய ஜப்பானிய உறவு இருபுற அனுமதி ஒப்பந்தம் செய்த பின்னர் கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயர்ந்துள்ளது.

வலிமை மிக்க கடற்படைகள்

எடை அடிப்படையில் ஒஸ்ரேலியாவின் கடற்படை உலகின் 16வது பெரிய கடற்படையாக இருக்கின்ற போதிலும் புதிய படைக்கலன்கள் உபகரணங்கள் அடிப்படையிலும் கடற்போர் அனுபவத்திலும் ஒஸ்ரேலியக் கடற்படை உலகின் முன்னணிக் கடற்படையாகும். தற்பாதுகாப்பு படையான ஜப்பானின் கடற்படை Kaga, Izumo என்னும் இரண்டு உலங்கு வானுர்திக் கப்பல்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களாலும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்விமானமான F-35-Bகளைக் காவிச் செல்ல முடியும். 114 கடற்கலன்களைக் கொண்டது ஜப்பானியக் கடற்படை. ஜப்பானின் நாசகாரிக் கப்பல்களினதும் தரைசார் கப்பல்களினதும் மொத்த எண்ணிக்கை பிரித்தானியாவினதும் பிரான்ஸினதும் மொத்த எண்ணிக்கையிலும் அதிகமானது. தாக்குதிறனின் ஜப்பானியக் கடற்படை சீனாவை விஞ்சக் கூடியது எனக் கருதப்படுகின்றது. ஜப்பானிடம் சிறந்த கப்பல் கட்டுமான வசதிகள் உண்டு. ஜப்பானின் கடற்போக்குவரத்திற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத வகையில் காப்பாற்றும் வலிமை ஜப்பானுக்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த புவி அதிர்ச்சியின் போது ஜப்பானியக் கடற்படையின் துரித செயற்பாடு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானிய ஒஸ்ரேலியக் கடற்படை ஒத்துழைப்பு கடற்போர் அனுபவமில்லாத சீனாவிற்கு பெரும் சவாலாக அமையும்.

குவாட் படைத்துறை ஒத்துழைப்பை ஆரம்பிக்கவில்லை

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய குவாட் உரையாடல் நாடுகளின் அரச தலைவர்கள் ஒரு கலந்தாலோசனையை நடத்தினர். அந்த ஒன்று கூடலின் முடிவில் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் படைத்துறை ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. குவாட் உரையாடல் நாடுகளின் அமைச்சர்கள் அரசுறவியலாளர்கள் கலந்துரையாடுவாரக்ள் எனக் குறிப்பிடப்படடிருந்தது. ஆனால் படைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பது உறுதியாகின்றது. அது மட்டுமல்ல ஒஸ்ரேலியா அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் ஓக்கஸ் என்னும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை 2021 செப்டம்பரில் செய்துள்ளது. இந்த நிலையில் ஜப்பான் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஓரு பகுதியாக ஒஸ்ரேலியாவுடன் இருபுற அனுமதி ஒப்பந்தத்தை (Reciprocal Access Agreement) செய்துள்ளது.

கொதிக்குக் கடலில் குதிக்கும் நட்பு

கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 2013 நவம்பரில் கிழக்குச் சீனக் கடலில் சீனா பத்து இலட்சம் சதுர மைல்களைக் கொண்ட கிழக்குச் சீனக் கடலுக்கு மேலான வான் பரப்பை தன்னுடைய வான் பாதுகாப்பு பிராந்தியமாகப் பிரகடனப் படுத்தியது. அதை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்க மறுத்ததுடன் தமது போர் விமானங்களை தொடர்ச்சியாக அங்கு பறக்க விட்டு தம் ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் இது போன்ற அச்சுறுத்தலால் ஜப்பான் தற்பாதுகாப்பு படையை மட்டும் வைத்திருக்க முடியும் என்ற அதனது அரசியலமைப்பு யாப்பிற்கு புதிய வியாக்கியானங்களைக் கொடுத்து தன் படைவலிமையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றது. ஒஸ்ரேலிய ஜப்பானிய நட்பு கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கு பாதகமாக அமையலாம்.

ஆழக் கடல் ஆளப் போகும் ஒஸ்ரேலியா

ஒஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ள அணு வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்டு பசுபிக்கடல், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், ஜப்பானியக் கடல் ஆகியவற்றினூடாக ஆர்க்டிக் வலயம் வரை தொடர்ச்சியா தங்குமிடமின்றிப் பயணிக்கக் கூடியவை. அவற்றால் ஜப்பானிய துறைமுகங்களைப் பாவிக்க முடியும். பல தீவுகளைக் கொண்ட ஜப்பானுடனான ஒப்பந்தம் ஒஸ்ரேலியாவின் கடற்கலன்கள் மேற்கூடிய ஐந்து கடல்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஏற்படுத்தும்.

மலாக்காவில் சீனா மல்லாக்காக விழுத்தப்படுமா?

சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியாகிய மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபா தீவுகளை இப்போது இந்தியாவுடன் அமெரிக்கா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் பாவிக்கலாம். அதற்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை ஒஸ்ரேலியாவுடன் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் படையினர் பாவிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இந்த நான்கு நாடுகளும் இணைந்து மலாக்கா நீர்ணையூடாக சீனாவின் போக்கு வரத்தை துண்டிக்கலாம் என்ற அச்சுறுத்தல் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...