Sunday, 6 March 2022

இரசிய வான்படையும் உக்ரேனிய வான்படையும்

  


இரசியாவின் வான் வலிமைக்கு 26.9 புள்ளிகளைக் கொடுத்த ஒரு வான் வலு தரப்படுத்தும் நிறுவனம் உக்ரேனின் வான் வலிமைக்கு 2.4 புள்ளிகளை மட்டும் கொடுத்திருந்தது. இரசியாவிடம் 3863 போர் விமானங்களும் உக்கிரேனிடம் 210ம் இருக்கின்றன. இருந்தும் உக்ரேன் மீது இரசியா வான்-ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. உக்ரேனுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் களமிறங்கினால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் போர்த்துக்கலைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக MiG-31K ஒலியிலும் 2.8 மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய போர்விமானங்களை Kinzhal என்னும் அணுக்குண்டு தாங்கக் கூடிய மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்-சோனிக்)ஏவுகணைகளை இரசியாவிற்கு சொந்தமான போலந்தை அடுத்துள்ள கலினின்கிராட் நிலப்பரப்பில் இரசியா எண்ணிக்கை நிறுத்தியுள்ளது.

பறக்காத விமாங்கள் 300

உக்ரேனுக்கு குறைந்த நேரத்தில் பறந்து செல்லக் கூடிய வகையில் முன்னூறு Su-35 மற்றும் Su-30 போர்விமானங்கள் இரசியா நிறுத்தி வைத்துள்ளது. அவை இதுவரை உக்ரேனுக்கு பறப்புக்களை மேற்கொள்ளவில்லை. Su-34 விமானங்கள் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகளை வீசக் கூடியவை. இரசியாவிடம் வான் மேலாண்மையை சிறப்பாகச் செய்யக் கூடிய எண்பது 4.5 தலைமுறை Su-35S விமானங்கள் உள்ளன. Su-30-SM (2) என்னும் பற்பணிப் போர்விமானங்கள் எண்பது உள்ளன. இவ்விரண்டு வகையான விமானங்களாலும் தாக்குதற்கான வான் எதிர்ப்பு (Offensive Counter-Air) மற்றும் பாதுகாப்பிற்கான வான் எதிர்ப்பு (Defensive Counter-Air) ஆகிய பணிகளைச் செய்து உக்ரேன் வான்பரப்பில் இரசியாவால் மீயுர்-வான் – வான் மேலாதிக்கத்தை (Air-supremacy) செய்ய முடியும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. உக்ரேன் மீது இரசிய வான்படை நடத்திய பறப்புக்களில் பெரும் பான்மையானவை இரவு நேரத்திலேயே நடந்தன. இரசியத் தரைப்படைக்கு போதிய நெருங்கிய பறப்பு ஆதரவு வழங்க முடியாமல் இரசியப் படைகள் இருக்கின்றன.

ஆயிரம் இருந்தும்

கடந்த பத்து ஆண்டுகளாக இரசியா பல பில்லியன் டொலர்களை புதிய விமானங்களை உருவாக்குவதற்கு செலவழித்து வருகின்றது. 2009இற்கும் 2020இற்கும் இடையில் இரசிய விமானப் படைக்கு 440 புதிய விமானங்களும் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆளிலிவிமானங்களும் (Drones) இணைக்கப்பட்டன. இரசியா போர் ஆரம்பித்த போது உக்ரேனின் விமானங்களையும் ரடார்களையும் அழிக்க பல ஏவுகணைகளை வீசியது. அவற்றால் உக்ரேனிய போர் விமானங்களையோ ரடார்களையோ அழிக்க முடியாத வகையில் உக்ரேனியர்கள் அவற்றை பல இடங்களில் பரப்பி வைத்திருந்தார்கள். இரசிய ஆளிலிவிமானங்கள் தாக்குதலுக்கு வேவுபார்த்தலுக்கோ உக்ரேனில் பாவிக்கவில்லை எனச் செய்திகள் வருகின்றன. பல படைத்துறைச் சஞ்சிகைகள் இரசியாவின் ஆளிலிகள் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. மாறாக உக்ரேன் பெருமளவு ஆளிலிகளைப் பயன்படுத்துகின்றது. 

உக்ரேனின் ஆளிலிவிமானம்

சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்தபோது சிறந்த படைக்கலன் உற்பத்தி செய்யும் பிரதேசமாக உக்ரேன் இருந்தது. விமானம் தாங்கிக் கப்பல்கள் சிறந்த தாக்குதல் போர்விமானங்கள் உக்ரேனில் தயாரிக்கப்பட்டன. அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உக்ரேனியர்களிடம் இருக்கின்றது. ஆளில்லாப் போர்விமானங்களை உக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா மறுத்ததனால் உக்ரேன் தானாகவே ஆளில்லாப் போர்விமானங்களை உருவாக்கிவிட்டது. அவற்றில் மொத்தம் ஐம்பது கிலோ கொண்ட நான்கு குண்டுகளையோ அல்லது இரு வானில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் ஏவுகணைகளையோ எடுத்துச் செல்லலாம். ஆமைப்புறா என்னும் பொருள்பட உக்ரேன் மொழியில் Gorlytsa எனப் பெயரிடப்பட்டுள்ள உக்ரேனின் ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அதிகமாக ஏழு மணித்தியாலம் பறக்கக் கூடியவை. ஐயாயிரம் மீட்டர்களுக்கு அதிகமான உயரத்தில் பறக்கக் கூடியவை. 

சண்டை ஆனால் சட்டை கிழியவில்லை

இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்து பத்து நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான உக்ரேனிய விமானங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. போர் ஆரம்பித்தவுடன் உக்ரேனின் வான்கலன்களையும் வான் பாதுகாப்பு முறைமைகளையும் இரசியா முற்றாக அழித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. உக்ரேனிடமிருந்த சோவியத் ஒன்றிய கால எஸ்-300 ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒன்றை இரசியா அழித்திருந்தது. அது போதிய உதிரிப்பாகங்கள் இல்லாமல் இடம் விட்டு இடம் நகர முடியாமல் இருந்தது. 2022 மார்ச் 6-ம் திகதி மட்டும் இரசியாவின் ஒரு Su-25, இரண்டு Su-30 SM, ஒரு ஆளிலிவிமானம், இரண்டு உலங்கு வானூர்தி ஆகியவற்றிச் சுட்டு விழுத்தியதாகவும் போர் தொடங்கியதிலிருந்து மொத்தம் 44 விமானங்களையும் 44 உலங்கு வானூர்திகளையும் தாம் சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரேனியப் படையினர் தெரிவித்தனர்.

யானையின் சோளப்பொரி

புட்டீனின் படைகள் உக்ரேனை ஆக்கிரமிக்கும் போது அதனிடம் 98 தாக்குதல் விமானங்கள் உட்பட 210 போர் விமானங்கள் இருந்தன. ஐரோப்பாவில் நான்காவது பெரிய விமானப்படை உக்ரேனிடம் இருந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் உக்ரேனில் பல விமான உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் உக்ரேனின் விமானப்படை இரசியாவின் விமானப்படையுடன் ஒப்பிடுகையில் சோளப்பொரியும் யானையும்.

இரசிய வான்படையின் பிரச்சனைகள்:

1. குறைவான ஏவுகணைகள்: சிரியப் போரின் போது இரசியா பெருமளவு வழிகாட்டல்-துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளைப் பாவித்து விட்ட படியால் இரசியாவின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து விட்டது. உக்கிரமமான போர் வரும் போது பாவிப்பதற்கு என இரசிய வான் படை தனது வானிலிருந்து தரைக்கு வீசும் ஏவுகணைகளை பாதுகாத்து வைத்திருக்கின்றது.

2. S-400 ஆப்பு வைக்கலாம்: உக்ரேன் வான் வெளியை இலக்கு வைத்து இரசியா தனது S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுத்தி வைத்திருக்கின்றது. அது 400கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் விமானங்களை உணர்ந்து தானாகவே அவற்றை சுட்டு வீழ்த்த வல்லது. உக்ரேனுக்கு மேல் பறக்கும் இரசிய விமானங்களை இரசியாவின் S-400 சுட்டு வீழ்த்தலாம் என இரசிய வான்படையினர் கரிசனை கொண்டுள்ளனர். இதுவரை ஒரு உக்கிரமான போரில் S-400 பயன்படுத்தப்படவில்லை. சிரியாவில் பாவிக்கப்பட்டது. போதிய அனுபவமில்லாமல் விமானங்களைப் பலியிட இரசிய வான்படை விரும்பவில்லை.

3. அனுபவமற்ற இரசிய விமானிகள்: இரசியப் போர்விமானிகள் ஆண்டு ஒன்றிற்கு நூறு மணித்தியாலங்கள் மட்டுமே விமானம் ஓட்டும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தமது விமானிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு 180 முதல் 240 மணித்தியாலம் விமானம் ஓட்டும் வாய்ப்பை கொடுக்கின்றனர். பெறுமதி மிக்க விமானங்களை அனுபவம் குறைந்த விமானைகளிடம் கொடுத்து பறக்க விட்டு அவை சுட்டு வீழ்த்தப்பட்டால் அல்லது விபத்திற்கு உள்ளானால் அது இரசியாவின் விமான விற்பனையைப் பாதிக்கும்.

4. Targeting Pod தட்டுப்பாடு: போர்விமானங்கள் தாக்குதலுக்கு செல்லும் போது Targeting Pod என்னும் கருவியை அதில் பொருத்தி விடுவர். அவை எதிரியின் தாக்கப்பட வேண்டிய இலக்குகளை இனம் காணும். இரசியாவிடம் போதிய அளவும் Targeting Pod இல்லை எனப்படுகின்றது.

5. அப்பாவிகளைக் கொல்லாமல் இருக்க: இரசிய வான்படையினரின் தாக்குதலில் அப்பாவி உக்ரேனியர்கள் அதிகம் கொல்லப்படுவதை இரசியரகள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அவர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் இருக்க இரசிய வான் படையினர் பற்ப்புக்களைக் குறைத்துள்ளனர்.

6. உக்ரேனின் குழப்பிகள்: உக்ரேன் பல்வேறு இலத்திரனியல் குழப்பிகளை  பாவித்து இரசியாவின் விமானங்கள் மற்றும் வழிகாட்டல் ஏவுகணைகளை குழப்பிவிடுகின்றது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டை வேடமா உபாயமா?

உக்ரேன் அதிபர் விளாடிமீர் ஜெலன்க்ஸி தமக்கு போர்விமானங்களை தாருங்கள் என வலியுறுத்தி வேண்டினார். ஐரோப்பிய நாடுகளின் Eurofighter Typhoon, Rafael, Gripen ஆகிய சிறந்த விமானங்கள் இருக்கின்றன. உலகின் மிகச் சிறந்த Meteor ஏவுகணைகள் இருக்கின்றன. அவற்றைக் கொடுத்தால் உக்ரேனின் வான்பரப்புக்குள் இரசிய விமானங்களை வராமல் தடுக்கலாம். அவற்றைக் கொடுத்தால் புட்டீன் கடும் சினம் கொள்வார் என்பதால் அவற்றை ஐரோப்பிய நாடுகள் கொடுக்கவில்லை. மாறாக நேட்டோவில் இணைந்துள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய மற்றும் வார்சோ ஒப்பந்த நாடுகளிடமுள்ள பழைய சோவியத் தயாரிப்பு விமானங்களை உக்ரேனுக்கு  வழங்க ஏற்பாடு நடக்கின்றது. பல்கேரியாவிடம் பதினாறு Mig-29 பதினான்கு Su-25 போர்விமானங்கள் உள்ளன. போலாந்திடம் இருபத்தி மூன்று Mig-29 பதினெட்டு Su-22 விமானங்கள் உள்ளன. சுலோவாக்கியாவிடம் பதினொரு Mig-29 விமானங்கள் உள்ளன. இவற்றை உக்ரேனுக்கு வழங்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. சில ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இந்த விமானங்கள் உக்ரேனிய விமானிகளுக்கு பழக்கப்பட்டவை அவற்றை உடனடியாக அவர்களால் செலுத்திக் கொண்டு பறக்க முடியும். ஆனால் Eurofighter Typhoon, Rafael, Gripen போன்றவற்றிற்கு நீண்ட காலப் பயிற்ச்சி தேவைப்படும் என ஐரோப்பிய நாடுகள் சொல்கின்றன. பல்கேரியா, போலாந்து, சுலோவாக்கிய நாடுகள் தம்மிடமுள்ள பழைய விமானங்களை உக்ரேனுக்கு கொடுத்து விட்டு அவற்றிற்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் போர் விமானங்களை வாங்கும். எல்லாமே வியாபாரம்தான். சோவியத் தயாரிப்பு விமானங்களை இரசியாவிற்கு எதிரான போரில் உக்ரேன் பாவிக்கும் போது அதே போன்ற விமானங்களை இரசியாவும் பாவிக்கும் போது இரசியப் படையினரையும் அவர்களின் வான் பாதுகாப்பு முறைமையும் குழப்பத்திற்கு உள்ளாகி நட்புச் சூடு (Friendly Fire) அதிக அளவில் இரசியத் தரப்பில் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் நேட்டோ நாடுகளின் உபாயமாக இருக்கலாம்.

நாள் செல்ல செல்ல உக்ரேனில் கடுமையான வான் சண்டை நடக்கும். பெலரஸில் உள்ள S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை தேர்வுக்கு உட்படுத்தப்பட அமெரிக்க நிபுணர்கள் இரகசியமாக களமிறங்குவார்கள். இஸ்ரேல் தனது வான்படைக்கு அனுபவம் தேடி அலைகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...