Tuesday, 29 March 2022

உக்ரேன் போரால் உலகம் படும்பாடு

 

 


இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டிலும் எங்காவது ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. உலகின் ஒரு பகுதியில் நடந்த போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்துவது அரிது. கொரியப் போர், வியட்னாம் போர், ஈராக் போர் போன்றவை உலகின் மறுபகுதிகளில் செய்திகளாக மட்டுமே அடிபட்டன. ஆனால் உக்ரேன் மீது இரசியா தொடுத்த போருக்கு எதிராக நேட்டோ நாடுகள் தொடர்ச்சியாக எடுத்து வரும் பொருளாதார தடைகள் உலகெங்கும் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொவிட்-19 பெரும் தொற்றால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உக்ரேன் போரும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகை ஆட்டிப்படைக்கின்றது. எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் தவிக்கின்றன. சிதறிப்போயிருந்த உலக சரக்கு விநியோகச் சங்கிலி மேலும் சிதைவடைகின்றது. எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அமெரிக்க டொலரில் வைத்திருந்த வைப்பீடுகளின் பெறுமதி தேயுமா என கரிசனை கொண்டுள்ளன.

மானம் இழக்கும் இரசியா

போரில் வெற்றி பெறுவதற்கு வான்படையின் வலிமை அவசியம் என்று புவிசார் அரசியல் கோட்டாளர்களின் ஒருவரான அலெக்சாண்டர் பி டி செவேர்ஸ்கி வான் வலிமையே போரை வெல்லும் என்றார். உக்ரேனிலும் பார்க்க பதினைந்து மடங்கு பெரிய இரசிய வான்படையால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்த்தானில் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க, ஒன்பது ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க இருமடங்கு எண்ணிக்கையான படையினரை ஒரு மாதத்தில் இரசியா உக்ரேனில் இழந்து விட்டது. சிறந்த ஒருங்கிணைப்பின்மை, வழங்கல் குறைபாடு, படையினரிடம் மன உறுதியின்மை, உகந்த உளவுத் தகவல் பெறமுடியாமை. எதிரியின் வலுவை மதிப்பிடத் தவறியமை என பல குற்றச் சாட்டுகள் இரசியப்படையினர் மீது சுமத்தப்படுகின்றது. உக்ரேன் போரில் இரசியா உலக அரங்கில் மானம் கெட்டு நிற்கின்றது. தன் எதிரிகளிடையே ஓர் உறுதியான ஒற்றுமையையும் அது உருவாக்கியுள்ளது.

கையாலாகாத நேட்டோவும் செல்லாக் காசான ஐநாவும்

உக்ரேனில் நடக்கும் போரின் நடுப்புள்ளி நேட்டோவாகும். உக்ரேன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த போது அது சுவீடன் போல் ஒரு நடுநிலை நாடாக இருப்பதே உகந்தது அல்லாவிடில் பேரழிவு ஏற்படும் என உக்ரேனுக்கு உண்மை நிலையை உணர வைக்காமல் உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கான கதவு திறந்திருக்கின்றது என அதை ஊக்குவித்தது நேட்டோ. இப்போது உக்ரேனில் பெரும் சொத்தழிவும் உயிரிழப்புக்களும் நடக்கும் போது அதைத் தடுக்க முடியாமல் நிற்கின்றது நேட்டோ. ஐநா பாதுகாப்புச் சபையில் புட்டீனின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க முடியவில்லை. பொதுச்சபையில் உக்ரேன் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம் வெறும் காகிதம் மட்டுமே.

தூங்கிய ஜெர்மனியை இடறி எழுப்பிய புட்டீன்

தனது பொருளாதார வலிமையையும் புவிசார் சூழலையும் கருத்தில் கொள்ளாமல் குறைந்த அளவு நிதியை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிக் கொண்டு இரசியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து இரசியாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்து கொண்டு சிவனே என இருந்த ஜெர்மனி உக்ரேன் போரால் தனது பாதுகாப்பு செலவை அதிகரித்ததுடன் அமெரிக்காவிடமிருந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35A வாங்கவுள்ளது. மேலும் தன்னிடமுள்ள Eurofighter போர்விமானங்களை இலத்திரனியல் போர் புரியக் கூடிய வகையில் மேம்படுத்தவுள்ளது. இரசிய ஆக்கிரமிப்பிற்கு ஒரே பதில் நேட்டோ ஒற்றுமையும் படைவலிமையும் என்றது ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை. இரசியாவிற்கு அண்மையாக ஒரு வலிமை மிக்க அரசாக ஜெர்மனி உருவாகின்றது.

பாடம் கற்ற பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனித்துவத்தைப் பேண வேண்டும் இரசியாவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் எனப் போதித்து வந்தது. புட்டீனை 2022 பெப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்த பின்னர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உக்ரேன் நெருக்கடியை தான் மோசமாக்க மாட்டேன் என புட்டீன் தனக்கு உறுதிமொழி வழங்கியதென்றார். புட்டீன் ஒரு புரியாத புதிர் என அவர் பாடம் கற்றிருப்பார் என நம்பலாம். பிரான்ஸிடம் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி படைக்கலன்கள் உதவி முக்கியமாக போர்த்தாங்கிள் வழங்கும் படி கேட்ட போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மறுத்துவிட்டார். அவர் இரசியாவிற்கு அஞ்சுகின்றார் என ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியதுடன் பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்ஸனின் துணிச்சலைப் பாராட்டினார்.

ஒற்றைக் கம்பியில் நடக்கும் இந்தியா

காலத்தால் மாற்றமடையாத எச்சூழலிலும் நட்பும் உதவியும் செய்த இரசியா இந்தியாவின் சிறந்த நட்பு நாடு. படைக்கலன் கொள்வனவு, படைத்துறைத் தொழில்நுட்ப வழங்கல், எரிபொருள் வழங்கல், தேவையான போதெல்லாம் நிபந்தனையின்றி ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சார்பாக தன் இரத்து (வீட்டோ) அதிகாரத்தைப் பாவிப்பது போன்றவற்றை இரசியா செய்து வந்தது. அந்த இரசியாவைப் பகைக்க கூடாது. பகைத்தால் இரசியா, பாக்கிஸ்த்தான், சீனா ஆகியவற்றின் கூட்டு இந்தியாவிற்கு மோசமான ஆப்பு என்பதையும் இந்தியா அறியும். சீனாவை சமாளிக்கவும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் முன்னேற்றமான நிலையை அடையவும், புதிய தொழில்நுட்பங்களைப் பெறவும் அமெரிக்காவுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்த இந்தியா முயன்று கொண்டிருக்கின்றது. அமெரிக்க அரசு இந்தியாவின் நிலையைப் புரிந்து கொண்டாலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்த்தி தெரிவித்துள்ளனர். இரசியா இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளது..

அணுக்குண்டைக் கொண்டுவா என்ற ஜப்பான்

அணுக்குண்டால் தாக்கப்பட்ட ஒரே ஒரு நாடாகிய ஜப்பான் உக்ரேனை புட்டீன் ஆக்கிரமித்தவுடன் தனது நாட்டில் அமெரிக்காவின் அணுக்குண்டுகளைக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றார் ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் சின்சோ அபே. இது சீனாவை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. ஜப்பானும் பிரித்தானியாவைப் போல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நிழல் போல் தொடர்கின்ற ஒரு நாடு. இரசியாவை போரில் தோற்கடித்த ஒரே ஒரு ஆசிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் எல்லை முரண்பாட்டைக் கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜப்பான் தனது தெருவிளக்குகள், விளப்பரங்கள் ஆகியவற்றின் ஒளி அளவைக் குறைத்துள்ளது.

சீனாவின் காட்டில் மழை

இதுவரை காலமும் இரசியா தன்னை Batmanஆகவும் சீனாவை Robinஆகவும் பார்த்து வந்தது. உக்ரேனுக்குள் அனுப்பிய தனது படையினருக்கு போதிய உணவை வழங்க முடியாமல் சிரமப்படும் இரசியா சீனாவிடம் தயாரித்த உணவுகளை கொடுக்கும் படியும் ஆளிலிவிமானங்களையும் வழிகாட்டல் ஏவுகணைகளையும் அவசரமாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டது. இரசியாவில் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை சீனா வாங்கப் போகின்றது. இரசிய நாணயம் வீழ்ச்சியடைவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிக்கும் சீனா இனி இரசியாவில் தவித்த முயல் அடிப்பது போல் பல சொத்துக்களை வாங்கக் காத்திருக்கின்றது. அமெரிக்க எதிர்பாளர்களின் வண்டியில் ஓட்டுனர் இருக்கையில் இப்போது சீனா.

கல்லாக் கட்டும் அமெரிக்கா

எங்கு நாடுகளிடையே போர் மற்றும் முறுகல்கள் நடக்கும் அங்கு தனது படைக்கலன்களை விற்கவும் படைத்தளங்களை அலைகின்ற அமெரிக்காவிற்கு உக்ரேன் போர் சிறந்த வாய்ப்பாகும். தன்னிடமுள்ள காலம் கடந்த படைக்கலன்களை உக்ரேனுக்கு உதவியாக பாதி பாதி என வழங்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலன்களை வாங்குகின்றன. இரசியத் தாங்கிகளுக்கு எதிராக அமெரிக்காவின் ஏவுகணைகள் சிறப்பாக செயற்படுவது அமெரிக்காவிற்கு சிறந்த விளம்பரம்.

செல்வாக்கிழந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் எரிபொருள் விலையேற்றமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பும் அமெரிக்கர் மத்தியில் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கைக் குறைத்துள்ளது. 2022இன் இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் எல்லா மக்களவை தொகுதிகளிலும் மூன்றில் ஒரு மூதவை தொகுதிகளிலும் அவரது மக்களாட்சிக் கட்சி பின்னடைவைச் சந்திக்கலாம். அதனால் குடியரசுக் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலிமை பெற்றால் நினைத்தபடி ஆட்சி நடத்த முடியாத ஜோ பைடன் LAME DUCK President ஆவார்.

இலங்கையின் நிலையை பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் எனச் சொல்வதிலும் பார்க்க மாடேறி மிதித் தவன் மேல் பனை மரம் விழுந்தது போல் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை மீண்டும் எரியலாம்.


2 comments:

Unknown said...

Us president joe Biden .... correction for last paragraph heading

Vel Tharma said...

Thanks
I corrected it

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...