Thursday, 3 March 2022

இரசியப் படையினர் உக்ரேனில் திணறுகின்றனரா?

  


“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள் உக்ரேனை ஆக்கிரமிக்க முயலும் இரசியப் படையினரைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. உலகின் இரண்டாவது பெரிய இரசியப் படைத்துறை 2021 மார்ச் மாதத்தில் இருந்து உக்ரேன் எல்லைகளில் இரசியா படை குவித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு திட்டமிட்ட நகர்வு. 2014இல் உக்ரேனியர்களும் அவரது நட்பு நாடுகளும் எதிர் பாராத விதமாக புட்டீன் செய்த படை நகர்வு வலுவான எதிர்ப்பின்றி நேர்த்தியாக நிறைவேற்றப்பட்டது. 2014 ஏப்ரலில் செய்யப்பட்ட நகர்வைப் போலவே 2022 பெப்ரவரியில் செய்யப்பட்ட நகர்வும் நன்கு திட்டமிடப்பட்டது. முந்தையது இரகசியமான நகர்வு. எதிரி தகவல்களை இணைய வெளி மூலம் திருடாமல் இருக்க தட்டச்சுகளைப் பாவித்து பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு தொலைநகல் மூலம் பரிமாறப்பட்டன. பிந்தைய நகர்வு பகிரங்கமாகச் செய்யப்பட்டது. எதிரியும் தயார் நிலையில் இருந்தான்.

தாமதம் ஏன்?

கடந்த பத்து ஆண்டுகளாக இரசியாவிற்கு ஆட்சேர்ப்பு மற்றும் புதிய படைக்கல இணைப்பு எனப்பல தீவிர நடவடிக்கைகளை புட்டீன் எடுத்திருந்தார். இரசியப் படையினர் கைப்பற்றிய பிரதேசம் பற்றிய படங்களைப் பார்க்கும் போது இரண்டு நாட்களின் பின்னர் முன்னேற முடியாமல் தவிக்கின்றார்கள் போலிருக்கின்றது. பிழையான போர்த்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் ஒரு சிறந்த படையினர் தவிக்கின்றனரா? சரியான போர்த்திட்டத்தை ஒரு மோசமான படையினரால் நிறைவேற்ற முடியவில்லையா? அல்லது ஒரு மோசமான போர்த்திட்டத்தை ஒரு திறனற்ற படையினரால் நிறைவேற்றவே முடியவில்லையா? இரசியாவின் செஸ்னியா பிரதேசம், ஜோர்ஜியா, சிரியா, உக்ரேனின் கிறிமியா ஆகியவற்றில் நடந்த போர்களில் இரசியப் படைகள் சிறப்பாகச் செயற்பட்டன. ஆனால் 1979இன் பின்னர் ஒரு வலிமை மிக்க எதிரியுடன் இரசியப் படையினர் முதற்தடவையாக 2022 பெப்ரவரி 24-ம் திகதியில் இருந்து மோதுகின்றனர். இரசியப் படையினர் முன்னேற முடியாதபடியால் இரசியா கொத்தணிக் குண்டுகள் காற்று அகற்றும் குண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட குண்டுகளைப் பாவிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

உக்ரேனியர்களின் கடும் எதிர்ப்பு

முதல் இரண்டு நாட்களும் உக்ரேனியப் படையினர் போராடியதிலும் பார்க்க அதிக உக்கிரமாக உக்ரேனியப் படையினர் போராடத் தொடங்கியுள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது. 2014-ம் ஆண்டின் பின்னர் உக்ரேனியப் படையினருக்கு அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாட்டுப் படையினரும் தீவிர பயிற்ச்சி வழங்கியுள்ளனர். ஆனாலும் அவர்கள் வழங்கிய படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பாதுகாப்பு படைக்கலன்கள் மட்டுமே கேந்திரோபாய தாக்குதல் படைக்கலன்கள் அல்ல. நெடுந்தூர ஏவுகணைகள் உக்ரேனியர்களுக்கு வழங்கப்படவில்லை. தோளில் வைத்து வீசும் குறுந்தூர ஏவுகணைகள் தான வழங்கப்பட்டன.

உதவாக்கரையில் தொடங்கிய போர்

உக்ரேனின் தலைநகருக்கான குறுகிய தூரம் பெலரஸ் எல்லையில் இருந்து இருப்பதால் அங்கு படையினரைக் இரசியா குவித்தது. உக்ரேன் – பெலரஸ் எல்லையில் உள்ள அணுக்குண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட செர்னோபில் என்ற மக்கள் வசிக்காமல் நாற்புறமும் சுவர் கட்டி மூடிய நகரை இரசியப் படைகள் முதலில் கைப்பற்றினர். 2022 ஜனவரி 17-ம் திகதியில் இருந்து 38 நாட்கள் இரசியப் படையினர் பெலரஸில் காத்திருந்தனர். போதிய வசதிகள் இன்றி அவர்கள் பெலரஸில் காத்திருந்தமையால் சலிப்படைந்தனரா?

விநியோக (Logistics) வலுவில்லையா?

படையினருக்கான விநியோகம் என்பதில் இரசியப் படையினர் எப்போது திறமையற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என பல படைத்துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஜெனரல் ஒமர் பிரட்லி என்ற அமெரிக்கப் படைத்துறை அதிகாரி “கற்றுக் குட்டிகள் மூலோபாயம் பற்றிப் பேசுவார்கள். நிபுணர்கள் விநியோகம் பற்றிப் பேசுவார்கள்” என்றார். இரசியர்கள் தாம் கற்றுக் குட்டிகள் என உக்ரேனில் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நலிவுப் புள்ளியை அறிந்த உக்ரேனியர்கள் இரசியாவின் விநியோகச் சேவைகள் மீது தமது தாக்குதலை தீவிரப்படுத்தினர். விநியோக வண்டிகள் அழிப்பதற்கு இலகுவானவை என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் உக்ரேனுக்குச் சென்ற இரசியப் படையினருக்கு தேவையான உணவு, சுடுகலன்கள், உதிரிப்பாகங்கள் போன்றவை சீராக விநியோகிக்கப் படவில்லை. பல மேற்கு நாட்டு ஊடகங்கள் இரசியாவின் விநியோக முறைமையைப் பற்றி மோசமாக விபரிப்பதை நம்பக் கூடாது என விவாதிக்கலாம். ஆனால் சீன ஊடகமான South China Morning Post 2022 மார்ச் 2-ம் திகதி இரசியப் படையினர் உக்ரேனில் விநியோகப் பிரச்சனையை எதிர் கொள்கின்றனர் என செய்தி வெளியிட்டுள்ளது. 

விநியோகம் சரி ஆனால் நினைத்தது நடக்கவில்லை

இரசியர்களுக்கு எப்போதும் தமது திட்டமிடலில் பெரும் நம்பிக்கை உண்டு. ஐந்தாண்டு திட்டங்கள் பல கண்டவர்கள். அவர்களின் திட்டப்படி 48 மணித்தியாலத்தில் உக்ரேனியப் படையினர் சரணடைவார்கள் அல்லது தப்பி ஓடுவார்கள். அதனால் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள், சுடுகலன், சாப்பாடு ஆகியவற்றுடன் மட்டும் சென்றார்கள். உக்ரேனியர்களின் எதிர்ப்பு எதிர்பார்த்ததிலும் உக்கிரமாக இருந்தது. இதனால்தான் இரசியப் படைகள் பின்னடைவைச் சந்திக்கின்றன என்ற கருத்தும் உண்டு.

தரை-விமானப் படைகளிடை ஒருங்கிணைப்பு இல்லையா?

கீவ் நகருக்கு தெற்கே உள்ள Hostomel விமான நிலையத்தை கைப்பற்ற முன்னரே அங்கு II-76 என்னும் துருப்புக்காவி விமானங்கள் இரண்டை இரசியா தரையிறக்க முயன்ற போது அவை சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை ஒவ்வொன்றிலும் நூறு படையினர் இருந்தனர். இரசியாவின் தரைப்படைக்கும் விமானப் படைக்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு செயற்பாடு இல்லை என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். நேட்டோவிற்கு சொந்தமான பல வான்சார் முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு ஆளிலி விமானங்கள் (air-borne early warning & control -AEW&C) உக்ரேன் நகர்களை வட்டமிட்டபடியே இருக்கின்றன. அதை இரசியாவால் முன் கூட்டியே அறிய முடியவில்லை. உக்ரேனியர்கள் கைது செய்த இரசியப் படையினரில் பலருக்கு தாம் ஏன் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டோம் என்பது தெரியாது என உக்ரேன் தெரிவித்தது.

எதிர்பாராதவற்றை எதிர்கொள்ள முடியவில்லையா?

எந்த ஒரு படை நகர்விலும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும். அப்போது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இரசியப் படையினர் 2014-ம் ஆண்டு உக்ரேனை ஆக்கிரமித்த போது எதிர் கொள்ளாத எதிர்ப்பை. 2022இல் சந்திக்கின்றனர். இது இரசிய படைத்தளபதிகள் எதிர்பார்த்திருக்க வேண்டிய எதிர்ப்பு. ஆனால் எதிர்பாராத எதிர்ப்பைச் சந்திக்கின்றார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட படையினரில் பெரும்பாலானவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஓராண்டு பயிற்ச்சி மட்டும் பெற்றவர்கள் என மேற்கு நாட்டு படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தனித்து சென்ற தாங்கிகள்

போர்த்தாங்கிகள் காலாட் படையின் அல்லது வான் படையின் பாதுகாப்புடன் செல்வது வழமை. ஆனால் உக்ரேனுக்குள் இரசிய தாங்கிகள் வேறு பாதுகாப்பின்றிச் சென்றன. அதனால் துருக்கி கொடுத்த Bayrakrar TB2 ஆளிலி போர்விமானங்களில் இருந்து வீசிய ஏவுகணைகள், அமெரிக்கா கொடுத்த ஜவலின் ஏவுகணைகள் பிரித்தானியா கொடுத்த NLAW ஏவுகணைகள் ஆகியவை பல இரசிய தாங்கிகளை அழித்தன. தற்காலத்தில் போரின் முக்கிய பங்கு வகிப்பன வான்மேன்மையும் (Air superiority) வானாதிக்கமும் (Air dominance) ஆகும் இவை இரண்டையும் இரசியா நிலைநிறுத்தக் கூடிய வகையில் போதிய விமானப் படை அதனிடமிருந்த போதிலும் இரசியா தேவையான விமானங்களை உக்ரேனுக்கு அனுப்பவில்லை. இரசிய தாங்கிகள் பெரும்பலும் பகல் நேரத்தில் தமது நகர்வுகளைச் செய்வதால் பல இழப்புக்களைக் சந்திக்கின்றன. இரவில் பார்க்கக் கூடிய கருவிகள் தாங்கிகளில் பொருத்தப்படவில்லை. அவற்றிற்கு இரசியாவில் தட்ட்டுப்பாடு எனச் சொல்லப்படுகின்றது. 

பொறியியல் பிரிவு (Engineering Division)

படைத்துறையில் பொறியியல் பிரிவு (Engineering Division) முக்கிய பங்காற்றுகின்றது. இதில் பல்வேறுபட்ட துறைகள் உள்ளன. அதில் ஒன்று படையினரைன் போக்கு வரத்துக்கு வசதிகள் செய்வது. படையினரின் நகர்வைத் தடுக்க பாலங்கள் உடைக்கப்பட்டால் இந்தப் பிரிவினர் துரிதமாக பாலம் அமைத்துக் கொடுப்பர். தேவையான போது புதிய பாலங்களையும் அமைத்துக் கொடுப்பர். உக்ரேனியப் படையினர் இரசியப் படையினரின் முன்னேற்றங்களைத் தடுக்க பாலங்களை தகர்த்த போது இரசியாவால் புதிய பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது  என்பது இரசியப் படையினரின் இன்னொரு நலிவற்ற புள்ளியாக கருதப்படுகின்றது. 

புட்டீனுக்கு மட்டுமே தெரிந்த புதிர்

இரசியா தனது முழு வலிமையுடன் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தினால் அதிக உயிரழப்பு ஏற்படும். அதனால் உலகெங்கும் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை புட்டீன் உணர்ந்து தனது போர் முறையை வகுத்துள்ளாரா? நேட்டோ படையினர் ஈராக்கிலும் லிபியாவிலும் செய்தது போல் முதலில் வான் தாக்குதலால் எதிரியின் படைவலிமையை முற்றாக சிதைப்பது என்ற வழியை அவர் ஏன் பின்பற்றவில்லை? உயிரிழப்பைத் தவிர்க்கவா அல்லது அவரிடம் சரியான உளவுத்தகவல் இல்லையா? ஆனாலும் இரசியா தனது புதிய போர்விமானங்களான SU-35, SU-57, Checkmate போன்ற விமானங்களை ஏன் போரின் ஆரம்பத்தில் களமிறக்கவில்லை? ஏன் பரந்த அளவில் ஆளிலிப்போர்விமானங்கள் பாவிக்கப்படவில்லை? இவற்றிற்கான விடை புட்டீனுக்கு மட்டுமே தெரியும்.

இரசியப் படையினரின் முன்னேற்றம் தாமதப் பட்டாலும் அவர்கள் முன்னேறிய இடங்களை உக்ரேனியர்களால் 2022-03-03 வரை திரும்பக் கைப்பற்றவில்லை. இரசியா இனி மூர்க்கத்தனமாக தாக்கும். அதை முன் கூட்டியே அறிந்த நேட்டோ நாடுகள் போர்க்குற்றம் எனப் பேசத் தொடங்கிவிட்ட்னர். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் 02-03-2022 தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

முந்தைய கட்டுரைகள்:

1. புட்டீனின் உயிருக்கு ஆபத்தா?: https://www.veltharma.com/2022/02/blog-post_28.html

2. உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்:  https://www.veltharma.com/2022/02/blog-post_26.html

3. உக்ரேனில் அமெரிக்க Javelins, இரசிய T-90 Tanks, பிரித்தானிய NLAW: https://www.veltharma.com/2022/02/javelins-t-90-tanks-nlaw.html

4. புட்டீனின் இரண்டாம் சோவியத் ஒன்றியம்:  https://www.veltharma.com/2021/12/blog-post_30.html

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...