Monday, 14 February 2022

உக்ரேனில் அமெரிக்க Javelins, இரசிய T-90 Tanks, பிரித்தானிய NLAW

  


உக்ரேன் எல்லையில் மேலும் முப்பதினாயிரம் படையினரை நிறுத்தி மொத்தப் படையினர் எண்ணிக்கையை 130,000 ஆக உயர்த்திய இரசியா சொல்கின்றது தான் உக்ரேனை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று. அமெரிக்கா சொல்கின்றது எந்த நேரமும் இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என்று. உக்ரேன் அதிபர் சொகின்றார் பதட்டம் வேண்டாம், பதட்டம் எதிரிக்கு சாதகமாக அமையும் என்று. இரசியப் படையினர் விமானத் தாக்குதல்களுடனும் எறிகணை வீச்சுகளுடனும் தாங்கிகளும் கவச வண்டிகளும் முன்செல்ல உக்ரேனை ஆக்கிரமிக்கலாம். இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் இரசியப் போர்த் தாங்கிகளும் உக்ரேனின் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் கடுமையாக மோதிக் கொள்ளும். உக்ரேன் படையினர் நகரங்களில் மரபு வழிப் போர் முறைமையையும் கிராமங்களில் கரந்தடிப் போர் முறையையும் பின்பற்றலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

உக்ரேனிடம் குறைந்த தாங்கிகள்

இரசியா உக்ரேனுக்கு எதிராக 1200 போர்த்தாங்கிகளை நிறுத்தியுள்ளது. இது உக்ரேனின் மொத்த தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க முன்னூறு அதிகமானதாகும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பக் கூடிய தாங்கிகளிலும் பார்க்க அதிக அளவு தாங்கி அழிப்பு ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனுக்கு வழங்கி அவற்றை இயக்கும் பயிற்ச்சியையும் அளித்துள்ளன. போர்க்களத்தில் தாங்கிகளும் தாங்கிகளும் மோதுவது குறைவு சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் உருவாக்கிய T-64 தாங்கிகளை தற்போது உக்ரேன் மேம்படுத்தி உற்பத்தி செய்கின்றது. ஆனாலும் உக்ரேன் அரசின் அறிவிப்பின் படி 2014 முதல் 2016வரை உக்ரேனின் 440 போர்த்தாங்கிகளை உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்ள இரசிய ஆதரவு பிரிவினைவாதிகள் அழித்துள்ளனர். தாங்கிகளை ஏவுகணைகளும் சேணேவிகளும் ( artilleries) அழிக்க வல்லன. 

பிரித்தானிய ஏவுகணைகள்

பிரித்தானியா தனது New Generation Light Anti Tank Weapon (NGLAW) எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளில் இரண்டாயிரத்தை உக்ரேனுக்கு அவசரமாக 2022 ஜனவரியில் அனுப்பி வைத்துள்ளது. பிரித்தானியாவின் BAE, பிரான்ஸின்THALES, சுவீடனின் SaaB, அமெரிக்காவின் RAYTHEON ஆகிய படைத்துறை உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து NGLAW எனப்படும் தாங்கி அழிப்பு ஏவுகணைகளை 2002இல் இருந்து உருவாக்கியுள்ளன. பின்லாந்து, லக்சம்பேர்க், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவை விற்பனை செய்யப்பட்டும் உள்ளன. தோளில் காவிச் சென்று ஏவக் கூடிய NGLAW 27.5இறத்தல் எடையுள்ளது. எண்ணூறு மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அது துல்லியமாகத் தாக்கக் கூடிய வகையில் அது கணினிமயப்படுத்தப் பட்டுள்ளது. இதன் பாயும் வேகம் ஒரு செக்கண்டுக்கு 200மிட்டர் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு 440மைல் ஆகும்.

உக்ரேனில் உக்கிரமான பரீட்சைக் களம்

சிரியாவிற்கு முப்பது T-90 போர்த்தாங்கிகளை இரசியா வழங்கியிருந்தது. அமெரிக்கா குர்திஷ் போராளிகளுக்கு தனது ஜவலின் ஏவுகணைகளை வழங்கியிருந்தது. சிரியாவில் குர்திஷ்களும் சிரியப் படையினரும் நேரடி மோதல்களை எப்போதும் தவிர்த்தே வந்தனர். ஆனாலும் சிரியாவின் ஐந்து T-90 போர்த்தாங்கிகளை போராளிகள் அழித்திருந்தனர். சிரியப் போரில் இரசியாவின் வலுவற்ற புள்ளி அதன் குழாய்கள் என அறியப்பட்டது. அதை அழித்துவிட்டால் தாங்கி இயங்கும் ஆனால் அதனால் சரியாக படைக்கலன்களை வீச முடியாது. அமெரிக்காவின்ன் Tube-launched optical tracked wire guided missiles (TOW) மூலமாகவே T-90 போர்த்தாங்கிகள் அழிக்கப்பட்டன. ஆனால் உக்ரேனிடமுள்ள ஜவலின் ஏவுகணைகள் TOW ஏவுகணைகளிலும் பார்க்க சிறந்தவை. ஜவலின் ஏவுகணைகளை Fire & Forget ஏவுகணைகள் என அழைப்பர். அவற்றை இலக்கை நோக்கி ஏவுவிட்டால் மிகுதி வேலையை அவையே பார்த்துக் கொள்ளும் இலக்கு அசைந்து சென்றாலும் ஜவலின் தன் திசையையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். T-90 போர்த்தாங்கிகள் தன்னைச் சுற்ற ஒரு புகைக் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியின் அகச்சிவப்பு உணரிகளைக் குழப்பிவிடும் செயற்பாடு கொண்டவை. சிரியாவில் அவை போதிய பாதுகாப்பை வழங்கவில்லை.  ஜவலின் ஏவுகணைகள் மூன்று மைல் தொலைவுவரை பாய்ந்து தாங்கிகளை அழிக்க வல்லவை. இரசியாவின் மிக்ச் சிறந்த தாங்கிகள் T-14 Armata ஆகும். இவற்றில் எதிரியின் ஏவுகணைகளை குழப்பி திசைமாற்றும் திறன் உண்டு. அதனால் அமெரிக்கா தனது ஏவுகணைகளில் கம்பி வழிகாட்டியைப் பயன் படுத்துகின்றது. ஏவுகணைகளில் கம்பி இணைக்கப்பட்டிருக்கும் அதன் மூலம் எதிரியின் இலக்கு தொடர்பான தகவல்களை ஏவுகணைக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் ஏவுகணைக்கு இலக்குத் தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும். இதனால் இரசிய தாங்கிகளை அமெரிக்க ஏவுகணைகள் அழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உக்ரேனின் சொந்த உற்பத்தி தாங்கிகள்

உக்ரேனியர்கள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது மிகச் சிறந்த படைக்கல உற்பத்தியாளர்களாக இருந்தார்கள். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த பின்னர் தமது படைத்துறை உற்பத்தியை தீவிரப்படுத்தினர். அவர்கள் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகளுக்கு ஈடான Stugna-P anti-tank missilesகளை 2018 ஆண்டில் உற்பத்தி செய்தார்கள். அந்த ஆண்டில் மொத்தம் 2500 ஏவுகணைகள் உற்பத்தி செய்தனர். அவை பல இரசிய கவச வண்டிகளையும் வழங்கல் வண்டிகளையும் இரசியா 2014இல் ஆக்கிரமித்த உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அழித்துள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ஜவலின் ஏவுகணைகளை எஸ்தோனியா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

பதுங்கு குழிகள்

குறுந்தூர ஏவுகணைகள் மூலம் எதிரியின் தாங்கிகளை அழிப்பதற்கு சிறந்த மறைவிடங்கள் அவசியமாகும். இரசியப் படைகளை எதிர்பார்த்து மூன்று மாதங்களாக காத்திருக்கும் உக்ரேனியப் படையினர் அமைத்துள்ள மறைவிடங்களை இரசிய விமானங்கள் முன் கூட்டியே அழிக்காமல் இருப்பதில் உக்ரேனின் வெற்றி தங்கியுள்ளது. 1994இல் செஸ்னியப் போராளிகள் குறுந்தூர ஏவுகணைகள் மூலம் பல இரசிய தாங்கிகளை அழித்தார்கள். இரசியாவின் bunker-buster குண்டுகளின் திறனும் உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாகும்.

எண்ணிக்கையில் குறைந்த இரசிய தாங்கிகள்

அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள், பிரித்தானியா வழங்கிய ஏவுகணைகள், உக்ரேனின் சொந்த தயாரிப்பு ஏவுகணைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் வரும் எண்ணிக்கை இரசியா உக்ரேனுக்கு அனுப்பவிருக்கும் 1200 போர்த்தாங்கிகளின் எண்ணிக்கையிலும் பார்க்க பல மடங்காக வரலாம். அவற்றுடன் இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய  ஏவுகணைகளை வீசக் கூடிய Bayrktar TB2 ஆளிலிப் போர்விமானங்களை துருக்கி உக்ரேனுக்கு வழங்கியதுடன் உக்ரேனில் அவற்றை உற்பத்தியும் செய்ய அனுமதியும் வழங்கியுள்ளது. அஜர்பைஜான் – ஆர்மினியப் போரில் ஆர்மினியாவிடமிருந்த இரசிய தாங்கிகளை துருக்கியின் ஆளிலிப் போர்விமானங்கள் துவம்சம் செய்து அஜர்பையானுக்கு வெற்றி கொள்ள வைத்தன.

உலகில் மிகச் சிறந்த தாங்கிகளை உருவாக்கும் இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தால் பெரும் சவாலை அங்குள்ள ஏவுகணைகளால் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உக்ரேன் அதற்கான தேர்வு நிலையமாகலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...