Monday, 28 February 2022

புட்டீனின் உயிருக்கு ஆபத்தா?

  புட்டீன் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் என்ற செய்தியை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் பரப்புகின்றன. புட்டீன் உக்ரேனுக்கு படை அனுப்பிய நான்காம் நாள் இரசியா மீதான பொருளாதாரத் தடையை மேற்கு நாடுகள் அதிகரித்த போது புட்டீன் தன்னுடைய அணுக்குண்டு வீசும் படைப்பிரிவை உயர் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மேற்கு நாடுகளில் அவரது மன நிலை குறிந்த செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கியுள்ளன. வெள்ளை மாளிகை, அமெரிக்க மூதவை, பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித் எனப் பலரும் புட்டீனின் மன நலம் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள்.

கைவீச்சு குறைந்து விட்டதாம்!

பிரித்தானிய வானொலி ஒன்று புட்டீன் பற்றி நரம்பியங்கியல் (Nurology) நிபுணர் ஒருவரை பேட்டியும் கண்டது. அவர் புட்டீன் நடக்கும் போது அவரது வலது கையின் வீச்சு தூரம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டு போவதை வைத்துக் கொண்டு புட்டீனின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் புட்டீன் தற்போது இருக்கும் மனநிலையில் அவர் மற்றவரகளின் ஆலோசனைகளைக் கேட்க மாட்டார் என்றார். தனக்கு plastic surgery செய்து முகச் சுருக்கமின்றி இளமையாகத் தோற்றமளிக்கும் புட்டீன் தொடர்ச்சியாக steroid என்னும் மருந்தை உட்கொள்கின்றார் என்றும் செய்திகள் அடிபடுகின்றன. Steroid உட்கொள்பவர்களுக்கு irritability, anxiety, aggression, mood swing, manic symptoms and paranoia ஆகியவை ஏற்படும். அமெரிக்கவின் Newsweek சஞ்சிகை புட்டீனை வஞ்சமாகப் புகழ்ந்து எழுதிய கட்டுரையில் இரசியாவைக் கண்டு உலகம் அஞ்ச வேண்டும் என்ற தனது நோக்கத்தை புட்டீன் உக்ரேனில் நிறைவேற்றி விட்டார் என்கின்றது. அவர் செஸ்னியா, ஜோர்ஜியா, சிரியா, கிறிமியா ஆகியவற்றில் செய்த படை நடவடிக்கைகள் வெற்றியில் முடிந்ததையும் அச்சஞ்சிகை சுட்டிக் காட்டுகின்றது.

நுண்ணறிவாளி புட்டீன்

சோவியத் ஒன்றிய காலத்தில் பொருளாதாரம் படித்தவர் புட்டீன். சோவியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய அம்சம் நீண்ட காலத் திட்டமிடல். பொருளாதாரம் படித்துவிட்டு சோவியத்தின் உளவுத்துறையான கேஜிபியில் பணிபுரிந்தவர் புட்டீன். அத்துடன் குங்ஃபு விளையாட்டில் தேர்ச்சி பெற்று கறுப்பு பட்டி வென்றவர். நன்கு சதுரங்கம் ஆடக் கூடியவர். இவற்றால புட்டீன் நீண்ட காலத் திட்டமிடல், எதிரியின் தகவல்களை அறிந்து கொள்ளுதல், எதிரியும் நகர்வுகளை முன் கூட்டியே திட்டமிட்டு தன் நகர்வுகளை, தன் நகர்வுக்கு எதிரியின் நகர்வு எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றுள்ளார். அதனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை Genius – நுண்ணறிவாளன் என விபரித்தார்.

20-ம் நூற்றாண்டின் விபத்தை புட்டீன் சரி செய்வாரா?

1991-ம் ஆண்டு ஜெர்மனியை கிழக்கு என்றும் மேற்கு என்றுப் பிரித்த பேர்லின் சுவர் தகர்க்கப்படும் போது சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தில் உள்ள கிழக்கு ஜெர்மனியில் உளவாளியாகப் பணிபுரிந்தவர். எந்த சுவர் விழக்கூடாது என்ற நோக்கத்தில் அவர் பணி செய்தாரோ அதே சுவர் அவர் கண்முன் சரிந்தது. அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியமும் சரிந்தது. பனிப்போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் வெற்றி பெற்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இரசியாவிடமிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் இணைந்தன. பனிப்போருக்குப் பின்னரான கிழக்கு ஐரோப்பிய நிலையை புட்டீன் ஏற்றுக் கொள்ளவில்லை, இது நம்ம ஏரியா. இது எதிரிகளிடம் போவதா என புட்டீன் மனதுக்குள் கொதித்தார். 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார் அரசியல் விபத்து சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்றார் புட்டீன்.

இரசியப் பொருளாதாரத்தை மீட்ட புட்டீன்

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசிய அதிபராக வந்த பொறிஸ் யெல்ஸ்ரினின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக வலென்ரின் யுமாசேவ் என்பவர் இருந்தார். அவருடைய மகளையெ யுமாசேவ் திருமணம் செய்தார். யுமாசேவ் முலமாக யெல்ஸ்ரினுக்கு விளடிமீர் புட்டீன அறிமுகமானார். அவரது நிர்வாகத்தில் பணியும் புரிந்தார். 1999 ஓகஸ்ட் மாதம் புட்டீனை யெல்ஸ்ரின் தலைமை அமைச்சராக்கினார். 1998இல் மோசமான பொருளாதார நெருக்கடியை இரசியா சந்தித்தது. அதிலிருந்து இரசியாவை புட்டீன் சாதுரியமாக மிட்டெடுத்தார். அதில் முழு மகிழ்ச்சி அடைந்த யெல்ஸ்ரின் புட்டீனிடம் இரசியாவை 1999 டிசம்பரில் ஒப்படைத்தார். அன்றில் இருந்து இன்றுவரை இரசியாவின் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் விளடிமீர் புட்டீன் இருக்கின்றார். இரசிய அதிபர் தொடர்ச்சியாக இரண்டு தடவை பதவி வகிக்கலாம் என்ற அரசியலமைப்பை புட்டீன் மாற்றி தன் ஆயுள் முடியும் வரை தான் பதவியில் இருக்க வழி செய்தார்.

கொள்ளையர்களைக் கொள்ளையடித்தார்?

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் செல்வங்களை கொள்ளையடித்து பலர் பெரும் செல்வந்தரானார்கள். அவர்களை ஆதரத்துடன் பிடித்த புட்டீன் சிலரை சிறையில் அடைத்தார். மற்றவர்களிடம் உங்களையும் இப்படி அடைப்பேன் என மிரட்டினார். அவர்கள் தம் செல்வத்தை புட்டீனுடன் பகிர்ந்து கொண்டார்கள் அதனால் புட்டீன உலகின் முன்னணி செல்வந்தரானார். அவரது சொத்து மதிப்பு $190பில்லியன் எனக் கருதப்படுகின்றது. எல்லாச் செல்வந்தர்களையும் சிறையில் அடைத்தால் இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது புட்டீனுக்கு தெரியும்.

உறுதி மொழி வேறு உடன்படிக்கை வேறு

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவிற்கும் சோவியத் அதிபர் மிக்கையில் கோர்பச்சேவிற்கும் இடையில் தொடர் பேச்சு வார்த்தையில் நடந்தது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் பேக்கர் கோர்பச்சேவிடம் உரையாடும் போது அமெரிக்கா கிழக்கு ஜெர்மனியை மட்டும் தான் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கும். அதைத் தாண்டி ஒரு அங்குலம் கூட கிழக்கு நோக்கி நேட்டோ நகராது எனச் சொல்லியிருந்தார். அதன் பின்னர் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் வார்சோ ஒப்பந்த நாடுகளுமாக 14 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. 2014 உக்ரேனின் கிறிமியாவை இரசியா கைப்பற்றிய போது ஜேம்ஸ் பேக்கர் தான் பேச்சு வார்த்தையின் போது சொன்னதை உடன்படிக்கையாக கருத முடியாது என்றார்.

ஜோர்ஜியாவிற்கும் உக்ரேனுக்கும் பாடம்

2006இல் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடாகிய ஜோர்ஜியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது விளடிமீர் புட்டீன் அதை ஆக்கிரமித்து துண்டாடினார். அதே போல 2014இல் உக்ரேனைத் துண்டாடினார். அத்துடன் உக்ரேன் அடங்கவில்லை. உக்ரேன் அதிபர் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரேனின் அரசிலமைப்பு திருத்தப்பட்டது. அதனால் சினமடைந்த புட்டீன 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்குள் மீண்டும் இரசியப் படையை அனுப்பினார்.

மேற்கு நாடுகள் புட்டீன் மீது தனிப்பட்ட பொருளாதாரத் தடை விதித்தன. அவரது சொத்துக்கள் எங்கு இருக்கின்றன என்பது பற்றி மேற்கு நாடுகளால் அறிய முடியவில்லை. பனிப்போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிலவிய பாதுகாப்பு ஒழுங்கை புட்டீன் தகர்த்து விட்டார். 2022 பெப்ரவரி 27-ம் திகதி பிரித்தானிய வானிலியின் நேயர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் புட்டீனின் தலைக்கு ஏன ஒரு விலை குறிக்கக் கூடாது என பிரித்தானியாவின் பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரும் படைத்துறைப் பின்னணியைக் கொண்டவருமான இயன் தன்கன் சிமித்திடம் கேள்வியை முன் வைத்தார். அதற்கு அவர் நேரடியான் பதில் கொடுக்காமல் அப்படி ஒரு விலையும் குறிக்கப்படவில்லை என்றார். இப்போது பல மேற்கு நாட்டு ஊடகங்களில் போர் நடப்பது உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் அல்ல என்றும் போர் உக்ரேனுக்கும் புட்டீனுக்கும் இடையில்தான் நடக்கின்றது என்றும் பரப்புரைகள் நடக்கின்றன. புட்டீனுக்கு எதிராக இரசியர்களை கிளர்ச்சி செய்யும் நோக்கத்துடனேயே இரசியாமீது தொடர்ச்சியாக பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படுகின்றன. பொருளாதாரத் தடைகளைப் பார்த்து புட்டீன பின் வாங்கக் கூடியவர் அல்லர் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. லிபியாவின் கடாஃபிக்கும் ஈராக்கின் சதாம் ஹுசேனுக்கும் நடந்தது  புட்டீனுக்கும் நடக்குமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...