Saturday, 26 February 2022

உக்ரேனும் புவிசார் அரசியல் கோட்பாடுகளும்

 


புவிசார் அரசியல் என்பது நிலப்பரப்புக்கள், கடற்பரப்புகள், வான்வெளி, விண்வெளி, வளங்கள், அரசுகள், தலைமைத்துவ ஆளுமைகள், அரசற்ற அமைப்புக்கள், நாகரீகங்கள்மக்கள்பொருளாதாரம்படைவலிமை ஆகியவற்றிடையேயான செயற்பாடுகள் பற்றிய கேந்திரோபாயத்தை பகுப்பாய்வு செய்வதாகும். அரசியல் புவியியல் (Plitical Geography) நிலவியல் (Anthropogeography) ஆகியவற்றில் இருந்து புவிசார் அரசியல் உருவானது. இங்கு நிலம் என்பது அளவு மட்டும் சார்ந்ததல்ல தரமும் சார்ந்ததாகும். புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்:

1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்

2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் ச்மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி.

3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை.

4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள்.

5, அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.

6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு

7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு.

Friedrich Ratzelஇன் அசேதனக் கோட்பாடு

உயிரியல் மற்றும் மக்கள் இன அமைவியல் (ethnography) கற்றுப் பின்னர் புவியியலும் கற்றவரான Friedrich Ratzel  அரசு என்பது ஓர் உயிரினம் போன்றது என்றார். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கு என ஓர் அரசின் கீழ் வாழும் மக்களின் தொகை அதிகரிக்கும்போது அவர்களின் மொத்த உற்பத்தியும் அதிகரிக்கும். அதனால் அவர்க்ளுக்கு மேலதிக நிலம் தேவைப்படும் போது அயலில் உள்ள வலிமை குறைந்த மக்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பார்கள்.” என்பது அவரது கோட்பாடு. 193இனக்குழுமங்களைக் கொண்ட இரசியாவில் 146மில்லியன்களுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இறப்பு விகிதம் பிறப்பு விகிதத்திலும் அதிகமாக இருப்பதாலும் குடிவரவாளரகளின் தொகையிலும் பார்க்க குடியகல்வாளர்களின் தொகை அதிகரிப்பதாலும் இரசியாவின் மக்கள் தொகை குறைந்து செல்கின்றது. உலகின் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இரசியாவின் நிலப்பரப்பு உலகின் மிகப் பெரியதாக உள்ளது. அதனால் Friedrich Ratzelஇன் கோட்பாடு உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கான உட்பார்வையைக் தரவில்லை.

Sir Halford John Macinderஇன் இதயநிலக் கோட்பாடு

Halford Mackinder புவியியல் சுழற்ச்சி மையத்தின் வரலாறு என்னும் தலைப்பில் 1904இல் எழுதிய கட்டுரையில் அவர் உலகப் புவிசார் அரசியல் ஆசிய-ஐரோப்பிய பெருங்கண்டத்தின் இதயநிலத்தில் தங்கியுள்ளது என்றார். உலகத்தை ஐம்பெரும் பகுதிகளாகப் பிரித்தார்:

1. உலகத்தீவு (The World-Island). அவரது உலகத்தீவில் ஆசியா, ஐரோப்பா வட ஆபிரிக்கா ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன. இதை அவர் உலகின் பெரிய, மக்கள்தொகை அதிகமுள்ள, செல்வந்தமிக்க பிரதேமாக அடையாளமிட்டார்.

2. கடல்கடந்த தீவுகள் (The offshore islands) இதில் பிரித்தானியா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தார்.

3. வெளித்தீவுகள் (The outlying islands) இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசுபிக் தீவுக் கூட்டம் (Oceania) ஆகியவற்றை உள்ளடக்கியது.  

4. உலகத்தீவின் இதய நிலம் (Heartland): சீனா, இரசியா ஜேர்மனி உட்பட்ட கிழக்கு ஐரோப்பா.

5. உலகத்தீவின் வளைய நிலம் (Rimland): உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்காமேற்கு ஐரோப்பாமத்திய கிழக்குஈரான்இந்தியாசீனக்கரையோரம்ஜப்பான்இரசியாவின் தூர கிழக்குப்பகுதி.

கிழக்கு ஐரோப்பாவை ஆள்பவன் இதய நிலத்தை ஆள்வான். இதய நிலத்தை ஆள்பவன் உலகத் தீவை ஆள்வான், உலகத்தீவை ஆள்பவன் உலகத்தை ஆள்வான் என்பது Halford Mackinder முன்வைத்த கோட்பாடு. இது இதய நிலக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றது. பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, போலாந்து, இரசியா, சிலோவாக்கியா, பெலரஸ், மொல்டோவா, உக்ரேன், எஸ்த்தோனியா, லத்வியா, எஸ்த்தோனியா, ஜோர்ஜியா ஆகியவை கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளாகும். இவற்றில் பல்கேரியா, செக்-குடியரசு, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா, போலந்து ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இருக்கின்றன. உக்ரேனும் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முற்பட்ட போது இரசியா அவற்றின் மீது படையெடுத்து அங்கு பிரிவினைகளை உருவாக்கி புதிய நாடுகளை உருவாக்கியுள்ளது. ஜேர்மனிக்கும் இரசியாவிற்கும் இடையில் நடந்த 1914-1918இல் நடந்த முதலாம் உலகப் போர் இதய நிலத்திற்கான போட்டியை முடிவுக்கு கொண்டுவராது என்றும் அவர் அப்போதே எதிர்வு கூறியிருந்தார். இன்று அது மேற்கு நாடுகள் எனப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு தரப்பாகவும் இரசியா மறுதரப்பாகவும் இருந்து கொண்டு போட்டி நகர்வுகளில் ஈடுபடுகின்றன. அதன் ஒரு பகுதியே இரசியா 2022 பெப்ரவரியில் 24-ம் திகதி உக்ரேன் மீது செய்த ஆக்கிரமிப்பாகும். இரசிய சீன உறவு அவர்களின் எதிரிகளை இதய நிலத்தில் இருந்து அகற்றலாம். அகற்றிய பின்னர் அவர்களிடையே இதய நிலத்திற்கான போட்டி தீவிரமாகும். இதய நிலத்தை இரசியா ஆள்வதை சீனா உள்ளூர விரும்பவில்லை போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த வாக்கெடுப்புக்களில் சீனா இரசியாவுடன் இணைந்து வாக்களிக்காமல் நடு நிலை வகித்தது.

கடல்வலிமைக் கோட்பாடு

அமெரிக்கரான Alfred Thayer Mahan ஒரு தேசத்தின் பெருமை அதன் கடற்படையில் தங்கியுள்ளது என்ற கருத்தை முன் வைத்தார். 1. புதிய கடற்கலன்களில்லும் அதன் பணியாளர்களிலும் முதலீடு செய்ய வேண்டும். 2. எதிரியின் கப்பல்களை குறிவைக்கும் கேந்திரோபாயங்களை உருவாக்க வேண்டும். 3. உலக கடற்போக்குவரத்தின் திருகுப்புள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். என்பவை இவரது கோட்பாடுகளாகும். இவரது கோட்பாடுகளால்தான் அமெரிக்கா உலகின் வலிமை மிகுந்த கடற்படையை அமெரிக்கா தற்போது வைத்திருக்கின்றது. உக்ரேன் தனது கடற்படையின் வலிமையை பெருக்காமல் விட்டதுடன் தன்னிடம் இருந்த கடற்கலன்களை விற்பனை செய்து தனது பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்தது. உக்ரேனிடம் வலிமையான கடற்படை இல்லாத படியால் அது உலகின் அதியுயர் கேந்திரோபாய நிலப்பரப்பில் ஒன்றான கிறிமியாவை 2014இல் இழந்தது. இன்று (26-02-2022) ஓரிரு நாட்களில் இரசிய போர்த்தாங்கிகள் அதன் தலைநகரிற்குள் நுழையும் நிலை ஏற்பட்டது. இரசியாவின் கடல் வலிமைக்கு கிறிமியா முக்கியமானது. கிறிமியாவை அபகரித்ததுடன் இரசியா நிற்காமல் கிறிமியாவிற்கு இரசியாவில் இருந்து ஒரு தரைவழித் தொடர்பை உக்ரேனூடாக ஏற்படுத்த முயல்கின்றது. 

Nicholas Spykmanஇன் வளையநிலக் கோட்பாடு

Nicholas Spykman வளைய நிலத்தை ஆள்பவன்தான்தான் உலகத்தை ஆள்வான் என்ற கோட்பாட்டை முன் வைத்தார். உலகத்தீவின் இதய நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வளைய நிலம் ஆகும். இதில் உள்ளவை வட அமெரிக்காமேற்கு ஐரோப்பாமத்திய கிழக்குஈரான்இந்தியாசீனக்கரையோரம்ஜப்பான்இரசியாவின் தூர கிழக்குப்பகுதி. Nicholas Spykman இன் கோட்பாட்டின் முக்கிய அம்சம் கடல் போக்குவரத்திற்கான  அண்மையாக நாடுகள் இருக்க வேண்டும் என்பதாகும். இரசியாவின் குளிர்மையற்ற கடல் உக்ரேனை ஒட்டியே அமைந்திருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா பிரதேசத்தில் உள்ள இரசியக் கடற்படைத்தளம் இரசியாவின் எதிரியின் கைக்களுக்குப் போனால் அது இரசியாவின் வல்லரசு என்ற நிலையைக் கேள்விக் குறியாக்கும். உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைந்தால் கிறிமியாவை இரசியா இழக்கும் ஆபத்து ஏற்படும். அதைத் தவிர்க்கவே இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது.

நாகரீக கோட்பாடு

Samuel Phillips Huntington (1927- 2008) 1993இல் இவர் வெளியிட்ட நாகரீகங்களின் மோதல் (Clash of Civilizations) என்ற நூலில் வைத்த கோட்பாடு புதிய புவிசார் அரசியல் சிந்தனைக்கு முக்கியமானதாகும். 1. மேற்கு நாடுகள், 2. லத்தின் அமெரிக்க நாடுகள், 3. இஸ்லாமிய நாடுகள், 4. சீனா, 5. இந்து, 6. மரபு வழியினர், 7. ஜப்பான் என எழு கலாச்சாரங்களை இவர் தனது நூலில் அடையாளப் படுத்தியுள்ளார். இரசியாவிற்கும் உக்ரேனுக்கும் பல கலாச்சார ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு நாடுகளும் மரபுவழி கிருத்துவத்தைக் கடைப் பிடிக்கின்றன. உக்ரேனிய கலாச்சாரம் மேற்கு ஐரோப்பவிலும் பார்க்க இரசியாவுடன் அதிக ஒற்றுமையுள்ளது என புட்டீனே கூறியிருக்கின்றார்.  இரசிய உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம் பிறந்து வளர்ந்த தொட்டிலாக உக்ரேன் தலைநகர் கருதப்படுகின்றது. அதனால் உக்ரேன் இரசியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்கின்றார் இரசிய அதிபர் புட்டீன். இங்கு இரசிய-உக்ரேனிய கலாச்சார முரண்பாட்டிலும் பார்க்க கலாச்சார ஒற்றுமையே ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றது.

அலெக்சாண்டர் பி டி செவெர்ஸ்கியின் வான்படை வலுக் கோட்பாடு

இரசியாவில் பிறந்து இரசியக் கடற்படையிலும் வான்படையிலும் பணிபுரிந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவரான அலெக்சாண்டர் பி டி செவெர்ஸ்கி முன் வைத்த வான்படை வலுக்கோட்பாடு:

1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது

2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும்.

3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உக்ரேனை இரசிய ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்க இரசியத் தாங்கிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை வழங்கியிருந்தன. ஆனால் வலிமை மிக்க இரசிய வான்படையை எதிர்கொள்ளக் கூடிய படைக்கலன்களை வழங்கவில்லை. அதனால் இரசியாவின் வான்வலிமையால் உக்ரேனில் முன்னேறியது. ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலைத் தவிர எல்லா ஐரோப்பிய நாடுகளின் நகரங்களை நிர்மூலமாக்கக் கூடிய வானில் இருந்து வீசும் எறியியல் ஏவுகணைகளையும் (Kh-47M2 Kinzhal 'Dagger' hypersonic ballistic missile.) அவற்றை வீசக் கூடிய MiG-31 போர் விமானங்களையும் இரசியாவிற்கு சொந்தமான கலின்னின்கிராட் பகுதியில் இரசியா நிறுத்தி வைத்துவிட்டு புட்டீன் உக்ரேனுக்கு எதிரான படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இரசியாவின் இந்த வான் வலிமையால் நேட்டோ நாடுகள் இரசியாவிற்கு எதிராக ஒரு சுண்டு விரலைக் கூட அசைத்தால் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலையை இரசியா உருவாக்கி விட்டது.

கிறிமியப் பொருளாதாரம்

சோவியத் ஒன்றியம் இருந்த போது உக்ரேனில் இருந்து கிறிமியாவிற்கு கால்வாய்கள் வெட்டி அதனூடாக கிறிமியாவிற்கு குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் நீர் வழங்கப்பட்டது. 2014 கிறிமியாவை இரசியா தனதாக்கிய பின்னர். அக்கால்வாய்களை உக்ரேனிய அரசு அணைகள் கட்டி நீர் விநியோகத்ததைத் துண்டித்தனர். பின்னர் நிலத்துக்கடி நீர் பெருமளவில் பாவிக்க நீரில் உப்புத்தன்மை அதிகரித்தது. விவசாயப் பாதிக்கப்பட்டது. குடிநீரின்மையால் பல இரசியர்கள் இரசியாவில் குடியேறினர். இதனால் கிறிமியாவின் பொருளாதாரம் பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. 2014-ம் ஆண்டின் முன்னர் கிறிமியா உக்ரேனுக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருந்தது. இப்போது அந்தச் சுமையை இரசியா தாங்குகின்றது. 2014-ம் ஆண்டின் முன்னர் உக்ரேனின் பணமுதலைகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் இரசிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றாக நிற்கின்றனர். 

மீயுயர்-ஒலிவேக(ஹைப்பர்-சோனிக்) ஏவுகணைகளின் உற்பத்திக்கு முற்பட்ட மேற்படி கோட்பாடுகளுக்கும் அப்பால் இரசியாவை மேற்கு நாடுகளால் கைப்பற்றி ஆள முடியாது. அதே போல் மேற்கு ஐரோப்பிய நாடுகளால் இரசியாவால் கைப்பற்ற முடியாது. இரசியாவின் படைவலிமை அதன் எல்லையை முடிவு செய்யும். உக்ரேனை அதன் நீப்பர் நதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள டொன்பாஸ் பிரதேசத்தைக் கைப்பற்றி ஒரு தனி நாடாக்குவது அல்லது இரசியாவுடன் இணைப்பது இரசியாவால் இயலுமான ஒன்று. டொன்பாஸ் பிரதேசத்தில் இருந்து கிறிமியா வரை செல்லும் கரையோரப்பகுதியைக் கைப்பற்றி இரண்டையும் தரை வழியாக இணைப்பதையும் இரசியாவால் செய்ய முடியும். அது கிறிமியாவை இரசியாவிடமிருந்து பிரிக்க முடியாத பிரதேசமாக்கி இரசியக் கடற்படையை வலிமை மிக்கதாக்கும். இரசியா அதியும் தாண்டி முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று தற்போது நேட்டோவில் இருக்கும் நாடுகளை ஆக்கிரமிக்க முயன்றால் உலகம் போரழிவைச் சந்திக்கும்.


                                                                                                    (தொடரும்)        

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...