Wednesday, 16 February 2022

உக்ரேனில் புட்டீன்: பதுங்கலா பின்வாங்கலா?

  

2022 பெப்ரவரி 15-ம் திகதி இரசியப் பாதுகாப்புத்துறை உக்ரேன் எல்லையில் இருந்து பத்தாயிரம் படையினரை விலக்குவோம் என அறிவித்தவுடன் உலகப் பங்குச் சந்தைச் சுட்டிகள் அதிகரித்தன. தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருந்த அமெரிக்காவின் Dow Jones சுட்டி 400 புள்ளிகளால் அதிகரித்தது. 2022 பெப்ரவரி 14-ம் திகதி இரசிய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரேன் நெருக்கடி தணிக்க வாய்ப்புள்ளது எனச் சொன்னவுடன் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி அதிகரித்தது. இரசியப் பங்குச் சந்தையின் சரிவும் குறைந்தது. இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேச்சு வார்த்தைக்கு முக்கியமாக படைக்கலக் கட்டுப்பாடு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு இன்னும் இடமுள்ளது என்று அறிவித்தமை போரை தவிர்க்க இரசியா விரும்புகின்றது என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. இரசியா படைகளை விலக்கவில்லை மேலும் படைகளை உக்ரேன் எல்லைக்கு அனுப்பியுள்ளது என்றும் தற்போது 150,000படையினர் உக்ரேன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. 

இரசியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்

உக்ரேன் நெருக்கடிக்குப் பின்னர் இரசியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வது ஐம்பது விழுக்காட்டால் குறைந்து போயிருந்தது. இந்தோனேசியா, அல்ஜீரியா, எகிப்த்து ஆகிய நாடுகள் இரசியாவிடமிருந்து வாங்கவிருந்த SU-35 போர் விமானங்களை வாங்குவதில்லை என முடிவெடுத்தன. இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை வந்தால் SU-35இன் முக்கிய பாகங்களை இரசியா மேற்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் போகும். அதனால் SU-35இன் செயற்படு திறன் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் எல்லையில் படை குவித்ததைத் தொடர்ந்து இரசியா பல பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றது. உக்ரேன் மீது இரசியா ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தால் உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். உக்ரேன் நெருக்கடியால் எரிபொருள் விலை அதிகரிக்கின்றது. அது இரசியாவின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும். ஆனால் உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத்தடையால் ஏற்படவிருக்கும் பொருளாதாரப் நெருக்கடி எரிபொருள் வருமான அதிகரிப்பால் வரும் நன்மையை இல்லாமற் செய்யலாம். 

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2022/01/blog-post_31.html

போர் வேண்டாம் உக்ரேனைப் பிரிப்போம்

“எமக்கு போர் வேண்டுமா? வேண்டாமா? நிச்சயம் வேண்டாம்” என்ற இரசிய அதிபர் புட்டீனின் வாசகம் உலகத்தை உலுப்பியுள்ளது. இரசியாவின் பத்தாயிரம் படையினர் விலக்கல் அறிவிப்பை உக்ரேனும் நேட்டோ நாடுகளும் கவனத்துடன் வரவேற்றன. உக்ரேன் நேரில் காணும் வரை அதை நம்ப மாட்டோம் என்றது. அமெரிக்கா தாம் அதை உறுதி செய்து கொள்வோம் என்றன. இரசிய அதிபர் சமாதான சமிக்ஞையை ஒரு புறம் வெளிப்படுத்த மறுபுறம் உக்ரேனின் இரண்டு வங்கிகள் இணையவெளித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதேவேளை இரசிய நாடாளுமன்றம் உக்ரேனின் கிழக்குப் புறமாக பிரிவினை வேண்டி நிற்கும் Donetsk, Luhansk ஆகியவற்றை குடியரசுகளாக அங்கீகரிக்க அதிபரைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இவை புட்டீனின் பின் வாங்கலுக்கான அறிகுறிகள் இல்லை.

இரண்டு கழுகுகள்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் 1990களில் அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் மூதவை உறுப்பினராகவும் வெளியுறவுத்துறைக் குழுவின் உறுப்பினராக இருந்த போது முன்னாள் சோவியத் ஒன்றிய செய்மதி நாடுகளாக இருந்த போலாந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகிய நாடுகளை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைப்பதற்கு முன்னின்று உழைத்தார். நேட்டோ விரிவாக்கத்தில் விருப்பம் உள்ளவராக ஜோ பைடன் கருதப்படுகின்றார். ஜெர்மனியை கிழக்கு மேற்கு என இரு நாடுகளாகப் பிரித்து நின்ற பேர்லின் சுவர் 1989-ம் ஆண்டு தகர்க்கப்பட்டமை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலியது. பேர்லின் சுவர் தகர்க்கப் பட்டபோது கிழக்கு ஜெர்மனியில் சோவியத்தின் உளவுத்துறையில் பணிபுரிந்தவர் தற்போது இரசிய அதிபராக இருக்கும் விளடிமீர் புட்டீன். சோவியத் ஒன்றியத்தை நிலை நிறுத்த உழைத்தவர். அவர் கண் முன்னே அது சரிவதை பார்த்துக் கொண்டிருந்தவர்.

உறுதிமொழி பற்றி உறுதி செய்ய முடியவில்லை

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் கிழக்கு ஜெர்மனியை மட்டும் நேட்டோவில் இணைக்கும் மற்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைக்க மாட்டாது என இரசியாவிற்கு ஜோர்ஜ் புஷ் ஒரு உறுதி மொழியை வழங்கியிருந்தார் என இரசியர்கள் நம்புகின்றனர். 12-09-1990இல் அப்படி ஓர் உறுதி மொழி ஜோர்ஜ் புஷ்ஷால் மிக்காயில் கோர்பச்சோவிற்கு வழங்கப்பட்டது என புட்டீன அடித்துச் சொல்கின்றார். அது பற்றி எந்த எழுத்து மூலமான ஆதாரமும் இல்லை. இப்போது அப்படி ஓர் உறுதி மொழி வழங்கப்படவில்லை என்கின்றன மேற்கு நாடுகள். ஆனால் தங்களுக்கு துரோகமிழைக்கப் பட்டு விட்டதாக பல இரசியர்கள் நம்புகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி 20-ம் நூற்றாண்டில் நடந்த ஒரு புவிசார் அரசியல் விபத்து என விளடிமீர் புட்டீன் கருதுகின்றார். சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என அவர் கருதுகின்றார்.

இளகிய இரும்பென நினைக்கின்றாரா பைடன்

உக்ரேனில் இருந்து பத்தாயிரம் படையினர் விலக்கப்படுவார்கள் என இரசியா அறிவித்தவுடன் உலக மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் நாம் முழு வலிமையுடன் பாதுகாப்போம். உக்ரேனின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம் என முழங்கினார். இரசியாவின் பத்தாயிரம் படைவிலக்கலை இளகிய இரும்பென நினைத்து அவர் பாய்ந்து பாய்ந்து அடிப்பது போல் அவரது உரை அமைந்திருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூதவையில் இரு கட்சிகளும் இணைந்து இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தவுடன் இரசியாமீது முன்பு எப்போதும் இல்லாத அளவு கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அறிக்கை விட்டன. அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் உலகெங்கும் உள்ள நாடுகளையும் திரட்டி பொருளாதாரத்தடை செய்ய வைப்போம் எனவும் பைடனின் உரையில் சூளுரைக்கப்பட்டிருந்தது.  

உக்ரேனின் ஏவ்கணை வலிமை பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2022/02/javelins-t-90-tanks-nlaw.html

புட்டீனின் பிரச்சனைகள்

1, நேட்டோ ஒற்றுமை: புட்டீன எதிர்பார்த்தது போல் உக்ரேனை எப்படி இரசியாவிடமிருந்து பாதுகாப்பது என்பது தொடர்பாக முறுகல் தோன்றவில்லை. அவர்களிடையே எப்படி அணுகுவது என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்தன. பிரான்ஸ் அதிபரும் ஜேர்மனிய அதிபரும் தமது பாணியில் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். ஆனால் உக்ரேன் நேட்டோவில் இணைவது தொடர்பாக நேட்டோ தலைவர்களிடம் ஒரே கருத்து இருந்தது. உக்ரேன எந்தப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது என்பது உக்ரேனின் இறைமையுடன் தொடர்புடையது என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். உக்ரேனை இரசியாவிற்கு விட்டுக் கொடுத்தால் இரசியா அத்துடன் நிற்காமல் ஏற்கனவே நேட்டோவில் இணைந்துள்ள லத்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என புட்டீன அடம் பிடிக்கலாம் என நேட்டோ தலைவர்கள் கருதலாம்.

2. பருவ நிலை: 2022 பெப்ரவரி நடுப்பகுதியில் இரசியா உக்ரேனுக்குள் படைகளை அனுப்பினால் அது இரண்டு வாரங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும். இரசியாவின் உயர்ந்த எதிர்பார்ப்பு உக்ரேனில் தனக்கு ஆதரவானவர்களை ஆட்சியில் அமர்ந்த்துவது ஆகும். உக்ரேனியர்கள் தற்போதைய ஆட்சியாளர்களின் பின்னால் உறுதியாக திரண்டு நிற்பதுடன் பலர் படையில் சேர விருப்பமும் தெரித்துள்ளனர். மார்ச் மாத ஆரம்பத்தில் உக்ரேனை முடியுள்ள பனி பகுதியாக உருகத் தொடங்கி பனிச்சேறு உருவாகும். அது இரசியப் படையினருக்கான வழங்கல்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விமான மூலமாக உணவு, சுடுகலன்கள், எரிபொருள், படைக்கல உதிரிப்பாகங்களை விநியோகிக்க வேண்டி வரும். அமெரிக்கா விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரேனுக்கு போல்ரிக் நாடுகளூடாக வழங்கியுள்ளது.

3. படைக்கலன்கள்: தரையூடான படை நகர்விற்கு முழு ஆதாரமாக போர்த்தாங்கிகள் செயற்படும். இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ள போர்த்தாங்கிகளிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையான தாங்கி அழிப்பு ஏவுகணைகள் தற்போது உக்ரேனிடம் உள்ளன. அதனால் இரசியப் படையினர் பெரும் ஆளணி இழப்புக்களை சந்திப்பர். 2014-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்கா உக்ரேனிற்கு படைக்கலன்களையும் பயிற்ச்சியையும் வழங்க $2.7பில்லியனச் செலவழித்துள்ளது. 

4. பொருளாதாரம்: மேற்கு நாடுகளுடன் ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற பல நாடுகளும் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவரும் போது இரசியா பெரும் பொருளாதாரச் சிக்கலை எதிர் கொள்ளும்.

5. உக்ரேனின் உறுதிப்பாடு: உக்ரேனை இலகுவில் மிரட்டலாம் என்ற எதிர்பார்ப்புடன் இரசியா உக்ரேன் எல்லையில் ஒரு இல்ட்சம் படையினரைக் குவித்தது. உக்ரேன் விட்டுக் கொடுக்காத நிலையில் மேலும் முப்பதினாயிரம் படையினரைக் குவித்தது. அதற்கும் உக்ரேன் மசியவில்லை. 2014 இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னர் 84% உக்ரேனியர்கள் இரசியாவை விரும்புபவர்களாக இருந்தனர். 2019இல் அது 32% ஆக குறைந்தது. உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி 2019 அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் போது ஒரு நடுநிலையாளராக இருந்தார். பின்னர் அவர் இரசியாவை வெறுப்பவராக மாறிவிட்டார். 

6. ஜெர்மனி கடுமையான நிலைப்பாடா? இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜெர்மனி மட்டுமே இளகிய நிலையில் இருந்தது. ஜெர்மனி அதிபரின் நிலைப்பாடு தொடர்பாக ஜெர்மனியிலும் மேற்கு நாடுகளிலும் எதிர்ப்பு உருவானது. ஜெர்மனிய அதிபர் புட்டீனைச் சந்திக்க முன்னரே அவர் தனது நிலைப்பாடு மாறும் என்ற செய்தியை இரசியாவிற்கு தெரியப்படுத்தி இருக்கலாம். உக்ரேன் மீது இரசியா போர் தொடுத்தால் ஜெர்மனூடாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை குழாயூடாக வழங்கும் Nordstream-2 திட்டத்திற்கு ஜெர்மன் முட்டுக்கட்டை போடும் முடிவை எடுத்துள்ளதாக அறியப்படுகின்றது. 

புட்டீன் புகழுக்கு பங்கம்

பெரியதாக வீராப்பு பேசும் புட்டீன் உக்ரேன் திரையரங்கில் அரங்கேற்ற முயன்ற காட்சி உப்புச் சப்பில்லாமல் முடிவது அவரது விம்பத்திற்கு பங்கம் ஏற்படும். அதனால் அவர் வீராப்பு பேசக் கூடிய வகையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை நேட்டோவுடன் செய்ய வேண்டும் அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகள் மூலம் ஒரு தாக்குதலை உக்ரேன் மீது செய்ய வேண்டும். இது போன்ற Face saving நடவடிக்கைகள் எதையாவது செய்து தப்ப வேண்டும். அமெரிக்க பைடனும் பிரித்தானிய ஜோன்சனும் பெப்ரவரி 16-ம் திகதி புட்டீன் போர் தொடுப்பார் என அறிவித்த நிலையில் அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல புட்டீன் 15-ம் திகதி படை விலக்கலை அறிவித்தார். 

மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் புட்டீன் உறுதியாக நிற்பார். தனது எல்லை நாடுகளில் நேட்டோ எந்தப் படையையும் நிறுத்தக் கூடாது இரசியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்தக் கூடிய வகையில் படைக்கலன்களைக் குவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்க மாட்டார். உலக அரங்கில் இரசியாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த அவர் தொடர்ந்து முயற்ச்சி செய்வார்.

புட்டீனின் மீண்டும் சோவியத் உருவாக்கம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2021/12/blog-post_30.html

கிழக்கு ஐரோப்பாவில் முடியாததை அவர் நடுவண் ஆசியாவில் செய்ய முயலலாம். அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வர துருக்கி எண்ணுகின்றது. அவற்றைப் பொருளாதார அடிப்படையில் சுரண்ட சீனா தொடங்கி விட்டது.  

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...