Thursday, 29 July 2021

தியாகோ காசியா தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

  


இந்து சமுத்திரத்தின் நடுவில் பூ மத்திய ரேகைக்கு சற்று தெற்காக உள்ள 58 பவளத் தீவுகளை பிரித்தானியா 1965 -ம் ஆண்டு மொரீசியஸிடமீருந்தும் சீசெல்ஸிடமிருந்தும் அபகரித்தது. பிரித்தானியா இன்றுவரை வைத்திருக்கும் அந்த 58 பவழத்தீவுகளில் ஒன்றுதான் தியாகோ காசியா. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்த குத்தகையின் அடிப்படையில் அங்கிருக்கும் அமெரிக்கப் படைத்தளம் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் பிராந்திய ஆதிக்கத்திற்கு முக்கியமான ஒன்றாகும். அத்தீவை அமெரிக்கப்படையினர் “சுதந்திரத்தின் காலடிச்” சுவடு என அழைக்கின்றனர். பிரித்தானியர் தமது 58 பவழத்தீவுகளையும் பிரித்தானிய இந்துமாக்கடல் நிலப்பரப்பு என்கின்றனர். அதன் உண்மையான உரிமையாளர்களான மொறீசியஸ் நாட்டவர்கள் அதை சாகோஸ் தீவுக் கூட்டம் என்கின்றனர்.

பிரித்தானியாவின் பச்சைப் பொய்

நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 1814இல் பிரான்ஸும் பிரித்தானியாவும் செய்த பரிஸ் ஒப்பந்தப்படி சாகோஸ் தீவுக் கூட்டம் பிரித்தானியாவின் வசமானது. பிரித்தானியா மொறீசியஸுக்கு சுதந்திரம் வழங்கும் போது சாகோஸ் தீவுக்கூட்டத்தை பிரித்து தனதாக்கிக் கொண்டது, அதற்காக நான்கு மில்லியன் பவுண்களை மொறீசியஸுக்கு பிரித்தானியா வழங்கியது. அதில் ஒரு பவழத் தீவான தியாகோ காசியாவில் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு அம்மண்ணின் ஆதி மக்களான சாகோசியர் குடியிருந்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து பிரித்தானியா வெளியேற்றி சூழ உள்ள நாடுகளில் வலுக்கட்டாயமாக கொண்டு போய் கரையிறக்கியது. அதில் பெற்றோரை ஒரு தீவிலும் பிள்ளைகளை வேறு தீவிலும் தரையிறக்கியது. அத்தீவு முற்றாக கடலுக்குள் அமிழ்ந்துவிடப் போவதாக பிரித்தானியா ஒரு பச்சைப் பொய்யையும் அவிழ்த்துவிட்டது. பிரித்தானியால் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்து மீண்டும் இணைவதற்கு இருபது ஆண்டுகள் எடுத்தன

தியாகோ காசியா தீவு பதினேழு சதுர மைல் நிலப்பரப்பு கொண்டது. ஆனால் அமெரிக்காவின் படைத்துறைக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்காவின் கடல்சார் படையினரின் எதிர்பாராத சூழல்களைக் சாமாளிக்க என உருவாக்கப் பட்ட பிரிவினரின் பெரும்பகுதியினர் தியாகோ காசியாவில் நிலை கொண்டுள்ளனர். அங்கு பல தொலைதூரத் தாக்குதல் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன

மொறீசியஸ் இந்திய உறவு

மொறீசியஸின் மக்கள் தொகையில் இந்தியாவில் இருந்து சென்ற இந்துக்களின் வம்சாவழியினரே பெரும்பான்மையினர். மொறீசியஸில் படைத்தளம்அமைக்க சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டன. ஆனால் 2015-ம் ஆண்டு மொறீசியஸின் அகாலிகா தீவில் இந்தியாவின் வான்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டது. மொறீசியஸில் சீனாவினதும் இந்தியாவினதும் முதலீடுகள் அவசியம் என அந்நாட்டு ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். 2017-ம் ஆண்டு பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியா தனது நட்பு நாடான மொறீசியஸ் தியாகோ காசியாமீதான பிரித்தானியாவின் உரிமை தொடர்பான தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். அதை இந்தியா நிராகரித்துவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மொறீசியஸை தனது பக்கம் இழுக்க சீனா தொடர்ந்து முயற்ச்சித்துக் கொண்டிருக்கின்றது. மற்றது பனிப்போர் காலத்தில் இருந்தே தியாகோ காசியாவில் அமெரிக்கப் படைகள் இருப்பதை இந்தியா எதிர்த்து வந்துள்ளது. இந்து மாக்கடலில் அந்நிய கடற்படையினர் நிலை கொள்ளக் கூடாது என்பது இந்தியாவின் நீண்ட காலக் கொள்கை.

பன்னாட்டு நீதிமன்ற தீர்ப்பு

2019-ம் ஆண்டு பெப்ரவரி 25-ம் திகதி நீதிக்கான பன்னாட்டு மன்றம் பிரித்தானியா உடனடியாக 58 பவழத்தீவுகளையும் மொரிசீயஸுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு கூறியது. அதே ஆண்டு மே மாதம் 22-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நீதிக்கான பன்னாட்டு மன்றத்தின் தீர்ப்பை வரவேற்றதுடன் பிரித்தானியா அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற குறிப்பையும் நிறைவேற்றியது. அக்குறிப்பிற்கு ஆதரவாக 116 நாடுகள் வாக்களித்தன, 56 நாடுகள் வாக்களிக்கிப்பில் கலந்து கொள்ளவில்லை, பிரித்தானியா, அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஹங்கேரி, இஸ்ரேல், மாலைதீவு ஆகிய ஆறு நாடுகள் மட்டும் எதிர்த்து வாக்களித்தன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் குறிப்பு பிரித்தானியாவைக் கட்டுபடுத்த முடியாத வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிக்கான பன்னாட்டு மன்றம் தனது தீர்ப்பில் 1968-ம் ஆண்டு பிரித்தானியா மொறீசியஸுக்கு சுதந்திரம் வழங்கிய போது சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதனால் பன்னாட்டுச் சட்டம் மீறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐநா பொதுச்சபையின் தீர்மானத்தை பிரித்தானியா முற்றாக நிராகரித்து விட்டது.

விதிகளின் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விகளின் அடிப்படையினால் பன்னாட்டு ஒழுங்கை (Rule Based International Order) வலியுறுத்துபவர். அதன்படி ஐநா சபை, அதன் துணை அமைப்புகள், பன்னாட்டு வர்த்தக அமைப்பு போன்ற பன்னாட்டு அமைப்புகளின் விதிப்படி உலக நாடுகள் செயற்பட வேண்டும். நீதிக்கான பன்னாட்டு மன்றத்தின் தீர்ப்பை பிரித்தானியா நிராகரித்து விட்டது. அமெரிக்கா பெரும் எதிர்ப்பை காட்டவில்லை. ஆனால் தீர்ப்பை மதித்து அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என அமெரிக்கா அறிவிக்கப் போவதில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இன பன்னாட்டு அரங்குகளில் விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கு பற்றிப் போதிக்க முடியாது. ஆனால் எதிலும் மாற்றி யோசிக்கும் திறமையுள்ள அமெரிக்கா மொறீசியஸுடன் இரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. மொறீசியஸ் அமெரிக்கப்படைகள் தொடர்ந்து இருப்பதை விரும்புகின்றது. ஆனால் அமெரிக்கா எதிர் காலத்தில் மொறீசியஸில் ஆட்சிக்கு வருபவர்கள் அதையே கடைப்பிடிப்பார்களா என்பதும் ஐயமே.

அமெரிக்க இந்திய உறவு

அமெரிக்கா தன் ஆசிய பசுபிக் கொள்கையை இந்தோ பசுபிக் கொள்கை என மாற்றிக் கொண்டது இந்தியாவை தன் இந்தோ பசுபிக் பாதுகாப்பு பங்களியாக இணைத்துக் கொள்ளவே. சீனா இந்து மாக்கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தாமல் தடுப்பதற்கு அமெரிக்க இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியம். அமெரிக்காவை தியாகோ காசியாவில் இருந்து வெளியேற்றினால் அது தொடர்ச்சியாக நடுநிலையாக இருக்குமா என்பது ஐயமே. மொறீசியஸில் சீனாவுக்கு சார்பாக ஓர் அரசு அமைந்து அது தியாகோ காசியாவில் சீனப் படைத்தளம் அமைய வாய்ப்புண்டு. அது இந்தியாவிற்கு மிக அச்சுறுத்தலாக அமையும். 2016-ம் ஆண்டு இண்டியாவும் அமெரிக்காவும் செய்து கொண்ட Logistics Exchange Memorandam Agreement (LEMOA)இன் படி தேவை ஏற்படின் இந்தியாவின் படைத்தளங்களை அமெரிக்காவும் அமெரிக்கப்படைத்தளங்களை இந்தியாவும் பயன்படுத்தலாம். அதன்படி தியாகோ காசியப் படைத்தளத்தை தேவை ஏற்படின் இந்தியாவும் பயன்படுத்தலாம். இன்று சீனா பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் அமெரிக்காவிற்கு சவாலாக வளர்ந்திருப்பாதால் சீனாவை அடக்க அமெரிக்க முயல்கின்றது அதே போல் நாளை இந்தியாவும் வளர்ந்து நிற்கையில் இன்று இந்தியாவை பங்காளியாக விரும்பும் அமெரிக்கா பகையாளியாகலாம். இதை நன்குணர்ந்த இந்தியா தியாகோ காசியா தொடர்பான தன் நிலைப்பாட்டை கவனமாகவே எடுக்கும். தியாகோ காசியா தொடர்பாக மொறீசியஸ் எடுத்த அரசுறவியல் நடவடிக்கைகள் இந்தியாவின் ஆதரவினால் வெற்றி பெற்றன.

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா ஆகியவற்றின் இடையே உள்ள கோந்திரோபாய நகர்வுகள் தியாகோ காசியாவின் தலைவிதியை முடிய்வு செய்யும்

 

Wednesday, 28 July 2021

கியூபாவில் மக்கள் போராட்டம். வெற்றியளிக்குமா?

  


ஜுலை – 11-ம் திகதி கியூபாவில் பல் வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் ஆரம்பித்தது. இது 1959இல் நடந்த பொதுவிடமைப் புரட்சிக்குப் பின்னர் நடக்கும் பாரிய போராட்டமாகும். பிடல் கஸ்ரோ, ராஉல் காஸ்ட்ரோ ஆகியோரின் ஆட்சிக்குப் பின்னர் கியூப அதிபராக வந்த மிகுஏல் டயஸ் கனல் ஆட்சியில் நடக்கும் மக்கள் போராட்டத்தை பொதுவுடமைப் புரட்சி எதிர்ப்பு இயக்கம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கூலிப்படையினர் எனவும் முத்திரை குத்தியுள்ளார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரே நேரத்தில் பெரும் மக்கள் போராட்டம் வெடித்தமை கியூப வரலாற்றில் முன்பு நடந்ததில்லை.

எந்தையர் நாடு?

உலகில் இன்றும் பொதுவுடமைவாத ஆட்சி நிலவும் ஒரு சில நாடுகளில் கியூபாவும் ஒன்றாகும். கியூபாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்தபோது “எந்தையர் நாடு அல்லது இறப்பு” என்ற சுலோகத்தை புரட்சியாளர்கள் முன்வைத்தனர். இப்போது கிளர்ச்சி செய்பவர்கள் “எந்தையர் நாடும் வாழ்வும்” என்ற சுலோகத்தை முன்வைக்கின்றனர். சர்வாதிகாரம் ஒழிக சுதந்திரம் மலர்க என்பதும் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. தொலைக்காட்சியில் தோன்றிய கியூப அதிபர் மிகுஏல் டயஸ் கியூபா புரட்சியாளர்களுக்கு சொந்தமானது என முழங்கினார்.

1994இல் நடந்த கிளர்ச்சி

1990இல் சோவியத் ஒன்றியம் நெருக்கடிகளைச் சந்தித்த பின்னர் கியூபாவிற்கு அங்கிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் முற்றாக இல்லாமற் போயின. 1989இல் இருந்து 1993வரை கியூபாவின் மொத்த தேசிய உற்பத்தி 35% வீழ்ச்சியடைந்திருந்தது. அப்போது உருவான பொருளாதார நெருக்கடியால் 1994இல் மக்கள் கிளர்ச்சி செய்தபோது அது இரும்புக் கரங்களால் நொருக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கியூபா தனது சமூக நலக் கொடுப்பனவுகளுக்கான செலவைக் கட்டுப்படுத்தியது. அதிகரித்த சமூக நலக் கொண்டுப்பனவுகள் மக்களிடையே வேலைசெய்யும் விருப்பத்தை குறைத்து விட்டதாக கியூப ஆட்சியாளர்கள் கருதினர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் பல பொதுவுடமை ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மேற்கு நாடுகளில் உள்ளது போன்ற ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால் கியூபாவின் பொதுவுடமை ஆட்சி இன்றுவரை தாக்கிப் பிடிக்கின்றது.

அமெரிக்க பொருளாதாரத் தடை

பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா வாழ் கியூபர்களின் ஆதரவை அவரது மக்களாட்சிக் கட்சிக்கு ஆதரவு தேடும் முகமாக கியூபா மீதான சில பொருளாதாரத் தடைகள் தளர்த்தப் பட்டன. டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா கியூபா மீதான பொருளாதாரத் தடை மேலும் இறுக்கப்பட்டது. ஜோ பைடன் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. 2021 ஜனவரியில் கியூப நாணயத்தின் பெறுமதி குறைக்கப்பட்டது. கியூபாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என கியூப அதிபர் மிகுஏல் டயஸ் குற்றம் சுமத்தினார்.

சிறந்த சமூக நலச்சேவைகள் கொண்ட கியூபா

2020இல் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் கியூப பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. உல்லாசப் பயணிகளின் வருகை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. வெளிநாடுகளில் வாழும் கியூபர்கள் அனுப்பும் பண வருகையும் வீழ்ச்சியடைந்தது. வளர்முக நாடுகளில் சிறந்த சமூக நலன்சார் திட்டங்களை பிடல் காஸ்ட்ரோ ஆரம்பித்து வைத்தார். அரிசி, பாண், பால், முட்டை, அவரைகள், போன்ற உணவுவகைகள் உலகில் மற்ற நாடுகளிலும் பார்க்க குறைந்த விலையில் கியூப மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. அதனால் மக்களின் அடிப்படைத்தேவைகள் அரசால் நிறைவேற்றப்பட்டது. 2017-ம் ஆண்டு கியூபா சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆய்வாளர் மரியா கிரேசியா ஜியாமரினாரோ கியூபாவின் சமூக நலத் திட்டங்களைப் பாராட்டியிருந்தார். கியூபாவின் இலவச மருத்துவ சேவை, இலவச கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை இட்டு அவர் தனது திருப்தியையும் வெளியிட்டிருந்தார். சிறந்த மருத்துவ சேவையைக் கொண்ட கியூபா கொவிட்-19 பெருந்தொற்றை கையாள முடியாமல் தடுமாறியது. நோயாளிகள் மருத்துவ மனைகளில் இடமில்லாத படியால் வீடுகளில் இருந்தே இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்கா எப்படிக் கையாளும்?

அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவை மற்றும் மூதவையின் உறுப்பினர்கள் 32பேர் கையொப்பம் இட்ட முன்மொழிவில் ஜூலை-11 கியூப ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்ததுடன் கியூப மக்கள் மீண்டும் இணையப் பாவனை கிடைப்பதற்கான வழிகளை உறுதி செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

இரும்புக்கரம்

கியூப அரசு படைத்துறையினர், காவற்றுறையினர் போன்றோரை மட்டுமல்லாது தனது ஆதரவாளர்களையும் போராட்டக்காரர்களுக்கு எதிராக களமிறக்கியது. போராட்டக்காரர்கள் குண்டாதடிகள் ஏந்திய குண்டர்களால் மோசமாக தாக்கப்பட்டனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் இறப்பர் குண்டுகளும் ஆர்ப்பாட்டக்கார ர்களை அடக்க பெருமளவு பாவிக்கப்பட்டன. பல இடங்களில் ஆர்ப்பாட்டக்கார ர்களிலும் பார்க்க அவர்களை அடக்க வந்தவர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கியூபாவில் இடை நிறுத்தப்பட்டிருக்கும் இணையவெளிச் சேவைகளை எப்படி மீண்டும் கிடைக்கச் செய்வது தொடர்பாக தான் ஆய்வுகள் செய்வதாகச் சொன்னார். கியூப அரசுக்கு எதிரான கடுமையான கண்டனங்களோ அல்லது கிளர்ச்சியாளர்களுகான பகிரங்க ஆதரவோ உதவியோ இன்னும் அமெரிக்காவில் இருந்து கிளம்பவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்கக் கைக் கூலிகளாக சித்தரிப்பதை அது இலகுவாக்கும் என அமெரிக்க ஆட்சியாளர்கள் கருதலாம். நேட்டோ நாடுகளின் மாநாடு 2021இல் நடந்தபோது சர்வாதிகாரிகளுக்கு எதிராக பெருமளவு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது மத்திய அமெரிக்காவில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வாழும் கியூபர்கள் கியூப கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

கியூப அரசின் சிறிய விட்டுக்கொடுப்பு

ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் பரவிய நிலையில் கியூப அதிபர் மிகுஏல் டயஸ் வெளிநாடுகளில் இருந்து கியூபாவிற்கு வருபவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் மருந்து வகைகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார். சுங்க வரி கொடுக்காமல் எந்த அளவு உணவையோ மருந்தையோ கியூபாவிற்கு செல்பவர்கள் எடுத்துச் செல்ல முடியும். கொவிட்-19 தொற்று நோயைத் தடுக்க கியூபாவிற்கு வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இத்தடை நீக்கம் கியூபாவிற்கு வரும் உணவுகளை பெருமளவு அதிகரிக்க மாட்டாது.

வெனிசுவேலாவில் 2019 ஏப்ரலில் ஆரம்பித்த பெரும் மக்கள் போராட்டம் இன்றுவரை அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. ஹொங் கொங்கில் மக்கள் செய்த போராட்டத்தை சீன அரசு வெற்றிகரமாக முறியடித்தது.

Tuesday, 27 July 2021

மோடியா யோகியா பாஜகவின் உட்பூசல்

  
2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்திய நாடாளமன்றத் தேர்தலில் இந்தியாவின் தலைமை அமைச்சராக மோடி தொடர்வாரா அல்லது உத்தரப் பிரதேச (உ.பி) மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மோடியை ஓரம் கட்டி விடுவாரா என்பதை 2022-ம் ஆண்டின் முற்பகுதியில் நடக்கவிருக்கும் உத்திரப் பிரதேச சட்ட மன்றத் தேர்தல் முடிவு செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. கொவிட்-19 தொற்று நோயை தலைமை அமைச்சராக மோடியும் மாநில முதலமைச்சராக யோகியும் மோசமாக கையாண்டு கொண்டிருப்பவர்கள். புது டில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது என்று சொல்லலாம்.

முக்கியத்துவம் வாய்ந்த உபி

2014-ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளமன்றத்தின் மக்களவைக்கான (லோக் சபா) தேர்தலில் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உத்தரப் பிரதேசத்தின் வர்ணாசி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் வதோதரா தொகுதியில் பெற்ற வெற்றியை தலைமுழுகி விட்டு உத்தரப் பிரதேச மகனாக தன்னை நிலை நிறுத்தினார். 2019இல் நடந்த தேர்தலிலும் வர்ணாசியில் போடியிட்டு வெற்றி பெற்றார். கஷ்மீரைச் சேர்ந்த நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட உத்தரப் பிரதேசத்தில் இருந்தே அரசியல் செயற்பாடுகளை மேற் கொள்கின்றனர். ஜவகர் லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சர்களாகினார்கள். உ.பி எண்பது உறுப்பினர்களை இந்தியாவின் மக்களவைக்கு தெரிவு செய்கின்றது.

மோடியும் யோகியும்

மோடி திருமணமாகி துறவறம் பூண்டவர். யோகி திருமணமாகாமல் துறவறம் பூண்டு காவியுடை தரித்தவர். மோடி சிறிய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர். யோகி இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். மோடி பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். யோகி உயர் சாதி பிராமணர். இந்தியாவின் வரலாற்றின் பெரும்பகுதியில் தம்மை பிராமணராகச் சொல்பவர்களே தலைமை அமைச்சர்களாக இருந்துள்ளனர். உ.பியின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தெரிவான பின்னர் அவர் புது டில்லியின் தலைமை அமைச்சர் பதவிக்கு குறிவைக்கலாம் என ஐயம் கொண்ட மோடி தன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான அரவிந்த் குமார் ஷர்மா என்பவரை குஜராத்தில் இருந்து உ.பியிற்கு கொண்டு போய் அவரை உ.பி சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக நியமித்தார். அத்துடன் உ.பி மாநில பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) துணைத்தலைவராகவும் ஆக்கினார் மோடி. அத்துடன் நிற்காமல் அரவிந்த் குமார் ஷர்மாவை உ.பியின் துணை முதல்வராகவும் ஆக்க முயன்றார். அதற்கு யோகி ஆதித்யநாத் எதிர்ப்பு காட்டி மறுத்த போது மோடி – யோகி மோதல் உருவானது.

சாதிப் போட்டி நிறைந்த உத்தரப் பிரதேசம்

தமிழ்நாட்டு சட்ட மன்றத் தேர்தலில் இலவசங்கள் முக்கியத்துவம் பெறுவது போல உ.பி சட்ட மன்றத் தேர்தலில் சாதி முக்கியத்துவம் பெறுகின்றது. தேசியக் கட்சிகள் சாதியை அடிப்படையாக வைத்தே தெரிவு செய்கின்றன. சாதியை முன்வைத்தே மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றோர் தமது கட்சியை நடத்தி வெற்றி பெறுகின்றனர். பத்து விழுக்காடு பிராமணர்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரு வெற்றி ஈட்டியதற்கு மோடி-அமித் ஷா வகுத்த உபாயங்களே காரணமாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியை அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதக் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தடுத்தார் அமித் ஷா. பார்ப்பனர்களின் வாக்குகள் காங்கிரசுக் கட்சிக்கு போகாமல் இருக்கவே பார்ப்பனரான யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

2022 சட்ட மன்றத் தேர்தல் வேறு பிரச்சனைகளைக் கொண்டது

2022இன் முற்பகுதியில் நடக்க விருக்கும் உ.பி சட்ட மன்றத் தேர்தலில் சாதிப் போட்டி மட்டும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை. யோகி ஆதித்யநாத் கொவிட்-19 தொற்று நோயைக் கையாண்ட விதம் உலகெங்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றது. புனித நதியான கங்கையில் தொற்று நோயால் இறந்தவர்களின் உடலங்கள் வீசப்பட்டமை உலக அரங்கில் இந்தியாவின் பிம்பத்தை பெரிதும் பாதித்தது. அத்துடன் உ.பியில் ஆளும் பாஜக கட்சிக்குள் பெரிய உட் பூசல்களையும் உருவாக்கியுள்ளது. இதனால் 2021 மே மாதம் நடந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2022இல் நடக்கவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் அவரது தலைமை அமைச்சர் பதவி மீதான விருப்பம் மேலும் தீவிரமடையும்.

தன் புகழை விட்டுக் கொடா மோடி

தனது புகழிலிலும் மக்களிடையே உள்ள தனது விம்பத்திலும் அதிக கவனம் செலுத்தும் மோடி உ.பியில் அதிக கவனம் செலுத்தவுள்ளார். அதனால் மாதம் தோறும் உ.பியிற்கு பயணம் செய்து பல அரச திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஜூலை 15-ம் திகதி உ.பி சென்ற மோடி அங்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்கும் பணியை ஆரம்பித்து வைத்துள்ளார். பாஜகவின் உ.பி சட்ட மன்ற உறுப்பினர்கள் பலரிடையே முதல்வர் யோகி தமது வேண்டுகோள்களுக்கு செவி சாய்ப்பதில்லை என்றும் அவர் தம்மிலும் பார்க்க அரச அதிகாரிகளிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கருத்து நிலவுகின்றது. அதையும் மோடி தனக்கு சாதகமாக்க முயலலாம். பல சட்ட மன்ற உறுப்பினர்கள் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் உயர் மட்டத் தலைவர்களிடம் யோகி மீது தமக்கு இருக்கும் அதிருப்தியை எடுத்துரைத்துள்ளனர்.

2024 தலைமை அமைச்சர் வேட்பாளர் யார்?

நரேந்திர மோடியும் நடாளவிய அடிப்படையில் வெறுப்புக்கு உரியவராக மாறியுள்ளார். ஆனாலும் காங்கிரசுக் கட்சியின் தலைமை மீதான நம்பிக்கையின்மை மோடியை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 2021 ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி மோடி மீதான மக்களின் விருப்பம் 22விழுக்காடு குறைந்தாலும் மோடியை இப்போதும் 63விழுக்காடு இந்தியர்கள் விரும்புகின்றார்கள். மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் மோடி தீவிர பரப்புரை செய்தும் அங்கு பாஜக தோல்வியடைந்ததுடன் அங்கு வெற்றி பெற்ற திரிணாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியால் மானபங்கப்படுத்தப் பட்டார். தேசியவாத காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் பாஜகவிற்கும் சோனியாவின் காங்கிரசுக் கட்சிக்கும் மாற்றாக ஒரு மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது வீட்டில் நடந்த கூட்டத்தில் பல் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்னாள் நீதியரசர்கள் போன்ற பல பிர்முகர்களும் கலந்து கொண்டனர். ஆனால் சிவசேனா, சமாஜ்வாத கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, திமுக போன்ற முக்கிய பிராந்தியக் கட்சிகள் பங்கு பெறவில்லை. சோனியாவின் காங்கிரசையும் இணைத்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்து அங்கு பரவலாக முன்வைக்கப்பட்டது. அதனால் 2024 தேர்தலில் பாஜக பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டும். யோகி ஆதித்யநாத் தாழ்த்தப் பட்ட சமூகத்தினராலும் மாட்டிறைச்சி உண்பவர்களாலும் கடுமையாக வெறுக்கப்படுபவர். அவர் இந்தியாவின் தலைமை அமைச்சராவது உலகில் இந்தியாவின் விம்பத்தை பெரிதும் பாதுக்கும். 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் நாடளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மோடியே தலைமை அமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புண்டு. மோடியின் செல்வாக்கு மேலும் மோசமடைந்தால் மாற்று வேட்பாளராக நிதின் கட்காரியை நிறுத்தப்படலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...