Thursday, 9 December 2021

இடியப்பச்சிக்கலைத் தெளிவாக்கிய மோடி புட்டீன் சந்திப்பு

  


2021 டிசம்பர் 6-ம் திகதி இரசிய அதிபர் புட்டீன் இந்தியா சென்று தலைமை அமைச்சர் மோடியுடன் ஒரு குறுகிய நேர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளார். புட்டீன் 2021இல் செய்த இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கானதாக அமைந்துள்ளது. முதலாவது பயணமாக அமெரிக்க அதிபரைச் சந்திக்க ஜூன் மாதம் ஜெனீவாவிற்கு சென்றிருந்தார். இரு நாட்டுத் தலைவர்களிடையே நடந்த 21வது இந்திய இரசிய உச்சி சந்திப்பு இதுவாகும். இரசியாவின் சென் அண்டுரூ கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்ட நான்கு வெளிநாட்டவரகளுள் நரேந்திர மோடியும் ஒருவராவர். தனிப்பட்ட ரீதியில் இருவருக்கும் இடையில் சிறப்பான நட்பு நிலவுகின்றது. அதாவது chemistry நல்லா workout ஆகுது.

படைக்கலன் கொள்வனவால் வலிமையடைந்த உறவு

இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவது 1962-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து மிக்-21 போர் விமான ங்களை கொள்வனவு செய்ததில் இருந்து ஆரம்பித்தது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் படைக்கலன்களை கொள்வனவு செய்வது முக்கிய பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளும் இணைந்து பல படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றன. அதில் முக்கியமானது பிரம்மோஸ் ஏவுகணைகளாகும். இரு நாட்டு கூட்டு உற்பத்தியில் ஆரம்பிக்கப் பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் சரிவரவில்லை. செலவு அதிகம் எனச் சொல்லி இந்தியா அதிலிருந்து விலகி விட்டது. அதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படவில்லை. 2011இல் இருந்து 2015 வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் படைக்கலன் இறக்குமதில் 70% இரசியாவில் இருந்து செய்யப்பட்டது. அதன் அடுத்த ஐந்தாண்டுக் காலப்பகுதியான 2016-2020இல் அது 49% ஆகக் குறைந்து விட்டது. அதே காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவை பெரிய பாதுகாப்பு பங்களி நாடாக (Major Defence Partner) அறிவித்தது. அதன் மூலம் பல புதிய படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டது. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய மறுக்கும் நீர்மூழ்கிகளை அணுவலுவில் இயக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா இரசியாவிடமிருந்தே பெற்றுக் கொண்டது.

சிக்கலான உறவு

2014-ம் ஆண்டில் இருந்து வலதுசாரி பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்படுகின்றது. அதே ஆண்டு இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்க இரசிய உறவில் முறுகல் தீவிரமடைந்துள்ளது. அதே ஆண்டு தென் சீனக் கடலில் சீனா செயற்கை தீவுகளை உருவாக்கத் தொடங்கியதில் இருந்து அமெரிக்க சீன உறவில் நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சீனா தைவானை தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவும் சீனாவும் தமக்கிடையிலேயான உறவை மேம்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை உறுதி செய்ய குவாட் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றது. அமெரிக்காவிடமிருந்து எல்லா படைக்கலன்களையும் படைத்துறைத் தொழில்நுட்பங்களையும் இந்தியாவால் கொள்வனவு செய்ய முடியாது. அமெரிக்கா எல்லாவற்றையும் மற்ற நாடுகளுக்கு வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல சில விற்பனைகள் மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்தப்படுவதுடன் சிலவற்றிற்கு இறுக்கமான அறிவுசார் காப்புரிமையை அமெரிகா கடைப்பிடிக்கின்றது. இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்தால் இரசியா பாக்கிஸ்த்தானிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யலாம் என்ற செய்தியை இரசியா மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் அத்துமீறல்களைச் செய்வதை தடுக்க இந்தியாவிற்கு அமெரிக்காவின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சாதகமாக இரசியா தனது இரத்து அதிகாரத்தை பாவிப்பது வழமை. அதற்காக இரசியாவின் உறவு இந்தியாவிற்கு அவசியமாகின்றது. இந்தியாவின் இந்த நிலையை சமாளிக்க பிரான்ஸ் முன்வந்தது. பிரான்ஸ் தேவையான படைக்கலன்கள் தேவையானபோது ஐநா இரத்துப் பாவனை என்ற அடிப்படையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பிரான்ஸ் தயாராகியது. இந்தவிதமான இடியப்பச் சிக்கலின் நடுவில் மோடி – புட்டீன் சந்திப்பு நடந்தது.

எஸ்-400 வான் பாதுகாப்பு முறைமை

இந்தியாவிற்கான இரசியத் தயாரிப்பு வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400இன் விநியோகத்தை துரிதப் படுத்துமாறு இந்தியா விடுத்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே புட்டீன் தன் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். எஸ்-400 பாக்கிஸ்த்தான் – இந்தியப் படைத்துறைச் சமநிலையை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும். சீனாவிற்கும் பிரச்சனையாக அமையும். இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதற்கு அமெரிக்காவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவிற்கு எதிராக படைக்கலன் விற்பனை தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று மூதவை உறுப்பினர்கள் ஒரு சட்ட மூலத்தை அமெரிக்க நாடளுமன்றத்தில் சமர்பித்ததுடன் குவாட் அமைப்பின் உறவை பாதிக்கும் எந்த ஒரு தடை உத்தரவிற்கும் அமெரிக்க அதிபர் உடன்படக் கூடாது என்ற கோரிக்கையையும் அவரிடம் விடுத்தனர்.

எஸ்-400 பற்றிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2021/08/400-f-35.html

2+2 உரையாடல்

அமெரிக்காவும் இந்தியாவும் 2+2 உரையாடல் என்னும் பேச்சு வார்த்தையை ஆண்டு தோறும் இரு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் இணைந்து நடத்திவருகின்றனர். இவை இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் உலக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதை உறுதி செய்கின்றன. அதே போன்ற உரையாடலை இனி இந்தியாவும் இரசியாவும் செய்ய மோடி – புட்டீன் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா அமெரிக்காவிற்கு கொடுக்கும் முக்கியத்துவ போல இரசியாவிற்கும் கொடுக்க விரும்புகின்றது என்பதைக் காட்டுகின்றது.

இரசியாவின் சமரச முயற்ச்சி

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடயே சமரசம் செய்ய புட்டீன முன்வந்தார். பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிற்கு இரசியா தலைமை வகித்த காலத்தில் இந்திய சீன முறுகல் நடந்தது. இந்த இரு அமைப்புக்களிலும் சீனா, இரசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. 2020 செப்டம்பரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இரசியா இந்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேரடியாக சந்திக்க வைத்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளினதும் படையினரும் எல்லையில் தமக்கிடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்த ஒத்துக் கொண்டனர். இரசியா சீனாவுடனும் இந்தியாவுடனும் ஏற்படுத்தியுள்ள கேந்திரோபாய உறவு இப்படி ஒரு பிரச்ச்னையை தீர்க்கும் தன்மையை இரசியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்ச்சியை இரு நாடுகளும் கவனத்தில் எடுக்கவில்லை. சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆக்கிரமிப்பு என அடையாளமிட்டிருந்தது. இந்தியா இன்றுவரை இந்தியாவிற்கு படைக்கலன்களை விநியோகம் செய்வதில் காத்திரமான பங்கை வகிக்கின்றது. சீனாவும் பல படைத்துறைத் தொழில் நுட்பங்களை இரசியாவில் இருந்தே பெறுகின்றது.

மோடி – புட்டீன் ஒப்பந்தங்கள்

இருபத்தெட்டு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு குறிப்பேடுகளும் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், எரிபொருள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து, விண்வெளி, கனிமவள ஆய்வு, கலாச்சார பரிவர்த்தனை, கல்வி என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஒப்பந்தங்கள், புரித்துணர்வு குறிப்பேடுகள் கைச்சாத்திடப்பட்டன. இரசியாவின் AK-203 Assault Rifleகளை இந்தியாவில் இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்யும் ஒப்பந்தம். மொத்தமாக 500,000 ரைபிள்கள் உற்பத்தி செய்யப்படும். இப்படிப்பட்ட படைத்துறை ஒத்துழைப்பு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தொடரும் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் தத்தம் நடுவண் வங்கிகளை இணையவெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவும் இந்தியாவும் செய்யும் வர்த்தகத்திலும் பார்க்க பத்து மடங்கு வர்த்தகம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கின்றது. அத்துடன் இந்திய-சீன வர்த்தகம் இந்தியாவிற்கு பாதகமான முறையில் நடக்கின்றது. சீனா போதிய அளவு இறக்குமதியை இந்தியாவில் இருந்து செய்வதில்லை என்ற குறைபாடு உள்ளது.

சீன வேலப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம் என்னும் 2013-ம் ஆண்டு எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2013/05/blog-post_21.html

அமெரிக்க இந்திய உறவின் வளர்ச்சி இந்திய இரசிய உறவை பாதிக்காது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...