Tuesday, 28 December 2021

புதிய அரசியலமைப்பு யாப்பும் தமிழர்களும்

  

இலங்கைக்கு என புதிதாக ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அது 2022 ஜனவரியில் இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபாயாவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்துள்ளன. 2020 செப்டம்பர் -02-ம் திகதி கோத்தபாய ரொமேஷ் டி சில்வா(குடியரசுத் தலைவர் சட்டத்தரணி) தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார். இன்னும் அந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினரிடையே புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதிகாரப்பரவல்லாக்கல் தொடர்பில் ஒன்பது பேர் கொண்ட குழுவில் கடும் முரண்பாடு காணப்படுகின்றது.

சுதந்திர இலங்கையின் 73 ஆண்டுகால வரலாற்றில் அது மூன்று அரசியலமைப்பு யாப்புக்களை கண்டுள்ளது. 2022-ம் ஆண்டு வரவிருப்பது நான்காவது யாப்பாக அமையலாம். வரவிருக்கும் யாப்பின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதற்கான தயாரிப்பு வேலைகள் பகிரங்கமாக விவாதிக்கப்படவில்லை.

தமிழ்ர்களைப் பாதுகாக்காத சோல்பரி யாப்பு

முதலாவது சோல்பரி யாப்பு பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர்களால் வரையப்பட்டது. அதில் பெரும்பான்மை மக்களுக்கு ஐம்பது விழுக்காடு நாடாளுமன்ற உறுப்புரிமையும் சிறுபான்மை மக்களுக்கு ஐம்பது விழுக்காடு உறுப்புரிமையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜீ ஜீ பொன்னம்பல அவர்கள் இலண்டன் சென்று அரசியல் யாப்பை வரைந்த சோல்பரி பிரபுவிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை மற்ற தமிழ்த் தலைவர்கள் ஏன் விடுக்கவில்லை என்ற கேள்வியை சோல்பரி பிரபு பொன்னம்பலத்திடம் முன்வைத்தார். பொன்னம்பலம் கொழும்பில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களுக்கு அக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சோல்பரிப் பிரபுவிக்கு தந்தி அனுப்புமாறு வேண்டினார். ஆனால் பொன் இராமநாதன் பொன் அருணாச்சலம் ஆகியோரின் அடுத்த வாரிசான அருணாச்சலம் மகாதேவா நாம் 50/50 உறுப்புரிமை தேவையில்லை நாம் சிங்களவர்களுடன் ஒன்றுபட்டு வாழ்வோம் என சோல்பரிப் பிரபுவிற்கு தந்தி அனுப்ப பொன்னம்பலம் ஏமாற்றத்துடன் திரும்பினார். அந்நியர் தயாரித்த இலங்கை அரசியலமைப்பு யாப்பிலும் தமிழர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சிங்களம் பேசும் தெலுங்கு அரசியல்வாதிகளும் தமிழ் பேசும் தெலுங்கு அரசியல்வாதிகளும் இணைந்து சிங்கள பேரினவாத அரசு இலங்கையில் உருவாக்கப்பட்டது. சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாதுகாப்பாக அதன் 29(2) பிரிவு இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவது, இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்களின் குடியுரிமையை பறிப்பது, இலட்சக்கணக்கான தமிழர்களை நாடற்றவர்கள் என்னும் நிலைக்குத் தள்ளிய சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் ஆகியவை செய்யப்பட்டன.

பிழைகள் நிறைந்த சில்வா அரசியலமைப்பு யாப்பு

1972-ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் கொல்வின் ஆர் டி சில்வா இலங்கை குடியரசுக்கான அரசியலமைப்பு யாப்பை வரைந்தார். அதில் தமிழர்கள் தரப்பில் வைத்த எந்த ஒரு கோரிக்கையும் உள்ளடக்கப்படவில்லை. பேரினவாத ஒற்றையாட்சி யாப்பாக வரைந்து இலங்கையை ஒரு மக்களாட்சி சமூகவுடமை குடியரசாக உருவாக்கினர். இந்த யாப்பு நிறைவேற்றப்படுவதை தமிழர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். யாழ் நாவலர் மண்டபத்தில் அந்த யாப்பின் பிரதி ஒன்றை தந்தை செல்வா தீயிட்டுக் கொழுத்தினார். அங்கு உரையாற்றிய மூதூர் தங்கத்துரை, காசி ஆனந்தன் போன்றோர் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றினர். பின்னர் தமிழர் தரப்பிலிருந்து ஐந்து அம்ச குறைந்த பட்ச கோரிக்கை ஒன்றை தலைமை அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்காவிற்கு தமிழர்களால் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் வரவே இல்லை. மாறாக சீனாவில் இருந்து படையினருக்கு என பெருமளவு கவச வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு அவை தமிழர்களின் நிலப்பரப்புக்களின் உள்ள படைமுகாம்களில் நிறுத்தப்பட்டன. அமெரிதலிங்கம், சிவசிதம்பரம், நவரத்தினம் ஆகியோர் புதிய அரசியலமைப்பு யாப்பின் அவசரநிலைப் பிரகடனத்தை மீறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்கள் என்பதால் கைது செய்யப்பட்டு அறக்கூறவை அற்ற சிற்ப்பு நீதிமன்றம் ஒன்றை அவசரநிலைச் சட்டத்தின் படி நியமித்து விசாரணை நடந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஜீ ஜீ பொன்னம்பலம், எம் திருச்செலவம், புள்ளநாயகம் ஆகியோர் உட்பட 63 சட்டடதரணிகள் அந்த நீதிமன்றத்தில் வாதாடினார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் தொடர்பான வாசகம் பிழை என்றும் குடியரசுத் தலைவருக்கு சட்டவாக்கல் அதிகாரம் இல்லை என்றபடியால் அவர் பிரகடனம் செய அவசர காலச் சட்டம் செல்லுபடியற்றது என ஜீ ஜீ பொன்னம்பலம் வாதடினார். எம் திருச்செல்வம் இலங்கை தமிழர்கள் மீது இலங்கை அரசுக்கு நியாய ஆதிக்கம் இல்லை, அவர்கள் இறைமை உள்ள தனித் தேசிய இனம் என வாதாடினார். அரசு தரப்பில் சட்டமா அதிபர் சிவா செல்லையா வாதாடினார். அவசரகாலச் சட்டம் செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்பு சிறிமா அரசு ஒரு மேன்முறையீடு செய்து தனக்கு தேவையானதை சாதித்துக் கொண்டது.

தமிழர்களால் ஜே ஆருக்கு என தயாரித்த யாப்பு

இலங்கையை சிங்கப்பூர் போல் தனது செய்மதி நாடாக மாற்றுவதற்கு ஓர் அதிகாரம் மிக்க ஆட்சியாளர் தேவை என உணர்ந்த அமெரிக்கா தனது கையாட்களான நீலன் திருச்செல்வம், பேராசிரியர் ஏ ஜே வில்சன் ( தந்தை செல்வாவின் மகளின் கணவர்) ஆகியோர் மூலமாக இலங்கையை அமெரிக்கா போல் அதிகாரம் மிக்க குடியரசுத் தலைமையின் கீழ் ஆட்சி செய்யும் நாடாக மாற்றப்பட்டது. அந்த அரசியலமைப்பு யாப்பிலும் தமிழர்களின் கோரிக்கை ஏதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நல்லாட்சி அரசு அமைக்க முயன்ற யாப்பு

மைத்திரி-ரணில் நல்லாட்சி என்னும் பெயரில் நடத்திய காட்டாட்சியில் ஒரு புதிய அரசியலமைப்பு வரையும் முயற்ச்சி செய்யப்பட்டது. மைத்திரி-ரணிலை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் ஆட்சி நாற்காலியில் ஏற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்தது. எந்த அடிப்படையில் மைத்திரி-ரணிலுடன் இணைகின்றீர்கள் என வினவப்பட்ட போது இதயத்தால் இணைகின்றோம் என மதியாபரணம் சுமந்திரன் பதிலளித்தார். சிங்களத்தில் ஏக்க ராஜ்ஜிய எனவும் தமிழில் ஒருமித்த நாடு எனவும் அந்த யாப்பில் இருக்கும் என்றும் ஒற்றையாட்சிக்குள் இணைப்பாட்சி(சமஷ்டி) இருக்கும் எனவும் தமிழர்கள் சார்பில் யாப்பு வரைபில் செயற்பட்ட மதியாபரணம் சுமந்திரன் குழப்பியபடியால் அவரை தமிழர்கள் சுத்துமாத்து சுமதிரன் என கேலி செய்யத் தொடங்கினர்.

சிங்களவர்களுக்கு உரிமையில்லையாம்

துருக்கியின் TRT தொலைக்காட்சிக்கு பொது பல சேனாவைச் சேர்ந்த  திலாந்தே விதானகே பேட்டியளிக்கும் போது சிங்கள மக்கள் உரிமையற்று இருக்கின்றார்கள் என்ற படியால் அவர்களின் உரிமையற்று இருப்பதாகவும் அவர்களின் உரிமை புதிய அரசியலமைப்பு யாப்பில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவுக் கருத்து தெரிவித்திருந்தார். புதிய யாப்பில் தமிழர்களுக்கு மேலும் பாதகமானதாகவே அமையும் என்பது அவரது கருத்தில் இருந்து தெரியவருகின்றது.

13-ம் இல்லை இணைப்பாட்சியும் இல்லை

அமெரிக்கா இணைப்பாட்சி (சமஷ்டி) அடிப்படையில் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தரும் என ஒரு குழுவினரும் பதின்மூன்றாம் திருத்தத்தை பாதுகாக்க வேண்டும் என இந்திய வாற்பிடிக் குழுவினரும் என இரு பிரிவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றனர். சுமந்திரன் சிங்கள் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய போட்டியில் நாங்கள் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரவில்லை இப்போதுள்ள 13-ம் திருத்தத்தில் மிகச்சிறிய மாற்றத்தையே கோருகின்றோம் எனத் தெரிவித்திருந்தார். பின்பு தனக்கே உரியவகையில் அதைச் சுத்துமாத்து செய்தார். புதிய அரசியலமைப்பு யாப்பில் 13இல்லாமல் போகலாம், 13 உள்ளடக்கப்பட்டு அது தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப் படாமல் போகலாம். தமிழர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய எந்த ஒரு வாசகமும் புதிய யாப்பில் உள்ளடக்கப்பட்டால் அதற்கு எதிராக பிக்குகள் கிளர்ச்சி செய்வார்கள். இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் அதிகமான அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் செய்யப்படுவதை தமிழினவிரோதியும் பேரினவாதியுமான இந்தியா கடுமையாக எதிர்க்கும். சிங்களக் கட்சிகள் மக்களிடையே செல்வாக்கை இழக்கும் போதெல்லாம் இனவாதத்தை கையில் எடுப்பது வழமை. தற்போது பிளவுபட்டு செல்வாக்கு இழந்த எதிர்க்கட்சிகளும் மோசமான பொருளாதார நிலையால் செல்வாக்கிழந்த ஆளும் கூட்டணிக் கட்சிகளும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் புதிய யாப்பில் உள்ளடக்க அனுமதிக்க மாட்டார்கள்.

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியை சாதகமாக வைத்து அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இலங்கை ஆட்சியாளர்கள் மீது அழுத்தம் கொடுப்பார்கள் என சில தமிழ் அரசியல்வாதிகள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கின்றனர். அமெரிக்காவுடன் இலங்கை SOFA என்ற அமெரிக்கப் படையினரை இலங்கையில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தையும் இந்தியாவுடன் CEPA என்ற பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் இலங்கை செய்தபின்னர் இரு நாடுகளும் முன்பு போல தமிழர்களை அம்போ என விட்டு விடும். சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்டது என சம்பந்தர் மீண்டும் அங்கலாய்ப்பார். இந்திய வாற்பிடிகள் தொடர்ந்தும் காணி பொலிஸ் வேண்டும் பராசக்தி காணி பொலிஸ் வேண்டும் என பஜனைக் கச்சேரியை இறக்கும்வரை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். 


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...