Friday, 24 December 2021

தமிழர்களுக்கு தேவை ஒரு ஜே ஆர் ஜயவர்த்தன

  


2009இல் பின்னடைவைச் சந்தித்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது ஒரு சிக்கலான புவிசார் அரசியல் போட்டியில் மாட்டுப்பட்டுள்ளது. அதைக் கவனமாக வெளியே எடுத்து வெற்றியடையச் செய்யக் கூடிய அரசில் அறிவு, அரசியல் அனுபவம், அரசியல் வஞ்சனை, சம்பந்தப்பட்டவர்களை அணைத்து கெடுக்கும் நரித்தனம், எதிரியை ஏமாற்றும் மதிநுட்பம் எதுவும் தற்போது உள்ள எந்த ஓரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் இல்லவே இல்லை.

மாறும் உலக ஒழுங்கில் தமிழ் ஈழம்

மேற்கு நாடுகள், இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகியவற்றிடையேயான ஒத்துழைப்பு ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர் தொடர்பான இந்த நாடுகளின் நிலைப்பாடு இந்தியாவின் நிலைப்பாட்டை தாண்டி செல்ல முடியாத ஒரு நிலை உருவாகி வருகின்றது. தம்மை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் தமிழ் நாடாளுமன்ற அரசியல்வாதிகளும் அரசியல் ஆய்வாளர்கள் என தம்மை நினைத்துக் கொள்பவர்களும் ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆதிக்கத்திற்கு விட்டுக் கொடுத்துதான் நாம் தப்பிப் பிழைக்க முடியும் என்கின்றனர். 2019-ம் ஆண்டு டிரம்பின் ஆட்சியில் சிங்களவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு இந்தியா மூலமாகத்தான் அமெரிக்காவை அணுக வேண்டும் என அமெரிக்கா விடுத்த நிர்ப்பந்தத்தை சிங்களவர்கள் தமது இறைமைக்கு அது பேரிடர் எனச் சொல்லி கடுமையாக எதிர்த்தபடியால் அமெரிக்கா அந்த நிலைப்பாட்டைக் கைவிட்டது. மேற்கு நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் தமிழர்கள் அந்த மாதிரியான எதிர்ப்பை காட்டவில்லை. காட்டும் துணிவு அவர்களிடம் இல்லை. 13இற்கும் தமிழர்களை அடக்க வேண்டும் என்ற வஞ்சனையுடன் அதை ஜெனீவா மனித உரிமைக்கழகம் வரை இந்தியா கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிகமான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கையில் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் இலங்கைக்கு பொருத்தமற்றது என்றும் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கும் என்றும் உலக அரங்கில் பகிரங்கமாக எடுத்துக் காட்டும் துணிவு யாருக்கும் இல்லை. இதை ஈழத் தமித்தரப்பினர் சரியாகச் செய்யாத வரை இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை. இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றச் சொல்லும்படி ஈழத்தமிழர் தரப்பினர் மேற்கு நாடுகளுக்கும் ஜப்பான், ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் உறுதியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் அடி வாங்கிய பின் அழுது கொண்டு போய் ஆசிரியரிடம் முறைப்பாடு செய்யும் அப்பாவி மாணவர்களின் நிலையிலேயே இருக்கின்றனர்.

இலங்கையில் அமெரிக்கா செய்த மூன்று நகர்வுகள்

1980களின் பிற்பகுதியில் இலங்கை ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியில் சிக்குப்பட்டது. பிலிப்பைன்ஸ்ஸில் அப்போது ஏற்பட்ட உறுதிப்பாடற்ற நிலை அங்கு பெரும் படைத்தளத்தை வைத்திருந்த அமெரிக்காவிற்கு சவாலாக அமைந்த படியால் அதற்கு மாற்றீடாக அது இலங்கையைத் தேர்ந்தெடுத்தது. இந்திரா காந்தியின் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடும் இந்தியாவின் படைத்துறை வளர்ச்சியும் 1971இல் வங்காளதேச விடுதலையில் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்தமையும் இந்தியாவை கையாள்வதற்கு இலங்கை அமெரிக்காவிற்கு தேவை என்ற நிலையை ஏற்படுத்தியது. அப்போதைய தொழில்நுட்ப நிலையில் அமெரிக்க கடற்படைக் கலன்களுக்கு தேவை ஏற்படும் போது எரிபொருள் மீள் நிரப்பல் செய்ய ஒரு துறைமுகம் அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது. அதற்கு அது திருக்கோணாமலை துறை முகத்தை தெரிவு செய்தது. அமெரிக்கர்களுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திடம் திருகோணமலையில் எரிபொருள் மீள் நிரப்பு நிலையம் ஒன்றை அங்குள்ள பிரித்தானியா உருவாக்கி பாவிக்கப்படாமல் இருந்த எண்ணெய் குதங்களை பாவித்து கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தீட்டப்பட்டது. பிரித்தானியா தனது குடியேற்ற ஆட்சிக்காலத்தில் தெற்காசியாவில் முதல் முதலாக இலங்கையிலேயே தனது வானொலி ஒலிபரப்பு நிலையத்தை ஆரம்ப்த்தது. இலங்கையின் பூகோள அமைப்பு வானலைத் தொடர்பாடலுக்கு உகந்ததாக இருக்கின்றது. அதனால் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கிடையிலேயான அதி-தாழ் அலைவரிசை (ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தை அமெரிக்காவ்ன் குரல் (Voice of America) அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் சிலாபத்தில் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டது. இந்தியாவைப் போல் அதிக இறக்குமதிக் கட்டுப்பாடு உள்ள இலங்கையை ஒரு திறந்த பொருளாதாரமாக மாற்றி அதைச் சிங்கப்பூரைப் போல் பொருளாதார வளர்ச்சியடையச் செய்து இந்தியர்களை அவர்களின் அரசின் பொருளாதரக் கொள்கையில் வெறுப்படையச் செய்வதும் அமெரிக்காவின் மூன்றாவது உபாயமாக இருந்தது.

இலங்கையை விழிப்புடன் கண்காணித்த இந்திரா

இலங்கையில் அமெரிக்கா மிக இரகசியமாகச் செய்யும் நகர்வுகளை இலகுவாக அறியும் திறன் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவிற்குச் அப்போது இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனை 1971-ம் ஆண்டு போரை ஆரம்பித்த போது அதை முன் கூட்டியே அறியாத சிறிமா திரையரங்கைல் ஆங்கிலப் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அது தொடங்க முன்னரே பழுதடைந்த படியால் அவசர தரையிறக்க அனுமதி வேண்டி கூர்க்கா படையினர் நிறைந்த இரு துருப்புக் காவி கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் இந்திரா காந்தி தங்க வைத்திருந்தார். திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சிறிமா படம் பார்ப்பதையும் இடையில் நிறுத்தி விட்டு இந்திரா காந்திக்கு தொலை பேசி அழைப்பு விடுத்து அவசர உதவி கோரினார்.  அதற்கு பதிலளித்த இந்திரா எங்கள் படையினர் ஏற்கனவே கொழும்பில் நிற்கின்றார்கள் என்றார். பின்பு முப்பதிற்கும் மேற்பட்ட உலங்கு வானூர்திகள் இலங்கை வந்து காட்டுக்குள் இருந்த கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது குண்டு வீசி அழித்தன. இலங்கையில் அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளை உரிய நேரத்தில் அறிந்திருந்தார்.

தேடாமலே கிடைத்த பொல்லு

தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றம், அம்பாறை அபகரிப்பு, 1974 இலங்கை அரசு செய்த தமிழாராய்ச்சிப் படுகொலை, 1981இல் யாழ் நூல் நிலைய எரிப்பு போன்றவை இலங்கை தமிழர்களை பிரிவினைப் போராட்டத்தை தூண்டியிருந்தது. அமெரிக்கா பக்கம் சாயும் இலங்கையை மிரட்டுவதற்கான காரணிகளை இந்திரா காந்தி தேடி அலைய வேண்டிய நிலை இருக்க வில்லை. பங்களாதேசத்திற்கு உதவி செய்தது போல் ஈழத் தமிழர்களுக்கும் இந்திரா காந்தி உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருந்தனர். தமிழர்களுக்காக போராடியவர்களில் சிலருக்கு தமிழ் ஈழத்தையோ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையோ இந்திரா ஆதரிக்க மாட்டர் என்று தெரிந்தும் அவருடன் இணைந்து சிங்களத்திற்கு எதிராக செயற்பட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை ஜே ஆர் ஜெயவர்த்தனேயின் அரசு கட்டவிழ்த்து விட்டது. 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களம் அட்டூழியம் செய்தது. அதை இந்திரா காந்தி இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் சபையும் (Indian Bar Council) அதை இனக்கொலை என்றது. இலங்கையில் இருந்து பலர் இந்தியாவிற்கு சென்று தஞ்சமடைந்தனர். அவற்றை எல்லாம் வைத்து இலங்கைக்கு எதிராக உலக அரங்கில் இந்திரா காந்தி பெரிய பரப்புரைகளைச் செய்தார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது இலங்கைப் பிரச்சனையை முன்வைக்க தவறுவதில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் கொதித்து போயிருக்கின்றார்கள் என்பதையும் தெரிவிக்க தவறுவதில்லை. தனது நாட்டின் உறுதிப் பாட்டிற்கு பங்கம் எனவும் எடுத்துரைப்பார். இலங்கையில் வான் மார்க்கமாக தரையிறக்குவதற்கு என முப்பதினாயிரம் படையினரையும் இந்திரா காந்தி தயார் நிலையில் வைத்திருந்தார்.

இந்திராவின் பலவிதமான நகர்வுகளுக்கு மத்தியிலும் ஜே ஆர் ஜெயவர்த்தனே தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களை கூட்டிக் கொண்டே போனார். தனது தயவில் அமைச்சராக இருந்த சௌ. தொண்டமானை புது டில்லிக்கு ஜே ஆர் அனுப்பி இந்தியப் படைகள் வருவது மலையத் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது எனச் சொல்ல வைத்தார். இந்த நிலையில் இந்திரா காந்தி கொல்லப்பட ராஜீவ் காந்தி இந்திய தலைமை அமைச்சரானார். இருவருக்குமிடையில் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருந்தது. ஆசியாவின் கிழக் குள்ள நரி என விபரிக்கப்பட்ட ஜே ஆர் ஜயவர்த்தனே ராஜீவ் காந்தியையும் அவரது அரசுறவியலாளர்களையும் கையாளும் தந்திரத்தை சிறப்பாக மேற் கொள்ளத் தொடங்கினார். அவரது முதலாவது வெற்றி அவரது வேண்டுகோளின் பேரில் ராஜீவ் காந்தி இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜீ பார்த்தசாரதியை பதவி நீக்கம் செய்ததே. வங்களாதேச விடுதலைப் போரில் ஹென்றி கிஸ்ஸிங்கரை திணறடித்த அரசுறவியலாளர் ஜீ பார்த்தசாரதி. அதன் பிறகு வந்த வெளியுறவுத் துறைச் செயலர் ரொமேஸ் பண்டாரியின் மகளின் திருமணத்திற்கு தாராளமான பங்களிப்பு செய்து அவரைத் தனது கைக்கூலியாக்கினார் ஜே ஆர். அப்போது கொழும்பில் உள்ள வெளிநாட்டு அரசுறவியலாளர்கள் JR cornered Rajiv – ஜே ஆர் ராஜீவை முடக்கிவிட்டார் என்ற வாசகம் பரவலாக அடிபட்டது. இலங்கையில் ஒரு தனிநாடு அமைக்கும் எண்ணம் இந்தியாவிற்கு இல்லை என்பதை புரிந்து கொண்டு தனது காய்களை ஜே ஆர் நகர்த்தினார். யாழ் குடா நாட்டை மட்டும் பிரித்துக் கொடுக்க தான் தயார் என ஒரு போலியான முன்மொழிவை தமிழ்ப்போராளிகள் முன் வைத்தார். அதை ராஜீவும் இந்திய அரச வளாகத்தின் தென் மண்டலத்தில் உள்ளவர்களும் விரும்ப மாட்டார்கள் என்பதை அறிந்தே அப்படி ஒரு நகர்வைச் செய்தார். இந்தியாவிற்கு ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்தால் அது தமிழ்ப்போராளிகளை அழிக்கும் என்பதை உணர்ந்த ஜே ஆர் ராஜீவுடன் ஓர் ஒப்பந்தத்தையும் செய்து இலங்கை அரசியல் யாப்பிற்கு 13வது திருத்தத்தைச் செய்தார். அதனால் இந்திய படையினர் ஜே ஆரின் கூலி வாங்காத கூலிப் படையாக வந்து தமிழ்ப் போராளிகளின் படைக்கலன்களை பறித்தது கொடுக்க மறுத்தவர்களிற்கு எதிராகவும் அப்பாவிகளுக்கு இலங்கையில் சிங்களவர்கள் கூடச் செய்யாத வன்முறைகளைச் செய்தது. IPKF என்பது Indian Peace Keeping Force அல்ல Innocent People Killing Force என சிங்கள ஊடகங்கள் கிண்டலடித்தன. பின்னர் 13-ம் திருத்தத்தை நடைமுறைப் படுத்தாமல் இழுத்தடிப்பதிலும் ஜே ஆர் வெற்றி கண்டார்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கு பன்னாட்டு மட்டத்தில் செயற்படும் அனுபவமோ அறிவோ துளியளவும் கிடையாது. சிங்கள அரசியவாதிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு போய் வருவார்கள். வெளிநாடு அரசியல்வாதிகளையும் சந்திப்பார்கள். அவர்களது அதிகாரிகள் வெளியுறவுத் துறையில் வெளிநாடுகளில் பயிற்ச்சி பெற்றதுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். ஓரு இறைமையை வேண்டி நிற்கின்ற இனத்தின் அரசுறவியலாளர்களாக செயற்படக்கூடிய எவரும் தமிழர்களிடையே இல்லை. தமிழர்களின் அந்த வலிமையற்ற நிலையை அறியாமல் சிலர் தமிழர்களுக்கு என ஒரு வெளிநாட்டு கொள்கை தேவை ஒரு சிந்தனைக் கலம் (Think Tank) தேவை என்கின்றனர்.

தமிழர்களுக்கு தேவை ஜே ஆர் ஜயவர்த்தன போன்ற வஞ்சகம், கபடம், துணிவு, அர்ப்பணிப்பு மிக்க ஒரு தலைவர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...