Tuesday, 21 December 2021

இலங்கையில் அமெரிக்கத்தலையீட்டின் வரலாறும் ராஜபக்சேக்களின் முடிவும்

  


இலங்கையில் அமெரிக்கத் தலையீடு பிரித்தானியக் குடியேற்ற ஆட்சி நடக்கும் போது 1813-ம் ஆண்டு சென்ற அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையின் கப்பலுடன் ஆரம்பமானது. அப்போது இலங்கை தலைநகராக இருந்த காலியில் அது தரையிறங்க பிரித்தானிய அரசு அனுமதிக்காமல் தமிழர் பிரதேசத்திற்கு போகும்படி பணித்தது. இலங்கையின் தென்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பிரித்தானிய ஆங்கிலத் திருச்சபையுடன் பிணக்கு ஏற்படாமல் இருக்கவே இப்படிச் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையினர் தெல்லிப்பளையின் தமது முதலாவது பாடசாலையை ஆரம்பித்தனர். தொடர்ந்து பல பாடசாலைகளை அமைத்து மத மாற்றங்களுடன் ஆங்கிலம் மூலமாகவும் தமிழ் மூலமாகவும் தமிழ் மக்களுக்கு கல்வி புகட்டினர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் பாடசாலை, உடுவில் ஆடவர் பாடசாலை ஆகியவை அப்போது அவர்கள் உருவாக்கிய பிரபல பாடசாலைகளாகும். உடுவில் மகளிர் பாடசாலை தெற்காசியாவில் உருவாக்கிய வதிவிட வசதிகளுடன் உருவான முதல் பாடசாலையாகும். மானிப்பாயில் அமெரிக்கர்கள் உருவாக்கிய போதனா வைத்தியசாலையும் தெற்கு ஆசியாவில் உருவான முதல் போதனா வைத்தியசாலையாகும்.

அமெரிக்காவின் ஜே ஆரும் திருச்செல்வமும்

அமெரிக்கர்களின் அரசியல் தலையீடு S. W. R. D பண்டாரநாயக்க 1956-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது தீவிரமடைந்தது. பெரிய நிலக்கிழாரான பண்டாரநாயக்க இலங்கையின் ஆட்சியைப் பிடிக்க ஒரு குறுக்கு வழியை பின்பற்றினார். ஒரு பக்கம் தீவிர சிங்கள-பௌத்த பேரினவாதியாகவும் மறுபுறம் ஒரு சமூகவுடமைவாதியாகவும் தன்னை முன்னிறுத்தி சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற உறுதி மொழியுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் பல தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்கினார். இது அமெரிக்காவை மிகவும் விசனத்திற்கு உள்ளாக்கியது. அவரது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ களமிறங்கியதாக நம்பப்படுகின்றது. அதன் இலங்கை முகவர்களாக ஜே ஆர் ஜெயவர்த்தனேயும் எம் திருச்செல்வமும் செயற்பட்டதாக ஐயம் பரவலாக உண்டு. எம் திருச்செல்வம் எஸ் ஜே வி செல்வநாயகத்தை பண்டாரநாயக்காவின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு தூண்டினார். அப்போது இலங்கை அரசின் சட்டமா அதிபராக இருந்த எம் திருச்செல்வத்தின் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐயம் கொண்ட பண்டாரநாயக்க அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பினார். செல்வநாயகத்தின் கிளர்ச்சியை வைத்து இலங்கையில் ஓர் இனக்கலவரம் ஐக்கிய தேசியக் கட்சியால் திரைமறைவில் தூண்டப்பட்டது. நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் இலங்கையில் இணைப்பாட்சி (சமஷ்டி) ஆட்சி முறைமையை ஏற்படுத்தி சிங்களத்துடன் தமிழுக்கும் ஆட்சி மொழியில் ஈடான நிலை ஏற்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். உடனே ஜே ஆர் ஜயவர்த்தனே தனது இனவாதத்தை கக்க தொடங்கினார். இலங்கையை இரண்டாக பிளப்பதாக சித்தரிக்கும் பதாகைகளுடன் கொழும்பில் இருந்து கண்டிக்கு ஒரு நடைப்பயணத்தை மேற்கொண்டார். பௌத்த பிக்குகள் அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றார். இவற்றின் பின்னணியில் சிஐஏ செயற்பட்டதாக நம்பப்படுகின்றது.

மீண்டும் திருச்செல்வத்தின் பின்னால் அமெரிக்காவா?

1965-ம் ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போதிய அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாதபடியால் மீண்டும் எம் திருச்செல்வம் களத்தில் இறங்கி எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியை டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கினார். அந்த ஆட்சியில் தமிழ்மொழி சிறப்பு விதிகள் சட்டம் இடதுசாரிகளினதும் பௌத்த பிக்குகளினதும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டது. அக்காலகட்டத்தில் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறை நிலவியது. அதனால் 1970இல் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் தனியார் சொத்துக்களை அரசுடமையாக்கியதுடன் சீனாவுடன் நெருங்கிய நட்பை பேணியது.

அமெரிக்கா (பின்னால்) போன பீலிக்ஸ்

1970இல் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியில் அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருந்தது. முக்கியமாக மேற்குலக ஆதரவான ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தை சிறிமா அரசுடமையாக்கியது அமெரிக்காவைச் சினப்படுத்தியது. அவரது ஆட்சியில் இடதுசாரிகளான என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அப்போது கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியதுடன் அந்நியச் செலவாணிக் கையிருப்பும் மோசமான நிலையில் இருந்தது. இலங்கைக்கு அமெரிக்கா கோதுமை மாவை இலங்கை ரூபாவில் விற்பனை செய்து அந்த ரூபாக்களை அமெரிக்க தூதுவரகத்தின் பெயரில் இலங்கை நடுவண் வங்கியில் பி. எல்-480 என்னும் பெயரில் வைப்பிலிடப்பட்டது. அந்தக் கணக்கில் இருந்து பெருமளவு தொகையை அமெரிக்க தூதுவரகம் மீளப் பெற முயன்ற போது நிதியமைச்சராக இருந்த என் எம் பெரேரா அதற்கு அனுமதி வழங்க மறுத்தார். பின்னர் சிறிமாவோவின் மருமகனானவரும் சுதந்திரக் கட்சியில் செல்வாக்கு செலுத்தியவருமான பீலீக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். என் எம் பெரேரா அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். முதல் முறையாக இலங்கை அமைச்சர் ஒருவர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தில் பதவி ஏற்பு செய்து கொண்டார். ஆம் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா அமெரிக்காவிலேயே நிதி அமைச்சராக இலங்கைத் தூதுவர் முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, பொதுவுடமைக் கட்சி ஆகிய இடது சாரிக் கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டு தனித்தனியே இயங்கத் தொடங்கின. சிறிமாவும் அவர் மகனும் பிரிந்தனர். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிறி லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததுடன் மீண்டும் அது ஆட்சியைக் கைப்பற்ற பதினேழு ஆண்டுகள் எடுத்தன. அதுவும் இடது சாரிக் கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்க ஆதரவு தாராண்மைவாதக் கட்சியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் மாறிய பின்னரே அது நடக்கக் கூடியதாக இருந்தது.

இலங்கையில் தளம் அமைக்க முயன்ற அமெரிக்கா

ஜே ஆர் ஜயவர்த்தனேயின் ஆட்சிக்காலத்தில் இலங்கையை அமெரிக்காவின் செய்மதி நாடாக மாற்றும் முயற்ச்சி தீவிரமாக நடைபெற்றது. இலங்கையில் அமெரிக்காவின் படைத்துறைக்கு தேவையான வசதிகளை திருமலையிலும் சிலாபத்திலும் அமைக்க முயற்ச்சி செய்யப்பட்டது. தமிழர்களை பாவித்து அதை இந்தியா குழப்பலாம் என உணைர்ந்த அமெரிக்கா தமிழர்களையும் சிங்களவர்களையும் தனக்கு பின்னால் இணைக்க எஸ் ஜே வி செல்வநாயகத்தின் மருமகனான ஏ ஜே வில்சனையும் எம் திருச்செல்வத்தின் மகனான நீலன் திருச்செல்வத்தையும் களத்தில் இறக்கியது. அவர்கள் இணைந்து பல இரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் தமிழர் பிரச்சனைக்கு அதிகாரமில்லாத மாவட்ட அபிவிருத்தி சபைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி அதை நிராகரித்த போது அமெரிக்க தூதுவர் அப்போதைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரைச் சந்தித்து அதை ஏற்கும்படி வற்புறுத்தியது. அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தன்னும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்ற பணிப்புரையுடன் ஜே ஆர் ஜெயவர்த்தன தனது அமைச்சர்களான சிறில் மைத்தியூவையும் காமினி திசாநாயக்கவையும் பெரும் காடையர் கூட்டத்துடன் யாழ்ப்பாணம் அனுப்பினார். அவர்கள் யாழ் பொது நூல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். தமிழர்களிடையே ஒரு தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் தீவிரமடைந்தது. அமெரிக்க திட்டத்தை தவிடு பொடியாக்க இந்தியாவிற்கு தேவையான கடப்பாரையை நூலக எரிப்பாலும் 1983 கலவரத்தாலும் கொடுத்தார். இந்தியா தமிழர்களுக்கு நல்லவன் போல் நடித்து அமெரிக்காவின் திருமலை மற்றும் சிலாபம் திட்டங்களை முறியடித்து தமிழர்களை இனக்கொலை செய்ய சிங்களத்திற்கு 1987இல் இருந்து 2009வரை பேருதவி செய்தது.

சுக்கு நூறாக உடைந்த அமெரிக்காவின் ஜெய சிக்குறு

விடுதலைப் புலிகளின் தீரமிகு போராட்டத்தால் 1990களின் பிற்பகுதிகளில் இலங்கை திணறியது. கடல் மூலமாக வடக்கில் உள்ள படை முகாம்களுக்கு விநியோகம் செய்வதற்கு இந்தியாவின் தயவு தேவைப்பட்டது. இதை விரும்பாத அமெரிக்கா இலங்கைப் படையினர்க்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் கொடுத்து தெற்கையும் வடக்கையும் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலையை கைப்பற்றும் போரை வெற்றி நிச்சயம் (ஜெய சிக்குறு) என்னும் பெயரில் ஒரு பெரும் படைநடவடிக்கையை 1997இல்ச் ஆரம்பித்தது. சிறிது சிறிதாக சிங்களப் படையினர் முன்னேறி வருகையில் விடுதலைப் புலிகள்1999இல் கொண்டு வந்த படைக்கலன்கள் அடங்கிய கப்பல் ஒன்றை இந்தியா கடல் கடக்க விட்டுக் கொடுத்தது. விடுதலைப்புலிகள் கொண்டு வந்த பல்குழல் ஏவுகணைச் செலுத்தி சிங்களப் படையினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஆசியா நோக்கிய சுழற்ச்சி மையத் திட்டத்தில் இந்தியாவின் ஆதரவு அவசியம் என்பதை அமெரிக்காவிற்கு ஜெய சிக்குறு படைநடவடிக்கையில் தோல்வி உணர்த்தியது. அதன் பின்னர் அமெரிக்கா இந்தியா மீது செய்த பொருளாதார தடைகளை 2000இல் இருந்து நீக்கி இரு நாடுகளும் ஒத்துழைக்க ஆரம்பித்தன.

போருக்கு உதவியவரக்ளுக்கு உரிய கூலி இல்லை

மஹிந்த ராஜபக்சவும் அவரது உடன் பிறப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செய்த போரில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து உதவிகள் செய்தன. போரில் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் Status of Forces Agreementஐயும் இந்தியாவுடன் Comprehensive Economic Partnership Agreementஐயும் மஹிந்தவின் அரசு செய்யும் என எதிர்பார்த்து தோல்வியடைந்தன. மஹிந்தவின் அரசு சீனா இலங்கையில் பல முதலீடுகளைச் செய்தது. அமெரிக்கா பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் பல தலையீடுகளை இலங்கையில் செய்தது. ராஜபக்சேகளின் கட்சியில் மைத்திரிபால சிரிசேன என்பவரை தூங்குநிலைத் தாக்குதலாளி (Sleeper Cell) ஆக மாற்றியது. வெளிநாட்டு உளவுத்துறையினரின் தூண்டுதலால் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதலை சிங்களப் பேரினவாதிகள் செய்தனர். அதனால் அவர்களின் ஆதரவு தேர்தலில் கிடைக்காமல் இருக்க சதி செய்யப்பட்டது. தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவோம் என அமெரிக்கா சந்திரிக்கா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர ஆகியோர் மூலம் உறுதி வழங்கப்பட்டது. மஹிந்தவின் சோதிடர் கிரக நிலை சாதகமாக இருப்பதால் முன் கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் தாமதித்தால் தோல்வி ஏற்படும் என பொய்யான ஆலோசனை வழங்கினார். அவருக்கும் வெளிநாட்டு தூண்டுதல் இருந்தது. அது எந்த நாடு என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் போட்டுடைத்த ஐக்கிய தேசியக் கட்சி

அமெரிக்கா தனது சதிகளால் ஆட்சி பீடமேற்றிய மைத்திரியும்-ரணிலும் மோசமாக ஆட்சியை நடத்தி திறனற்ற ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் எல்லாவற்றையும் போட்டுடைத்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சர்வதேசம் எம்மை ஏமாற்றி விட்ட தென்றார். ராஜபக்சே குடும்பத்தினர் மைத்திரி-ரணில் ஆட்சியில் நடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு எனவும் சிங்களவர்களை தம்மால் மட்டும் பாதுகாக்க முடியும் என தேர்தல் பரப்புரை செய்து 2019 நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 2020இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இலகுவாக வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது.

நிதி நெருக்கடி

மைத்திரி-ரணில் அரசுக்கு பன்னாட்டு நாணய நிதியம் வழங்கியிருந்த $1.5பில்லியன் பெறும் வசதி ராஜ்பக்சேக்களின் ஆட்சிக்கு வந்தவுடன் இடை நிறுத்தப்பட்டது. அதன் பின்னணியில் அமெரிக்கா இருந்தது என்பதை இலகுவாக ஊகிக்கலாம். 2020 ஒக்டோபர் மைக் பொம்பியோ கொழும்பு சென்றார். அப்போது இலங்கையின் வெளிநாட்டுக்கடன் $15பில்லியன் அதற்கான வட்டியைக் கூட கட்ட முடியாத நிலையில் இருந்தது. அமெரிக்காவுடன் இலங்கை Status of Forces Agreement செய்தால் மிலேனியம் சவால் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 500 மில்லிய டொலர் நிதியுதவி அமெரிக்கா வழங்கும் என்ற மைக் பொம்பியோவின் முன்மொழிவை ராஜபக்சேக்கள் நிராகரித்தனர். இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கொடுக்கவும் இலங்கை மறுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து செயற்படும் Fitch, S & P, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கையின் கடன்படு திறனை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றன. இவை தொழில்சார் நிறுவனங்கள் என்றாலும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட மாட்டாது எனச் சொல்ல முடியாது. தரம் தாழ்த்தப்பட்டமையால் பன்னாட்டு முதலீட்டு சந்தையில் இலங்கையால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவின் சிறிமா கால Action Replay

சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1970-77 ஆட்சியில் செய்தமை போன்ற நகர்வுகளை அமெரிக்கா 2021இல் இலங்கையில் செய்கின்றது. பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்று வந்து நாடாளுமன்ற உறுப்பினராகி நிதியமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க அமெரிக்கா சென்று நிதியமைச்சரானது போல் இது இருக்கின்றது. பசிலுக்கு நிதித்துறையில் எந்த அனுபவமோ ஆற்றலோ இல்லை. அமெரிக்காவில் இருந்தோ இந்தியாவில் இருந்தோ இலங்கைக்கு நிதி உதவி, கடன் வசதி ஏதும் கிடைக்கவில்லை. சீனாவிடம் இருந்து அவற்றைப் பெற்றால் இரு நாடுகளின் சினத்திற்கு உள்ளாக வேண்டி வரும். பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றால் மக்களுக்கு அரசு வழங்கும் நன்மைகள் பல நிறுத்த வேண்டியிருக்கும். அது மக்களிடையே ராஜபக்சேக்களுக்கு இருக்கும் வெறுப்பை அதிகரிக்கும். ஏற்கனவே விலைவாசி அதிகரிப்பு பண்டங்களுக்கன பற்றாக் குறை போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறிமாவின் சுதந்திரக் கட்சியை 17 ஆண்டுகள் ஆட்சிக்கு வராமல் செய்தது போல் ராஜபக்சேக்களை இன்னும் பல ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாமல் செய்யப் போகின்றதா அமெரிக்கா.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...