Monday, 6 December 2021

இந்தியாவிற்கு 114 பற்பணிப் போர்விமானங்களை விற்கும் போட்டி

  


2019 ஏப்ரலில் இந்திய வான்படைக்கு 114 பற்பணிப் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக இந்திய அரசு அறிவித்து அதற்கான வழங்கல் அறிவிப்புக்களையும் உலகெங்கிலும் இருந்து கோரியிருந்தது. 114 விமானங்களுக்குமான மொத்த விலை 18 பில்லியன் டொலர்கள் அண்மைக்கால வரலாற்றின் மிகப் பெரிய படைக்கலன் கொள்வனவாக அமைந்துள்ளது. 2021 ஒக்டோபர் இந்தியாவின் வான்படைத்தளபதி வீ ஆர் சௌதாரி 114 பற்பணிப் போர் விமானங்களை வழங்குவதற்கு பல பன்னாட்டு விமான உற்பத்தியாளர்கள் முன்வந்து பத்திரங்கள் கையளித்துள்ளதாகவும் கொள்வனவின் அடுத்த கட்டத்தை நோக்கி தாம் நகர்வதாகவும் தெரிவித்திருந்தார். போயிங், லொக்கீட் மார்ட்டின், யூரோஃபைட்டர், இரசிய யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசன், சாப் ஆகிய முன்னணி விமான உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு 114 பற்பணி போர்விமானங்களை வழங்க முன் வந்துள்ளன.

வானில் ஆதிக்கம் செலுத்துதல், வானில் இருந்து வானுக்கு தாக்குதல், வானில் இருந்து தரைக்கு குண்டு வீசுதல், வேவு பார்த்தல், கண்காணிப்பு, முற்சென்று வானைக் கட்டுப்படுத்துதல், இலத்திரனியல் போர் முறை, எதிரிவிமானங்களை இடைமறித்தல் போன்ற பல பணிகளைச் செய்யக் கூடிய விமானங்களை பற்பணிப் போர் விமானம் என அழைப்பர். முன்பு ஒவ்வொருவிதமான பணிகளுக்கும் என்றும் ஒவ்வொரு வகையான விமானங்கள் தயாரிக்கப்பட்டன. பின்பு பல பணிகளையும் செய்யக் கூடிய ஒரே விமானம் உருவாக்கப்படுகின்றன. இருந்தும் இப்போதும் வேவு பார்த்தலுக்கு தனியான விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.இந்தியாவிடம் தற்போது உள்ள சோவியத் ஒன்றிய காலத் தயாரிப்பு விமானங்களான மிக்-21 மற்றும் மிக்-27 போர்விமானங்களை சேவையில் இருந்து அகற்றி விட்டு புதிய பற்பணி விமானங்களை வாங்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா கடைசியாக வாங்கிய ரஃபேல் போர் விமான ங்களை வாங்கி முடிக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. இந்த முறை 114 போர்விமான ங்களை துரிதமாக வாங்கி முடிக்க இந்தியா முயல்கின்றது. 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது பாதுகாப்புச் செலவிற்கு அதிக நிதி செலவு செய்வதால் ஆளும் கட்சியின் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புண்டு.இந்தியாவின் தேஜஸ்

இந்தியாவின் மிராஜ்-2000மிக்-29 ஆகிய போர்விமானங்கள் 30ஆண்டுகள் பழமையானவை. ஜகுவார் போர்விமானங்கள் 40ஆண்டுகள் பழமையானவை. 2014 பெப்ரவரி பாக்கிஸ்த்தானால் கைப்பற்றப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் ஓட்டிச் சென்ற மிக்-21 விமானம் 44 ஆண்டுகள் பழமையானவை. இந்தியா அவசியமாகவும் அவசரமாகவும் தனது விமானங்களைப் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. மிக்-21 போர் விமானங்கள் பழமையடைந்ததால் உள்நாட்டிலேயே அவற்றிற்கு ஈடான பாரம் குறைந்த தாக்குதல் போர்விமானமாக தேஜஸ் விமான உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. தேஜஸ் விமானங்களில் பாரம் குறைந்த பற்பணிப் போர்விமானங்களும்தாக்குதல் போர்விமானங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டில் அவை உற்பத்தி செய்யப்பட்டு விமானப் படையில் இணைக்கப்பட்டன. முன்னூறுக்கு மேற்பட்ட தேஜஸ் விமானங்கள் இந்திய விமானப் படையில் உள்ளன. 2016-ம் ஆண்டு இந்தியக் கடற்படையினர் தேஜஸ் விமானங்களை வாங்க மறுத்தமைக்கு இரு காரணங்களைக் கூறினர். ஒன்று அவை பாரம் அதிகமானவை. இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலில் குறைந்த தூரம் ஓடி எழும்புபவதற்கான போதிய உந்து வலு அவற்றிடம் இல்லை. அதனால் F414 என்னும் இயந்திரங்களால் இயக்கப்படும் தேஜஸ் மார்க் – 2 என்ற விமானங்கள் உருவாக்கப்பட்டன. 201 தேஜஸ் மார்க் - 2 விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. தேஜஸ் மார்க்-1 விமானங்களில் இஸ்ரேலின் AESA ரடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேஜஸ் மார்க்-2 விமானங்கள் தற்போது உருவாக்கும் நிலையில் உள்ளன. முன்னோடி உருவாக்கல்களுக்கு என அமெரிக்காவின் ஜெனரஸ் எலெக்ரிக் நிறுவனம் தனது இரண்டு F414-INS6 இயந்திரங்களை வழங்கியுள்ளது.  திட்டம் வெற்றியளித்தால் அறுநூறு மில்லியன் டொலர்களுக்கு தொண்ணூற்றி ஒன்பது F414-INS6 இயந்திரங்களை ஜெனரல் எலெக்ரிக் விற்பனை செய்யும். அத்துடன் F414-INS6 இயந்திரங்களின் 60விழுக்காடு தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வழங்கப்படும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா காவேரி கே-9கே-10 என்னும் விமான இயந்திரங்களை உள்நாட்டில் உருவாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. ஜெனரல் எலெக்ரிக்கின் இயந்திரத் தொழில்நுட்பம் காவேரி இயந்திரங்களை உருவாக்குவதைத் துரிதப்படுத்தும். தேஜஸ் மார்க் – 2 விமானங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் Uttam AESA ரடார்கள் இணைக்கப்படவுள்ளன. Uttam AESA வானில் இருந்து வானிற்கு மட்டுமே செயற்படக் கூடியவை வானில் இருந்து தரைக்கு அவை போதிய பயனைத் தராது. இந்திய வான்படையினர் 46 முதல் 56 வரையிலான தேஜஸ் மார்க்-2 இன் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கான வகைகளை வாங்கவுள்ளனர்.

எதை இந்தியா வாங்கும்?

சுவீடனின் Gripen விமானங்களிலும் தேஜஸ் விமானத்தைப் போலவே அமெரிக்காவின் General Electric நிறுவனத்தின் இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. ஆனால் Gripen இல் பாவிக்கப்படுவை F414-GE-39. Gripen – E விமானங்களில் 33% பாகங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகின்றன. ரஃபேல் விமானம் ஒன்றை வாங்க 1820 கோடி ரூபா செலவாகும் Gripen – E விமானம் ஒன்றை வாங்க 1050கோடி ரூபா போதும். ரஃபேலின் பறப்புத்தூரம் Gripen இலும் பார்க்க 500கிமீ அதிகமானதாகும். இரசிய விமானங்கள் சுவீடன் வான்பரப்பில் அத்து மீறுவதை தடுக்க சுவீடனின் விமானங்களில் சிறந்த இலத்திரனியல் செயற்பாடுகள் உள்ளன. Gripen விமானங்களின் உற்பத்தியாளர்களான சுவீடனின் SAAB நிறுவனம் இந்தியாவின் TATA நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விமானங்களை இந்தியா வாங்கினால் அது பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். நிபந்தனைகள் காப்புரிமையில் இருந்து மனித உரிமைவரைக்கும் இருக்கும். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் F-15EX பற்பணிப் போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. Apach Guradian மற்றும் Chihook ஆகிய உலங்கு வானூர்திகளையும் C-17 என்னும் படையினர் போக்குவரத்து விமானங்களையும் P8I ரோந்து விமான ங்களையும் இந்தியாவிற்கு விற்பனை செய்த போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தால் இந்தியாவிற்கு FA-18 Super Hornet விமானங்க்ளை விற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் FA-16 போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. இரசியா தனது மிக்-35 விமான ங்களை விற்பனை செய்ய முயல்கின்றது.

இரசியாவின் மிக்-35 பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2017/02/35.html

இந்தியாவிற்கு 114 போர்விமானங்களை யார் விற்பனை செய்வது என்ற போட்டியில் பிரான்ஸின் ரஃபேலும் சுவீடனின் Gripen உம் முன்னணியில் நிற்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...