Wednesday, 6 October 2021

Pandora: வருமானவரிப் புகலிடங்கள்

 

வெளிநாடுகளில் முறைகேடாகப் பணமுதலீடு செய்து சொத்துக் குவித்தவர்களின் பட்டியலை, சர்வதேசப் புலனாய்வு பத்திரிகையாளர்கள் சேர்ந்தியம் (International Consortium of Investigative Journalists (ICIJ) `பண்டோரா பேப்பர்ஸ்' எனும் பெயரில் வெளியிட்டிருக்கிறது. உலகின் முன்னணிப் பத்திரிகை நிறுவனங்களான பிபிசி, தி கார்டியன், இந்தியாவின் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' முதலிய 150 ஊடகங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் புலனாய்வில் பன்னிரண்டு மில்லியன்களுக்கும் அதிகமான திடுக்கிடும் ரகசிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன.

வருமானவரிப் புகலிடங்கள்.

ஒரு நாட்டிலோ அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியிலோ வருமானவரி குறைவானதாகவும் இரகசியம் பேணும் சட்டங்களும் இருந்தால் அது வருமானவரிப் புகலிடமாகும். அவை மட்டும் போதாது அந்த நாட்டில் ஒரு நீண்டகால அடிப்படையில் அரசியல் உறுதிப்பாடு இருப்பதும் நிதித் துறையில் அரச தலையீடு இல்லாமல் இருப்பதும் அவசியமாகும். பனாமாவில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies ) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரிவிற்பனை வரி போன்றவற்றை பனாமா அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. பனாமாவில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளராக உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் அல்லது தனிப்பட்டவர்களின் பெயர்கள் கொடுக்கத் தேவையில்லைதங்கள் நடவடிக்கைகள் பற்றிப் பதிவுகள் வைத்திருக்க வெண்டும் என்ற அரச கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய பதிவுகளை வெளிநாட்டு வருமான வரித் துறையினருக்கு வெளிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. உலக வெளிப்படைத் தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாத படியால் அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்பவர்களின் நிதி நிலைமை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லை.

வருமானவரிப் புகலிடங்களின் செயற்பாடு

மிகவும் சட்ட பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் ஒரு நாடோ அல்லது ஒரு நாட்டின் ஒரு புகுதியோ வருமானவரிப் புகலிடமாக இருக்க முடியும். இருப்பதும் உண்டு. உதாரணத்திற்கு கிரேப்ஸ் என்னும் நிறுவனம் அமெரிக்காவில் கைப்பேசிகளை நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்து அவற்றை உலகச் சந்தையில் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் நூறு டொலர் இலாபத்திற்கு அமெரிக்காவில் வரி கட்ட வேண்டும். மாறாக அந்த கைப்பேசிகளை வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்துள்ள கிரேப்ஸ் சொந்தமான இன்னொரு நிறுவனத்திற்கு 101டொலர்களுக்கு விற்று இலாபமாகக் கிடைக்கும் ஒரு டொலருக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். பின்னர் வருமான வரிப் புகலிட நாட்டில் இருந்து உலகெங்கும் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்து கிடைக்கும் 99 டொலர் இலாபத்திற்கு வருமானவரி கட்டாமலோ அல்லது அமெரிக்காவிலும் பார்க்க மிகக் குறைந்த வருமான வரியையோ கட்டலாம். இவை சட்டபூர்வமான வர்த்தகமாகும். ஆனால் அமெரிக்கா இப்படி ஒரு வருமானவரிப் புகலிட நாடு இருப்பதை விரும்பாது. அது அமெரிக்காவின் வருமான வரி மூலம் திரட்டும் நிதியைக் குறைக்கின்றது. ஆனால் நடைமுறையில் ஊழல் செய்வோர்க்கும் சட்ட விரோதமாகப் பணம் சேர்ப்போர்க்கும் தஞ்சமடையும் இடமாகப் பல வருமானவரிப் புகலிடங்கள் செயற்படுகின்றன. வெளி நாட்டு நிறுவனம் ஒன்று ஒரு வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்யும் நிறுவனத்தை shell company என அழைப்பர். இது வர்த்தக நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாமல் நிதிப் பரிமாற்றங்கள் செய்வதற்கும் அல்லது எதிர்கால திருகுதாள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வைத்திருக்கப்படும். வருமானவரிப் புகலிடங்களிற்குப் போகும் நிதி பின்னர் உலகின் முன்னணி நிதிச் சந்தைகளான New York, London, Zurich, Geneva, Frankfurt, and,  Singapore, Hong Kong, and Dubai ஆகியவற்றைப் போய்ச் சேரும்.
பெரும் வங்கிகளின் குழந்தைகள்

பல வருமானவரிப் புகலிடங்களை உருவாக்கிய சிற்பிகள் HSBC, UBS, Credit Suisse, Citigroup, Bank of America, RBS, Barclays, Lloyds, Standard Chartered, JPMorgan Chase, Wells Fargo, Santander, Credit Agricole, ING, Deutsche Bank, BNP Paribas, Morgan Stanley, and Goldman Sachs ஆகிய முன்னணி வங்கிகள் ஆகும். 1970களில் இருந்து இந்த முன்னணி வங்கிகள் தமது பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களின் வருமானங்களிற்கான வரிகளில் இருந்து தப்ப உதவி செய்து பெரும் வருவாயை ஈட்டியுள்ளன. வெறும் நாணயங்களை மட்டுமல்ல தங்கம் போன்ற உலோகங்கள்ஓவியங்கள்பழைய வாகனங்கள்புகைப்படங்கள்உல்லாசப் படகுகள்எண்ணெய்க் கிணறுகள் போன்றவற்றின் வர்த்தக மூலம் வருமானங்கள்  மறைக்கப்படுவதும் உண்டு.

பினாமிகள்

வருமானவரிப் புகலிடத்தில் அரசியல்வாதிகள் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்குரிய நண்பர் அல்லது உறவினர் தேவை. அதாவது பினாமி தேவை. ஒரு அரசியல்வாதி தன் நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை தனது பினாமியின் பெயரில் ஒரு இரகசியம் பேணும் வருமானவரிப் புகலிட நாட்டில் முதலீடு செய்யலாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதனால் அந்தப் பினாமி நிறுவனம் பெரும் நிதியைத் திரட்டும். பின்னர் இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்னும் முகமூடியுடன் இந்தியாவிற்கு வரும். அந்த முதலீட்டுக்கு வரிவிலக்கும் வழங்கப்படும்.

பணச் சலவையும் வருமானவரிப் புகலிடமும்.

உலகில் அதிக அளவு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் பதிவு செய்த பிராந்தியமாக ஹொங் கொங் இருக்கின்றது. பிரித்தானியாவின் முடிக்குரிய பிராந்தியாமான வேர்ஜின் தீவுகள் இரண்டாம் இடத்திலும் பனாமா நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. பனாமாவில் தற்போது 350,00இற்கும் அதிகமானா நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  பனாமாவில் சட்ட விரோத நிதிகளை சட்டபூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். பனாமா புவியியல் ரீதியாக உலகின் பெருமளவு போதைப் பொருள் உற்பத்தி செய்யும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் உலகில் முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமான ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கின்றது. பனாமா ஊடகவியலாளர் ஒருவர் பணச் சலவை என்று வரும் போது எமது நாட்டில் நன்றாக நனைத்து துவைத்துக் காய வைத்துக் கொடுப்போம் என்றார். சிறந்த வருமானவரிப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். பனாமாவில் வருமான வரி தொடர்பாகவும் சட்டம் தொடர்பாகவும் வல்லுனர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனைகளும் உதவிகளும் செய்து பிழைப்பு நடத்துகின்றன. பணச்சலவைக்கு எதிரான பன்னாட்டுக் கூட்டமைப்பான நிதி நடவடிக்கைப் பணிப் படை { Financial Action Task Force (FATF)} பனாமா நாட்டை தனது சாம்பல் நிறப்பட்டியலில் சேர்த்துள்ளது. இலகுவாக வர்த்தக நிறுவனங்களைப் பதிவு செய்தல்நடவடிக்கைப் பதிவேடுகள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் இன்மை போன்றவை பனாமாவை இந்தப் பட்டியலில் வைத்திருக்கின்றது. அனாமதேய சமூக அமைப்பு (anonymous society) என வகைப்படுத்தி பனாமாவில் பெயர்கள் வெளிவிடாமல் நிறுவனங்களைப் பதிவு செய்யலாம். அப்படிப் பதிவு செய்யப் பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள்சொத்துக்கள் பற்றிய விபரம் யாருக்கும் வெளிவிடப்படமாட்டாது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் (Corporations) தமது கணக்குகளை சட்டப்படி ஆய்வு செய்யத் தேவையில்லை. வாருமானவரித் துறைக்கு தமது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைக்களுக்கு பனாமாவில் வரி கட்டத் தேவையில்லை.

ரோனி பிளேயர்

பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ரோனி பிளேயரும் அவரது துணைவியாரும் இலண்டன் நகரின் நடுப்பகுதியில் உள்ள 6.5மில்லியன் பவுண்கள் பெறுமதியான ஒரு கட்டிடத்தை வாங்கியுள்ளனர். அதை அவர்கள் பிரித்தானியாவில் வாங்கி இருந்தால் அதற்கான முத்திரைக் கட்டணமாக மூன்று இலட்சத்து பன்னிரண்டாயிரம் பவுண்களுக்கு மேல் செலவழித்திருக்க வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காக அந்தக் கட்டிடத்தின் உரிமையாளராக இருக்கும் நிறுவனத்தை வருமானவரிப் புகலிட நாடு ஒன்றில் வாங்கினார்கள். விற்பனையாளர்கள் பாஹ்ரேன் அரசுடன் தொடர்புள்ளவர்கள். அவர்கள் பிரித்தானியாவில் மூலதன ஆதாய வரியை தவிர்ப்பதற்காக அப்படி விற்பனை செய்ததாக செர்ரி பிளேயர் தெரிவித்துள்ளார். அக்கட்டிடத்தின் உரிமம் உள்ள நிறுவனத்துக்கு சொந்தக்காரர்களாக பிளேயார் தம்பதிகள் இப்போது இருக்கின்றார்கள். இந்த நடவடிக்கையில் எந்த ஒரு பிரித்தானியச் சட்டமும் மீறப்படவில்லை. ஆனால் அவர்கள் முத்திரைக் கட்டணத்தை தவிர்த்துள்ளார்கள்.

மூலதன ஆதாய வரி தவிர்ப்பு

பிளேயர் தம்பதிகள் செய்தது போல் பிரித்தானியாவில் உள்ள 1500 கட்டிடங்கள் விற்பனை செய்யப்பட்டு மூலதன ஆதாய வரி மற்றும் முத்திரைக் கட்டணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. கட்டார்(கத்தார்) அரச குடும்பம் பிரித்தானியாவில் £18.5 மூலதன வரியை தவிர்த்துள்ளது. ஜோர்தான் நாட்டு அரசர் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்களை புகலிட நாட்டு நிறுவனங்கள் மூலம் வாங்கியுள்ளார்.

இலஞ்சம் கொடுக்க சிறந்தவழி

ஒரு நாட்டின் அமைச்சருக்கு  இலஞ்சம் கொடுக்கும் போது அவரும் பிடிபடாமல் இலஞ்சம் கொடுப்பவரும் பிடிபடாமல் இருக்க வருமான வரிப்புகலிடம் சிறந்த வழி வகுக்கின்றது. பிரித்தானியாவில் அல்லது அமெரிக்காவில் ஆடம்பர வீட்டை வைத்திருக்கும் (பனாமா போன்ற நாடுகளில்) நிறுவனத்தை குறித்த அமைச்சர் பெயருக்கு மாற்றி விடுவார்கள்.  நைஜீரியாவின் எரிபொருள் துறை அமைச்சருக்கு இப்படி பெருமளவு இலஞ்சத்தை உலக எரிபொருள் நிறுவனங்கள் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. உலகின் எல்லா முன்னணிச் செல்வந்தர்களுக்கும் வருமானவரிப் புகலிடம் கொடுக்கும் நாடுகளில்/பிராந்தியங்களில் பெருமளவு சொத்துக்கள் இருக்கின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் கொங்கோ நாட்டில் பல நூறு மில்லியன்களைத் திருடி வருமான வரிப்புகலிடங்களில் வைத்திருக்கின்றார். அவரை சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை. 

பொருளாதார தடை தவிர்ப்பு

அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஏழுக்கும் மேற்பட்ட இரசிய பெருஞ்செல்வந்தர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் தமது சொத்துக்களைத் திரட்டி வைத்திருக்கின்றனர். பணச்சலவை செய்வதற்கு அதாவது சட்ட விரோத செல்வத்தை சட்டபூர்வமான செல்வமாக மாற்றுவதற்கு சிறந்த இடம் வருமான வரிப்புகலிட நாடுகளாகும். படைக்கலன் கடத்துபவர்கள், போதைப் பொருள் விற்பனையாளர்கள், மனிதர்களைக் நாடுகளுக்கு நாடு கடத்துபவர்கள் தமது சட்ட விரோத செல்வத்தை வருமான வரிப்புகலிட நாடுகளில் வைத்திருக்கின்றனர். 

இந்தியர்கள் மட்டும் சளைத்தவர்களா?

இந்தியாவின் துடுப்பாட்ட சாதனையாளர் சச்சின் டென்டுல்கர், தொழிலதிபர்கள் கிரண் மஜூம்தார் ஷா, அனில் அம்பானி எனப்பல இந்தியர்கள் பண்டோரா பத்திரங்களில் உள்ளனர். அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் வருமானவரிப் புகலிடங்களில் உள்ளன. ஆனால் அவர் ஒரு கடனாளியாக தன்னைக் காட்டி தனக்கு சொத்து ஏதும் இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளார். பாக்கிஸ்த்தான் மட்டும் சும்மாவா? இம்ரான் கான் உட்பட பல அரசியல்வாதிகள் தொடர்பான பண்டோரா பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.  

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...