Sunday, 3 October 2021

குவாட் அமைப்பின் கூட்டறிக்கை சொல்லும் செய்தி

  


வெள்ளை மாளிகையில் குவாட் உரையாடல் நாடுகளான ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா செப்டம்பர் 24-ம் திகதி கூடிக் கலந்தாலோசித்து ஒரு கூட்டறிகையை வெளிவிட்டமை வெறும் உரையாடல் மட்டும் கொண்ட ஒரு “மினக்கெட்டான் வேம்படி” தான் இந்த குவாட் என்ற நையாண்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “உரையாடலில்” இருந்து “ஒத்துழைப்பு” என்ற நிலைக்கு குவாட் மாறியுள்ளது. ஆனாலும் “சீனா”, “படைத்துறை ஒத்துழைப்பு”, “தைவான்” ஆகிய இரண்டு பதங்களும் கூட்டறிக்கையில் காணப்படவில்லை.

குவாட் அமைப்பின் கூட்டறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்:

QUAD Joint Statement

குவாட் கூட்டறிக்கை

குவாட் அமைப்பின் கூட்டறிக்கையில் கொவிட்-19 என்பது 12 தடவையும் ஒத்துழைப்பு என்பது 10 தடவையும் இந்தோ-பசுபிக் என்பது ஆறு தடவையும் ஆப்கானிஸ்த்தான் என்பது 3 தடவையும் வட கொரியா என்பது ஒரு தடவையும் பயங்கரவாதம் என்பது இரண்டு தடவையும் உள்ளன. 5G என்பதப் பற்றி ஒரு பந்தியே உள்ளது. முதற் பந்தியிலேயே திறந்ததும் சுதந்திரமானதுமான இந்தோ பசுபிக் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வைத்துக் கொண்டு எந்தத் துறைகளில் குவாட் ஒத்துழைக்க வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நன்கு அறிய முடியும்.

கலங்கிய மோடிக்கு கைகொடுக்குமா குவாட்?

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் பிரதேசத்தில் நடந்த மோதலின் போது இந்திய தலைமை அமைச்சர் மோடி மிகவும் கலங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் முறையிட்டார். சொல்லி அழுதாரோ தெரியவில்லை. இந்தியா குவாட் அமைப்பில் இணைவதால் சீனாவிடமிருந்து இந்தியாவை குவாட் பாதுகாக்கும் இன இந்திய மக்களை இந்தியாவின் “பொய் ஹிந்த்” யூடியூப் சனல் கும்பல்கள் தொடர்ச்சியாக நம்பவைத்துக் கொண்டிருக்கின்றன. அருணாச்சலப் பிரதேசம் போன்ற இந்தியப் பிரதேசங்களை சீனா ஆக்கிரமிப்பதற்கு போர் தொடுத்தால் இந்தியாவுடன் இணைந்து ஒஸ்ரேலியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகள் சீனாவிற்கு எதிராக போர் செய்யுமா என்பதை குவாட் அமைப்பின் தற்போதைய நிலைப்பாடு உறுதி செய்யவில்லை.

Trump: “Modi was in a bad mood”


படைத்துறை ஒத்துழைப்பு பற்றி கூட்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பல் வேறு அரசுறவியலாளரகள், அரச தலைவர்கள் இனிவரும் காலங்களில் சந்தித்து உரையாடுவாரகள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சரகள், இந்தோ-பசுபிக் பிராந்திய படைத்தளபதிகள் மட்டத்தில் சந்திப்போ கலந்துரையாடலகளோ நடக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. படைத்துறை ஒத்துழைப்பு இல்லாமல் இந்தியாவை சீனாவிடமிருந்து எந்த வகையில் குவாட் பாதுகாக்கும் என்பது கேள்விக் குறியே! கூட்டறிக்கையின் நான்காம் பத்தியில் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிப்போம் என்ற வாசகம் காணப்படுகின்றது. இரண்டாம் பத்தி:

2. Together, wecommit to promotinga free, openrules-based order, rooted ininternational law to advancesecurity and prosperity and counter threats to bothin the Indo-Pacific and beyond.We support the rule of law, freedom of navigation and overflight, peaceful resolution of disputes, democratic values, and territorial integrity. We commit to work together and with a range of partners. We reaffirm our strong support for ASEAN’s unity and centrality as well as the ASEAN Outlook on the Indo-Pacific. Full of potential, the Quad looks forward to the future; it seeks to uphold peace and prosperity and strengthen democratic resilience, based on universal values.

மோடி மிரட்டப்பட்டாரா என்பது பற்றிய முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம்:

சீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா?

2018 ஜூலை மாதம் 23-ம் திகதி Foreign Policy சஞ்சிகையில் India is the Weakest Link in Quad என்றதலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் எனவுக் கூறப்பட்டிருந்தது.

விதிகளை அடிப்படையாகக் கொண்ட பன்னாட்டு ஒழுங்கிற்கு commit என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒருமைப் பாட்டிற்கு support என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. குவாட் என்பது நேட்டோ போன்றது என்போர் இவற்றைக் கவனிக்க வேண்டும். குவாட் என்ற அமைப்பிற்கான அமைப்பு விதிகளோ அல்லது ஆய்வி வீச்சளவோ (Terms of references) இன்னும் உருவாக்கப்படவில்லை. எந்த ஒரு புரிந்துணர்வு பதிவுக்குறிப்பு (memorandum of understanding) கூடக் கைச்சாத்திடவில்லை. குவாட் என்பதை ஒரு முறைசாரா அமைப்பாகவே பன்னாட்டு அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த வகையில் நேட்டோவும் குவாட்டும் மலையும் மடுவும் போன்றவை.
குவாட்டின் இலக்கு சீனாதான்

குவாட் முழுக்க முழுக்க சீனாவை எதிர்கொள்ளத்தான் என அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக அறிவிக்காத போதிலும் குவாட் அமைப்பு சீன ஆதிக்கத்தை சமாளிப்பதற்கு என உருவாகிக் கொண்டிருக்கின்றது. Centre for New American Security என்னும் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி Richard Fontaine “நான்கு நாடுகளுக்கும் இடையில் ஒரு தீவிரமான பங்காண்மை மலர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை பார்க்காமல் இருப்பதற்கு நீங்கள் உங்கள் கண்களை கடுமையாக முடிக் கொள்ள வேண்டும்” என்கின்றார். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இந்தோ பசுபிக் நாடுகள் பாதிப்படைந்த போது அதைச் சாட்டாக வைத்து அந்த நாடுகளுக்கு உதவி செய்யும் போர்வையில் சீனப் படைகள் செல்வதைத் தடுக்க ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒத்துழைத்து அந்த நாடுகள் மீண்டு எழுவதற்கு உதவி செய்தன. அதை அடிப்படையாக வைத்து நான்கு நாடுகளும் பல வகையிலும் ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் ஜப்பான் தலைமை அமைச்சர் சின்சோ அபே முன்வைத்த திட்டமே குவாட் அமைப்பை உருவாக்கும் எண்ணக் கருவிற்கு வழிவகுத்தது. ஆனால் சீனாவின் பொருளாதாரத்தைச் சார்ந்து வளர்ந்து கொண்டிருந்த ஒஸ்ரேலியாவும் சீனாவுடன் பகைமையை வளர்ப்பதைத் தவிர்க்க விரும்பிய இந்தியாவும் குவாட்டில் முழுமையாக ஈடுபடத் தயக்கம் காட்டின. இதனால் கிடப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேல் அத்திட்டம் வைக்கப்பட்டிருந்தது. 2017இல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நடந்த டொக்லம் முறுகலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. டொனால் டிரம்ப் குவாட் அமைப்பை உருவாக்கும் முயற்ச்சியை மீள் ஆரம்பித்தார். சீனாவின் படைத்துறை, பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எட்டிய துரித வளர்ச்சியும் சீனாவின் பிராந்திய ஆதிக்க நகர்வுகளும் குவாட்டை மீள உருவாக்க வழிவகுத்தது.

நாளைய இந்தியா இன்றைய சீனா ஆகலாம்?

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் செலுத்துவது போல் சீனாவும் தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது. அதைத் தடுப்பது குவாட் அமைப்பின் நோக்கம் என்பதும் தொழில்நுட்பம், கடல்சார் சட்டம், மருத்துவம் போன்ற துறைகளில் குவாட் நிச்சயமாக ஒத்துழைக்கும். அது நேட்டோபோல் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு நாடாக உருவாகுவது சீனாவின் எதிர்கால நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. நேட்டோ போன்ற ஒரு கூட்டமைப்பை இந்தியாவுடன் உருவாக்க அமெரிக்கா விரும்பவில்லை என்பதையே AUKUS என்ற ஒஸ்ரேலியா, பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டுகின்றது. நேட்டோ அமைப்பு தனது படைத்துறை தொழில்நுட்பங்களை ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும். இந்தியாவுடன் ஒரு முழுமையான படைத்துறைத் தொழில்நுட்ப பகிர்வைச் செய்ய அமெரிக்கா தயங்குகின்றது. இன்று சீனாவால் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு எழுந்துள்ள சவால் இன்னும் இருபது ஆண்டுகளிற்கு பின்னர் இந்தியாவால் எழுவதற்கு வாய்ய்பு உண்டு.

மலபார் போர்ப்பயிற்ச்சி

2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரபிக் கடலில் இந்தியாவுடன், ஒஸ்ரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து நடத்திய போர்ப்பயிற்ச்சியை குவாட்டின் ஒரு பகுதியாகப் பார்க்க முடியும். ஆனால் குவாட் நாடுகள் சீனாவிற்கு எதிரான கூட்டணி நாம் என பகிரங்கமாக அறிவித்து சீனாவை உசுப்பேற்ற விரும்பவில்லை என்பதை நன்கு அறிய முடிகின்றது. அதேவேளை சீனாவை அழிக்க உருவான கூட்டணிதான் குவாட் என்பது அப்பட்டமான அபத்தம்.

குவாட் கூட்டல் (QUAD+)

குவாட் கூட்டமைப்பில் தற்போது உள்ள ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவைத் தவிர மேலதிகமாக தென் கொரியா, நியூசிலாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. பிலிப்பைன்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதுவும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்புண்டு. புவிசார் சூழலை வைத்துப் பார்க்கும் போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய திருகுப்புள்ளியான மலபார் நீரிணையை ஒட்டியுள்ள மலேசியாவின் ஒத்துழைப்பு குவட்டின் நோக்கத்தை நிறைவேற்ற மிக அவசியம்.


 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...