Thursday, 5 August 2021

ஆப்கானிஸ்த்தானில் இனி சீனாவா?

  


2021 ஜூலை மாத இறுதியில் ஆப்கானிஸ்த்தான் தலிபான் அமைப்பினரின் தூதுக் குழு ஒன்று சீன அரசின் அழைப்பை ஏற்று சீனா சென்று அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வங் ஜீயைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்த்தானின் மீளிணக்கத்திலும் மீள்கட்டுமானத்திலும் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தலிபானின் குழுவினரிடம் தெரிவித்தார். 2007-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள மெஸ் அய்னாக் பாரிய செப்பு படிமங்களை அகழ்வு செய்யும் உரிமம் சீனாவிற்கு ஆப்கானிஸ்த்தானிய அரசால் வழங்கப்பட்டது. சீனா அதில் செய்த மூன்று பில்லியன் டொலர் முதலீடு ஆப்கானிஸ்த்தான் வரலாற்றில் மிகப் பெரிய முதலீடாகும். இந்த முதலீட்டை எதிர்த்த ஆப்கானிஸ்த்தான் அமைச்சர் ஒருவரின் வாயை சீன பெருமளவு இலஞ்சம் கொடுத்து மூடியதாகவும் கூறப்படுகின்றது. அந்த முதலீட்டை தொடர்ந்து பேணுவதற்கு சீனாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட வேண்டும்.

சீன தலிபான் உறவு

ஒரு பொதுவுடமை(?) அரசுக்கும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கும் பொதுவானது என்று ஏதுமே இல்லாத நிலையில் தலிபானை ஆதரிக்க வேண்டிய நிலையில் சீனா இருக்கின்றது. சீனா தனது நாட்டின் எல்லையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடிய ஓர் அரசு அமைவதை விரும்பாது என்றாலும் ஆப்கானிஸ்த்தானின் உறுதிப்பாட்டை தலிபானகள் தலைமையிலாவது நிலைநிறுத்துவதை சீனா எதிர்க்காது. சீனாவின் புதிய பட்டுப்பாதைக்கு ஆப்கானிஸ்த்தானில் ஓர் உறுதியான அரசு அமைவது அவசியம். சீனா தனது பட்டுப்பாதைத் திட்டத்தை வரையும் போது அதில் ஆப்கானிஸ்த்தான் உள்ளடக்கப்படவில்லை. இப்போது அதையும் உள்ளடக்கி முன்னர் மத்திய ஆசியாவில் உள்ளடக்கப்படாத பிரதேசங்களையும் உள்ளடக்கி மேலும் பல பொருளாதார வளையங்களை (Economic Belts) சீனா உருவாக்க முடியும். ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்கள் சீனாவைப் பொறுத்தவரை ஒரு தங்கச் சுரங்கமாகும். தலிபான்களுடன் இணைந்து செயற்படும் சில அமைப்புக்கள் சீனாவின் இஸ்லாமியர்கள் வாழும் உய்குர் இன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றன. தலிபான்களுடன் உறவு வைப்பதாயின் தனது நாட்டு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு தலிபான்களோ அல்லது அதன் இணை அமைப்புக்களோ ஆதரவு வழங்கக் கூடாது என்ற நிபந்தனையை சீனா விதித்துள்ளது. அதிலும் முக்கியமாக கிழக்கு துருக்கிஸ்த்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற போராளி அமைப்பை சீனா அறவே வெறுக்கின்றது.

பேரரசுகளின் புதைகுழி

முன்பு கிரேக்கர், மங்கோலியர், மொகாலயர் பின்பு பிரித்தானியர், இரசியர் இன்று அமெரிக்கர் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமிக்க முயன்று தோல்வி கண்டனர். அதனால் ஆப்கான் பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படுகின்றது. இந்த நாடுகள் தங்கள் படைகளை அங்கு அனுப்பி போர் புரிந்தன. ஆனால் சீனாவின் போர் வேறுவிதமாக இருக்கும். தன்னுடைய பேரழிவு விளைவிக்கும் படைக்கலனான உட்கட்டுமானங்களுக்கான கடன் மூலம் ஆப்கானை சீனா ஆக்கிரமிக்க திட்ட மிட்டுள்ளது. தலிபான் உட்பட பல்வேறு படைக்கலனிகள் ஏந்திய அமைப்புக்களும் அமெரிக்காவின் ஆதரவுடன் காபூலில் இருந்து ஆப்கானிஸ்த்தானை ஆட்சி செய்யும் அஸ்ரஃப் கானியின் படையினருக்கும் இடையில் நடக்கும் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினரின் ஆதரவால் காபூல் அரசு தாக்கு பிடித்துக் கொண்டிருந்தது.

படைகள் விலகாவிடில் கடும் ஆபத்து

அமெரிக்கப் படைகள் விலகுகின்ற இடங்களில் ஆப்கான் அரச படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் மூண்ட போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச படையினர் அயல் நாடான தஜிகிஸ்த்தானுக்கு தப்பி ஓடினர். இது போல பல ஆயிரம் அரச படைகள் 2021 செப்டம்பர் 11இன் முன்னர் தப்பி ஓடுவார்கள். இதனால் அஸ்ரஃப் கானியின் அரசு நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் சரிந்துவிடும் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் கட்டார் (கத்தார்) தலைநகர் டோகாவில் செய்த பேச்சு வார்த்தைகளின் இறுதியில் 2019 ஜூலையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 2021 செப்டம்பர் 11-ம் திகதி (இரட்டைக் கோபுர தாக்குதல்) நேட்டோப் படையினர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கடும் ஆபத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் என தலிபான் பேச்சாளர் 2021 ஜுலை 6-ம் திகதி எச்சரித்துள்ளார். ஆப்கானின் 407 மாவட்டங்களின் 188இற்கு மேலானவை தலிபான்களிடம் இருக்கின்றன, இன்னும் பத்துக்கு மேற்பட்டவையை அவர்கள் வெகு விரைவில் கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தொடர்ந்து பெருமளவு படைக்கலன்களையும் போர்த்தளபாடங்களையும் அரச படையினரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவை விரும்பும் காபூல்

காபூலில் உள்ள ஆட்சியாளரான அஸ்ரஃப் கானி இந்தியாவுடன் நல்லுறவை விரும்புபவர். தலிபான்களில் பெரும்பான்மையானவர்கள் பஷ்ரூன் இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். 3.2 மில்லியன் பஷ்ரூன்கள் இந்தியாவின் வாழ்கின்றனர். இந்தி திரைப்படத்துறயில் இஸ்லாமியப் பெயர்களுடன் இருக்கும் நடிக நடிகைகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்த்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பஷ்ரூன்களே. அதனால்  தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிக் கொண்டு தலிபான்களுக்கு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பாக்கிஸ்த்தான் பல உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் அஸ்ரஃப் கானி பாக்கிஸ்த்தான் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். ஆனாலும் 2021 செப்டம்பரில் நேட்டோப் படைகள் வெளியேறிய பின்னர் தனது இருப்பை உறுதி செய்ய கானி இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகளுடன் நல்லுறவு அவசியம் எனக் கருதுகின்றார். இந்தியாவிற்கும் ஆப்கானித்தானிற்கும் இடையில் தரைவழித் தொடர்பு மேற்கொள்வதாயின் அது பெரும்பாலும் பாக்கிஸ்த்தானூடாகவே செய்ய வேண்டும். 

பாக்கிஸ்த்தானின் கரிசனை

ஆப்கானிஸ்த்தானில் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அரசு அமைவது தமது நாட்டு ஆட்சி முறைமைக்கு ஆபத்தாகும் என பாக்கிஸ்த்தான் தலைவர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே பாக்கிஸ்த்தானுடன் எல்லையைக் கொண்ட ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாத அரசு உள்ளது. ஆப்கானிஸ்த்தானில் தலிபான்கள் இஸ்லாம்ய அடிப்படைவாத அரசை உருவாக்கி அது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க சிறப்பாக ஆட்சி செய்தால் பாக்கிஸ்த்தானியர்கள் தமக்கும் அது போன்ற ஆட்சி வேண்டும் என விரும்பலாம். ஏற்கனவே ஆப்கானுடன் எல்லையைக் கொண்ட பாக்கிஸ்த்தானியப் பிரதேசங்களில் பாக்கிஸ்த்தானிற்கான தெஹ்ரிக் ஐ தலிபான் என்ற அமைப்பு செயற்படுகின்றது. 2019இல் பாக்கிஸ்த்தானியப் படையினர் அமெரிக்க நிர்ப்பந்தத்துடன் செய்த படை நடவடிக்கையால் அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஒரு சில ஆயிரம் தலிபான்களாவது பாக்கிஸ்த்தானில் எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனால் பாக்கிஸ்த்தான் ஆப்கானைக் கையாள சீன உதவியை நாடியுள்ளது. தலிபான் அமைப்பில் உள்ள பலர் பாக்கிஸ்த்தானில் உள்ள பஷ்ரூன் இனத்தவர்களுக்கு எதிராக பாக்கிஸ்த்தான் எடுக்கும் நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதுடன் பாக்கிஸ்த்தானில் உள்ள பஷ்ரூன் மக்கள் வாழும் பகுதிகளையும் இணைத்து அகன்ற ஆப்கானிஸ்த்தான் உருவாக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் பாகிஸ்த்தான் தலிபான் உறவு மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். நேட்டோப் படையினர்ன் வெளியேற்றத்தின் பின்னர் தலிபான்களைன் ஆட்சி அமைந்தால் அதற்கு அவசியம் தேவைப்படுவது நிதி. அது பாக்கிஸ்த்தானிடம் இல்லாததால் ஆப்கானின் உட்கட்டுமான அபிவிருத்திக்கு சீனா உதவி செய்யும் என்பதை தம்மால் உறுதி செய்ய முடியுமென்கின்றது பாக்கிஸ்த்தான்.மத்திய ஆசியாவில் சீன-இரசிய ஆதிக்கப் போட்டி

ஏற்கனவே பல மத்திய ஆசிய நாடுகளின் சீனா தனது ஆதிக்கத்தை உட்கட்டுமான உதவிகளாலும் தனது Belt and Road Initiative என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தாலும் அதிகரித்து வருவதை இரசியா விரும்பவில்லை. ஆனாலும் தற்போதைய சூழலில் சீனாவுடன் இரசியா ஒத்துப் போகவேண்டி உள்ளது. ஈரான், சீனா, இரசியா ஆகிய மூன்றும் இணைந்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படுவது சிறந்த தீர்வாக அமையலாம். பாக்கிஸ்த்தானுடன் தனது உறவை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டிருக்கும் சீனா பாக்கிஸ்த்தானை ஓரம் கட்டுவதை விரும்பாது.

சீனாவிற்கு நல்வாய்ப்பு

கடந்த பல பத்தாண்டுகளாக சீனாவில் பெரும் உட்கட்டுமானங்களை சீன அரசு செய்தது. அதற்குப்பாவிக்கப்பட்ட அத்தனை இயந்திரங்களும் உபகரணங்களும் தற்போது சும்மா இருக்கின்றது. அவற்றை வேறு ஒரு நாட்டில் பாவிக்கும் போது மூலதனச் செலவின்றி சீனாவால் பல உட்கட்டுமானங்களைச் செய்ய முடியும். அதனால் சீனாவிற்கு போட்டியாக குறைந்த செலவில் எந்த ஒரு நாட்டாலும் உட்கட்டுமான அபிவிருத்திகளை எந்த நாட்டிலும் செய்ய முடியாது. இருபது ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டுப் போரால் ஆப்கானில் பல உட்கட்டுமானங்கள் சிதைந்து உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்து கொண்டு அதற்குப் பதிலாக ஆப்கானிஸ்த்தானில் உள்ள கனிம வளங்களை சுரண்டுவது சீனாவின் நோக்கமாகும். தலிபான ஆப்கானில் அமைக்கவிருக்கும் புதிய அரசுக்கு போதிய நிதியை சீனாவால் கடனாக வழங்கி அந்த அரசையும் தன் கடன் பொறிக்குள் இலகுவாக விழவைக்க முடியும். தலிபான் அமைக்கவிருக்கும் புதிய அரசு மேற்கு நாடுகளிடமோ, உலகவங்கியிடமோ அல்லது பன்னாட்டு நாணய நிதியத்திடமோ கடன் அல்லது உதவி என்று கேட்டால் அவை மனித உரிமை, பெண் உரிமை எனப் பல நிபந்தனைகளை விதிக்கும். ஆனால் சீனா கடன் கொடுக்கும் போது அப்படிப்பட்ட நிபந்தனைகளை விதிக்காமல் ஆப்கானிஸ்த்தானை பகுதி பகுதியாக கபளீகரம் செய்யும் நீண்டகாலத் திட்டத்துடன் கடன்களை அதிக வட்டிக்கு வழங்கும்.

சீனாவின் ஆதரவுடன் ஊழல் ஆட்சி நடக்குமா?

சீனாவின் உதவியுடன் ஆட்சி செய்பவர்கள் பலர் மோசமாக ஊழல் செய்பவர்களாக இருக்கின்றனர். தலிபான்கள் ஊழலை தொடர்வார்களா அல்லது உண்மையான இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டுவார்களா என்பதில் ஆப்கானிஸ்த்தானின் எதிர்காலம் தங்கியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாத நாடான ஈரானும் ஊழலில் திளைக்கும் பாக்கிஸ்த்தானும் ஆப்கானிஸ்த்தானின் அயல் நாடுகளாகும். சீனா வெளிநாடுகளில் முதலீடு என்னும் பெயரில் வைக்கும் கடன் பொறிக்கு இலங்கையை பலரும் உதாரணமாக முன்வைக்கின்றார்கள். அதிலும் மோசமான உதாரணமாக ஆப்கானிஸ்த்தான் அமைய வாய்ப்புண்டு.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினரின் விலகலால் ஆப்கானில் போர் முடிந்துவிடும் என்றோ அல்லது அமைதி வரப்போகின்றதோ என்று தலிபான்களே எதிர்பார்க்க மாட்டார்கள். ஆப்கானில் தலிபான்கள் மட்டுமல்ல பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் இருக்கின்றன. எல்லோரும் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில் அடுத்து ஏறுபவர் கதி?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...