Wednesday, 28 July 2021

கியூபாவில் மக்கள் போராட்டம். வெற்றியளிக்குமா?

  


ஜுலை – 11-ம் திகதி கியூபாவில் பல் வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் ஆரம்பித்தது. இது 1959இல் நடந்த பொதுவிடமைப் புரட்சிக்குப் பின்னர் நடக்கும் பாரிய போராட்டமாகும். பிடல் கஸ்ரோ, ராஉல் காஸ்ட்ரோ ஆகியோரின் ஆட்சிக்குப் பின்னர் கியூப அதிபராக வந்த மிகுஏல் டயஸ் கனல் ஆட்சியில் நடக்கும் மக்கள் போராட்டத்தை பொதுவுடமைப் புரட்சி எதிர்ப்பு இயக்கம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கூலிப்படையினர் எனவும் முத்திரை குத்தியுள்ளார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரே நேரத்தில் பெரும் மக்கள் போராட்டம் வெடித்தமை கியூப வரலாற்றில் முன்பு நடந்ததில்லை.

எந்தையர் நாடு?

உலகில் இன்றும் பொதுவுடமைவாத ஆட்சி நிலவும் ஒரு சில நாடுகளில் கியூபாவும் ஒன்றாகும். கியூபாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்தபோது “எந்தையர் நாடு அல்லது இறப்பு” என்ற சுலோகத்தை புரட்சியாளர்கள் முன்வைத்தனர். இப்போது கிளர்ச்சி செய்பவர்கள் “எந்தையர் நாடும் வாழ்வும்” என்ற சுலோகத்தை முன்வைக்கின்றனர். சர்வாதிகாரம் ஒழிக சுதந்திரம் மலர்க என்பதும் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. தொலைக்காட்சியில் தோன்றிய கியூப அதிபர் மிகுஏல் டயஸ் கியூபா புரட்சியாளர்களுக்கு சொந்தமானது என முழங்கினார்.

1994இல் நடந்த கிளர்ச்சி

1990இல் சோவியத் ஒன்றியம் நெருக்கடிகளைச் சந்தித்த பின்னர் கியூபாவிற்கு அங்கிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் முற்றாக இல்லாமற் போயின. 1989இல் இருந்து 1993வரை கியூபாவின் மொத்த தேசிய உற்பத்தி 35% வீழ்ச்சியடைந்திருந்தது. அப்போது உருவான பொருளாதார நெருக்கடியால் 1994இல் மக்கள் கிளர்ச்சி செய்தபோது அது இரும்புக் கரங்களால் நொருக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் கியூபா தனது சமூக நலக் கொடுப்பனவுகளுக்கான செலவைக் கட்டுப்படுத்தியது. அதிகரித்த சமூக நலக் கொண்டுப்பனவுகள் மக்களிடையே வேலைசெய்யும் விருப்பத்தை குறைத்து விட்டதாக கியூப ஆட்சியாளர்கள் கருதினர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் பல பொதுவுடமை ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மேற்கு நாடுகளில் உள்ளது போன்ற ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால் கியூபாவின் பொதுவுடமை ஆட்சி இன்றுவரை தாக்கிப் பிடிக்கின்றது.

அமெரிக்க பொருளாதாரத் தடை

பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா வாழ் கியூபர்களின் ஆதரவை அவரது மக்களாட்சிக் கட்சிக்கு ஆதரவு தேடும் முகமாக கியூபா மீதான சில பொருளாதாரத் தடைகள் தளர்த்தப் பட்டன. டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா கியூபா மீதான பொருளாதாரத் தடை மேலும் இறுக்கப்பட்டது. ஜோ பைடன் கியூபா மீதான பொருளாதாரத் தடைகளில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. 2021 ஜனவரியில் கியூப நாணயத்தின் பெறுமதி குறைக்கப்பட்டது. கியூபாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என கியூப அதிபர் மிகுஏல் டயஸ் குற்றம் சுமத்தினார்.

சிறந்த சமூக நலச்சேவைகள் கொண்ட கியூபா

2020இல் கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் கியூப பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. உல்லாசப் பயணிகளின் வருகை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. வெளிநாடுகளில் வாழும் கியூபர்கள் அனுப்பும் பண வருகையும் வீழ்ச்சியடைந்தது. வளர்முக நாடுகளில் சிறந்த சமூக நலன்சார் திட்டங்களை பிடல் காஸ்ட்ரோ ஆரம்பித்து வைத்தார். அரிசி, பாண், பால், முட்டை, அவரைகள், போன்ற உணவுவகைகள் உலகில் மற்ற நாடுகளிலும் பார்க்க குறைந்த விலையில் கியூப மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. அதனால் மக்களின் அடிப்படைத்தேவைகள் அரசால் நிறைவேற்றப்பட்டது. 2017-ம் ஆண்டு கியூபா சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆய்வாளர் மரியா கிரேசியா ஜியாமரினாரோ கியூபாவின் சமூக நலத் திட்டங்களைப் பாராட்டியிருந்தார். கியூபாவின் இலவச மருத்துவ சேவை, இலவச கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை இட்டு அவர் தனது திருப்தியையும் வெளியிட்டிருந்தார். சிறந்த மருத்துவ சேவையைக் கொண்ட கியூபா கொவிட்-19 பெருந்தொற்றை கையாள முடியாமல் தடுமாறியது. நோயாளிகள் மருத்துவ மனைகளில் இடமில்லாத படியால் வீடுகளில் இருந்தே இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்கா எப்படிக் கையாளும்?

அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மக்களவை மற்றும் மூதவையின் உறுப்பினர்கள் 32பேர் கையொப்பம் இட்ட முன்மொழிவில் ஜூலை-11 கியூப ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்ததுடன் கியூப மக்கள் மீண்டும் இணையப் பாவனை கிடைப்பதற்கான வழிகளை உறுதி செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

இரும்புக்கரம்

கியூப அரசு படைத்துறையினர், காவற்றுறையினர் போன்றோரை மட்டுமல்லாது தனது ஆதரவாளர்களையும் போராட்டக்காரர்களுக்கு எதிராக களமிறக்கியது. போராட்டக்காரர்கள் குண்டாதடிகள் ஏந்திய குண்டர்களால் மோசமாக தாக்கப்பட்டனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் இறப்பர் குண்டுகளும் ஆர்ப்பாட்டக்கார ர்களை அடக்க பெருமளவு பாவிக்கப்பட்டன. பல இடங்களில் ஆர்ப்பாட்டக்கார ர்களிலும் பார்க்க அவர்களை அடக்க வந்தவர்கள் அதிகமாகக் காணப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கியூபாவில் இடை நிறுத்தப்பட்டிருக்கும் இணையவெளிச் சேவைகளை எப்படி மீண்டும் கிடைக்கச் செய்வது தொடர்பாக தான் ஆய்வுகள் செய்வதாகச் சொன்னார். கியூப அரசுக்கு எதிரான கடுமையான கண்டனங்களோ அல்லது கிளர்ச்சியாளர்களுகான பகிரங்க ஆதரவோ உதவியோ இன்னும் அமெரிக்காவில் இருந்து கிளம்பவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்கக் கைக் கூலிகளாக சித்தரிப்பதை அது இலகுவாக்கும் என அமெரிக்க ஆட்சியாளர்கள் கருதலாம். நேட்டோ நாடுகளின் மாநாடு 2021இல் நடந்தபோது சர்வாதிகாரிகளுக்கு எதிராக பெருமளவு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது மத்திய அமெரிக்காவில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வாழும் கியூபர்கள் கியூப கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

கியூப அரசின் சிறிய விட்டுக்கொடுப்பு

ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் பரவிய நிலையில் கியூப அதிபர் மிகுஏல் டயஸ் வெளிநாடுகளில் இருந்து கியூபாவிற்கு வருபவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் மருந்து வகைகள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளார். சுங்க வரி கொடுக்காமல் எந்த அளவு உணவையோ மருந்தையோ கியூபாவிற்கு செல்பவர்கள் எடுத்துச் செல்ல முடியும். கொவிட்-19 தொற்று நோயைத் தடுக்க கியூபாவிற்கு வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இத்தடை நீக்கம் கியூபாவிற்கு வரும் உணவுகளை பெருமளவு அதிகரிக்க மாட்டாது.

வெனிசுவேலாவில் 2019 ஏப்ரலில் ஆரம்பித்த பெரும் மக்கள் போராட்டம் இன்றுவரை அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. ஹொங் கொங்கில் மக்கள் செய்த போராட்டத்தை சீன அரசு வெற்றிகரமாக முறியடித்தது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...