Monday, 9 November 2020

பாரதிய ஜனதா கட்சியும் நூறு பிரபலங்களும்

  


தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பதில் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) அதிக முனைப்புடன் காய்களை நகர்த்துகின்றது. பாஜக அண்ணா திமுகவுடன் அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே 2021-ம் ஆண்டின் முற்பகுதியில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கான தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. பாஜக தனக்கு அதிக வாக்கு வங்கி தற்போது உள்ளது என்பதை மற்றக் கட்சிகளுக்கு உணர்த்த தமிழ்நாட்டில் குறைந்தது நூறு பிரபலங்களையாவது தனது கட்சியில் இணைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது. நூறு பிரபலங்களை இணைத்தால் அவர்கள் மூலம் தேர்தல் தொகுதி ஒன்றிற்கு ஒரு பிரபலத்திற்கு 250வாக்குகள் பெற முடியும் என்றால் மொத்தம் 25,000 வாக்குகளை பாஜகவால் பெறமுடியும் என்ற நிலை ஏற்படுத்தலாம். தொகுதி ஒன்றிற்கு 25,000 என்றால் அது பல தொகுதிகளில் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் வலிமையை பாஜகவிற்கு கொடுக்கும். அதனால் பாஜகவை தம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட இரண்டு கழகங்களும் முன்வரும் என்பது பாஜகவின் திட்டம்.

கழகங்கள் கை கோர்க்கும்

அண்ணா திரவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தேவை ஏற்படும் போது மறைமுகமாக இணைந்து செயற்படுவதை வழமையாகக் கொண்டுள்ளன. இரண்டு கழகங்களும் பாஜகவைக் கழற்றி விடுவதில் ஒன்றுபட்டு குறைந்த தொகுதிகள் மட்டும் தருவோம் எனச் சொன்னால் பாஜக தனித்தோ அல்லது மருத்துவர் ரமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விஜயகாந்தின் தேதிமுக போன்றவற்றுடன் இணைந்து மூன்றாம் அணி ஒன்றை அமைத்து போட்டியிடலாம். கடந்த காலங்களில் மூன்றாம் அணி என ஒன்று போட்டியிடும் போது திமுக பின்னடைவைச் சந்திப்பதுண்டு. ஆனால் அந்த மூன்றாம் அணியில் பொதுவுடமைவாதக் கட்சிகள் இருக்கும். பாஜக அணியில் அவை இணைய வாய்ப்பில்லாத படியால் பாஜக தலைமையிலான மூன்றாம் அணி அண்ணா திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இரண்டு கழகங்களும் பாஜகவிற்கு சொற்ப தொகுதிகளை மட்டுமே தர முடியும் என அடித்துச் சொல்லக் கூடாது என்பதற்காகவே பாஜக தனது கட்சியில் நூறு பிரபலங்களை இணைக்க முடிவு செய்துள்ளது.

பாரதிராஜாவின் கட்சியானது

கர்நாடக மாநிலத்தில் காவற் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி புகழ் பெற்ற அண்ணாமலை என்பவர் 2020 ஓகஸ்ட் மாத இறுதியில் பாஜகவில் இணைத்துள்ளார். சிறந்த மேடைப்பேச்சும் ஊடகர்களை எதிர் கொள்ளும் திறனும் கொண்ட இவரிடம் நூறு பிரபலங்களை பாஜகவில் இணைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தமிழ்நாடு மாநிலத்திற்கான துணைத்தலைவராகவும் அவர் இணைக்கப் பட்டுள்ளார். கட்சிக்குள் புதிதாக வந்த ஒருவருக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கியம பழைய முகங்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழரல்லாதவராகக் கருதப்படும் இவர் ஒரு கட்டத்தில் பாரத ஜனதா கட்சியை பாரதிராஜாவின் கட்சி எனவும் குறிப்பிட்டிருந்தார். பாஜகவில் இணைந்த முதலாவது பிரபலமாக நடிகை குஷ்புவைப் பார்க்கலாம். தமிழரல்லாத இவர் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்டவர் என்றாலும் அவரால் எத்தனை வாக்காளரைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே. அவர் திமுகவில் இருந்து காங்கிரசுக்கு தாவிய போது காங்கிரசுக் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை.

மிரட்டல் முறை

அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஒரு கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு அந்தக் கட்சியில் பிரபலங்கள் இணைவது ஒரு வகை. அதிகாரத்தில் உள்ள கட்சி பிரபலங்களை வருமானவரித்துறை, உளவுத்துறை, காவற்றுறை போன்றவற்றால் மிரட்டி தம்முடன் பிரபலங்களை இணைப்பது இன்னொரு வகை. அதிலும் திரைப்படத் துறையை சேர்ந்தவர்களின் திரைப்படங்கள் வெளியில் வராமல் பல் வேறு வழிகளில் தடை போட்டு மிரட்டி கட்சியில் இணைய வைக்கவும் முடியும்.


வந்தது வந்தாய் சிறுநீரக நோயுடன் வந்தாய்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அதிகம் கவனிக்கும் பிரபலம் நடிகர் ரஜனிகாந்த். அவரை தமிழ்நாட்டில் ஆட்சியை முதலில் கைப்பற்ற வைத்து பின்னர் பார்ப்பனப் பெண்ணான அவரின் மனைவியை ஆட்சியில் அமர்த்த சிலர் முயற்ச்சி செய்கின்றார்கள் எனவும் சிலர் கருதினர். அரசியலுக்கு வருவேன் வருவேன் கட்சி தொடங்குவேன் என அடிக்கடி சொல்லி வந்த ரஜனிகாந்த் தன் வயது ஓடிக்கொண்டிருப்பதையோ அத்துடன் தன் உடல் நலம் தேய்ந்து கொண்டிருப்பதையோ கருத்தில் கொள்ளவில்லை. 2021இல் தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம் என இருந்த அவருக்கு அவரது சிகிச்சை செய்யப் பட்ட சிறுநீரகமும் நாட்டில் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோயும் அரசியில் ஈடுபட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது. ரஜனிகாந்த் ஒன்று பாஜகவிற்கு ஆதரவு அறிக்கையாவது விட வேண்டும் இரண்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு கோரிக்கை விட வேண்டும் என பாஜக எதிர்பார்க்கின்றது. பொதுவாக சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுக்க தயக்கம் காட்டும் ரஜனிகாந்த் இங்கும் தயக்கத்தை காட்டுகின்றார். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு தன்னை அது எப்படி பழிவாங்கும் என அவர் கரிசனை கொண்டுள்ளார். கமலஹாசனின் மக்கள் மய்யம் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டால் அதற்கு இருக்கும் செல்வாக்கையும் இழக்க நேரிடலாம். மக்கள் மய்யத்தின் வளர்ச்சி மற்றக் கட்சிகளிலும் பார்க்க திமுகவிற்கு அதிக வாக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.திரையுலகப் பிரபலங்கள்.

விஜய், அஜித் ஆகிய திரையுலகப் பிரபலங்களில் அஜித் எப்போதும் ஒதுங்கி இருக்கவே விரும்புபவர். விஜய் அரசியிலுக்கு செல்லும் நோக்கத்துடன் தான் அவரது திரைப்பட பாத்திரங்களும் அவை பேசும் வசனங்களும் கடந்த சில ஆண்டுகளாக அமைந்திருக்கின்றன. ஆனால் அவர் கட்டியெழுப்பும் விம்பமும் பாஜகவின் கொள்கையும் ஒத்து போகதவையாக உள்ளன. அவரது வீட்டில் திடீர் வருமான வரிச் சோதனை நடந்தது. அவர் பாஜகவில் இணைய மாட்டார். அவரது தந்தையார் எஸ் ஏ சந்திரசேகர் விஜய் பேரில் தொடக்கிய கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என விஜய் அறிவித்துள்ளார். ஏதோ ஒரு வெளி மிரட்டலுக்கு அடிபணிந்துதான் சந்திரசேகர் கட்சி ஆரம்பித்திருக்கலாம். அடுத்த திரைப்படப் பிரபலம் சூர்யா. ஏற்கனவே சூர்யாவிற்கும் அவர் மனைவி ஜோதிகாவிற்கும் தந்தை சிவக்குமாருக்கும் பல கசப்பான மோதல்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. அவரும் பாஜகவில் இணைய மாட்டார். அடுத்த தமிழ்த் திரைப்பட பிரபலமான தனுஷ் இன்னும் பல வெற்றிப்படங்களை தொடர்ந்து தரும் வாய்ப்புள்ளதால் அந்த வாய்ப்பை சர்ச்சைக்குரிய பாஜகவில் இணைந்து கெடுக்க மாட்டார். அடுத்து தெலுங்கரான விஷால் பாஜகவில் இணைவதற்கான கொடுப்பனவு பேச்சு வார்த்தை செய்து கொண்டிருக்கின்றார். ராதிகாவும் அவர் கணவர் சரத்குமாரும் பாஜகவில் இணைவதற்கான பேச்சு வார்த்தையை செய்து கொண்டிருக்கின்றார்கள். ராதிகாவின் நாடகத் தயாரிப்புக்களுக்கு அங்கிருந்து பெரிதாக ஏதும் கிடைக்காது. சரத்குமார் தனது அரசியல் கட்சியை பாஜவுடன் இணைப்பதற்கு பிரதி உபகாரமாக அகில இந்தியப் பதவி ஒன்று பாஜகவில் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜேந்தர், பார்த்திபன், பாக்கியராஜா ஆகியோரையும் பாஜக அணுகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் வடிவேலுவை பாஜகவில் இணைக்க தீவிர முயற்ச்சி நடக்கின்றது. அவர் அரசியலை வெறுப்பவர். அவர் மிரட்டலுக்கு பயந்து ஒரு கட்சிக்காக பரப்புரை செய்ததால் அவர் இழந்த திரைப்பட வாய்ப்பை இன்னும் ஈடு செய்ய அவரால் முடியாமல் இருக்கின்றார்.

வேல் எடுத்து விளையாடும் பாஜக

பாஜகவினர் தமது கட்சியில் இணைக்கத் துடிக்கும் இன்னொரு பிரபலம் முருகன். பாஜக கந்த சட்டிக் கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பை இகழ்ததை அரசியலாக்கி தனது செல்வாக்கை தமிழ்நட்டில் அதிகரிக்க முயல்கின்றது. தமிழ்நாட்டில் முருகனைப் பாதுகாக்க வேலுடன் ஆறுபடை வீட்டிற்கும் பாதயாத்திரை செய்வோம் என சூளுரைத்தனர். திடீரென்று பாஜகவினர் வேல் மீதும் முருகன் மீதும் அதிக அக்கறை காட்டுகின்றனர். வேலுடன் செல்ல ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க அண்ணா திமுக அரசு அனுமதி மறுத்தது. அதன் மூலம் பாஜகவின் சொல்படி ஆடுகின்றது அண்ணா திமுக என்ற குற்றச் சாட்டை பொய்ப்பிக்க அண்ணா திமுக முயல்கின்றது. இரு கட்சிகளும் சேர்ந்து ஆடுகின்ற ஒரு நாடகமாகவும் இது இருக்கலாம். ராமர் ரத யாத்திரை பாஜகாவிற்கு வட மாநிலங்களில் கை கொடுத்து தூக்கி விட்டது போல தமிழ்நாட்டில் வேல் யாத்திரை கை கொடுக்கும் என பாஜக போட்ட திட்டம் நிறைவேறவில்லை.

 

தேர்தலுக்கு முன் வாக்காளர்களை வாங்கி வெற்றி பெறுவது கழகங்களின் பாணி என்றால் தேர்தலின் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வாங்குவது அமித் ஷாவின் பாணி.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...