Wednesday, 20 May 2020

உருகும் ஆர்க்டிக்கில் பெருகும் அமெரிக்க இரசியப் போட்டி


Add caption
அமெரிக்கக் கடற்படையின் ஆறாவது பிரிவைச் சேர்ந்த கப்பல்களும் பிரித்தானியாவின் கடற்படையினரும் இணைந்து 2020 மே மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆர்க்டிக் பனிக்கடல் பிரதேசத்தில் உள்ள பரன்சுக் கடலில் (Arctic Barents Sea) போர் பயிற்ச்சியை மேற்கொண்டன. இரு நாடுகளும் நீர்மூழ்கி எதிர்ப்பு, படைத்துறை வளவழங்கல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு பயிற்ச்சியை மேற்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து மே மாதம் 7-ம் திகதி அதே இடத்தில் இரசியா உண்மையான சுடுகலன்களை பாவித்து ஒரு கடற்போர் பயிற்ச்சியை அங்கு மேற்கொண்டது. பின்னர் அமெரிக்க மற்றும் பிரித்தானியக் கடற்படையினர் தமது பயிற்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பினர். உலகம் வெப்பமாகிக் கொண்டே போவதால் ஆர்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகிக் கொண்டே போக அது கப்பற் போக்குவரத்துச் செய்யக் கூடிய பிரதேசமாகவும், கடலுணவு பெறக்கூடிய பிரதேசமாகவும், எரிபொருள் மற்றும் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கக் கூடிய பிரதேசமாகவும் உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது இதனால் அங்கு ஆதிக்கம் செலுத்த பல நாடுகள் போட்டி போடுகின்றன.

வட துருவத்தில் உள்ள ஆர்க்டிக்

பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசம் ஆர்க்டிக் கண்டம் எனப்படும். பனிப்போரின் பின்னர் தற்போது அமெரிக்கப் படையினர் அதிக அளவில் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நடமாடுகின்றனர். நோர்டிக் நாடுகள் என அழைக்கபடும் டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இரசியாவும், கனடாவும் ஐக்கிய அமெரிக்க்காவும் இந்த ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செய்யப் போட்டி போடுகின்றன. பசுபிக் மாக்கடற் பிராந்தியத்தையும் இணைக்கும் மிகக் குறுகிய கடற்பாதையாக உருகிய ஆர்க்டிக் கடல் உருவெடுத்துள்ளது. அந்தக் கடற்பாதை Northern Sea Route (NSR) என அழைக்கப்படுகின்றது. முன்பு சூயஸ் கால்வாய் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்குமான கடல் பயண நேரத்தைக் குறைத்தது போல Northern Sea Route (NSR)  வட ஆசியாவிற்கும் வட ஐரோப்பாவிற்கும் இடையிலான கடற்பயண் நேரத்தைக் குறைத்துள்ளது. சூயஸ் கால்வாயை ஒட்டிய புவிசார் அரசியல் போட்டி போல் Northern Sea Route (NSR) இலும் ஒரு புவிசார் அரசியல் போட்டி உருவாகியுள்ளது.  2013-ம் ஆண்டில் இருந்து இரசியா பல பில்லியன் டொலர்கள் செலவில் ஏழு படைநிலைகளை உருவாக்கியுள்ளது. சுழியத்திற்கு கீழ் 40பாகை (-40 C) குளிரான கால நிலையுள்ள, அடிக்கடி பனிப்புயல் வீசும் ஆர்க்டிக் பிரதேசத்துக்கு செல்ல எந்த ஒரு கடற்படை வீரனும் விரும்புவதில்லை. 1980இல் இருந்து அமெரிக்க கடற்படையினர் அங்கு தமது நடமாட்டைத்தைக் குறைத்திருந்த தற்போது அங்கு தமது படை நிலைகளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். 2018-ம் ஆண்டு நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பு சுவீடனுடனும் பின்லாந்துடனும் இணைந்து Trident Juncture என்னும் பெயரில் பெரும் போர்ப்பயிற்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

இரசியாவின் கோடிகுவிக்கும் கோடி

பரன்சுக் கடல் இரசியாவின் பின்புறம் போன்றது. அதில் பெரும்பகுதி இரசியாவின் பொருளாதார வலயத்தினுள் வருகின்றது. இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாளான மே 7-ம் திகதி அந்த வெற்றியை ஒன்றிணைந்து பெற்ற அமெரிக்கா, இரசியா, பிரித்தானியா ஆகிய நாடுகள் முறுகல் நிலையில் கொவிட்-19 தொற்று நோய் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மேற்கொண்ட போர்ப்பயிற்ச்சி ஆர்க்டிக் கடலின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தால் அமெரிக்காவினது விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றும் பிரான்சின் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றும் செயற்பட முடியாமல் உள்ளன. ஆர்க்டிக் கரையோரத்தில் 53% இரசியாவிற்கு சொந்தமானது அங்கு இரசியா எரிபொருள் மற்றும் கனிம அகழ்வுகள் மூலம் பெரும் வருவாயை ஈட்டுகின்றது. அங்கு எரிபொருள் ஆய்வு  செய்யும் நிறுவனங்களுக்கு இரசியா நாற்பது பில்லியன் டொலர் பெறுமதியான வரிவிலக்கை வழங்கியுள்ளது.

கடலுரிமை

ஒரு நாட்டின் கரையில் இருந்து 200கடல் மைல்கள் அல்லது 370 கிலோ மீற்றர் தொலைவிலான கடற்பிரதேசம் அந்த நாட்டின் பொருளாதார வலயமாகும். ஒரு நாட்டின் கரையில் இருந்து 12 கடல் மைல்கள் அந்த நாட்டின் இறைமைப் பிராந்தியமாகும். அதற்குள் அந்த நாட்டின் அனுமதி இன்றி கடற்பயணத்தையோ அல்லது வான்பறப்பையோ மற்ற நாடுகள் செய்ய முடியாது. இந்த 12 கடல் மைல்களுக்கு அப்பால் ஒரு நாட்டில் பொருளாதார வலயக் கடற்பரப்பில் மற்ற நாட்டு கடற்கலன்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும். பொருளாதார வலயத்தில் உள்ள வளங்கள் அந்த நாட்டுக்கு மட்டுமே சொந்தமானதாகும். 200 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற் பிரதேசம் பன்னாட்டுக் கடற்பிரதேசமாகும்.

உல்லாசப் பயணமும் நன்னீர் வளமும்

சிறந்த வான்வெளி அவதானிப்பு நிலையம், அரிய உயிரின வகை, வித்தியாசமான கால நிலை, வித்தியாசமான உணவுகள் கொண்ட ஆர்க்டிக் வலயம் சிறந்த சுற்றுலா நிலையமுமாகும். இருபத்தி ஓராம் நூற்றாண்டு நன்நீருக்கான புவிசார் அரசியல் போட்டியை திவிரப்படுத்தும் காலமாகக் கருதப்படுகின்ற வேளையில் உருகும் ஆர்க்டிக் எனப்படும் வட துருவப் பிராந்தியம் சிறந்த நன்னீர் வளமிக்க பெரு நீர் நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. தெற்கு ஆபிரிக்காவில் உள்ள நாடுகள் தமது நாட்டின் நீர்த்தேவையை நிறைவு செய்ய தென் துருவ அண்டார்டிக் பிராந்தியத்தில் இருந்து பனிப்பாறைகளை இழுத்துக் கொண்டு வரத் திட்டமிடுகின்றன. அதே மாதிரி வட துருவத்திலும் செய்ய பல நாடுகள் முயற்ச்சிக்கலாம்.

ஆர்க்டிக் தொடர்பாடலுக்கு இரண்டு அமெரிக்க செய்மதிகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் அமெரிக்காவின் படையினருக்கான் தொடர்பாடல் குறைபாடு ஒன்று உள்ளது. 2018 நேட்டோ அங்கு செய்த போர்ப்பயிற்ச்சியின் போது நோர்வேயினதும் சுவீடனினதும் ஜிபிஏஸ் என்னும் வழிகாட்டல் முறைமையை இரசியா செயற்படாமல் குழப்பியது. அமெரிக்காவின் விண்வெளிப்படை 2020இன் இறுதியில் ஆர்க்டிக் வலயத்தில் அமெரிக்காவின் தொடர்பாடல் தேவைகளை நிறைவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென அமெரிக்கா இரண்டு செய்மதிகளை தனியாக சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. ஒரு நடுநிலையாக இருக்கும் நாடுகளான ஃபின்லாந்தும் சுவீடனும் ஆர்க்டிக் பிரதேசத்தையும் போல்ரிக் கடலையும் தரைவழியாக இணைக்கும் நாடுகளாகும். இதனால் வட ஐரோப்பாவில் நேட்டோவினதும் இரசியாவினதும் போட்டிக்களமாக இந்த இரண்டு நாடுகளும் இருக்கின்றன.

சீனாவின் பனிப்பட்டுப்பாதை

எங்கெல்லாம் கடற்பாதை உள்ளதோ அங்கெல்லாம் துறைமுக அபிவிருத்தி என்னும் பெயரில் தனது ஆதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டும் சீனாவும் ஆர்க்டிக் கண்டத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. ஆர்க்டிக் சபையில் 2007-ம் ஆண்டில் இருந்து ஒரு பார்வையாளராக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஐஸ்லாந்துடன் சீனா ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்து கொண்டு. ஐஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உடைக்கும் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியது. அத்துடன் நோர்வேயின் Spitsbergen தீவில் ஒரு ஆய்வு மையத்தையும் உருவாக்கியுள்ளது. தரைவழிப் பட்டுப்பாதை கடல்வழிப்பட்டுப்பாதை என தனது கொள்வனவுகளுக்கும் விநியோகங்களிற்க்குமான பாதையில் அதிக அக்கறை காட்டும் சீனாவிற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுகிய ஒரு தூர வழி மிகவும் கவர்ச்சிகரமானதாகும். ஆர்க்டிக்கின் ஊடான பாதையின் நீளம் தற்போது பாவிக்கும் பாதையிலும் பார்க்க 30 விழுக்காடு குறைவானதாகும். ஆர்க்டிக் பிராந்திய ஆய்வுகளிற்காக சீனா அறுபது மில்லியன் டொலர்கள் செலவு செய்கின்றது. இது அமெரிக்கா செய்யும் செலவீனத்திலும் பார்க்க அதிகமானதாகும். பன்னாட்டு நியமங்களின் படி ஆர்க்டிக் வலயத்தில் விஞ்ஞான ஆய்வு, கடற்பயணச் சுதந்திரம், வான்பறப்புச் சுதந்திரம், மீன்பிடிச் சுதந்திரம், குழாய்த்தொடர்புச் சுதந்திரம், வள அபிவிருத்தி உரிமம் ஆகியவை தனக்கு வேண்டும் என்கின்றது சீனா.இரசியாவுடன் அமெரிக்கா எல்லையைக் கொண்டுள்ளது என்றால் அது அலாஸ்க்கா பிரதேசத்தில்தான்.  கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததன் பின்னர் இரசியாமீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியர்கள் மத்தியில் அமெரிக்காவிற்கு எதிரான குரோதம் வளரத் தொடங்கியது. “கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது” என்ற குரல் இரசியாவில் ஒலிக்கத் தொடங்கியது. அலாஸ்க்காவை மீளக் கையளிக்கும் கோரிக்கை 37,000 பேர்களால் கையொப்பம் இடப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. “கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது” என்ற பதாகையுடன் பென்குவின் பறவைகள்  பல ஊர்வலம் போவது போல ஒரு படம் கணனியில் இரசியர்களால் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டது. ஆனால் பென்குவின் பறவைகள் ஆர்க்டிக் கண்டத்திலோ அல்லது அலாஸ்க்காவிலோ வாழ்வதில்லை இரசியர்களின் மொக்கை இது என அமெரிக்கர்கள் நையாண்டி செய்தனர். ஆனால் கிறிமியாவை இணைத்ததன் மூலம் ஒரு பெரும் வரலாற்றுத் தவறைச் சீர் செய்த விளடிமீர் புட்டீன் அடுத்த வரலாற்றுத் தவறான அலாஸ்கா விற்பனையையும் சீர் செய்ய வேண்டும் என பல இரசியர்கள் கருதுகின்றார்கள். அலாஸ்க்காவின் முப்பது இரசிய மரபுவழிக் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளன. அலாஸ்க்காவின் ஸ்புரூஸ் தீவு இரசியத் திருச்சபைக்குச் சொந்தமானது என்றும் அதை விற்கவோ அல்லது வாங்கவோ யாராலும் முடியாது என்றும் ஒரு இரசிய சரித்திர அறிஞர் வாதிடுகின்றார். இரசியாவின்  மிக் – 31, ரியூ- 95 ஆகிய போர்விமானங்கள் அலாஸ்க்காவை ஒட்டிய வான்பரப்பில் பறப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது. 2014-ம் ஆண்டு பத்துக்கு மேற்பட்ட தடவைகள் அமெரிக்காவின் F-22 போர்விமானங்கள் இரசிய விமானங்களின் அலைவரிசைகளை குழப்பி திருப்பி அனுப்பியுள்ளன. இரசியா தனது போர்விமானங்களை அலாஸ்க்கா எல்லையை ஒட்டிய வான்பரப்பில் பறப்பதன் மூலம் ஆர்க்டிக் மீதான தனது ஆளுமையை உறுதி செய்ய முயல்வதுடன் கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளையும் செய்கின்றது.வ்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...