Tuesday, 5 May 2020

கொரோனா தடுப்பு மருந்துக்கான போட்டி


மனித உடல் தன்னை நோயில் இருந்து பாதுகாக்கும் முறைமையைக் கொண்டுள்ளது. நமது காயங்களில் இருந்து வரும் சீழ் அல்லது சிதல் எமக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் வித்துடல்களாகும். இரத்தத்தின் வெண்ணணுக்கள், புரதம், எலும்பு மச்சை போன்ற பலவற்றைக் கொண்டது மனிதனின் நோய் எதிர்ப்பு முறைமை புதிதாக தாக்க வரும் நோய்க்கிருமியை இனம் கண்டு அழிப்பதற்கு மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு முறைமைக்கு பயிற்ச்சி கொடுப்பதே தடுப்பு மருந்தின் நோக்கம். மனித உடலுக்குள் செலுத்தப்படும் தடுப்பு மருந்து அம்மனிதனின் நோய் எதிர்ப்பு முறைமைக்கு புதிய கிருமியின் மூலக்கூறுகளை முதலில் அறிமுகம் செய்யும். பின்பு அதை தாக்கி அழிக்கும் பயிற்ச்சியையும் அது கொடுக்கும். நோய் எதிர்ப்பு முறைமை நோய்க்கிருமையை இனம் காணுதல் மற்றும் அழித்தல் பற்றிய தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு உண்மையான நோய்க்கிருமி தாக்க வரும் போது அதற்கான “சிறப்புப் படையணியை” நோய் எதிர்ப்பு முறைமை உருவாக்கி ஆக்கிரமிக்கும் கிருமியுடன் போர் புரிந்து அழிக்கும். உலகெங்கும் பரவியுள்ள கொவிட்-19 தொற்று நோய்க்குக் காரணமான கொரொனா நச்சுக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து மிகவும் இலாபகரமான ஒன்று என்பதால் அந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதற்கான போட்டி 2020 ஜனவரியில் ஆரம்பித்து விட்டது.

பல படி முறைகள்
புதிய ஒரு நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்குவது பல படிமுறைகளைக் கொண்டது:
1. நோய்க்கிருமியை இனம் காணுதல்
2. அதன் ஆக்கக்கூறுகளை ஆய்வு செய்தல்
3. அதை அழிப்பதற்கான மருந்தைத் திட்டமிடல்
4. மருந்தை உருவாக்குதல்
5. விலங்குகளிற்கு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்தல்
6. சிறிய எண்ணிக்கையிலான மனிதர்களுக்கு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்தல்
7. உலகெங்கும் உள்ள பல எண்ணிக்கையிலான மனிதர்களில் ஆய்வு செய்தல்
8. மருந்தைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெறுதல்

அவசரமாகச் செய்ய வேண்டும்
மேலுள்ள படிமுறைகளைச் செய்து முடிக்க பல ஆண்டுகள் எடுப்பதுண்டு. ஆனால் 185 நாடுகளில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களைப் பலி எடுத்துக் கொண்டிருக்கும் கொரொனா நச்சுக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து அவசரமாக தேவைப்படுகின்றது. நோய்ப்பரம்பலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால் ஐக்கிய அமெரிக்காவிற்கு மட்டும் ஒரு மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடும் 26மில்லியன் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மூன்று வாரத்தில் எட்டு இலட்சம் கோடி ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது. உலக வங்கி உலகப் பொருளாதாரம் கொரொனா நச்சுக் கிருமியின் தாக்கத்தால் 2020இலும் 2021இலும் மொத்தம் ஒன்பது ரில்லியன் டொலர் இழப்பீட்டைச் சந்திக்கும் என எதிர்வு கூறியுள்ளது. உலக வரலாற்றில் ஒரு நிதியமைச்சர் தொற்றுநோயால் ஏற்படப்போகும் பொருளாதார வீழ்ச்சியை நினைத்து மன முடைந்து தற்கொலை செய்தது ஜேர்மனியில் நடந்தது. இரசியாவில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்ததம் காரணமாக 3 மருத்துவமனை ஊழியர்கள் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்தனர். இதனால் உலகப் பொருளாதாரச் சரிவை நிறுத்த அவசரமாக தடுப்பு மருந்தை கண்டு பிடித்து அதை உலகெங்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

முந்தித் தாவிய ஒக்ஸ்போர்ட்
ஒஸ்ரேலியாவின் மேரிலாண்ட்டில் உள்ள நோவாவக்ஸ் என்ற நிறுவனம், இன்னொரு ஒஸ்ரேலிய நிறுவனமான மெசொபிலாஸ்ற், அமெரிக்காவின் மசாச்சுசெற் மாநிலத்தில் உள்ள மொடேனா நிறுவனம், அமெரிக்க பிஸ்பேர்க் பல்கலைக்கழகம், பேலர் மருத்துவக் கல்லூரி என 115இற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரச அமைப்புக்கள் கொரோனா நச்சுக்கிருமிக்கு எதிரான மருந்தைக் கண்டு பிடித்து அறிமுகம் செய்யும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிலையம் ஓராண்டுக்கு முன்னரே கொவிட்-19 நோய்க்கான கொரோன நச்சுக் கிருமியின் முதற் தலைமுறைக் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தது. மனிதர்களுக்கு அதைக் கொடுத்து ஆய்வு செய்தும் இருந்தது. அதனால் 2020 மே மாதம் ஆறாயிரம் பேருக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

மனிதனின் நெருங்கிய உறவினரில் ஆய்வு
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அரசுகள் அனுமதித்தால் 2020 செப்டம்பர் மாதம் சில மில்லியன் பேர்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கலாம் எனச் சொல்கின்றார்கள். இந்த நிலைக்கு மற்ற மருந்து கண்டு பிடிப்பு போட்டியாளர்கள் வர பல மாதங்கள் எடுக்கும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தை அமெரிக்காவின் ரொக்கி மலை ஆய்வுகூடத்தில் உடல் அமைப்பில் மனிதர்களை ஒத்துள்ள ஆறு rhesus macaque குரங்குகளுக்கு கொடுத்து பின்னர் அவற்றின் உடம்பில் பெருமளவு கொரொனா நச்சுக் கிருமிகள் அந்த ஆறு குரங்குகளுக்கும் வேறு குரங்குகளுக்கும் செலுத்தப்பட்டன. 28 நாட்கள் கழித்து அந்த ஆறு குரங்குகளும் நலமுடனிருக்க தடுப்பு மருந்து கொடுக்காத குரங்குகள் கொவிட்-19 நோக்கு உள்ளாகின. 2020 மே மாதம் முதல் வாரத்தில் ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் தங்கள் மருந்தை வேறு பல விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து அவர்களின் அபிப்பிராயத்தைக் கோரவுள்ளனர்.

நோய் தொடர்ந்தால்தான் மருந்தை ஆய்வு செய்யலாம்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஒருவர் கொவிட்-19 நோய் தொடர்ந்து பரவுவதை விரும்பவர்களாக நாம் இருக்கின்றோம் என நகைப்பாகக் கூறினார். நோய் வரமுன் ஒருவருக்கு தடுப்பு மருந்தைக் கொடுக்க வேண்டும் பின்னர் அவருக்கு நோய் வரும்வரை காத்திருக்க வேண்டும். அவருக்கு செயற்கையாக கொரோனா நச்சுக் கிருமிகளை ஆறு குரங்குகளுக்கு கொடுத்தது போல் கொடுப்பதை மருத்துவ ஒழுக்க நெறி அனுமதிக்காது. அதனால் நோய் வேகமாகப் பரவிவரும் பகுதியில் வாழும் மக்களிடையேதான் மருந்தைக் கொடுத்து ஆய்வு செய்ய முடியும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தை உலகின் மிகப் பெரிய ஆய்வு நிறுவனமாகவும் இலாப நோக்கற்றதாகவும் கட்டி எழுப்பியவர் பேராசிரியர் ஹில் என்பவர் ஆகும். சீனாவில் ஒரு புதிய நச்ச்சுக்கிருமி தாக்கத் தொடங்கி விட்டது என்றவுடன் ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் மற்ற நச்சுக்கிருமிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு முழுமையாக புதிய கொரொனா நச்சுக் கிருமிக்கான மருந்தைக் கண்டு பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். சீனாவின் கான்சீனா என்ற நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் மருந்தை சீனாவில் பெருமளவில் ஆய்வு செய்ய முடியாத அளவிற்கு கொவிட்-19 தொற்று நோய் அங்கு குறையத் தொடங்கிவிட்டது.

அமெரிக்கா என்றால் இலாபம், இலாபம்
ஒக்ஸ்போர்ட் பலகலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள மருந்தாங்கல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவில்லை. பெரும்பாலான அமெரிக்க மருந்தாக்கல் நிறுவனங்கள் தாம் ஆய்வில் பங்கேற்பதாயில் முழு உலகிற்குமான விநியோக உரிமை தமக்கு வேண்டும் என அடம் பிடிப்பார்கள். அதன் மூலம் அவர்களால் பெரும் இலாபம் ஈட்ட முடியும். கொவிட்-19 நோய் வருமுன்னர் அதைத் தடுக்கும் மருந்தை கண்டு பிடிப்பதில் உலக நிறுவனங்கள், அரசுகள், பல்கலைக்கழகங்கள் காட்டும் அக்கறை நோயால் பீடிக்கப்பட்ட நோயாளியைக் காப்பதற்கான மருந்தைக் கண்டு பிடிப்பதில் காட்டவில்லை. கொவிட்-19 நோயாளிகள் என்பது 4 மில்லியன் மக்களைக் கொண்ட சந்தை ஆனால் தடுப்பு மருந்து உலக மக்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது. உலக மக்கள் தொகை ஏழரை பில்லியன் ஆக தற்போது இருக்கின்றது. அது மிகவும் இலாபம் தரக்கூடிய சந்தை.

இந்தியா என்றால் இலகு
உலகில் இந்தியா குறைந்த செலவில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இருக்கின்றது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய நோய் தடுப்பு மருந்தாக்கல் நிறுவனமான சேரம் நிறுவனத்துடன் (Serum Institute of India) இணைந்து தடுப்பு மருந்த உற்பத்தி செய்ய முடிவு செய்தது. இந்தியாவின் சேரம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரில் ஒருவரான அதர் பூர்ணவாலா ஒக்ஸ்போர்ட் கண்டு பிடித்த மருந்தை உடனடியாகவே உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டார். பொதுவாக ஒரு புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் அதற்கான அரச அனுமதிகள் பெற்ற பின்னரே பெருமளவில் அந்த மருந்து உற்பத்தி செய்யப்படும். இதற்காக அவர் முப்பது மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளார். அரச அனுமதி கிடைக்காவிடில் அவ்வளவு பணத்தையும் இழக்க வேண்டி வரும் எனதையும் பொருட்படுத்தாமல் அவர் உற்பத்தி செய்துள்ளார். சேரம் நிறுவனம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் சொந்தமான நிறுவனமாகும். அதனால் அங்கு முடிவுகளை எடுப்பது இலகுவானதாக இருந்தது. இந்தியாவில் இன்னும் பரவல் நிலை அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு ஆய்வுகளும் இலகுவாக இருக்கும். மருந்து கொடுத்தவர்களுக்கு ஏதாவது பக்க விளைவு வந்தால் அதற்கு கொடுக்கும் இழப்பீடும் மலிவானதாக இருக்கும்.

இணையவெளித் திருட்டு முயற்ச்சி

பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் செய்யும் ஆய்வுகளை இணையவெளியூடாக திருடும் முயற்ச்சிகள் செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. குற்றம் சாட்டு விரல்கள் இரசியா, ஈரான், சீனா ஆகிய நாடுகளை நோக்கி நீள்கின்றன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரித்தானிய உளவுத்துறையுடன் இணைந்து இணையவெளித் திருட்டு முயற்ச்சிகளை முறியடிக்கின்றது. 

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹில் அவர்கள் தனது ஜேன்னர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து உலகெல்லாம் துரிதமாக உற்பத்தி செய்து பாவிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார்.  ஆனாலும் ஆகக் குறைந்தது 2020 செப்டம்பர் வரை உலகம் காத்திருக்க வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...