Wednesday, 25 November 2020

தைவானைச் சுற்றி ஆசியப்படை வலுப்பெருக்கல் போட்டி

 

இந்திய-சீன மற்றும் இந்திய-பாக்கிஸ்த்தான் படைத்துறைப் போட்டி தீவிரமடைவதற்கான காரணம் அமெரிக்கா தைவானைப் பாதுகாப்பதற்கு செய்யும் நடவடிக்கைகளாகும். அமெரிக்கக் கடற்படையின் Rear Admiral Michael Studeman 21/11/2020 தைவானிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டதாக தைவானில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. இவர் அமெரிக்கப் படையின் ஆசிய பசுபிக் கட்டளையகத்தின் உளவுப் பிரிவின் உயர் அதிகாரியாவார்.  இதற்கு முன்னர் அமெரிக்கப் படையினர் தைவானியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. கடந்த ஓராண்டாக அமெரிக்கா பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைக்கலன்களை தைவானிற்கு விற்பனை செய்தது சீனாவைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

1995-96 தைவான் நெருக்கடி

1994 பில் கிளிண்டன் தைவானிய அதிபர் லீ டெங் கூ அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்தார். சீனாவுடனான உறவைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க நாடாளமன்றம் 1995 மே மாதம் மக்களவையில் 396-1 என்ற பெரும்பான்மையுடனும் மூதவையில் 97-1 என்ற பெரும்பான்மையுடனும் அவருக்கு பயண அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. 1979 ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க சீன அரசுறவை நிலை நிறுத்திய போது தைவானும் சீனாவின் ஒரு பகுதி என ஒத்துக் கொள்ளப்பட்டது. 1995 ஜூலை தான் படித்த கோர்ணல் பல்கலைக் கழகத்தில் தைவானின் மக்களாட்சி பற்றி தைவானிய அதிபர் லீ டெங் கூ உரையாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை இலக்கு வைத்து 1995-ஜூலை முதல் தொடர் ஏவுகணைச் சோதனைகடற்படைப் போர் ஒத்திகை போன்றவற்றைச் செய்தது. சீனப் படைகள் ஃபிஜீயன் மாகாணத்திற்கு பெருமளவில் நகர்த்தப்பட்டனர்அவர்களை வைத்து ஈரூடக தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டது. தைவானை கைப்பற்றும் நகர்வுகளைச் சீனா செய்வதை அறிந்த அதிபர் பில் கிளிண்டன் USS NIMITZ, USS INDEPENDENT என இரு விமானம் தாங்கிக் கப்பல்களின் தலைமையில் இரு பெரும் கடற்படைப்பிரிவுகளை தைவான் நீரிணைக்கு அனுப்புகின்றார். அந்த இரண்டு கடற்படைப் பிரிவுகளையும் தம்மால எதிர் கொள்ள முடியாது என உணர்ந்த சீனா தனது தைவான் ஆக்கிரமிப்பு முயற்ச்சியைக் கைவிட்டதுஇது சீனாவின் மூக்குடைபட்ட ஒரு நிகழ்வாகும். சினம் கொண்ட சீனா அவசரமாக இரசியாவிடமிருந்து பல தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள், எழுபத்தாறு SU-30-MKK, இருபத்தினான்கு SU-30-MK2 ஆகிய போர்விமானங்கள் போன்றவற்றை வாங்குகின்றது. அமெரிக்காவிற்கு இணையாக சீனா தனது படைவலுவை உயர்த்த முடிவு செய்து. அதன் நீண்ட காலத் திட்டத்தால் அது இன்று அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய ஒரு படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா இன்று சீனாவின் வளர்ச்சியை இட்டு கரிசனை கொண்டுள்ளது. சீனாவின் படைத்துறை வளர்ச்சி அது தென் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனதாக்கி அங்கு தன் படை நிலைகளை நிறுவ வழிவகுத்தது. அதைத் தடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அந்த தீவுகளுக்கு மேலாக அமெரிக்கா தனது போர் விமானங்களைப் பறக்க விடுவதும் அத்திவுகளுக்கு அண்மையில் தனது கடற்படைக் கலன்களை அனுப்புவதும் மட்டுமே அமெரிக்காவால் செய்ய முடிந்தது. இது பிலிப்பைன்ஸ் ஆட்சியாளர்களை அமெரிக்காமீது அதிருப்தி கொள்ள வைத்தது.

சீனாவின் அயல் நாடுகளின் கரிசனை

சீனாவின் கிழக்குப் பக்கம் ஜப்பானும் தென் கொரியாவும் சீன அச்சுறுத்தலைச் சமாளிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றன. ஒன்று தனது படைவலிமையைப் பெருக்குவது இரண்டாவது அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது. மேற்குப் புறம் இந்தியா சீனப் படைத்துறை வளர்ச்சியால் அதிக கரிசனை கொள்கின்றது. சீனா அருணாச்சலப் பிரதேசம் தனது நாட்டின் ஒரு பகுதி எனச் சொல்கின்றது. ஆரம்பத்தில் இந்தியா இரசியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பையும் இரசியாவிடமிருந்து பெருமளவு படைக்கலன் கொள்வனவையும் செய்கின்றது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் செய்யும் அத்து மீறல்களால் இந்தியா தனது பாதுகாப்பையிட்டு முழுமையான மனநிறைவு அடையவில்லை. அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பு உருவாக்கி அதிகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் படை வலிமை அதிகரிப்பால் பாக்கிஸ்த்தானைச் சிந்திக்க வைக்கின்றது. அதுவும் தன் படைவலிமையை அதிகரிக்கின்றது. இந்தியா தனக்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள படை வலிமை இடைவெளியை அமெரிக்க உறவால் நிரப்ப முயல பாக்கித்தானும் தனக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள படைவலிமை இடைவெளியை சீன உறவால் நிரப்ப முயல்கின்றது.

குவாட் உரையாடல்

சீனாவின் பொருளாதாரபடைத்துறைதொழில் நுட்ப வளர்ச்சியும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் ஜப்பானையும் ஒஸ்ரேலியாவையும் கரிசனை கொள்ள வைக்கின்றது. இதனால் ஜப்பான் நான்குமுனை உரையாடல் (Quadilateral Dialogue) என்னும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட உரையாடலைத் தொடக்குகின்றது. இதன் நோக்கம் இந்து மாக்கடலிலும் பசுபிக் மாக்கடலிலும் சுதந்திரமான கடற்போக்குவரத்தை உறுதி செய்ய நான்கு நாடுகளும் ஒத்துழைத்தல் எனச் சொன்னாலும் அதன் உண்மையான நோக்கம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் படைவலிமையை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பாகும்.

தைவான் சீனாவின் மணிமுடி

சீனாவின் தொழில்நுட்ப வலுவின்மையான புள்ளிகளில் semiconductors உற்பத்தியும் ஒன்று. தகவல் தொழில்நுட்பத்தின் உயிர்நாடியான அந்தத் துறையில் அமெரிக்கா, தென் கொரியா, தைவான் ஆகியவை உலகில் முன்னணியில் திகழ்கின்றன. தைவானை சீனாவின் ஒரு பகுதியாக்குதல் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.  உலகெங்கும் துறைமுகங்களைத் தேடித் தேடி அபிவிருத்து செய்யும் சீனாவிற்கு 15 துறைமுகங்களைக் கொண்ட தைவான் பெரும் வாய்ப்பாகும். தைவானை சீனா கைப்பற்றினால் பசுபிக் பிராந்தியத்தில் அதன் ஆதிக்க வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும். 2019 ஜனவரியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் தைவான் சீனாவினது ஒரு பகுதி என்றும் தேவை ஏற்படின் படைகளைப் பாவித்தாவது அதை சீனாவின் ஒரு பகுதியாக்குவோம் என முழங்கினார். தைவானின் தனித்துவத்தை காப்பாற்றுவோம் என அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தது. அது தைவானியர்களின் சுதந்திரத்தில் கொண்ட அக்கறையால் அல்ல பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே.

சீனாவிற்கு எதிராக இந்தியாவை இழுத்த அமெரிக்கா

தைவானை நோக்கி சீனாவின் படைநகர்வுகளிற்கு பதிலடியாக 2018-ம் ஆண்டு அமெரிக்கா மூன்று தடவை தனது கடற்படையை சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் உள்ள தைவான் நீரிணைக்கு அனுப்பவேண்டியிருந்தது. சீனா தைவானைக் கைப்பற்ற முயற்ச்சித்தால் ஒரு அமெரிக்க சீனப் போர் நிச்சயம் ஊருவாகும். இதில் சீனாவிற்கு பாதகமான சூழலை ஏற்படுத்த இந்தியா சீனா எல்லையில் சீனாவிற்கு எதிராக படை நகர்த்தலைச் செய்ய வேண்டும் என்ற திட்டம் இரகசியமாக ஆலோசிக்கப்பட்டது. சீனா தைவான் போரில் ஈடுபடும் வேளையில் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்திய கைப்பற்ற திட்டமிட்டது. அமித் ஷா பாக்கிஸ்த்தானும் சீனாவும் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரை எப்படியும் மீட்போம் என இந்தியப் பாராளமன்றத்தில் முழங்கினார். அதை எப்படியோ அறிந்த சீனா தைவான் போரின் போது இந்தியா அப்படி ஒரு படை நகர்வை மேற்கொண்டால் பாக்கிஸ்த்தானும் சீனாவும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக ஒரு போர் செய்ய முடிவு செய்துள்ளன. பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரினூடாக சீன அமெரிக்க பொருளாதாரப் பாதை செல்கின்றது.

இரு குழுக்கள்

பாக் + சீனா ஒரு புறம் அமெரிக்கா+ஜப்பான்+இந்தியா+ஒஸ்ரேலியா+ தென் கொரியா + வியட்நாம் இன்னொரு புறம் என்ற போட்டி நிலை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. குவாட் பாதுகாப்பான கடற் போக்கு வரத்தை உறுதி செய்தல் என்னும் பெயருடன் ஒரு படைத்துறை ஒத்துழைப்பு. இது நேட்டோ போல் நெருக்க மாக இருக்காது. அமெரிக்கா நேட்டோ நாடுகளைப் பாதுகாக்க எடுத்த பொறுப்பைப் போல் சீனாவின் அயல்நாடுகளை சீனாவிடமிருந்து பாதுகாக்க முழுப்பொறுப்பு எடுக்காது. ஆனால் தனது தீவிர ஒத்துழைப்பை வழங்கும்.

இரசியாவின் நிலைப்பாடு

2014-ம் ஆண்டு கிறிமிய இணைப்பின் பின் நெருங்கி வந்த இரசிய சீன உறவு 2019இல் இருந்து நெருக்கம் குறைந்து கொண்டு போகின்றது. மத்திய ஆசியாவில் சீனா செய்யும் நகர்வுகளை இட்டு இரசியா கரிசனை கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு வழங்க ஒத்துக்கொண்ட எஸ்-400 என்ற வான் பாதுகாப்பு முறைமையை விநியோகிப்பதை தாமதப் படுத்தியுள்ளது. சீனாவின் நட்பு நாடாக வட கொரியாவும் கம்போடியாவும் மட்டும் இருக்கின்றன.

ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா

அமெரிக்க இந்திய படைத்துறை ஒத்துழைப்பில் ஜோன் பைடனும் அதிக அக்கறை காட்டுவார். டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக வர்த்தகப் போர் செய்ய தயாராக இருந்தார். பைடன் அதில் அக்கறை காட்டமாட்டார். ஆனால் இந்தியாவின் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக நிற்பார். கமலா ஹரிஸ் இந்தியப் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இந்துத்துவாவாதிகளைச் சினமடையச் செய்யலாம். சீனாவுடன் டிரம்பின் வர்த்தகப் போர். பைடனும் தொடர்வார். ஆனால் அமெரிக்காவிற்கு பாதகம் ஏற்படாத வகையில் அவரது நடவடிக்கைகள் இருக்கும். தைவானை அவரும் காப்பாற்றுவார். டிரம்ப் இருந்திருந்தால் தைவானில் இரகசியமாக இருக்கும் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப் பட்டிருக்கலாம். ஜோன் பைடன் உலக தாராண்மைவாத்தை கையில் எடுப்பாரானால் ஆதிக்கப் போட்டி மற்றும் படைத்துறைப் போட்டி ஒரு புறம் இருக்க வர்த்தக ஒத்துழைப்பை சுமூகமாகச் செய்யும் முயற்ச்சியில் இறங்குவார்ஆசியான் நாடுகளும் சீனா, ஒஸ்ரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுமாக இணைந்து மொத்தம் பதினைந்து நாடுகள் Regional Comprehensive Partneship (RCEP) என்னும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்தது. இதுவும் ஆதிக்கப் போட்டி ஒரு புறமிருக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமூகமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வளர்ச்சி சீனாவின் ஆதிக்க மனப்பான்மையை குறைக்க உதவாது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஊரை அடிச்சு உலையில் போடுவது என்றால் சீனாவின் வெளியுறவுக் கொள்கை “உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய், என் விட்டுக்கு வரும்போது என்ன கொண்டு வருவாய் என்பதே”


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...