Monday, 23 November 2020

அவியுமா அமித் ஷாவின் பருப்பு?

  


இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சதிஸ்கர், ஜார்கண்ட், கேரளா மஹாராஸ்ட்ரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆட்சி நடக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்தை பாஜகவின் பிடியில் வைத்திருக்க மஹராஸ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதன் ஆட்சி நடக்க வேண்டும். இந்த மூன்று மாநிலங்களும் இந்தியாவில் பொருளாதார அடிப்படையில் பெரிய மாநிலங்களாகும். மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக இருக்கின்ற போதிலும் மொத்த பொருளாதார உற்பத்தி அடிப்படையில் மஹாரஸ்ட்ரா முதலாம் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியப் பாராளமன்றத்தின் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவைப் பெற மாநில சட்ட சபைகளிலும் பாஜக வலிமை பெற்றிருக்க வேண்டும். 

தளபதி அமித் ஷா

குஜராத்தில் மூன்று தடவை பாரதிய ஜனதாக் கட்சியை ஆட்சியில் அமரச் செய்து புகழ் பெற்ற நரேந்திர மோடியின் தளபதியாக விளங்கியவர் அமித் ஷா. மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகிய போது மாநில அரசியல்வாதியாக இருந்த அமித் ஷா 2014-ம் ஆண்டு பாஜகவின் தேசியத் தலைவரானார். தற்போது மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருக்கின்றார். இந்தியாவின் உள் துறை அமைச்சர் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, காவல் துறை, மாநில அரசுகள், ஆட்சி மொழி ஆகியவற்றிற்கு பொறுப்பான அமைச்சாகும். மாணவப் பருவத்திலேயே மதவாத ஆர் எஸ் எஸ் அமைப்பில் இணைந்த அமித் ஷா தனது 33வது வயதில் குஜராத் சட்ட சபை உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து பாஜகவின் தேர்தல் கடமைகளில் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆரம்ப கால அரசியல் செயற்பாடே காங்கிரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களை பாஜக பக்கம் இழுத்து பாஜகவின் உறுப்பினராக்குவதே. அதை குஜராத் முழுவதும் வெற்றிகரமாக செயற்படுத்தியதால் குஜராத் மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு 2001-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இன்றுவரை அமித் ஷா குஜராத்தில் காங்கிரசுக் கட்சியை தலையெடுக்க அனுமதிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் எதிர்கட்சியில் இருந்து ஆட்களை தமது கட்சிக்கு இழுப்பதில் மட்டும் அமித் ஷா வல்லவரல்லர். தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை பெரிய அளவில் கட்சி மாறச் செய்வதிலும் திறன் மிக்கவர். இதற்காக அவர் பஞ்சதத்திரத்தில் கூறப்படும் சாம, பேத, தான, தண்டம் ஆகியவற்றை பயன்படுத்துவார் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்தியாவில் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் வருமான வரித்துறை, சிபிஐ என்னும் சட்ட அமூலாக்கத் துறை மற்றும் பல உளவுச் சேவைகளை தமது தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள் என்ற குற்றச் சாட்டும் பரவலாக உண்டு. ஒரு நடிகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இல்லாவிடில் அவரது வீட்டில் வருமான வரி திடீர் சோதனை, அவரது திரைப்படத்திற்கான தடை போன்றவை மேற்கொள்ளப்படுவதாகவும் நம்பப்படுகின்றது.

மேற்கு வங்காளம்.

மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு நடந்த சட்ட சபைக்கான தேர்தலில் 294 தொகுதிகளில் பாஜகவால் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற திரிணாமுல் காங்கிரசுக் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் பெற்ற இரண்டு தொகுதிகளில் இருந்து 18 தொகுதிகளை 2019இல் பெற்றது பெரிய முன்னேற்றம் என்றாலும் நாடாளவிய அடிப்படையில் பாஜக பெற்ற வெற்றியுடன் பார்க்கையில் அது காத்திரமான வெற்றி அல்ல. மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜீ தலைமையிலான திரிணாமூல் காங்கிரசின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர அமித ஷா மாதம் இரண்டு தடவையும் பாஜகவின் செயற் தலைவர் ஜே பி நட்டா மாதம் மூன்று தடவையும் மேற்கு வங்கத்திற்கு பயணம் செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் சதிகள் நிறைந்த தலையீட்டின் பின்னர் மேற்கு வங்க அரசியலில் இனவாதமும் மதவாதமும் அங்கு தீவிரமடைந்து வருகின்றது. திரிணாமூல் காங்கிரசில் உள்ள இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல்வாதிகள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைகின்றார்கள். அதே வேளை சோனியாவின் காங்கிரசுக் கட்சியில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் அதில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைகின்றார்கள். இந்த இரு வகையான தாவல்களில் 2021 ஏப்ரல் மாதம் நடக்க விருக்கும் மேற்கு வங்க சட்ட சபைக்கான தேர்தல் முடிவுகள் தங்கியிருக்கின்றன.

நடந்து முடிந்த பிஹார் தேர்தல்

பிஹார் சட்ட சபைத் தேர்தலில் வீசிய பாஜக சார்பு அலை மேற்கு வங்கம் வரை பரவும் என பாஜகவினர் நம்புகின்றனர். ஆனால் பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறவில்லை. பிஹாரில் அமித் ஷாவின் தந்திரம் முதற்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு நிதிஸ்குமாருடன் அவருக்குத் தான் முதலமைச்சர் பதவி என்ற உறுதி மொழியை வழங்கி அவருடன் கூட்டணி அமைத்த போது பாஜக 110 தொகுதிகளிலும் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப் பட்டது. அதே வேளை பாஜக் இன்னும் ஒரு கூட்டணியை லோக் ஜன் சக்தி கட்சியுடன் செய்து கொண்டது. அதன் படி பாஜக போட்டியிடும் இடங்களில் லோக் ஜன் சக்தி கட்சி போடியிட மாட்டாது. பாஜகவிற்கு அது ஆதரவு வழங்கும் ஆனால் நிதிஸ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து எல்லா தொகுதிகளும் பரப்புரை செய்யும். இந்த இரட்டை முக கூட்டணியால் பாஜக 74 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உறுதி மொழி வழங்கிய படி நிதிஸ்குமார் முதலமைச்சராக்கப்பட்டார். ஆனால் இன்னும் ஓராண்டுக்குள் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றும். பாஜகவின் இரட்டை முகக் கூட்டணி அண்ணா திமுகாவிற்கும் காங்கிரசுக் கட்சி தன் வலிமைக்கு அதிக தொகுதிகளில் போட்டியிட்டு கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுகவிற்கும் சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்துள்ளன. 

கேரளா

கேரளாவின் சட்டசபைக்கான தேர்தல் 2021 ஜூன் மாதம் நடக்கவிருக்கின்றது. 2016-ம் ஆண்டு நடந்த கேரள சட்ட சபைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 14% வாக்குகளைப் பெற்றிருந்த போதும் 140 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அது வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்திற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளிலும் போட்டியிட்ட போதும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதன் பின்பு பாஜக கேரளாவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது என்றாலும் 2021 ஜூனில் நடக்கவிருக்கும் தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற வாய்ப்புண்டு.

தமிழ்நாடு

2021 மே மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றாலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக உறுதியாக நிற்கின்றது. அதற்காக பல திரையுலகப் பிரபலங்களை தமது கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளது. அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைப்பதும் அறுபது தொகுதிகளில் போட்டியிடுவதும் அதன் முதல் இலக்கு. பின்னர் மாற்றுக் கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 20விழுக்காட்டுக்கு அதிகமான உறுப்பினர்களை பாஜகவிற்கு தாவச் செய்து தமதி கட்சியைப் வலிமையக்குவதும் ஆட்சியைப் பிடிப்பதும் பாஜகவின் அடுத்த இலக்கு. அதை மனதில் கொண்டு அமித் ஷா 2020 நவம்பர் 21-ம் திகதி தமிழ்நாடு சென்றுள்ளார். அண்ணா திமுக இருபது தொகுதிகளுக்கு அதிகமான தொகுதிகளை பாஜகவிற்கு கொடுக்க தயாரில்லை. அண்ணா திமுகவின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் தாம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களுக்கு எதிராக வருமான வரித்துறை பாயாமல் இருக்க சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் அண்ணா திமுகவின் இடைநிலைத் தலைவர்களும் தொண்டர்களும் 2019-ம் ஆண்டு நடந்த பாராளமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் தாம் வெற்றி பெற்றதற்கு பாஜகவுடன் அண்ணா திமுக அமைத்த கூட்டணிதான் காரணம் என நம்புகின்றார்கள்.

அமித் ஷாவின் தமிழ்நாட்டு வியூகம்

பாஜகவின் திட்டங்களுள் முதலாவது திமுகவை தேர்தலில் வெற்றியடையாமல் செய்ய வேண்டும். இரண்டாவது அண்ணா திமுகவை அடுத்துக் கெடுக்க வேண்டும். 2021 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அமித் ஷாவிற்கு தெரியும். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாநிதியின் மூத்த மகனான முக அழகிரியை இரண்டாவது மகன் மு க ஸ்டானிற்கு எதிராக திருப்பவும் அமித் ஷா முயல்கின்றார். திமுகவின் தேர்தல் வெற்றிகளுக்கு காரணமாக இருக்கும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேலைகளை இல்லாமற் செய்ய வேண்டும். திமுகவில் இருந்து சிலரை கட்சி தாவச் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் திமுகவை வெற்றியடையாமல் தடுக்க வேண்டும். 2026-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் கழகங்களில் இருந்து முக்கிய தலைவர்களைப் பிரித்து பாஜகவுடன் இணைத்தும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டு தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவது அமித் ஷாவின் வியூகத்தில் முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டிற்கு நவம்பர் 21-ம் திகதி சென்ற அமித் ஷா அங்கு நடந்த அரச விழாவில் திமுகவை வாரிசுக் கட்சி எனச் சாடினார். அதற்கு பதிலடி கொடுத்த திமுக அரச செலவில் நடக்கும் அரச நிகழ்வை கட்சி அரசியல் பரப்புரைக் களமாக உள் துறை அமைச்சர் ஷா பயன்படுத்தினார் என்றது; அண்ணா திமுகவில் உள்ள வாரிசு அரசியல் அமித் ஷாவிற்கு தெரியவில்லையா என்றது; உள்நாட்டு விற்பனை வரியில் தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நிதியை ஏன் பாஜக அரசு வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பியது; பாஜகவும் அண்ணா திமுகவும் இணைந்து செய்தவை இந்தி திணிப்பு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு என தனது விவாத த்தை முன் வைத்தது. இரு தரப்பு விவாதங்களைப் பார்க்கும் போது திமுக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அமித் ஷா தோல்வியடைந்துள்ளார். அமித் ஷாவால் பாஜகவுடனான அண்ணா திமுக கூட்டணி தொடரும் என்பதை மட்டும் உறுதியாக்க முடிந்தது. அவர்கள் கேட்ட 60 தொகுதிகளுக்கு அண்ணா திமுக உடன்படவில்லை. கடந்த முறை தமிழ்நாட்டுக்கு அமித் ஷா பயணம் செய்த போது துக்ளக் குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் எதையும் அவர் செய்து முடிக்கவில்லை என்ற சினம் அமித் ஷாவிற்கு இருந்ததாம். செய்திகளில் அடிப்பட்டது ரஜனிகாந்தை அமித்ஷா சந்திக்கவில்லை.

குஜராத்தில் கட்சித் தொண்டனாக இருந்து ஊர் ஊராகச் சென்று பாஜக அரசை அமைத்தது போல் தமிழ்நாட்டில் செய்ய உள்துறை அமைச்சர் அமித ஷாவிற்கு நேரமில்லை. இந்தியா முழுவதும் மட்டுமல்ல கஷ்மீர் எல்லைகளிலும் அவரது கவனம் சிதறிக் கிடக்கின்றது. அதனால் தமிழ்நாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் பாஜக கைப்பற்றும் வாய்ப்பு இல்லை.

 அமித் ஷாவால் நடிகர் ரஜனிகாந்தையோ கருணாநிதியின் மகன் அழகிரியையோ சந்திக்க முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பாஜகவில் இணைந்ததாகவும் தெரியவில்லை.  பாஜகவின் வாக்கு வங்கி சிறிதளவு அதிகரித்திருக்கலாம். ஆனால் அண்ணா திமுகவின் வாக்கு வங்கி அமித் ஷா முன் அதன் தலைவர்கள் குனிந்ததால் குறைந்திருக்கும். வ்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...