Monday, 5 October 2020

அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்தியாவின் பாதுகாப்பு

  


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் ஒரு நாடு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளும். சீனா சிறிது சிறிதாக இந்தியாவின் நிலப்பரப்பை படைக்கலன்களைப் பாவிக்காமல் இரகசியமாக ஆக்கிரமித்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சீனப் போரியல் நிபுணர் “போர்க்கலையின் உச்சம் எனப்படுவது போர் செய்யாமல் எதிரியை விழுத்துவது” என்றார். சீனா கைப்பற்றிய இந்திய நிலங்களை ஒரு போரால் மட்டுமே இந்தியாவால் மீளக் கைப்பற்ற முடியும். ஆனால் போர் தொடுத்தால் பல விதத்திலும் பெரும் இழப்புக்களை இரண்டு நாடுகளும் சந்திக்க வேண்டி வரும். சீனாவும் இந்தியாவும் அணுக்குண்டை தாம் முதலில் பாவிப்பதில்லை என்ற கொள்கையைக் கொண்டன. அணுக்குண்டு பாவிக்காமல் போர் செய்தாலும் இரு நாடுகளும் பெரும் ஆளணி இழப்புக்களை, உட்கட்டுமான அழிவுகளை, பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதுடன். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் போர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் தரை, கடல், வான், விண்வெளி, இணையவெளி ஆகிய தளங்களில் உக்கிரமாக நடக்கும்.

பொருளாதார வலிமை மிக்க சீனா

இந்தியாவின் வான் படையினரும் தரைப்படையினரும் சீனா இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதை தடுக்கும் முயற்ச்சியில் வெற்றியடைந்தாலும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உட்பட பல் வேறுபட்ட ஏவுகணைகளை சமாளிப்பது இந்தியாவிற்கு முடியாத காரியமாகலாம். சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவின் பாதுகாப்புச் செலவிலும் பார்க்க இரண்டரை மடங்காக இருக்கின்றது. சீனாவிடமிருக்கும் 3.4ரில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கையிருப்பு இந்தியாவினதிலும் பார்க்க எட்டு மடங்காகும். 2008-ம் ஆண்டு உலக பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேன்மை மிக்கதாக அமைந்தது. 2008இன் பின்னர் உலகப் பொருளாதார வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவினுடையதாக இருந்தது. அதே போல 2020-ம் ஆண்டு கொவிட்-19 தொற்றுநோயின் பின்னர் பல முன்னணி நாடுகளின் பொருளாதாரம் தேய்வடையும் போது சீனாவினுடைய பொருளாதாரம் வளர்ச்சியடைகின்றது. 2008இன் பின்னர் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது போல் 2020இன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதற்கான எடுத்துக் காட்டாகத்தான் இந்தியாவுடனான எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. சீனாவின் பொருளாதாரம் வளரும் போது அதற்கு உரிய மரியாதை உலக அரங்கில் செலுத்தப்பட வேண்டும் என சீன ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். 2017-ம் ஆண்டே சீனா உலக மேடையை முழுமையாக எடுக்க வேண்டும் என சீன அதிபர் தெரிவித்திருந்தார். சீனா தனது ஒரு ரில்லியன் டொலர் Road & Belt Initiative மூலம் உலக ஆதிக்கத்தின் மையப்புள்ளியை அத்லாண்டிக்கில் இருந்து பசுபிக்கிற்கு மாற்ற நினைக்கின்றது என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர். 

கடலில் விழுமா சீனா?

சீனாவின் எரிபொருள் தேவையில் 87விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சீனாவால் 77 நாட்களுக்கு பாவிக்கக் கூடிய எரிபொருளை மட்டும் இருப்பில் வைத்திருக்க முடியும். சீனாவின் எரிபொருள் வழங்கலைத் துண்டிக்க சீனாவிற்கு எதிராக இந்தியாவால் இரண்டு கடல் முற்றுகைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து செய்யும் விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் சீனக் கப்பல்கள் மலக்காய் நீரிணையூடாக பயணிப்பதைத் தடுத்தல்.  இரண்டாவது பாக்கிஸ்த்தானின் குவாடர் துறை முகத்தையும் அதை ஒட்டியுள்ள கரையோரப் பிரதேசங்களை முற்றுகையிட வேண்டும். அதனால் சீனாவிற்கு செல்லும் எரிபொருள் மற்றும் பல மூலப் பொருள்கள் செல்வதையும் சீனாவில் இருந்து அதன் ஏற்றுமதிகள் உலகெங்கும் செல்வதையும் இந்தியா தடுக்க வேண்டும். இதற்கு பாக்கிஸ்த்தானின் கடற்படையை முற்றாக அழிக்க வேண்டும். அதனால் பாக்கிஸ்த்தான் ஒரு முழுமையான போரில் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கும். ஆகையால் இரண்டாவது முற்றுகை தரைப்போரில் இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம். அந்தமான் நிக்கோபார் தீவில் இந்தியாவின் கடற்படை வலிமை சீனக் கடற்படை மலாக்கா நீரிணையை தாண்டி வர முடியாதபடி செய்யும் அளவிற்கு இருக்க வேண்டும். ஒஸ்ரேலியாவின் கொக்கோஸ் தீவில் {Cocos (Keeling) islands} இந்தியா துரிதமாகப் படைக்கலன்களை குவிக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். உலக அரங்கில் துணிச்சலாக முடிவெடுக்கக் கூடிய பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆதரவாக களம் இறங்கும் முடிவை எடுக்கச் செய்தால் இந்து மாக்கடலில் உள்ள பிரெஞ்சு தீவுகளில் இருந்து இந்தியக் கடற்படைக்கு பிரெஞ்சுக் கடற்படை உதவி செய்யும் நிலை உருவாக்கலாம்.

படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைய வேண்டும்.

அடுத்த இருபது ஆண்டுகளில் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு சாதகமாகத்தான் இருக்கும். அப்படியான ஒரு நிலையில் இந்தியாவின் நிலங்களை சிறிது சிறிதாக சீனா அபகரிப்பதை தடுப்பதற்கு இந்தியா தன்னை படைக்கல அடிப்படையிலும் அரசுறவியல் அடைப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தியா பொருளாதார அடிப்படையில் சீனாவிலும் வலிமையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்தியா தன் படைத்துறை வலிமை  சீனாவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்தியா பல பொருளாதார தியாகங்களைச் செய்ய வேண்டும்.ன்ச்அரசுறவியல் அடிப்படையில் இந்தியா தன்னை வலிமைப்படுத்தச் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும். இந்திய சீனப் போர் நடக்கும் போது பாக்கிஸ்த்தானும் நேரடியாக போரில் இறங்கலாம் அல்லது இந்தியாவிற்கு பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சீனாவிற்கு சாதகமாக போரைத் திருப்ப முயலலாம். இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிப்பதை நிறுத்த இந்தியாவின் படைத்துறை சீனாவிலும் வலிமையானதாக இருக்க வேண்டும் அல்லது இந்தியா சீனாவிற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய ஒரு படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல சிறிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் ஒன்றியத்திற்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட படியால் எந்த ஒரு நாடும் அந்த நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. ஜப்பான் அடிக்கடி வலியுறுத்தும் குவாட் என்னும் அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியாவைக் கொண்ட படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதற்கு இந்தியா காட்டி வந்த தயக்கம் அந்தப் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியது. அதே வேளை தென் கொரியாவும் வியட்னாமும் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்புகின்றன.

இரசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் இணைந்த படைக்கல உற்பத்தியும்

இரசியாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். அதனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்குதல் செய்வதை தடுக்கவோ சமாளிக்கவோ முடியும். சீன பல புதிய படைக்கலன்களை இரசியாவிடமிருந்தே வாங்குகின்றது. இரசியாவும் இந்தியாவும் இணைந்து புதிய படைக்கல உற்பத்தியில் ஈடுபட வேண்டும் அப்படி உற்பத்தி செய்யும் படைக்கலன்களை ஒரு நாட்டின் அனுமதியின்றி மற்ற நாடு எந்த ஒரு நாட்டுக்கும் விற்பனை செய்ய முடியாது என்ற ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி இந்த அடிப்படியிலேயே செய்யப்பட்டது. இரசிய தொழில்நுட்பங்களை இரசியாவிடமிருந்து வாங்கும் படைக்கலன்களில் இருந்தே சீனா பெறுகின்ற படையால் இது சீனாவை படைக்கல உற்பத்தியில் பின்னடைவைச் சந்திக்க வைக்கும். உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400ஐ இந்தியாவிற்கு விற்பனை செய்ய இரசியா முன்வந்துள்ளது. அதை சீனாவிற்கு விற்பனை செய்வதும் தடைப்பட்டுள்ளது. இந்தியா அடுத்த தலைமுறை வான்பாதுகாப்பு முறைமைகளை இரசியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய முடியும்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு இந்தியாவை அமெரிக்கா முன்னணி பாதுகாப்பு பங்காண்மை நாடாக அறிவித்தது. சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்தியா அமெரிக்காவுடன் The Logistics Exchange Memorandum Agreement ( LEMOA) என்னும் உடன்படிக்கையை பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செய்து கொண்டமை சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் அமெரிக்கப் படைத் தளங்களை இந்தியாவும் இந்தியப் படைத்தளங்களை அமெரிக்காவும் தேவையேற்படும் போது பாவிக்க முடியும். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் Communications Compatibility and Security Agreement (COMCASA) என்னும் பாதுகாப்புத் தகவல் பரிமாற்ற ஒபந்தத்திலும் கைச்சாத்திட்டன. அடுத்ததாக இரண்டு நாடுகளும் Basic Exchange and Cooperation Agreement (BECA) என்னும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளன. இதன் மூலம் நிலத்தோற்றம் தொடர்பாக செய்மதி மூலம் திரட்டப்படும் துல்லியத் தகவல்களை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் எதிரியின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை துல்லியமாக திரட்டி அவற்றின் மீது எறிகணைகள் ஏவி அழிக்க முடியும். எதிரியின் படை நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

அரசுறவியல் மேம்பாடு

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் போர் நடக்கும் போது அமெரிக்காவும் ஜப்பானும் மேலும் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கச் செய்யும் அளவிற்கு இந்திய அரசுறவுகள் மேம்பட்டவையாக இருக்க வேண்டும். சீனாவுடன் போர் செய்யும் இந்தியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வரும் அளவிற்கு சீனாவிற்கு நட்பு நாடுகள் இல்லை என்பது இந்தியாவிற்கு வாய்ப்பானதாகும். வியட்னாம் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை பெரிதும் விரும்புகின்றன. வியட்னாமுடனான ஒத்துழைபு சீனாவை ஆத்திரப் படுத்தும் என இந்தியா இதுவரை தயக்கம் காட்டியது.

இந்தியாவில் அமெரிக்கப் படைத்தளம்.

கொல்கத்தாவில் அமெரிக்க கடற்படைத்தளமும் வான்படைத்தளமும் அமைத்தால் இந்திய சீனப் படைத்துறைச் சமநிலை சீனாவிற்கு மிகவும் பாதகமாக அமையும். ஜப்பானும் தென் கொரியாவும் தமது நாடுகளில் அமெரிக்கப் படைத்தளஙக்ளை அமைக்க அனுமதித்துள்ளன. இதனால் அந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலோ உலக அரங்கின் அவற்றின் தனித்துவமான கொள்கைகளிலோ விட்டுக்கொடுப்புக்களை பெரிதாகச் செய்வதில்லை. இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பு பகுதியான சில்கிரி இணைப்புப் பாதையை சீனாவல் அசைக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தலம். அமெரிக்காவின் F-35 போவிமானங்கள் ஐம்பதையாவது இந்தியா வாங்க வேண்டும். அதற்கு ஏற்ப இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கப் படவேண்டும்.

பல் துறைப் படைக்கலன்கள்

ஆழ்கடலில் செயற்படக் கூடிய கடற்படை, அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் முனை அனுபவம் கொண்ட படைத்துறை, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் படைக்கலன்களை வாங்கக் கூடிய ஒரே நாடு என்ற நிலைமை இந்தியாவிற்கு சாதகமாக இருக்கின்றன. சீனாவின் மிகப் பெரிய பின்னடைவு பல ஆண்டுகளாக போர் முனை அனுபவம் இல்லாத படைத்துறை என்பதே. இந்திய சீனப் போர் என ஒன்று வரும்போது இந்தியாவின் செய்மதிகளை சீனா அழித்து இந்தியப்படையினரைன் தொடர்பாடல்களை சிதைக்கலாம். பதிலுக்கு இந்தியாவும் சீனச் செய்மதிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும். இணையவெளித்தாக்குதல் பலவற்றை சீனா செய்யலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியைப் பெறவேண்டும். சுவீடனின் Gripen E fighter விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்தவை என நிருபணமானவை. சீனாவின் உளவு விமானங்களை இந்தியா செயலிழக்கச் செய்வதற்கு Gripen E fighter வாங்க வேண்டும். சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் அவற்றின் ஏவுநிலைகளையும் போரின் ஆரம்பத்திலேயே இந்தியா அழிக்கும் அளவிற்கான தகவல்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா பெறவேண்டும். அவற்றை அழிக்க தரையில் இருந்தும் வானில் இருந்தும் பெருமளவு ஏவுகணைகளை போர் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்தியா வீச வேண்டும். அதற்கு வேண்டிய உதவிகளை இந்தியாவிற்கு இரகசியமாக வழங்க அமெரிக்கா தயங்காது. இந்திய சீனப் போர் என்று ஒன்று வந்தால் சீனாவின் பொருளாதார நிலைகளை இந்தியா துவம்சம் செய்யும் என்ற உணர்வை சீனாவிற்கு இந்தியா ஏற்படுத்த வேண்டும். சீனா இந்தியாவிற்கு ஆறுபது பில்லியன் டொலருக்கும் அதிமான ஏற்றுமதியை இந்தியாவிற்கு செய்கின்றது.

இந்தியா மீதான அச்சத்தை சீனாவிற்கு ஏற்படுத்துவது இலகுவான ஒன்றல்ல அதே வேளை அது இயலாத ஒன்று அல்ல. இப்போதிருக்கும் இந்தியாவையிட்டு சீனா கலவரப்படவில்லை. ஆனால் எதிர்கால இந்தியாவையிட்டு சீனா அச்சமடைந்துள்ளது. இந்தியா தனது தற்போதைய நிலையை மாற்றாவிடில் அடுத்த பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு சீனாவிடமிருந்து பல பிரச்ச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...