Wednesday, 23 September 2020

தமிழீழக் கட்சிகளும் இந்தியாவும்

  

அதிமுகவை பாஜக ஆட்டுவிப்பது போல் இந்திய ஈழத் தமிழ் கட்சிகளை ஆட்டுவிக்கப் போகின்றது. அண்ணா திமுகாவை கட்டுப்பாட்டுக்குள் பாரதிய ஜனதாக் கட்சி எடுத்தது போல் ஈழத் தமிழ் கட்சிகளை இந்திய மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க  முயல்கின்றது

தற்போது பாஜகவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் அண்ணா திமுக இருக்கின்றது. நடுவண் அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கின்றது. அன்று ஜிஎஸ்ரி வரி முதல் இன்று வேளாண் சட்டங்கள் வரை தமிழ்நட்டுக்கான நன்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் அண்ணா திமுக பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  

செல்வி ஜெயலலிதா பிழைக்க மாட்டார் எனத் தெரிந்தவுடன் பாஜக அரசு அண்ணா திமுகாவிற்குள் பிளவைக் கொண்டு வருகின்றது. திருமதி சசிகலா நடராஜ சிறையில் அடைக்கப்படுகின்றார். அநாதை போல் நின்ற பன்னீர்செல்வதிற்க்கு பாஜக கை கொடுக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமியா பன்னீர்செல்வமா என்ற பிரச்சனை வந்தபோது இருவருக்கும் இடையில் அவர்களே உடன்பாட்டை செய்து வைக்கின்றனர். உடன்பாடு செய்த பாஜாக அண்ணா திமுகவின் சட்டாம் பிள்ளையாகிவிட்டது.

ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் இரண்டு மாடுகளான பன்னீரையும் எடப்பாடியையும் தமிழக ஆட்சி என்னும் வண்டியை இழுக்கும் இரு மாடுகளாக்கிவிட்டு வண்டி ஓட்டியாக பாஜக தன்னை ஆக்கிக் கொண்டது. இரண்டு மாடுகளுக்கும் மூக்கணாங்கயிறு தேவைப்படவில்லை ஆடிட்டரின் பூநூலே போதுமானதாக இருக்கின்றது. வண்டி ஓட்டியில் கையில் சாட்டைகளாக சிபிஐ என்னும் நடுவண் அரசின் புலனாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை இருக்கின்றன. பாஜகவுடனான நிர்ப்பந்தக் கூட்டணியால் 2019 மே மாதம் நடந்த இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் அண்ணா திமுக தோல்வியைச் சந்தித்து ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பாஜகவின் தந்திரம்: நானே பிளவு படுத்தி பின் நானே ஒன்று படுத்தி சட்டாம் பிள்ளையாவது.

ஈழத்திலும் பிளவு,

2020இல் நடந்த இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட்டன. யாரும் எதிர்பாராத வகையில் திரு விக்கினேஸ்வரன், திருமதிஅனந்தி சசிதரன் போன்றோர் கட்சிகளை தொடக்கினர். சுரேஸ் பிரேமச்சந்திரன் புது டில்லி போய் வந்தவுடன் ஒரு கூட்டணி ஒன்று உருவானது. பல கட்சிகள், மதப் பிளவு, சாதிப் பிளவு பிராந்தியப் பிளவுகள் ஈழத்தமிழ் மக்களிடையே உருவானது. 2020 நாடாளுமன்றத் தேர்தலில் என்றுமே இல்லாத அதிக அளவு கட்சிகள் மற்றும் குழுக்கள் போட்டியிட்டதை பார்த்தோம்.

ரணிலின் கையில் அதிகாரம் இருந்த போது அவரின் கைப்பிள்ளையான சுமந்திரன் எல்லாவற்றையும் கட்டி ஆண்டார். இப்போது ரணில் செல்லக்காசாகிய நிலையில் சுமந்திரனே கட்டிவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். இப்போது இந்தியா எல்லோரையும் ஒன்று படுத்துவது போல் நாடகமாடி களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான களமாக தியாகி திலீபனின் நினைவேந்தல் பாவிக்கப்படுகின்றது.

 கொழும்பைக் கையாள மீண்டும் தமிழர்கள் வேண்டும்

இந்தியாவிற்கு உகந்த ஆட்சி கொழும்பில் இல்லை. பல தமிழ் கட்சிகளுக்கு பிரச்சனை கொடுக்கும் ஆட்சியாக ராஜபக்சேக்களின் ஆட்சி இருக்கின்றது. அவர்களின் பல அரசியல் நடவடிக்கைகளுக்கு அரச படையினலும் காவற்றுறையினரும் ஈடுபடலாம். தற்போதைய பாராளமன்றக் காலம் முடிந்த பின்னர் அடுத்த தேர்தலில் மக்கள் முன் போய் தங்கள் சாதனை எனச் சொல்லும் படி எதையும் ஈழத் தமிழ்கட்சிகளால் செய்ய முடியாது. பன்னாட்டு புதிய தாராண்மைவாத ஒழுங்கு இப்போது செயலிழந்துள்ளது. அதனால் பன்னாட்டரங்கிலும் ஈழத் தமிழ் கட்சிகளுக்கு ஆறுதல் இல்லை. அநாதைகளாக அவர்கள் இருக்கின்ரார்கள்.

சீனா சரணம் கச்சாமி நிலையில் இலங்கை

மோசமடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் கொவிட்-19 தொற்று நோய் தாக்கத்தின் பின்னர் மேலும் மோசமடைந்துள்ளது. அதற்கு இலகு கடன் சீனாவால் மட்டுமே கொடுக்க முடியும். இந்தியாவே சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள வங்கிகளில் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய் என்ற வெளிநாட்டுக் கொள்கையுடைய சீனா இலங்கைக்கு கடன் கொடுத்து அதை தன் பொறிக்குள் சிக்க வைத்துக் கொள்ளும்.

சீனாவிடம் கடன் பட்டு இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் இலங்கை சீனாவுடன் இணைந்து செயற்பட்டால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவிற்கு தமிழர்கள் தேவைப்படும். எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களை பல கூறுகளாகப் பிரித்து கையாண்டது. அவ்வப்போது அவர்களை ஒன்றுபடுத்துவது போல் நாடகமும் ஆடியது. பின்னர் அவர்களது படைக்கலன்களைப் பறித்தெடுத்தது. அதன் திருத்திய பதிப்பின் முதலாம் அத்தியாயத்தை இப்போது இந்தியா எழுதத் தொடங்கிவிட்டது. தமிழ்க் கட்சிகளை ஒன்று படுத்துவது போல் இந்தியா களத்தில் இறங்கியுள்ளது. 2021 மே மாதத்திற்கு முன்னர் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமனத்திற்கான தேர்தலில் பாஜக எப்படியாவது கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என துடிக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு தான் ஆதரவு போல இனி வரும் மாதங்களில் பாஜக சில போலி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மோடி எனது நண்பர் என்றவரும் மோடி என் பின்னால் இருக்கின்றார் என்பவரும் மோடியைப் புகழ்ந்து கருத்துக்களை இனி வரும் சில மாதங்களில் வெளிவிடுவார்கள். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...