Monday, 25 May 2020

பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா?

2019 ஓகஸ்ட் மாதம் 6-ம் திகதி இந்திய அரசியலமைப்பில் கஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கும் இன்ஹ்டிய அரசியலமைப்பின் 370வது பிரிவை இரத்துச் செய்யும் சட்டத்தை இந்தியப் பாராளமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீர் பிரதேசமும் சீன வசமுள்ள கஷ்மீர் பிரதேசமும் இந்தியாவின் ஒருமித்த பகுதிகள் என்றார். 2020 ஜனவரியில் இந்திய படைத் தளபதி மனோஜ் நரவானே இந்தியப் பாராளமன்றம் அனுமதித்தால் தாமது படையினர் பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரைக் கைப்பற்றத்தயார் என்றார். 2020 பெப்ரவரி 23-ம் திகதி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தியா பாக்கிஸ்த்தான் ஆக்கிரமித்திருக்கும் கஷ்மீரை “மீளக் கைப்பற்றுவது” செய்யக் கூடிய ஒன்று ஆனால் இலகுவானதல்ல என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் இந்தியா செய்ய வேண்டி படை நடவடிக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன:
1. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் தனது அமெரிக்கத் தயாரிப்பு F/A-18 Super Hornet விமானங்களுடனும் மற்ற போர்க்கப்பல்களுடனும் அரபிக்கடலில் செயற்பட்டு பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகை செய்ய வேண்டும்.
2. F/A-18இல் இரசிய இந்திய கூட்டுத்தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைளைத் தாங்கி நிற்கும்.
3. ஐம்பதாயிரம் இந்தியப் படையினர் T-90, T-72 ஆகிய போர்த்தாங்கிகளுடன் தானாகவே செலுத்தும் தென் கொரியாவின் கே-9 வஜ்ரா எறிகணைகளுடனும் பிரெஞ்சு ரஃபேல் விமானங்களின் ஆதரவுடனும் எல்லை தாண்டிச் செல்ல வேண்டும்
4. ரஃபேல் விமானங்கள் இஸ்ரேலியத் தயாரிப்பு லேசர்-வழிகாட்டி குண்டுகளை பாக்கிஸ்த்தானின் படைக்கலக் கிடங்குகள் மீது வீச வேண்டும்.
5. இரசியவின் எஸ்யூ-30எம்கேஐ விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை எதிரி இலக்குகள் மீது வீச வேண்டும்.
இந்தியப் படை நடவடிக்கைகளுக்கான பாக்கிஸ்த்தானின் எதிர்வினையையும் இண்டியன் எக்ஸ்பிரஸ் வரிசைப்படுத்தியது:
1. பாக்கிஸ்த்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலை இந்திய எதிர்கொள்ளவேண்டும்.
2. பாக்கிஸ்த்தானுடன் எல்லாக்காலமும் நண்பனாக இருக்கு சீனா இந்தியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க இந்தியப் படைகள் மீது தாக்குதல் செய்யும்.

வளரும் இந்தியாவால் தேயும் பாக்கிஸ்த்தான்
கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையிலான படைவலிமை இடைவெளி மட்டுமல்ல பொருளாதார வலு இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. உலகிலேயே அதிக அளவு செலவில் படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா இருந்து வருகின்றது.

பாஜகவின் பெரிய கஷ்மீர் கனவு
நேருவின் தலையில் சுதந்திரப் போராட்ட வீர்ர் என்ற மகுடமும் இந்திரா கந்தியின் தலையில் பங்களாதேச விடுதலை என்ற மகுடமும் இருப்பது போல் நரேந்திர மோடியின் தலையில் கஷ்மீரை முழுமையாக மீட்ட வீரர் என்ற மகுடம் சூட்ட பாரதிய ஜனதாக் கட்சி விரும்பலாம். அவர்களின் திட்டம் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரும் அதனுடன் இணைந்த கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசமும் இந்தியாவிற்கு சொந்தமாக வேண்டும் என்பதே. பாக்கிஸ்த்தானிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க 2020 மே 16-ம் திகதி பாக்கிஸ்த்தானிய அதிபர் கில்ஜிட் பலிஸ்டானில் தேர்தல் நடத்துவதற்கான அரச ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி 24-06-2020 அங்கு தேர்தல் நடத்தப்படும். அது இந்தியாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் எனச் சொல்லி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசத்தில் சீனாவின் உதவியுடன் ஐந்து அணைக்கட்டுக்கள் கட்டப்படுவதையும் இந்தியா ஆட்சேபித்துள்ளது. மோடியின் அரசு இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியாவிற்கான கால நிலை அறிக்கை ஒளிபரப்பும் போது பாக்கிஸ்த்தான் கைப்பற்றியுள்ள கஷ்மீரையும் உள்ளடக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. அதில் காட்டப்படும் வரைபடத்தில் இந்தியாவுடன் முழுக் கஷ்மீரும் இருக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கஷ்மீரின் வரலாறு: ஆக்கிரமிப்பும் விலை போதலும்
கி.மு. 3ம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியால் ஸ்ரீநகர் உருவாக்கப்பட்டது. அசோகருக்கு பின்னர் ஜலோகா எனும் மன்னன் ஆண்டான். இக்காலத்தில் புத்தமதம் பரவலாக பின்பற்றப்பட்டது. கி.பி.210 வரை இருந்த குஷாணர்கள் ஆட்சி காலத்தில் புத்த மதம் மேலும் வேரூன்றியது. 6வது நூற்றாண்டில் ஹீனர்கள் காஷ்மீரை தமது பிடிக்குள் கொண்டுவந்தனர். கி.பி. 627ல் துர்பலா வர்தனா எனும் மன்னன் இப்பகுதியை தனது திருமண சீதனமாக பெற்றான். இந்த மன்னன் காலத்தில் பல இந்து கோவில்கள் கட்டப்பட்டன. 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காஷ்மீருக்கு இந்து மதத்தை பரவலாக்கிட வருகை புரிந்தார்.கி.பி. 1546ல் அக்பர் பேரரசர் காஷ்மீரை முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தார். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான் ஆட்சியின் பொழுது இசுலாம் வலுவாக காஷ்மீரில் காலூன்றியது. 1751ல் ஆஃப்கன் அரசர்களின் பிடியில் காஷ்மீர் சென்றது. பின்னர் 1789ல் சீக்கியர்கள் காஷ்மீரை கைப்பற்றினர். 1846 போரில் சீக்கியர்களை பிரிட்டஷ் படை வென்றது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் பொழுது பிரிட்டஷார் 75 இலட்சம் ரூபாயை கோரினர். இந்த பெரும் தொகையை தர இயலாத சீக்கிய மன்னன் காஷ்மீரை பிரிட்டஷாருக்கு கொடுத்தான். காஷ்மீரை நிர்வகிப்பதில் பல இன்னல்கள் ஏற்பட்டதால் பிரிட்டஷார் இப்பகுதியை டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங் எனும் மன்னனிடம் 100 இலட்சம் ரூபாய்க்கு விற்றனர். அப்பொழுது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி குலாப்சிங் பிரிட்டஷாருக்கு வரிகளை கட்டிவிட்டு காஷ்மீருக்கு மன்னனாக தொடர்ந்தான். குலாப்சிங் வழியில் இரண்பீர்சிங் (1857-85) , பிரதாப்சிங் (1885-1925) மற்றும் ஹரிசிங் (1925-47) ஆகியோர் காஷ்மீரை ஆண்டனர்.

கஷ்மீர் பிரிவும் ஆக்கிரமிப்பும்
இந்திய உபகண்டத்தை பிரித்தானியர் ஆண்டபோது இருவகையாக அதைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஒன்று நேரடி ஆட்சி மற்றது சிற்றரசர்கள் மூலமான ஆட்சி. சிற்றரசர்கள் மூலம் ஆளப்பட்ட பிரதேசங்கள் Princley States (சமஸ்த்தானங்கள்) என அழைக்கப்பட்டன. இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் சுதந்திரமடைந்த போது 565 சிற்றரசுகள் இருந்தன. பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் பிரிந்த போது இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாக்கிஸ்த்தானுடன் இணைவதா என்பதை அந்த சிற்றரசர்கள் முடிவு செய்யலாம் என பிரித்தானியா அறிவித்தது. பிரித்தானியாவின் நேரடி ஆட்சியில் உள்ள பிரதேசங்களில் இந்துக்களைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசங்கள் இந்தியாவுடனும் இஸ்லாமியர்களைப் பெரும்பானமையினராகக் கொண்ட பிரதேசங்கள் பாக்கிஸ்த்தானுடனும் இணைவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்களைப் பெரும்பன்மையினராகக் கொண்ட ஜம்மு-கஷ்மீரை அப்போது ஹரி சிங் என்னும் இந்து சிற்றரசர் ஆண்டு கொண்டிருந்தார். மற்ற இந்தியர்களிலும் பாக்கிஸ்த்தானியர்களிலும் வேறுபட்ட தனித்துவமான கலச்சாரத்தையும் மொழியையும் கஷ்மீரியர்கள் கொண்டிருந்தனர். பிரித்தானியா இந்திய உபகண்டத்தில் இருந்து வெளியேறியபோது கஷ்மீரை ஆண்டு கொண்டிருந்த ஹரி சிங் அதை ஒரு தனிநாடாக வைத்திருக்க முடிவு செய்தார். அதை பிரித்தானியா விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டது. பின்னர் பாக்கிஸ்த்தான் கஷ்மீர் மீது படையெடுக்க பிரித்தானியா தூண்டியது. பாக்கிஸ்த்தானியப் படையெடுப்பை சமாளிக்க முடியாத ஹரி சிங் இந்திய தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவிடம் உதவி கோரினார். கஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என நேரு சொல்ல ஹரி சிங் அதை ஒத்துக் கொண்டார். மற்ற இந்திய மாநிலங்களிலும் பார்க்க அதிக அதிகாரம் கொண்ட மாநிலமாக கஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் கஷ்மீரைக் கைப்பற்ற போர் புரிந்தன. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டது. ஐகிய நாடுகளின் பொதுச்சபை கஷ்மீர் தொடர்பாக 1948 ஏப்ரலில் நிறைவேற்றிய தீர்மானம் 47இன் படி பாக்கிஸ்த்தானையப் படையினர் கஷ்மீரில் இருந்து வெளியேவேண்டும், இந்தியா மட்டுப்படுத்தப் பட்டபடையினரை மட்டும் வைத்திருக்கலாம், இந்தியா கஷ்மீரில் அதன் எதிர்காலம் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

மூன்று நாடுகளின் கட்டுப்பாட்டில் கஷ்மீர்
கஷ்மீரின் ஜில்ஜிட்-பலிஸ்த்தான், அஜாத் கஷ்மீர் ஆகிய பிரதேசங்கள் பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ளன. ஜம்மு, லதக், கஷ்மீர் பள்ளத்தாக்கு ஆகிய பிரதேசங்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அக்சாய் சின், ரான்ஸ்-கரக்கொரம் ஆகிய பிரதேசங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதில் அக்சாய் சிங் இந்திய-சீனப் போரின்போது சீனாவால் கைப்பற்றப்பட்டது. ரான்ஸ்-கரகொரம் பாக்கிஸ்த்தானால் சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

சூழலை இந்தியா சாதமாக நினைக்கின்றதா?
2020 ஏப்ரில் மாதம் ஏசியா ரைம்ஸில் சீனா தைவானை ஆக்கிரமிக்க காலம் கனிந்துள்ளது என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அமெரிக்கா கோவிட்-19 தொற்றுநோயால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தைவானைக் கைப்பற்ற வேண்டும் என சீனாவில் சிலர் கருதுகின்றனர். முதன்மை நாடு ஒன்று சிக்கலில் இருக்கும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி இன்னொரு முதன்மை நாடு மூன்றாம் நாடு ஒன்றை ஆக்கிரமிக்க முடியுமா என்பதற்கு 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்ததை உதாரணமாகப் பார்க்கலாம். 1962-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16-ம் திகதி முதல் 28-ம் திகதிகவரி கியூப ஏவுகணை நெருக்கடி உருவானது. 1962 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி சீனா இந்தியா மீது படையெடுத்தது. அமெரிக்கா கியூபாவில் இரசியா நிறுத்தி வைத்துள்ள அணுக்குண்டுகளை காவிச்செலும் ஏவுகணை அகற்றும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் அமெரிக்க இரசிய அணுப்படைக்களப் போர் உருவாகும் என்ற சூழலில் இந்தியாவைப் பாதுகாக்க யாரும் வரமாட்டாரகள் என்ற எண்ணத்துடன் சீனா இந்தியாவை ஆக்கிரமித்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கெனடி இந்தியத் தலைமை அமைச்சர் நேருவுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைத் தான் செய்வதாக வாக்குறுதியளித்தார். பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் இருந்து இந்தியப் படைகளுக்கு தேவையான படைக்கலன்களும் குளிர்கால ஆடைகளும் அவசரமாக இந்தியாவில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. நேரு 350 அமெரிக்கப் போர்விமானங்கள் இந்தியாவிற்கு வந்து சீனர்களுக்கு எதிராக தாக்குதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். அமெரிக்கா இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பின் ஊடாக சீனாவிற்கு தொடர்ச்சியாக பல அழுத்தங்களைப் பிரயோகித்த போது சீனா ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்து கஷ்மீரில் ஒரு சிறு உயர் மலைப்பிரதேசத்தை தவிர தான் கைப்பற்றிய ஏனைய இடங்களில் இருந்து வெளியேறியது. 1962இல் இந்தியாவைக் காப்பாற்றியது போல் அமெரிக்கா தைவானைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கலம். அதிலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தைவான் மீது அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார். சீனா தைவான் மீது போர் தொடுத்தால் அந்த சூழலைப் பயன்படுத்தி இந்தியா கஷ்மீரைக் கைப்பற்ற முயற்ச்சிக்கலாம். தைவானில் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டிருக்கும் சீனாவால் பாக்கிஸ்த்தானைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.

இந்தியாவிற்கான காலம் கனிகின்றதா?
இந்தியாவிலும் பார்க்க அதிகஅளவு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் பாக்கிஸ்த்தானிடமிருந்து இந்தியா தன்னை இரசியாவிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் எஸ்-400-ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் பாதுகாக்கலாம். அத்துடன் பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு வீசினால் தானும் பாக்கிஸ்த்தான் மீது அணுக்குண்டு வீசுவேன் என மிரட்டலாம். ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமெரிக்கா செய்யும் சமாதான முயற்ச்சி வெற்றியளித்தால் அமெரிக்காவிற்கு பாக்கித்தான் அவசியமற்ற ஒரு நாடாக மாற வாய்ப்புண்டு. பாக்கிஸ்த்தான் மீது இந்தியா போர் தொடுப்பது என்பது செய்தியாக அடிபட முன்னரே சீனா தனது படையை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தியிருந்தது.

இந்தியா குவாட் என்ற நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற குரல் இந்தியாவில் மீண்டும் உரத்து ஒலிக்கின்றது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒன்றகாச் செயற்படவேண்டும் என்பதே குவாட் அமைப்பின் நோக்கம். குவாட்டில் இப்போது தென் கொரியா, வியட்னாம், நியூசீலாந்து என்பவையும் இணையும் முயற்ச்சிக்கப்படுவதால் குவாட்+ என அது பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளிடையே ஒரு படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டால் அது இந்தியாவிற்கு சீனாவின் சவாலை சமாளிக்க முடியும். இந்தியா தனித்து பாக்கிஸ்த்தானிற்கும் சீனாவிற்கும் எதிராகப் போர் புரிந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகலாந்து ஆகியவற்றை சீனா கைப்பற்றலாம். இந்தியா கஷ்மீரை ஆட்சி செய்வதிலும் பார்க்க இலகுவாக சீனாவால் அந்த மாநிலங்களை ஆள முடியும். அவர்கள் சீனர்களைப் போல் தோற்றமுடையவர்கள். அங்கு வாழும் பல இனக்குழுமங்கள் ஒலிம்பிக் போட்டியின் போது சீனா வெற்றி பெறுவதை பெரிதும் விரும்பி ஆராவரிப்பார்கள். அதனால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்க முன்னர் ஒரு வலுவான பன்னாட்டு படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைந்திருப்ப்பது அவசியம்.

1 comment:

பருத்திவீரன் அசன்முகம்மது said...

அண்ணா அருமையான தரவுகள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...