Monday, 30 March 2020

உலகமயமாதலும் இணைபிரித்தலும் (Decoupling)மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது.


உலகமயாக்கல்
உலகமயமாக்கல் என்பது நாடுகளின் பொருளாதாரங்களையும் கலாச்சாரங்களையும் அதிகம் ஒன்றிணைத்து உலக வர்த்தகத்தையும் மூலதனப் பரம்பலையும் தொழில்நுட்பப்பகிர்வையும் அதிகரிப்பதாகும். உலகமயமாக்கல் உலகச்சந்தையை திறந்து விட்டது; உலக விநியோக வலையமைப்பை உருவாக்கியது; அடம் சிமித் என்னும் பழம் பெரும் பொருளியலாளரின் உழைப்புப்பகிர்வு, தனித்திறனுருவாக்கல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. உலக நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி 1960-ம் ஆண்டு 12விழுக்காடாக இருந்தது. உலகமயமாக்கலின் பின்னர் அது 30விழுக்காடாக உயர்ந்தது. ஒரு உற்பத்திப் பொருளின் பாகங்கள் பல நாடுகளில் இப்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் ஒரு பொருளின் உற்பத்தி பல நாடுகளில் தங்கியிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை உற்பத்தியைப் பாதிக்கச் செய்கின்றது. கோவிட்-19 தொற்று நோயால் ஒரு நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது பல நாடுகளின் உற்பத்திகள் பாதிப்புக்கு உள்ளாகின. பல நாடுகள் மூச்சுக்கவசங்களின் ஏற்றுமதியைத் தடை செய்தமை உலகமயமாக்கல் கொள்கைக்கு எதிரானவையாக குற்றம் சாட்டப்பட்டன. ஜேர்மனி உருவாக்கவிருக்கும் கோவிட்-19 தொற்று நோய்த் தடுப்பு மருந்து முழுவதையும் அமெரிக்கா வாங்க முற்பட்ட போது ஜேர்மன் அரசு தலையிட்டு அதைத் தடுத்ததும் உலமயமாக்கல் கொள்கைக்கு எதிரானதே.

சீனாவும் உலகமயமாதலும்
சீனா தனது பொருளாதாரத்தைச் சூழும் ஆபத்தை 1979இல் உணர்ந்து கொண்டு செயற்படத் தொடங்கினாலும் கணிசமான பொருளாதாரச் சீர்திருத்தத்தை 1989- ம் ஆண்டு ஏற்பட்ட தினமன் சதுக்க நெருக்கடிக்குப் பின்னரே செய்யத் தொடங்கியது. சீனா தனது நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டது. உலக வர்த்தக  நிறுவனத்தில் 2001-ம் ஆண்டு இணைந்து கொண்டது. அதனால் இன்று வரை சீனப் பொருளாதாரம் 10 மடங்கிற்கு மேல் வளர்ந்துள்ளது. சீனா உலக வர்த்தகத்தில் இணைந்து கொண்டமை உலகமயமாதலின் முக்கிய நிகழ்வாகும். சீனாவிற்கான உலக வர்த்தகத்தை மேற்கு நாடுகள் இலகுவாக்கின. அதனால் சீனாவை உலக உற்பத்தி நிறுவனங்கள் தமது பொருத்து நிலையமாக (assembly plant of the world) மாற்றின. வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிநுட்பங்களைப் பிரதிபண்ணுவதும் திருடுவதும் சீனாவிற்கு இலகுவானவையாக்கப்பட்டன. அதைப் பாவித்து சீனாவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், படைத்துறை ஆகியவை மேற்கு நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்தன. 19-ம் நூற்றாண்டில் பிரித்தானியா உலகத்தின் தொழிற்சாலை என அழைக்கப்பட்டது போல் தற்போது சீனா அழைக்கப்படுகின்றது. சீனாவின் உவாவே நிறுவனத்தின் 5ஜீ தொழில்நுட்ப வளர்ச்சி மேற்கு நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் உணரவைத்தது.


தொழில்நுட்ப ஆபத்து நாடுகளைத் துண்டிக்கின்றது.


2019 டிசம்பரில் அமெரிக்காவின் வர்த்தகத்துறைச் செயலர் வில்பர் ரொஸ் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றார். இது சீனாவின் உவாவே கைப்பேசி நிறுவனத்தை மட்டும் இலக்காக வைத்துச் சொல்லப்பட்டதல்ல. அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் தொடர்புகளை வைத்துள்ள ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்புறவு நாடுகளின் மென்பொருள்வன்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தரவு செயற்படுத்தும் நிறுவனங்களுக்கும் அது பொருந்தும். தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் இணையவெளியில் அதிகம் தங்கியிருப்பதும் அவற்றின் மென்பொருட்களிலோ அல்லது வன் பொருட்களிலோ உளவறியும் நச்சுநிரல்கள் (computer virus) இணைக்கப்பட்டிருக்கலாம் எனற அச்சமும் அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளுடனான தொழில்நுட்ப உறவுகள் இணையவெளித் தொடர்புகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. சுருங்கச் சொல்வதாயின் அமெரிக்காவின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதையும் அமெரிக்கப் படைத்துறையை சீனா உளவு பார்ப்பதையும் தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களூடான உலகத் தொடர்பை அமெரிக்கா துண்டிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கின்றது. உலகத்தை ஒரு சந்தையாக்கும் உலகமயமாக்குதலின் நோக்கம் இங்கு பெருமளவு பாதிக்கப்படுகின்றது. உலகமயமாதலின் ஒரு அம்சமாக தொழில்நுட்பப் பரம்பல் இருக்கின்றது. நாடுகள் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளல் மூலம் சீனாவும் இரசியாவும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கின்றது. 


உயர்ந்த சீனாவை விழுத்தும் முயற்ச்சி
2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி உச்சமடைந்தது. அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல் சீனாவிற்கு சாதகமாகவும் மேற்கு நாடுகளுக்கு பாதகமாகவும் இருப்பது உணரப்பட்டது. ஆனாலும் ஏற்றுமதியில் தங்கியிருப்பதை சீனாவால் மாற்றுவது சிரமமாக இருந்தது. மேற்கு நாடுகள் உலகமயமாக்கலை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உலகமயமற்றதாக்கல் (Deglobalisation) 2016-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகின்றது. சீனாவும் தனது பொருளாதாரம் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டது. உலகப் பொருளாதாரம் சரியும் போது சீனப் பொருளாதாரம் சரிவது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. சீனாவால் உலகமயமாக்குதலில் இருந்து விலக முடியாமல் இருக்க மேற்கு நாடுகள் அதிலிருந்து விலக முடிவெடுத்தன. 2019 ஜூனில் நடந்த ஜீ20 மாநாட்டில் மேற்கு நாடுகள் காப்பியல் (protectionism) கொள்கையைக் கடைப்பிடித்து உலக வர்த்தக் ஒழுங்கை சிதைக்க முயல்வதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் குற்றம் சாட்டினார்.

தன்னிறைவு, உலகமயமாதல், அந்நிய முதலீடு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் வர்த்தகப் போர் இரு நாடுகளையும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதை எப்படித் தவிர்ப்பது என்பதை நோக்கமாகக் கொண்டதே. உலகமயமாதல் முதலீட்டாளர்களையும் அவர்களுக்காக பணி புரிவோரையும் உலகெங்கும் பயணிப்பதை அதிகரிக்கச் செய்தது. அதனாலேயே கொரோனாநச்சுக்கிருமி மிக வேகமாக உலகெங்கும் பரவியது. 1970களில் அப்போது மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்ட வளர்முக நாடுகளில் பொருளாதாரத் தன்னிறைவு என்ற பதம் அதிகம் விரும்பப்பட்டதாக இருந்தது. உலகமயமாக்குதல் அதை இல்லாமல் செய்து “அந்நிய நேரடி முதலீடு” என்ற சொற்றொடர் பலராலும் விரும்பப்பட்டதாக உருவெடுத்தது.

சீன அமெரிக்க இணைப்புச் சங்கிலி
அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சீனா அதிக ஏற்றுமதியைச் செய்வதால் சீனாவிடம் அதிக வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு உள்ளது. அதை கையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. எங்காவது முதலீடு செய்ய வேண்டும். அமெரிக்கர்கள் சீன உற்பத்தியை மிக மலிவான விலையில் வாங்குகின்றார்கள். உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் அமெரிக்க அரசின் வரிச் சேகரிப்பு குறைந்தது அமெரிக்க அரசின் வருமானம் குறைகின்றது. அதனால் அமெரிக்க அரசு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமெரிக்காவிற்கு சீனா தன் வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பை கடனாகக் கொடுக்கத் தொடங்கியது. அப்படி சீனா கொடுக்காவிட்டால் அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும். குறைந்தால் சீன ஏற்றுமதி குறையும். அமெரிக்காவிற்கு சீனாவின் ஏற்றுமதியும் அமெரிக்காவிற்கு சீனா கொடுக்கும் கடனும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சங்கிலி. இது போலப் பலவகைகளில் உலகமயமாதல் பிரிப்பதற்கு கடினமான சங்கிலிகளால் நாடுகளைப் பிணைத்துள்ளது. இந்த பிணைப்பைப் பற்றியோ அதை துண்டிப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றியோ உணரக் கூடிய அறிவுடையவர்களாக எந்த ஒரு முன்னணி நாட்டினதும் ஆட்சியாளர்கள் இல்லை.

உலகமயமாதலை தீவிரமாக முன்னெடுத்த தாராண்மைவாதக் கட்சிகள் பல உலகெங்கும் தோற்கடிக்கப்பட்டு தேசியவாதத் தலைவர்கள் பல முன்னணி நாடுகளில் ஆட்சியில் அமர்ந்துள்ளமையும் உலகமயமாக்குதலைப் பின்தள்ளியுள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து “உலகமயமாதலை இணைபிரித்தல்” (Decoupling Globalization) என்ற சொற்றொடர் அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் அதிகம் பாவிக்கப்படுகின்றது. உலகமயமாக்குதல் உருவாக்கியுள்ள நாடுகளிடையேயான சங்கிலிப் பிணைப்பை துண்டிக்க மகாநதி திரைப்படத்தின் கதாநாயகன் போல தன் கையையே தான் துண்டிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய தேசியவாத அரசுத் தலைவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைத் தாங்கக் கூடிய நிலையிலும் இல்லை. உலகத் தலைவர்களிடையே சரியான புரிதலும் தேவையான சகிப்புத் தன்மையும் இல்லை.No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...