Wednesday, 8 January 2020

அமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை?

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் படையினரை ஈராக்கில் கொல்லக் காரணமாக அமைந்தவர், ஐம்பதினாயிரம் சியாப் போராளிகளைக் களத்தில் இறக்கி சிரியாவில் பஷார் அல் அசத்தின் ஆட்சியைத் தக்க வைத்தவர், ஈராக்கில் ஈரானின் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தவர் என அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானின் குட்ஸ் படைத் தளபதி காசெம் சுலேமானீயின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஈரானின் அடுத்த அதிபராக சுலேமானீ வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.  படைத்தளபதி சுலேமானீயிலும் பார்க்க அரசியல்வாதி சுலேமானீ மிகவும் ஆபத்தானவர் என்பதை ஈரானின் எதிரிகள் நன்கு அறிவர். 

துல்லிய உளவுத் தகவலும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணையும்
சுலேமானியைக் கொல்வதற்கு தயக்கம் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதியில் தனது பாதுகாப்புச் செயலர் மைக் பொம்பியோவின் வற்புறுத்தலுக்கு இணங்கி சுலேமானீ மீதான தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். லெபனான் சென்ற காசிம் சுலேமானி அமெரிக்க உளவாளிகள் நிறைந்த டமஸ்கஸ் மற்றும் பாக்தாத் விமான நிலையங்களூடாக ஈரான் திரும்ப முயன்றார். ஈராக்கில் செயற்படும் வலிமை மிக்க ஈரானியப் போராளிகளின் கூட்டமைப்பான Popular Mobilization Front (PMF)இன் தலைவர்Abu Mahdi al-Muhandis உடன் பேச்சு வார்த்தைகள் நடத்திவிட்டு பாக்தாத் விமான நிலையம் நோக்கி இருவரும் பயணித்துக் கொண்டிருக்கையில் அமெரிக்காவின் MQ Reaper என்ற ஆளில்லா விமனத்தில் இருந்து வீசப்பட்ட AGM-179 Joint Air-to-Ground Missile (JAGM) என்ற புதிய வகை ஏவுகணைகளால் படுகொலை செய்யப்பட்டார். உயர்தர உணரிகள், லேசர் வழிகாட்டல்கள், தொலைக்காட்சிக்கருவிகள், உட்படப் பல்வேறு வகையான வழிகாட்டல்களுடன் எந்த இலக்கையும் புகைகள், மூடுபனிகள் ஆகியவற்றின் மத்தியிலும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய அந்த ஏவுகணை சுலேமானியையும் முஹாண்டியையும் அந்த இடத்திலேயே கொன்றது.பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கும் படுகொலை
ஈரானியர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரும் ஈரானிய உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னியின் பெருவிருப்பத்துக்குரியவருமான சுலேமானியின் கொலைக்கு ஈரான் எப்படியும் பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது. ஈரான் பதிலடி கொடுத்தால் ஈரானில் உள்ள கலாச்சார நிலையங்கள் உட்பட 52 நிலைகள் மீது புதிய படைக்கலன்களால் தாக்குதல் செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலடியாக அமெரிக்காவை 13 வழிகளில் எம்மால் தாக்க முடியும் என ஈரான் சூளுரைத்தது. அதன் முதல் வழியாக 2020 ஜனவரி 8-ம் திகதி ஈரான் 22 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கப்படை நிலைகள் மீது ஏவியது.ஈரானின் 13 வழிகள் இப்படி இருக்கலாம்:
1. அமெரிக்கப் படைநிலைகள் மீது ஏவுகணை வீசித் தாக்குதல்
2. 9/11 பாணியில் விமானத் தற்கொடைத் தாக்குதல்
3. மீன் பிடிப்படகுகள் போல பயணித்து அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது தற்கொடைத் தாக்குதல்.
4. சீனாவிடமிருந்து வாங்கிய கப்பல் அழிப்பு ஏவுகணைகளை அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது வீசி அவற்றை அழிக்கலாம்.
5. அமெரிக்காவில் மக்கள் நெரிசல் நிறைந்த இடங்களில் வாகனத்தை ஓட்டி மக்கள் மீதி மோதிக் கொல்லலாம்.
6. நேர வெடி குண்டுகளை அமெரிக்க நகரங்களை வெடிக்க வைக்கலாம்.
7. ஹிஸ்புல்லா அமைப்பினர் மேற்காசியாவில் அல்லது வட ஆபிரிக்காவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.
8. சவுதி அரேபிய எரிபொருள் உற்பத்தி நிலயங்களை ஏவுகணை வீசி அழிக்கலாம்.
9. இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து பெருமளவு ஏவுகணைகளை ஒரேயடியில் வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம்.
10. ஈரானின் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள் மூலம் அமெரிக்க தூதுவரகங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்.
11. இரசியாவை ஹோமஸ் நீரிணையில் உள்ள ஈரானியத் துறைமுகம் ஒன்றில் ஒரு கடற்படைத் தளம் அமைக்க அனுமதிக்கலாம். அதன் மூலம் உலக எரிபொருள் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
12. சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாஹ்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அங்குள்ள அமெரிக்கத் தளத்தை அகற்றலாம்.
13. ஈரானைச் சூழவுள்ள அமெரிக்கப் படை நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் அல்லது தற்கொடைத்தாக்குதல் செய்யலாம்.

இப்படியெல்லாம் நாம் யோசிக்கும் போது ஈரானும் அமெரிக்காவும் வேறு விதமாக யோசித்தன. ஆம் தீராப்பகை உலகப் பொருளாதாரத்திற்கு கேடாய் முடியும் என்பதால் வேறாய் யோசித்தார்கள்:
US: Shoot to kill
Iran: Shoot to miss 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...