Monday, 15 October 2018

அமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)


2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே அமெரிக்காவிடம் தரைப்படை, வான் படை, கடற்படை, கடல்சார் படை, கரையோரப் பாதுக்காப்பு என தனித்தனியான படைப் பிரிவுகள் உள்ளன. அவற்றுடன் விண்வெளிப்படை என மேலும் ஒரு தனிப் படைப்பிரிவு ஆரம்பிக்கும் திட்டத்தை மைக் பென்ஸ் வெளியிட்டுள்ளார். 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்பும் சொன்ன கருத்தை மைக் பென்ஸ் அதிகார பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்காவின் நோக்கம் விண்வெளியை படைத்துறை மயமாக்குதல் அல்ல ஆனால் விண்வெளியில் ஓர் ஆபத்து விளைவிக்கக் கூடிய மோதலைத் தவிர்ப்பதே என்றார் அமெரிக்கப் படைத்துறை ஆய்வாளர் ரொட் ஹரிசன். விண்வெளியில் உள்ள அமெரிக்காவின் வசதிகளை எதிரிகள் அழிக்காமல் தடுப்பது அமெரிக்காவிற்கு அவசியம் எனவும் அவர் சொல்லியுள்ளார்.

ரீகனின் நட்சத்திரப் போர் (Star War)
எதிரி நாட்டின் அணுக்குண்டில் இருந்து தமது நாட்டைப் பாதுகாப்பது எப்படி என்ற கேள்விக்கு Mutually Assured Destruction  என்னும் பதம் முன் வைக்கப்பட்டது. அப்பதத்தின் பொருள் என் மீது அணுக் குண்டு வீசினால் உன்மீது நான் அணுக்குண்டு வீசுவேன் அதனால் நானும் அழிவது நிச்சயம் நீயும் அழிவது நிச்சயம் என்பதாகும். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரீகன் இந்தப் பதிலை வெறுத்தார். இது இணை-தற்கொலை  ஒப்பந்தம் போன்றது என்றார். அதனால் கேந்திரோபாய பாதுகாப்பு முன்னெடுப்பு (Strategic Defence Initiative) என்ற திட்டத்தை அவர் 1983இல் முன்வைத்தார். அதை நட்சத்திரப் போர் (Star War) என அழைத்தனர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் நட்சத்திரப் போர்த்திட்டத்தின் அபரிமிதமான செலவும், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனப் பதுகாப்பு அளவிற்கு மிஞ்சி இருந்தமையும் அத்திட்டத்தைக் கைவிடும் நிலையை உருவாக்கியது. கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தவுடன் அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக காய்களைத் தீவிரமாக நகர்த்திய போது இரசிய அரசுறவியலாளர்கள் அமெரிக்காமீது இரசியா அணுக்குண்டை வீசி முழு அமெரிக்காவையும் ஒரு கதிரியக்கம் மிக்க குப்பை மேடாக்க முடியும் எனப் பகிரங்கமாக மிரட்டினர். அதனால் அமெரிக்கா தனது பாதுகாப்பையிட்டு அதிக கரிசனை கொண்டது.

அமெரிக்காவின் திட்ட விபரம்
விண்வெளியில் உள்ள அமெரிக்க சொத்துக்களைப் பாதுகாத்தல், அமெரிக்கச் சொத்துக்களுக்கு ஆபத்து விளைவிக்க முயலும் எதிரிகளின் விண்வெளித் தாக்குதல் கருவிகளை அழித்தல், விண்வெளியில் பாரிய ஆகாயக் கற்கள் போன்ற இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து பூமியைப் பாதுகாத்தல் போன்றவற்றை அமெரிக்காவின் விண்வெளிப் படை நோக்கமாகக் கொண்டிருக்கும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. 2018 ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் விண்வெளிப் படைத் திட்டத்தை முதலில் அறிவித்த போது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனே ஆச்சரியப் பட்ட்டது. நாம் வெறுமனவே விண்வெளியில் இருப்பது மட்டுமல்ல எமது ஆதிக்கமும் அங்கு நிலவ வேண்டும் என டிரம்ப் சூளுரைத்தார். ("It is not merely enough that we have American presence in space, we must have American dominance in space."). விண்வெளிப் படையை உருவாக்கும் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது:
1 விண்வெளி அபிவிருத்தி முகவரகத்தை (Space Development Agency) உருவாக்குதல்.
2. விண்வெளி செயற்படு படையை (Space Operations Force) உருவாக்குதல்
3. அமெரிக்க கட்டளையகத்தை (United States Space Command) உருவாக்குதல்

சீனாவின் அச்சுறுத்தல்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் அமெரிக்க ஆதிக்கம் தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த சீனா அமெரிக்காவின் படையின் வலிவின்ன்மைப் புள்ளிகளை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் படையினர் இலத்திரனியல் தொடர்பாடலில் பெரிதும் தங்கி இருப்பதை சீனா அறிந்து கொண்டது. அத் தொடர்பாடல்களுக்கு அமெரிக்காவின் செய்மதிகள் மிக அவசியம் என்பதை சீனா உணந்தது. அமெரிக்காவின் செய்மதிகளை அழிப்பதாலும் இணையவெளி ஊடுருவல்கள் மூலமும் அமெரிக்காவின் தொடர்பாடலை அழித்து அமெரிக்காவின் படைத்துறையை செயலிழக்கச் செய்யலாம் என சீனா நம்பியது. அதனால் 2007-ம் ஆண்டு ஜனவரியில் சீனா செய்மதி அழிப்பு ஏவுகணையை உருவாக்கி விண்வெளியில் உள்ள தனது சொந்த வானிலை ஆய்வுச் செய்மதி ஒன்றின் மீது வீசி அதை அழித்தது.  சீனா வீசிய ஏவுகணை செங்குத்தாக விண்ணை நோக்கி 200 மைல்கள் பாய்ந்தது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா பரிசோதித்தது. அந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. சீனா தொடர்ந்து தனது செய்மதிகளை ஏவும் தளங்களை(space launchers ) மேம்படுத்தியும் வருகின்றது. சீனாவின் KZ-11 என்னும் தளத்தில் இருந்து செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இப்போது வீசப்படலாம் என நம்பப்படுகின்றது.  2016 ஜூலையில் சீனா விண்வெளிக்கு அனுப்பிய Roaming Dragon என்னும் செய்மதி விண்வெளியில் உள்ள சிதைந்த மற்றும் பழுதடைந்த செய்மதிகளை வாரி அள்ளி விண்வெளியைத் துப்பரவாக்க என சீனா தெரிவித்திருந்தது. ஆனால் அது மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கக் கூடியவை எனக் கருத்து வெளியானது. இரசியாவும் தரையில் இருந்து ஏவட்ட ஏவுகணை போன்ற ஒரு மர்மப் படைக்கலன்களால் தனது சொந்த செய்மதிகளை அழித்ததை அமெரிக்க செய்மதிகள் அவதானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. 1990-ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளியில் உள்ள மற்ற நாட்டுச் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் அது கைவிடப்பட்டது. 2018 மார்ச்சில் ஒஸ்ரேலிய ஊடகம் ஒன்று இரசியா தனது விமானங்களில் இருந்து வீசும் லேசர் கதிகளின் மூலம் மற்ற நாடுகளின் செய்மதிகளை அழிக்கும் முயற்ச்சியில் வெற்றி கண்டுள்ளதாக அறிவித்தது. வானில் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவுகணைகளை வீசி அமெரிக்கச் செய்மதிகளை அழிக்கும் ஆய்வுகளை இரசியா செய்து முடித்துள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பு கருதுகின்றது.

ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளில் கவனம் செலுத்தும் சீனா
சீனா ஒலியிலும் பார்க்க பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை தொடர்ச்சியாகப் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றது. ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிலும் அதிகமான வேகத்தில் பாயும் ஏவுகணைகளை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் என அழைப்பர். ஒலியிலும் பத்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளைக் கூட சீனா உருவாக்கியுள்ளது எனச் செய்திகள் வெளிவருகின்றன. ஹைப்பர் சோனி ஏவுகணைகளை தரையில் இருந்து செயற்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது என்ற நிலையில்தான விண்வெளிப்படையை உருவாக்குவதில் அமெரிக்கா திடீர்க்கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. அத்துடன் சீனாவும் இரசியாவும் தமது செய்மதி எதிர்ப்பு வல்லமைகளை ஒன்றிணைத்து செயற்படுகின்றன என அமெரிக்கா நம்புகின்றது.

அமெரிக்க வான்படைச் செயலரின் எதிர்ப்பு
அமெரிக்காவின் வான்படையில் ஏற்கனவே விண்வெளிக் கட்டளையகம் (U.S. Air Force Space Command) என்ற ஒரு பிரிவு உண்டு. அது ஏற்கனவே எதிரி நாடுகள் விண்வெளியில் அமெரிக்காவிற்கு விடுக்கும் அச்சுறுத்தல்களைக் கையாள்கின்றது. அதனால் புதிதாக ஒரு ஆறாவது படைப் பிரிவு தேவையில்லை என்பது அமெரிக்கப் படைத்துறையினரின் கருத்தாக இருக்கின்றது. அந்த கட்டளையகமே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அது போலவே அமெரிக்கக் கடற்படையிலும் விண்வெளியில் செயற்படக் கூடிய வசதிகள் உண்டு. அது மட்டுமல்ல அமெரிக்காவின் பல் வேறு உளவுத்துறைகளும் விண்வெளியில் செயற்படக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் தனது தனியான விண்வெளிப் படைப்பிரிவு அமைக்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் அமெரிக்க வான்படைக்குப் பொறுப்பான செயலாளர் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கும் எண்ணத்துடன் இருக்கின்றார். 2018 நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தலின் பின்னர் டிரம்ப் ஹிதர் வில்சனைப் பதவியில் இருந்து விலக்கலாம்.

நிதி ஒதுக்கீடு
முன்பு எப்போதும் இல்லாத அளவில் அமெரிக்கா இரசியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் விண்வெளியில் ஆபத்துக்களை எதிர் நோக்குவதால் அதைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்கா பாதுக்காப்பிற்காக ஒதுக்கப்பட்ட செலவீனங்களில் மாற்றங்கள் செய்து ஐந்து பில்லியன் டொலர்களை விண்வெளிப் பாதுகாப்பிற்கு ஒதுக்கியது. அமெரிக்காவின் செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கப் பாராளமன்றமே செய்யும் அதிகாரம் கொண்டது. அமெரிக்காவின் வான் பாதுகாப்பிற்கு ஏற்கனவே பாராளமன்றம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 13பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் தனியாக ஒரு படைப்பிரிவை அமைக்கும் போது மேலும் செலவு அதிகமாகும். அதற்கான நிதி ஒதுக்கீட்டை பாராளமன்றம் அங்கிகரிக்க வேண்டும். விண்வெளிப்படைக்கு பதின்மூவாயிரம் படையினர் தேவைப்படலாம். அவர்களை மற்ற படைப்பிரிவுகளில் இருந்து எடுக்கும் போது அவை வலுவற்றதாக்கப்படலாம். ஆனால் தனியான ஒரு கட்டளையகத்தின் கீழ் செயற்பட்டால் மட்டுமே விண்வெளிப் படைப்பிரிவு திறன்படச் செயற்பட முடியும் என வெள்ளை மாளிகை நம்புகின்றது.
பன்னாட்டு நாணய நிதியம் 2018-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.9விழுக்காட்டால் வளரும் என முன்னர் நம்பியிருந்தது. ஆனால் அதை இப்போது 3.7விழுக்காடு எனக் குறைத்துள்ளது. இந்த நிலையில் முன்னணி வல்லரசுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு உங்கந்ததாக அமையாது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...