Monday, 21 May 2018

இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா?


இஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது. இஸ்ரேலை எதிர்த்து நின்ற இந்தியா பல துறைகளிலும் அதனுடன் இணைந்து செயற்படுகின்றது. சவுதி அரேபியா உட்படப் பல அரபு நாடுகள் இஸ்ரேலுடன் இரகசியமாக ஒத்துழைக்கின்றன. இஸ்ரேலில் தன்னிலும் பார்க்க பல மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட அயல் நாடுகளுடன் பகையான நாடாக இருக்கின்றது. அவற்றில் நிலங்களை அபகரித்து வைத்திருக்கின்றது. அயல்நாடுகளிலும் பார்க்க இஸ்ரேலில் வித்தியாசமான கலாச்சாரம், வித்தியாசமான ஆட்சி முறை இருந்தும் இஸ்ரேல் தன் அயல்நாடுகளுக்கு அஞ்சாமல் இருக்கின்றது. உலக அரங்கில் இஸ்ரேல் ஒரு அசைக்க முடியாத நாடாக மாறிவருகின்றதா?

இஸ்ரேலுக்கு வேண்டியவர் சிரியாவில் ஆட்சியில்
ஈரானுடன் P5+1 என்னும் பெயர்கொண்ட அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா என்ற ஐந்து வல்லரசு நாடுகளுடன் ஜேர்மனியும் இணைந்த குழு யூரேனியம் பதப்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக இரத்துச் செய்ததின் பின்னணியில் இஸ்ரேல் நின்று செயற்பட்டு வெற்றி பெற்றது. இஸ்ரேலுடன் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளும் இணைந்து செயற்பட்டன. 2011-ம் ஆண்டு சிரியாவில் அரபு வசந்தம் என்னும் பெயரில் ஆரம்பித்த போது பஷார் அல் அசாத் ஆட்சியி இருந்து அகற்றப்படக் கூடாது என்பது இஸ்ரேலின் நிலைப்பாடாகும். அதுதான் இன்றுவரை நடக்கின்றது.

இஸ்ரேல் நினைப்பதை அமெரிக்கா செய்கின்றது
ஐக்கிய நாடுகள் சபை ஜெருசலம் எந்த நாட்டுக்கும் சொந்தமில்லை அது ஒரு பன்னாட்டு நகரம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. 1947-ம் ஆண்டு ஜெருசலேம் நகர் தொடர்பாக ஐநா சபையில் தீர்மானம் -181 நிறைவேற்றப்பட்டது. 1967-ம் ஆண்டு நடந்த ஆறுநாட் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம்த்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் பின்னர் 1980-ம் ஆண்டு இஸ்ரேல் ஜெருசலேம் சட்டம் 1980ஐ தனது பராளமன்றத்தில் நிறைவேற்றி முழு ஜெருசலேமும் தனது என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம்-478 நிறைவேற்றப்பட்டது. ஜெருசேலம்தான் இஸ் ரேலின் தலைநகர் அங்குதான் இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதுவரகம் அமைக்கப்பட வேண்டும் எனச்சொல்லும் ஜெருசேலம் தூதுவரகச் சட்டம் (Jerusalem Embassy Act) 1995-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அதை 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நடை முறைப்படுத்தப் பட்டமை இஸ்ரேலுக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

ஈராக்கில் இஸ்ரேலுக்குப் பாதகம் இல்லை
ஈராக்கியத் தேர்தலில் 329 பாராளமன்றத் தொகுதிகளுக்கு 87 கட்சிகள் 6990 வேட்பாளர்களைக் களமிறக்கின. மொத்தத் தொகுதிகளில் 25விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப் பட்டன. சுனி முஸ்லிம்கள் சார்பில் இரண்டு அணியினரும், சியா முஸ்லிம்கள் சார்பில் 5 அணியினரும் குர்திஷ் மக்கள் சார்பில் 4 அணியினரும் தேர்தலில் போட்டியிட்டனர். 2005-ம் ஆண்டில் இருந்து அமெரிக்க ஆதரவு சியா முஸ்லிம்கள் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 2018 மே மாதம் நடந்த தேர்தலில் அமெரிக்க ஆதரவு சியா முஸ்லிம்கள், ஈரான் ஆதரவு சியா முஸ்லிம்கள், ஈராக்கை ஈராக்கியர்களே ஆளவேண்டும் அமெரிக்கர்களோ ஈரானியர்களோ அல்ல என்ற கொல்கையுடைய சியா முஸ்லிம்கள் என மூன்று பிரிவாகப் பிரிந்துபோட்டியிட்டனர். அதில் மூன்றாம் வகை சியாக்கள் வெற்றி பெற்றனர். இஸ்ரேலைப் பொறுத்தவரை ஈரானுக்கு சார்பானவர்கள் ஈராக்கில் ஆட்சியைக் கைப்பற்றாதது ஒரு வெற்றியே.

இஸ்ரேலின் பின்னணி
பிரித்தானிய ஆணைக்குட்பட்ட பலஸ்த்தீனம் என்ற நாட்டின் 72 விழுக்காடு நிலப்பரப்பை யூதர்கள் தமது நாடு என 1948-ம் ஆண்டு பிரகடனப் படுத்திய போது அதை முதலில் அங்கீகரித்தது இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியமாகும். ஜோசேப் ஸ்டாலின் இஸ்ரேல் என்ற நாடு உருவாகுவதைத் தீவிரமாக ஆதரித்தார். அப்போது இஸ்ரேல் பொதுவுடமைவாதத்தை மேற்காசியாவில் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இரசியாவில் உள்ள யூதர்களை இஸ்ரேலில் குடியேற்றவும் இரசியா அப்போது விருப்பம் கொண்டிருந்தது. ஈராக்கிலும் சிரியாவிலும் பாத் கட்சியினர் இடதுசாரிக் கொள்கையுடைய படைத்துறையினர் புரட்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அந்த நாடுகளுடன் நட்புறவை சோவியத் ஒன்றியம் வளர்த்தாலும் இஸ்ரேலுடனான உறவைத் தொடர்ந்து பேணி வந்தது. 1967-ம் ஆண்டு நடந்த போரில் எகிப்து தலைமையிலான அரபு நாடுகளின் பக்கம் இரசியா நின்றது. பின்னர் இரசியா பெருமளவு படைக்கலன்களை அரபு நாடுகளுக்கு விற்பனை செய்தது. 1972-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் ஆரம்பத்தில் எகிப்திடமும் சிரியாவிடமும் இருந்த இரசியாவின் ஏவுகணைகள் இஸ்ரேலியப் போர்விமானங்களைச் செயற்படாமல் செய்தன. பின்னர் இஸ்ரேல் அந்த ஏவுகணை நிலைகளை அழித்த பின்னர்தான் இஸ்ரேலியப் போர்விமானங்கள் செயற்பட்டு போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது.

இஸ்ரேலுக்கு ஏற்ப மாறியது இரசியா
சோவியத் ஒன்றியத்தின் விழ்ச்சியின் பின்னர் உலக விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருந்த இரசியாவை புட்டீன் மீண்டும் உலக ஆதிக்க நாடாக மாற்றத் தொடங்கிய பின்னர் இஸ்ரேலுக்கு எதிராக இரசியா செயற்படவில்லை. சிரியாவில் இரசியா தலையிடத் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலும் இரசியாவும் பலவகைகளில் ஒத்துழைத்து வருகின்றன. சிரியப் படையினரும் இரசியப் படையினரும் இரசியாவும் ஒரே வகையான போர் விமானங்களைப் பாவித்தன. வேகமாகப் பறக்கும் போது இரசியப் போர்விமானங்கள் அவ்வப் போது இஸ்ரேலிய வான்பரப்புக்குள் பறப்பதுண்டு. அவற்றின் மீது இஸ்ரேல் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க இரு நாடுகளும் இரகசியமாக சமரசம் செய்து கொண்டன். ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால் இரசியா இஸ்ரேலின் பக்கம் நிற்கும் என இஸ்ரேலுக்கான இரசியத் தூதுவர் கருத்து வெளியிட்டது. மேற்காசியாவின் படைத்துறைச் சமநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்தே இரசியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருந்தது. பஷார் அல் அசாத் பதவியில் தொடர வேண்டும் என்பதிலேயே அந்த ஒற்றுமை நிலவியது. ஈரானியப் படைகள் சிரியாவில் நேரடியாகத் தலையிடுவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்தது. அசாத்தைப் பதவியில் தக்க வைப்பதற்கு ஈரானின் உதவி அவசியம் என்பதை இரசியா நன்குணர்ந்து ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. சிரியப் போரைச் சாக்காக வைத்துக் கொண்டு லெபனானுக்குள் பெருமளவு படைக்கலன்களை சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு எடுத்துச் செல்லாமல் தடுப்பதில் இஸ்ரேல் கண்ணும் கருத்துமாக இருந்தது. இதற்காகப் நூற்றுக் கணக்கான தடவை சிரியாவினுள்ளும் லெபனானிற்குள்ளும் இஸ்ரேலியப் போர் விமானங்கள் அத்து மீறிப்பறந்து சென்று தாக்குதல்களை நடத்தின. ஈரான் சிரியாவையும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு முன்னரங்க நிலையாக மாற்றுவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்தது. இஸ்ரேலியப் போர்விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு இரசியா எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இருந்தது. இரகசியமாக இஸ்ரேலுக்கு சிரியாவினுள் எப்போதும் நுழைந்து விமானத் தாக்குதல் நடத்த இரசியா அனுமதி வழங்கியிருந்தது.

ஐரோப்பியப் பாட்டுப் போட்டியில் இஸ்ரேல் வெற்றி
ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடத்தும் யூரோவிஷன் என்னும் பாடல் போட்டியில் இஸ்ரேலும் பல ஆண்டுகளாகக் கலந்து கொள்கின்றது. 2018இற்கான பாடல் போட்டியில் மக்களின் வாக்களிப்பாலும் நிபுணர்களின் வாக்களிப்பாலும் இஸ்ரேலியக் கலைஞர்கள் பாடிய பாடல் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இஸ்ரேல் வெற்றி பெற்றது முதலாவது தடவையாகும். ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராக மக்களிடையே உருவான எதிர்ப்பு இஸ்ரேலுக்கான ஆதரவாகத் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஆசிய நாடாகிய இஸ்ரேல் ஐரோப்பியப் பாடல் போட்டியில் பங்குபெறக் கூடாது என்ற எதிர்ப்பு ஒரு காலத்தில் தீவிரமடைந்திருந்தது. போட்டியில் வெற்றி பெறும் நாட்டில் அடுத்த யூரோவிஷன் பாடல் போட்டி நடைபெறும். போட்டியில் வெற்றி பெற்ற இஸ்ரேலியப் பெண்மணி தனது வெற்றி உரையில் அடுத்து ஜெருசேலத்தில் சந்திப்போம் எனச் சொன்னது அரசியல் மயமானது. ஜெருசேலத்தை இஸ்ரேலியத் தலைநகராகப் பரப்புரை செய்யும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. அவர் அப்படிச் சொன்னமைக்காக அவரது வெற்றியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

படைகல உற்பதியில் இஸ்ரேல்
2014-ம் ஆண்டின் பின்னர் இஸ்ரேல் தனது படைத்துறை ஏற்றுமதியை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் இஸ்ரேலின் படைத்துறை ஏற்றுமதி 9.2பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இதில் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான ஏற்றுமதி 58 விழுக்காடாகும். இந்தியாவிற்கு இஸ்ரேல் செய்த ஏற்றுமது இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியானது. அமெரிக்க அதிபரின் நிர்ப்பந்தத்தினால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரிப்பதால் இஸ்ரேலின் படைத்துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

Oligarch எனப்படும் பெரும் பணக்காரர்கள் இரசிய அதிபர் புட்டீனைச் சூழ்ந்திருக்கின்றார்கள். அவர்களில் யூதர்களும் இடம்பெறுகின்றனர். இரசியாவில் உள்ள யூதச் செல்வந்தர்கள் புட்டீனின் செயற்பாடுகளில் அதிக செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். இரசியா 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு டொனால்ட் டிரம்பை வெற்றியடையச் செய்ததமைக்கு இந்த யூதர்கள்தான் பின்னணியில் நின்று செயற்பட்டனர் என நம்பப்படுகின்றது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா மறைமுக ஆதரவு கொடுப்பதற்கும் புட்டீனைச் சூழவுள்ள யூதர்களே காரணம் எனவும் சொல்லபப்டுகின்றது.   


டொனால்ட் டிரம்பின் மகளின் கணவர் ஒரு யூதராவார். யூத மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடிக்கும் Jared Kushnerஐக் திருமணம் செய்வதற்காக டிரம்பின் மகள் இவங்கா யூத மதத்திற்கு மாறினார். மருமகன் Jared Kushner டிரம்பிற்கு தேர்தல் பரப்புரையின் போது பேருதவியாக இருந்து ஆலோசனைகள் வழங்கியவர். அவர் டிரம்ப்பின் ஆட்சியிலும் முக்கிய பங்கு வகிப்பார். அவர் வெள்ளை மாளிகையில் பணி புரிவதை பெரிதும் விரும்புகின்றார். இரசிய யூதச் செல்வந்தர்கள் ஜெரார்ட் குஷ்னரின் மாமனாரை தேர்தலில் வெற்றி பெறச் செய்து அதன் மூலம் இஸ்ரேலுக்கு சாதகமாக டிரம்பை செயற்படச் செய்கின்றனர் எனவும் சிலர் கருதுகின்றனர்.

தற்போது இஸ்ரேலை எதிர்க்கக் கூடிய வலிமையான ஒரே நாடாக ஈரான் மட்டுமே இருக்கின்றது. அதனால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல அரசுறவியல் நகர்வுகளை மேற்கொள்கின்றது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களை இரசியா மறைமுக ஆதரவு வழங்குகின்றது. இந்த வல்லரசுகளை யூத செல்வந்தர்கள் வசப்படுத்தி வைத்திருப்பதால் இஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...