Monday, 12 February 2018

இந்திய சீன முறுகல் நிறுத்தப்பட முடியாதது


இந்திய சீன உறவைப் பற்றிய கருத்தறியவையம் 2018 பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கும் எனவும் டோக்லம் முறுகல் நிலை போல் மேலும் பல தொடரும் எனவுக் கருத்து வெளியிட்டிருந்தார்.

எம் கே நாராயணன் எல்லைப் பிரச்சனைகளுக்கு மேலாக சீன இந்தியப் பிரச்சனையில் முக்கிய பங்கு வகிப்பவற்றை முன்வைத்தார்:
1. தலாய் லாமாவிற்கான இந்திய ஆதரவு சீனாவை சீண்டுகின்றது
2. சீனாவின் சீண்டுதல் நடவடிக்கைகள் தொடரலாம்.
3.இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் அயல் நாடுகளுக்கு சீனாவின் பொருளாதார மிரட்டல்கள் தொடரும்.
4. சீனாவின் பிராந்தியத் திட்டத்தில் பாக்கிஸ்த்தானிற்கு முக்கிய இடமுண்டு
5. சீனாவின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், பாக்கிஸ்த்தானிய குவாடர் துறைமுகம் ஆகியவற்றுடன் ஜிபுக்த்தியில் உள்ள சீனப்படைத்தளமும் சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையிலான முறுகலை அதிகரிக்கும்.
6. இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தாலும் போர் நடக்கும் ஆபத்து இல்லை.
7. சீனாவின் நன்னுதல் உபாயம் தொடரும்.


2017 ஓகஸ்ட் மாதம் இந்தியப் படைகளும் சீனப் படைகளும் டொக்லம் பிராந்தியத்தில் ஒரு தரப்பும் மறுதரப்பும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் முறுகல் நிலையில் எதிர் கொண்டிருந்தன. பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் சீனாவில் பிரச்சனை இன்றி நடப்பதை சீனா விரும்பியபடியால் அந்த முறுகல் நிலை தவிர்க்கப்பட்டது. அதனால் டொக்லம் சமவெளியில் சீனா மீண்டும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுவிக்கக் கூடிய வகையில் நடக்கலாம் என எம் கே நாராயணன் சீன இந்திய சமகாலப் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுகையில் தெரிவித்தார். அவரின் பேச்சில் நேப்பாளத்தில் நடந்த ஆட்சி மாற்றம் பற்றிய கருத்து உள்ளடக்கப்படவில்லை. ஆனால் நேப்பாளத்தில் நடந்த ஆட்சி மாற்றம் சீனாவால் பூட்டானிலும் தனக்கு சாதகமான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்படி நடக்கும் போது சீனா டோக்லம் சமதரையை கைப்பற்றத் தூண்டப்படும்.

இந்துத்தேசியவாதத்தில் ஓர் ஓட்டை துளைக்க முனையும் சீனா.
இந்தியாவில் ஆதரவு அதிகரித்துவரும் இந்து தேசியவாதம் தனக்கு சவால் விடத் துடிப்பதை சீனா அறியும். அதற்கு ஆரம்பத்திலேயே ஓர் அடி கொடுப்பது அவசியம் என சீனா கருத இடமுண்டு. ஆனால் இந்தியர்களின் கௌரவத்தை சிதைக்கக் கூடிய வகையில் சீனா எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு மிகை-தேசியவாதத்தை (Hyper-nationalism) தூண்டும் என்பதையும் சீனா உணரும்.  காங்கிரசுக் கட்சியின் இந்திப் பேரினவாதமும் பாரதிய ஜனதாக் கட்சியின் இந்துத் தேசியவாதமும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவை என்றாலும் அதை வைத்து இந்தியாவை பிளவு படுத்தும் திறன் மிக்கதாக சீன வெளியுறவுத் துறையோ அல்லது அதன் உளவுத் துறையோ இல்லை. சீனா கைப்பற்றி வைத்துள்ள திபெத்தில் இந்துக்களின் புண்ணிய நிலையமான கைலாய மலையும் அடங்கும். அதை சீனா இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இன்றுவரை ஒரு கோரிக்கையாக மட்டும் இருக்கின்றது. இந்துத் தேசியவாதமும் இந்தியப் படையும் உரிய வலிமையை அடையும் போது அது ஒரு மீட்பு முயற்ச்சியாக மாறும்.

அருணாச்சலப்பிரதேசம்
2003-ம் ஆண்டு சீனாவிற்குப் பயணம் மேற்கொண்ட அடல் பிஹாரி வாஜ்பாய் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்தியா ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் சீனா அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. சீனாவின் கடவுச்சீட்டில் அருணாசலப் பிரதேசத்தை தனது ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை சீனா இணைத்தது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இந்திய அதிகாரிகள் சீனா வருவதற்கு நுழைவு அனுமதி தேவையில்லை என்றது. 2009-ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியில் இந்தியா கடன் பெற முனைந்தபோது தனது பிரதேசமான அருணாச்சலப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு இந்தியா கடன் வாங்க முடியாது எனச் சொல்லித் தடுத்தது. இந்திய சீன முறுகலில் என்றும் தீர்க்க முடியாத பிரச்சனையாக அருணாச்சலப் பிரதேசம் இருக்கப்போகின்றது. எம் கே நாராயணன் தனது உரையில் சீனாவின் நன்னுதல் உபாயம் தொடரும் (China’s nibbling tactics will continue) என்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சீனா சிறிது சிறிதாக கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் எல்லைகளுக்கு ஊடுருவி படை நிலைகளை நிறுவி இந்தியாவைச் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கின்றது. அதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. காங்கிரசுக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இவை மூடி மறைக்கப்பட்டன என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த மெல்ல மெல்ல சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கும் சீனாவின் உபாயம் தொடரும் என்பதை எம் கே நாராணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
   

பொருளாதாரத்தில் கவனம் செலுத்திய தளபதி
முன்னாள் இந்தியத் தளபதி ஜெனரல் ரொய் சௌத்திரியும் எம் கே நாராயணன் உரையாற்றிய அதே கருதறியவையில் உரையாற்றினார். அவர் இந்தியப் படையின் வலிமை பலர் நினப்பதிலும் பார்க்க அதிகம் என்றார். அத்துடன் அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரச் செயற்பாடுகள் பற்றியும் உரையாற்றினார். அவர் தொட்ட விடயங்கள்.
1. இந்தியப் பொருளாதாரத்தின் சோம்பல் நிலையும் பேராசையுமே சீனாவிலும் பார்க்க இந்தியா கைத்தொழில்துறையிலும் உற்பத்தித் துறையிலும் பின் தங்கியிருக்கக் காரணம்.
2. இந்தியச் சந்தையில் சீனா தனது பொருட்களைக் கொட்டுவதற்குக்(dumping) காரணம் இந்தியாவின் பிழையான கொள்கைகள்
3. விநாயகர் சிலைகளைக் கூடை சீனா இந்தியாவில் விற்பனை செய்கின்றது.
4. சீனாவுடன் ஒத்துழைப்பு, போட்டியிடல், எதிர்கொள்ளல் ஆகிய மூன்றையும் இந்தியா சரியாகக் கடைப்பிடிக்கவில்லை.
5. இந்தியாவின் பொருளாதாரச் செயற்பாட்டையே குறை கூற வேண்டும், சீனாவை அல்ல.
6. இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்துறை இடைவெளி 1962இல் இருந்தது போல் இல்லை.
7. சீனாவுடன் போட்டி போடக் கூடிய வகையில் இந்திய உற்பத்தித் துறை வலிமைப் படுத்தப்பட வேண்டும்.

சீனப் பொருட்கள் இந்தியாவில் பெருமளவில் விற்பனை செய்வதற்குக் காரணம் ஒரு சில இந்தியப் பெரு முதலாளிகளே என்பதைச் சுட்டிக்காட்ட சௌத்திரி தவறிவிட்டார். சீனாவின் படைத்துறை வளர்ச்சிக்கு அதன் பொருளாதார வளர்ச்சி உறுதுணையாக இருக்கின்றது. சீனாவிர்கு ஈடாக இந்தியாவும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தால் மட்டுமே படைத்துறையில் சீனாவிற்கு இந்தியா ஈடு கொடுக்க முடியும் என்பதாலேயே சௌத்திரி இந்தியப் பொருளாதாரத்தின் சோம்பல் தன்மையை எடுத்துக் காட்டினார்.

மக்கள் தொகைக் கட்டமைப்பை மறந்த நிபுணர்கள்
சீனா ஒரு பிள்ளைக் கொள்கையை கடுமையாக நிறைவேற்றியபடியால் சீனாவில் வயோதிபர் தொகை அதிகரித்தும் இளையோர் தொகை குறைந்தும் உள்ளது. இந்தியாவின் நாம் இருவர் நமக்கிருவர் கொள்கை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால் உலகிலேயே இளையோர் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியயா இருக்கின்றது. படைத்துறைக்கு ஆட் சேர்பதில் சீனா பிரச்சனையை எதிர் கொள்ளும். இந்தியாவிற்கு அது பெரும் பிரச்சனையாக இருக்காது. எம் கே நாராயணனோ அல்லது ரோய் சௌத்திரியோ சீனா எதிர் கொள்ளும் மக்கள் தொகைக் கட்டமைப்பு பிரச்சனையைப் பற்றியும் இந்தியாவின் சாதகமான மக்கள் தொகைக் கட்டமைப்பையும் பற்றி எடுத்துரைக்கவில்லை.


நீர்ப்பங்கீடு
சீனாவில் உற்பத்தியாகி இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் செல்லும் பிரம்ம புத்திரா நதியை சீனா திசை திருப்பினாலும் அது இந்தியப் பகுதியில் உள்ள பிரம்புத்திரா நதியைப் பாதிக்காது என்றார் முன்னாள் இந்தியத் தளபதி ரோய் சௌத்திரி. அதனால் அதையிட்டு அச்சம்டையத் தேவையில்லை என்பது அவரது கருதாக இருந்தது.  திபெத்தில் உள்ள கைலாய மலையில் உருவாகும் நான்கு பெரும் நதிகளில் இந்திய நீர்த் தேவை பெருமளவில் தங்கியிருக்கின்றது. இந்திய நீர்வளத்தின் 34 விழுக்காடு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கைலாய மலையில் இருந்து உருவாகின்றது. அவற்றில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி சீனாவில் சாங்போ (Tsangpo) என அழைக்கப்படுகின்றது.  பிரம்மபுத்திரா நதி அசாம், அருணாச்சலப் பிரதேசம், மெகாலயா, சிக்கிம், நாகலாந்து மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் உணவு உற்பத்திக்கு நீர்வழங்கிக் கொண்டு பங்களாதேசத்தினூடாகச் சென்று வங்கக் கடலில் கலக்கின்றது. சீனாவில் அதிகரிக்கும் நீர்த் தட்டுப்பாட்டிற்கு பிரம்மபுத்திரா திசை திருப்பப்பட வேண்டும் என்ற திட்டம் சீனாவிடமுள்ளது. இந்தியாவின் வட கிழக்கில் இருக்கும் மாநிலங்களை ஆக்கிரமித்தால் அது இலகுவானதாக அமையும். அதனால் சீனா நீண்டகாலமாக அருணாச்சலப் பிரதேசம் தன்னுடையது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அருணாசலப் பிரதேச எல்லையில் இந்தியாவும் சீனாவும் சொந்தம் கொண்டாடும் சர்ச்சைக்குரிய தவாங் மாவட்டத்தை நோக்கி சீனா பாரிய தெருக்கள் உட்படப் பல  உட்கட்டுமானங்களை உருவாக்கியுள்ளது. சனன் என்னும் நகரில் இருந்து அருணாச்சலபிரதேச் எல்லையை நோக்கி இருநூறு கிலோ மீட்டர் நீளமான எஸ்-202 என்னும் நெடுஞ்சாலை முக்கியமானதாகும். பிரம்மபுத்திரா நதியைத்துருப்புச் சீட்டகப் பாவித்து பங்களாதேசத்தை சீனாவின் பிடிக்குள் கொண்டுவர சீனாவால் முடியும். இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி நீர்வளம் சீனாவின் கையில் இருப்பது மிகவும் அச்சமூட்டுவதே என்பதை ஏன் தளபதி சௌத்திரி உணர மறுத்தார்.

இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களை சீனா அபகரித்தால் அதன் மூலம் பங்களாதேசத்தையும் சீனாவால் இலகுவாக அபகரிக்க முடியும். பின்னர் வங்காள விரிகுடாவில் இருந்து இந்து மாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனாவால் முடியும். சிட்டக்கொங், அம்பாந்தோட்ட, குவாடர் ஆகிய மூன்று துறைமுகங்களும் இந்தியாவிற்கான இறப்புச் சுருக்குக் கயிறாக மாறுவதை இந்தியா எந்த வகையிலாவது தடுக்க வேண்டும். அதற்கான அரசுறவியல் நகர்வுகள் நேப்பாளத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும். அது பின்னர் பூட்டான், பங்களாதேசம், மியன்மார் ஆகிய நாடுகளுடனான நட்பையும் ஒத்துழைப்பையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். சீனாவின் நட்பு இந்த நாடுகளை சீனாவிற்கான கடனாளியாக மாற்றும் என்ற பரப்புரை சிறப்பாக முன்னெடுக்கப்படுவதுடன். இந்தியாவின் நட்பு அந்த நாடுகளுக்கு நன்மையாக முடியக் கூடிய வகையில் இதய சுத்தியுடன் இந்திய வெளியுறவுத் துறை செயற்பட வேண்டும். நேப்பாளத்தில் இவற்றிற்கு நேர் மாறான கொள்கைகளைக் கடைப்பிடித்ததால் இந்திய எதிர்ப்பாளர்கள் அங்கு ஆட்சிக்கு வந்தார்கள் என்பதை இந்தியா உணர வேண்டும்.

கோழிக்கழுத்து
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்புரி, மிஸ்ரோம் மேகாலயா, நாகலாந்து. திரிபுரா ஏழும் சீனா, பூட்டான், மியன்மார் பங்களாதேசம் ஆகியவற்றால் நாற்புறமும் சூழ்ந்திருக்கின்றது. 17 கிலோமீட்டர் அகலமுள்ள சில்குரி இணைப்பாதை இந்தியாவின் பிரதான பகுதியுடன் இந்த ஏழு மாநிலங்களையும் இணைக்கின்றது. இந்தப் பாதையை சீனா துண்டித்தால் அது கோழியின் கழுத்தைத் துண்டித்த நிலைதான் என்கின்றனர் இந்தியப் படைத் துறை


சீனா இந்தியாவிற்க் எதிராக மாலை தீவை திருப்பி வைத்திருக்கின்றது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அடுத்த புவிசார் அரசியல் சம்பந்தப்பட்ட ஆட்சி மாற்றப் போட்டி மாலை தீவில் தீவிரமாக நடக்கம் போகின்றது. அமெரிக்காவின் உதவி மாலைதீவிலும் இந்தியாவிற்கு மிக அவசியமாகும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...