Friday, 2 February 2018

எதிரிகளின் அணுக்குண்டுகளைச் சமாளிக்க அமெரிக்கா முயலும் வகைகள்

வட கொரியா போன்ற சிறு நாடுகள் கூட அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருக்கும் வேளையிலும் ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராக தேவை ஏற்படின் அணுப் படைக்கலன்களைப் பாவிக்கத் தயங்க மாட்டோம் என இரசியா பகிரங்கமாக அறிவித்திருக்கையிலும் சீனா தனது படைவலுவை மிகத் துரிதமாக மேம்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும் அமெரிக்கா எதிரிகளின் அணுப்படைக்கலன்களை அழிக்க பல் வேறு வழிகளை உருவாக்கி வருகின்றது.

அமெரிக்க ஆதிக்க முறியடிப்பு
எதிரி நாடுகளின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்( “Anti-Access/Area Denial strategy”) உபாயத்தை உடைக்கும் வல்லமையை அமெரிக்காவிற்குக் கொடுப்பது அதன் கடல்சார் படையணிகளாகும். கடற்படை என்பது பல நாடுகளில் இரு வகையானவை. ஒன்று கடற்படை அது கடலில் மட்டும் செயற்படக் கூடியது. மற்றையது கடல்சார்படை(Marines). கடல்சார் படை கடலை முக்கிய தளமாகக் கொண்டு செயற்பட்டாலும் அது தரையிலும் வானிலும் போர் புரியக் கூடியவகையில் படைக்கலன்களையும் பயிற்றப்பட்ட படையினரையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தில் அதன் கடல்சார்படை பெரும் பங்கு வகிக்கின்றது.18-ம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசுக்கு எதிரான அமெரிக்க சுந்தந்திரப் போரில் இருந்து ஈராக் போர் வரை அமெரிக்காவின் அமெரிக்காவின் கடல்சார் படையினரே மிகப்பெரும் பங்கு வகித்தனர். அமெரிக்காவின் இந்த ஆதிக்கத்தை முறியடிக்க அணுப்படைக்கலன்கள் அவசியமானவை என அதன் எதிரி நாடுகள் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களைக் கொண்டிருந்தால் அமெரிக்கா ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும் என்பதை வட கொரியா உலகிற்கு உணர்த்தியுள்ளது. தன் எதிரிகளின் அணுப்படைக்கலன்களை புதிய முறைகள் மூலம் அணுக அமெரிக்கா முனைகின்றது.

இணைய வெளியூடான தாக்குதல்
எதிரியின் அணுப்படைகளுடன் தொடர்பு பட்ட கணினித் தொகுதிகளை இணையவெளி ஊடுருவல் மூலம் செயலிழக்கச் செய்வதும் எதிரியின் செய்மதிகளை அழிப்பதும்இணைந்த ஒரு வகை பாதுகாப்பு முறைமைய அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இதனால் எதிரி அணுக்குண்டு வீசுவதை தற்காலிகமாகத் தடை செய்ய முடியும். அந்த இடைப்பட்ட வேளையில் எதிரியின் அணுக்குண்டு வீசும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க வேண்டும். மைக்குரோவேவ் என்னும் நுண்ணலைத் தொழில்நுட்பம் கொண்ட குண்டுகளை வீசுவதன் மூலம் எதிரியின் கணினிகளைச் செயற்படாமல் தடுக்க முடியும். இணயவெளி ஊடுருவலிலும் பார்க்க இது செயற்திறன் மிக்கது. ஆனால் ஏவுகணை எதிர்ப்பு முறைமையைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

இடை மறிப்புத் தாக்குதல்
அமெரிக்காவும் இரசியாவும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை ஒன்று ஒன்று கடும் போட்டியாக உருவக்கி வருகின்றன. இஸ்ரேல், இரசியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உருவாக்குகின்றன. அத்துடன் பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலிய ஆகிய நாடுகள் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்குகின்றன. ஆனால் மறுபுறத்தில் பல நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றன. ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக பெரும்பாலான ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் செயற்பட முடியாது. ஐக்கிய அமெரிக்கா, சீனா, இரசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான், துருக்கி உட்படப் பல நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இருக்கின்றன. இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணைகள் தற்போது உள்ள ஏவுகணைகளில் அதிக வேகமாகப் பாயக் கூடியவை.

ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் லேசர் கதிர்கள்
லேசர் கதிர்களை பாவித்து எந்த வேகத்தில் வரும் ஏவுகணைகளையும் அழிக்க முடியும். இது சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அழிக்க அமெரிக்கா உருவாக்கிய உபாயமாகும். இப்படிப் பட்ட லேசர் படைக்கலன்களை பரிசோதிக்கும் போதுதான மலேசியாவின் எம்.எச்-17 பயணிகள் விமானம் தவறுதலாக அகப்பட்டுக் கொண்டது என்ற சதிக்கோட்பாடும் சிலரால் முன்வைக்கப்பட்டது.

ரொபோக்களைப் போரில் ஈடுபடுத்துதல்
செயற்கை விவேகத்தின் (artificial intelligence) வளர்ச்சி ரொபோக்கள் என்னும் இயந்திர மனிதர்களை போர்களம் இறக்கும் திறனை உருவாக்கியுள்ளது. முதலில் ஒரு படையணியை வழிநடத்துவதற்கும் தாக்குதல்களை நெறிப்படுத்துவதற்கும் செயற்கை விவேகம் பாவிக்கப்பட்டது. போர்களத்தில் இருந்து பெறப்படும் பல்வேறு தகவல்களை அடிப்படியாக வைத்து செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதமாக முடிவெடுக்கும் பணியை ரொபோக்கள் செய்தன. இவை கட்டளைப் பணியகத்தில் உள்ள தளபதிகளின் பணியை திறன் மிக்கதாக்கியது. தற்போது போர்க்களத்தில் இறக்கப்படக் கூடிய ரொபோக்கள் உருவக்கப்படுகின்றன. இவை அணுக்குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியுலும் நின்று செயற்படும். இவற்றை களமிறக்கிய பின் தாமாகவே போர் புரியும். எவரும் அவற்றை இயக்கத் தேவையில்லை.

எதிரியின் அணுக்குண்டுகளை நிர்மூலமாக்குதல்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா எதிரியின் அணுக்குண்டுகளை எதிரியின் இடத்தில் வைத்தே அழித்து ஒழிக்கும் முறைமை பற்றி பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றது. 2017 நவம்பரில் அமெரிக்கக் கடற்படையினர் உலகின் எப்பாகத்தையும் தாக்கக் கூடிய ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பரீட்சித்தனர். உலகின் மிகக் கூடிய தொலைவில் உள்ள இலக்கை ஒரு மணித்தியாலத்துக்குள் அந்த ஏவுகணைகளால் தாக்க முடியும். இவை மரபு வழிப் படைக்கலன்களை அதாவது அணுக்குண்டு அல்லாத குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. அத்துடன் இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. எதிரியின் அணுக்குண்டுகளை ஒழிக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு Conventional Prompt Global Strike (CPGS) எனப் பெயரிட்டுள்ளது. இதில் முக்கிய அம்சங்கள்
1. மரபுவழிக் குண்டுகளைப் பாவித்தல்
2. ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை முறியடிக்கக் கூடிய வகையில் ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைப் பாவித்தல்.
3. உலகின் எப்பாகத்திலும் தாக்குதல் நடத்தும் திறன் பெறுதல்.
4. மிகத் துரிதமான நடவடிக்கை.
இவற்றால் தான் இத்திட்டத்திற்கு மரபுவழி துரிதசெயலில் உலகெங்கும் தாக்குதல் {Conventional Prompt Global Strike (CPGS)} எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இப்போது சீனாவும் இதே போன்ற முறைமையை உருவாக்கத் தொடங்கியுள்ளது. வட கொரியாவை அதன் அணுக்குண்டுகளைக் கைவிடாவிட்டால் தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் அணுக்குண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கருதுகின்றது. இது வட கொரியாவை அடக்க மறுக்கும் சீனாவைப் பழிவாங்கு நடவடிக்கையே. ஏற்கனவே சீனா இந்தியாவின் அணுக்குண்டுகளையும் அதன் ஏவுகணைகளின் வளர்ச்சியையும் இட்டு மிகக் கரிசனை கொண்டுள்ளது.

ஆக மொத்தத்தில் படைகலப் போட்டி பல வழிகளில் தொடரும். அதனால் பெருமளவு பணம் விரயமாகும். ஆனல் உலகம் அமைதியடையப்போவதில்லை.


Monday, 29 January 2018

சீனாவில் சிதைக்கப்பட்ட அமெரிக்க சிஐஏ

ஜெரி சுன் ஷிங் லீ என்பவர் ஹொங் கொங்கில் இருந்து நியூயோர்க் சென்ற வேளையில் அங்கு கெனடி விமான நிலையத்தில் வைத்து 2018 ஜனவரி 15-ம் திகதி கைது அமெரிக்கப் புலனாய்வுத் துறையான FBIயினால் செய்யப்பட்டார். ஹொங் கொங்கில் அதிகம் அறியப்படாடதவரான இவர் சிஐஏயிஅமெரிக்க அரசிற்கு சொந்தமான இரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 53 வயதான ஜெரி சுன் ஷிங் லீ சிஐஏயில் பணி புரிந்தவர். அதிலிருந்து 2007-ம் ஆண்டு விலகி ஹொங் கொங்கில் வசித்து வந்தவர். அவர் சிஐஏயிற்கு எதிராகச் செயற்பட்டவர் என்பதை சிஐஏ அறிந்திருந்த வேளையில் அவரது அமெரிக்கப் பயணம் அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

படைத்துறையில் ஆரம்பித்த ஜெரி சுன் ஷிங் லீ
ஜெரி சுன் ஷிங் லீயிற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களின் படி அவர் 1982இல் இருந்து 1986வரை அமெரிக்கத் தரைப்படையில் அவர் கடமையாற்றியிருந்தார். பின்னர் 1994இல் சிஐஏயில் இணைந்து கொண்டார். அமெரிக்க உளவுத் துறையில் பணி புரிவர்களின் உண்மையான பெயர்கள், அவர்களின் சந்திப்புகள், பணிபுரியும் இடங்கள், தொடர்பாடல் இலக்கங்கள், அவர்களுக்கு வழங்கப் பட்ட வசதிகள் அடங்கிய குறிப்பேட்டை ஜெரி சுன் ஷிங் லீ வைத்திருந்தமையை அமெரிக்க அரசு 2012-ம் ஆண்டே அறிந்திருந்தது. 2007-ம் ஆண்டு சிஐஏயில் இருந்து விலகிய ஜெரி லீ அமெரிக்காவில் இருந்து ஹொங் கொங் சென்று அங்கு ஏலத்தில் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.


சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்கள் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா போன்ற தீவிரவாத இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின்  பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பகரம், நேர்மை, கிடைப்புத்தகமை (Confidentiality, integrity and availability) ஆகியவை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின்தூயதிரித்துவங்களாகும்என் அந்த அமைப்புச் சொல்கின்றது. அது தன் உளவாளிகளை சொத்துக்கள் என்றே அழைக்கின்றது. வெறும் மனிதர்கள் மட்டும் அதன் உளவாளிகள் அல்ல பல்வேறுவிதமான உளவுக் கருவிகளையும் அது பாவிக்கின்றது. கியூப முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோவைக் கொல்லும் முயற்ச்சியில் படு தோல்வியையும் பின் லாடனைக் கொன்றதில் பெரு வெற்றியையும் சிஐஏ கண்டிருந்தது.


மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயற்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயற்பாட்டுக்கு மாற்றப்பட்டது.

தான் தோன்றித்தனமிக்க சிஐஏ
அமெரிக்காவின் எந்த அரச அமைப்புக்களுக்கோ நீதித் துறைக்கோ பொறுப்புக் கூறும் நிர்ப்பந்தம் இன்றி முழுக்க முழுக்க தன்னிச்சைப்படி செயற்படும் ஓர் அமைப்பாக சிஐஏ திகழ்கின்றது என பல மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். இதனால் சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளும் நடவடிக்கைகளை இந்த நூற்றாண்டில் ஆரம்பத்தில் தொடங்கியது. சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொண்டது. யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரகசியமாக சிறைக்கூடங்களையும் சித்திரவதைக் கூடங்களையும் சிஐஏ நடத்துவதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இரகசியத் தன்மையை இழந்த சீனா
சீனாவின் ஆட்சியினதும் பொதுவுடமைக் கட்சியினதும் உயர் மட்டங்களில் நடப்பவை எல்லாம் சிஐஏ அறிந்து கொள்ளக் கூடிய வகையில் தனது உளவாளிகளை அது உருவாக்கியிருந்தது.  அதற்கு பல சீன வம்சாவளி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சீன வம்சாவளியினரைப் பயன் படுத்தியது. அவர்கள் உலகின் பல் வேறு இடங்களில் இருந்து செயற்பட்டனர். சீனாவில் சிஐஏயிற்கு உளவு பார்க்கக் கூடியவர்கள் இவர்கள் மூலம் திரட்டப் பட்டனர். அவர்களில் பலர் சீன அரசு, பொதுவுடமைக் கட்சி, உட்படப் பல் வேறு நிறுவனங்களில் உயர் மட்டங்களில் பணி புரிபவர்கள். இதனால் சீன அரசினதும் பொதுவுடமைக் கட்சியினதும் முடிவுகள் செயற்பாடுகள் பற்றி அமெரிக்கா அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் சீனாவில் இருந்து கிடைக்கும் உளவுத் தகவல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து 2010-ம் ஆண்டு எந்த ஒரு இரகசியத் தகவல்களும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

சிஐஏயின் வரலாறு காணாத இழப்பு
தனது நாட்டில் நடப்பவற்றை அமெரிக்கா நன்றாக அறிந்து கொள்கின்றது என்பதை சீனா 2005-ம் ஆண்டில் உணர்ந்து கொண்டது. அதற்கான உளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரமாகச் செயற்படுத்தத் தொடங்கியது. அது எப்படி தனது நாட்டிற் செயற்படும் உளவாளிகளை அறிந்து கொண்டது, அவர்களை எப்படித் தண்டித்தது என்பதை உலகம் அறியாது. சீனாவில் செயற்பட்ட எல்லா அமெரிக்க உளவாளிகளையும் சீனா கண்டு பிடித்தது அமெரிக்க உளவுத் துறைக்கு வரலாறு காணாத இழப்பாகும். அமெரிக்கா படு இரகசியமாக வைத்திருந்த உளவாளிகள் பற்றிய தகவல்கள் எப்படி சீனாவின் கைகளில் சிக்கியது என்பதை இரண்டு ஆண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டு சிஐஏ ஆராயத் தொடங்கியது. முதலில் தமது கணினிகளை சீனா ஊடுருவி தகவல்களைப் பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலேயே ஆராயத் தொடங்கியது சிஐஏ. இந்த ஆய்வில் உளவுத் துறையான சிஐஏயிற்கும் புலனாய்வுத் துறையான FBIயிற்கும் முறுகல்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. இறுதியில் சிஐஏயைச் சேர்ந்த ஒருவர்தான் சீனாவிற்கு தகவல் வழங்குகின்றார் என அறிந்து கொள்ளப்பட்டது. அது ஜெரி சுன் ஷிங் லீ எனவும் சிஐஏ கண்டறிந்தது.

கடுமையாகவும் இரகசியமாகவும் செயற்பட்ட சீனா
சிஐஏயின் உளவாளியாகச் செயற்பட்ட ஒரு சீனரை சீன அரசு பொது இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றது. இது மற்ற சீன அரச அதிகாரிகளுக்கும் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கும் விதத்தில் நிறைவேற்றப்பட்டது. பகிரங்கமாகச் செய்யப்பட்டதால் இது போன்ற சில செய்திகள் மட்டும் வெளியில் வந்தன. சீனாவிற் செயற்பட்ட இருபது சிஐஏ உளவாளிகளை சீன அரசு கொன்றிருக்கலாம் அல்லது சிறையில் அடைத்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை நம்புகின்றது. சரியாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் எத்தனை பேர் சிறையிலடைக்கப்பட்டனர் என்பது எட்டு ஆண்டுகள் சென்றும் அமெரிக்காவால் துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை.

விட்டுப் பிடித்த அமெரிக்கா
ஹொங் கொங்கில் இருந்து ஜெரி சுன் ஷிங் லீ 2012-ம் ஆண்டு அமெரிக்கா திரும்பிய போது அவர்தான் தமக்குத் துரோகம் செய்தவர் என்பதை அறிந்திருந்தும் அவரைக் கைது செய்யாமல் விட்டது.  போதிய தகவல்கள் பெறுவதற்காக அப்படிச் செய்யப்பட்டது. முன்னாள் சிஐஏ உளவாளிகளை மீளப் பணிக்கு அமர்த்துவது என்ற போர்வையில் அவருடன் சிஐஏயின் உயர் அதிகாரிகள் கலந்துரையாடினர். அவர் மீண்டும் ஹிங் கொங் செல்ல அனுமதிக்கப்பட்டு அவரது நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டன.


பல்வேறு வாதங்கள்
அமெரிக்காவின் உளவுத்துறை ஒரு சீன வம்சாவளியினரை பணிக்கு அமர்த்தியது தவறு என சிஐஏ மீது பல அமெரிக்கர்கள் சினம் கொண்டுள்ளனர். ஆசியர்கள் எப்படித்தான் அமெரிக்கக் குடிமகக்களாகி நாட்டுக்காக உழைத்தாலும் அவர்களுக்கு வெள்ளையர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, சன்மானம், பாராட்டு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதில்லை அதனால் அவர்கள் பல ஆண்டுகள் பணி புரிந்த பின்னர் விரக்தியடைந்து அமெரிக்காவை வெறுப்பவர்களாக மாறுகின்றனர் என்ற குற்றச் சாட்டும் முன் வைக்கப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவின் பிறக்காமல் வெளிநாடுகளில் பிறந்து அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்புத் தேடிச் சென்று குடியுரிமை பெற்ற பல இலட்சம் பேர் அமெரிக்காவிற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வது அமெரிக்காவின் எதிரி நாடுகளை வியக்க வைப்பதும் உண்டு.


2010இல் சீனாவில் சிதைக்கப்பட்ட சிஐஏ 201 கட்டமைப்பிலும் பார்க்க சிறந்த கட்டமைப்பு 2018இல் சீனாவில் இல்லை எனச் சொல்ல முடியாது!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...