Monday, 1 October 2018

ரஃபேல் விமானக் கொள்வனவும் இந்திய விமான உற்பத்தியும்


இந்தியாவின் முதலாவது தனியார் படைக்கல உற்பத்தி முயற்ச்சி 1940 ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது வால்சந்த ஹரிசந்த் ஜோசி என்பவரால் செய்யப்பட்டது. அவர் ஒர் அமெரிக்க முதலீட்டாளருடன் இணைந்து மைசூர் மகராசாவின் உதவியுடன் ஹிந்துஸ்த்தான் ஏயர்கிராஃப்ட் லிமிட்டெட் (Hindustan Aircraft Limited) நிறுவனத்தை உருவாக்கினார். பெங்களூரில் மகராசா வழங்கிய 700ஏக்கர் காணியில் இதன் உற்பத்தி ஆரம்பித்தது. முதலாவதாக Harlow PC-5 என்னும் ஒரு பயிற்ச்சி விமானம் உருவாக்கப்பட்டது. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரித்தானிய அரசு அந்த நிறுவனத்தை 1942இல் அரசுடமையாக்கியது. இந்திய சுதந்திரத்தின் பின்னர் அந்த விமான உற்பத்தி நிறுவனம் இந்திய அரசின் உடமையானது. பின்னர் அந்த நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்துடன் இணைந்து கொண்டது.

பெருமை மிகு ஹல்
Hindustan Aeronautics Limited (HAL) தேஜஸ், ஹல் துருவ், மிக்-21 ஆகிய விமானங்களை உருவாக்கியது. பல உலங்கு வானூர்திகளையும் உற்பத்தி செய்தது. பல வெளிநாட்டு விமான உற்பத்தி நிறுவனங்களுக்கு அது உதிரிப்பாக உற்பத்திகளையும் செய்தது. ஆனால் உரிய நேரத்தில் வேலைகளை முடிப்பதில்லை என்ற கெட்ட பெயரையும் பெற்றுக் கொண்டது. Hindustan Aeronautics Limited (HAL)இன் முழுமையான உள்ளூர்த் தயாரிப்பான தேஜஸ் விமானம் சீனாவின் J-10இலும் பார்க்கச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. அத்துடன் இந்திய விமான உற்பத்தித் துறையில் ஒரு மைல்கல்லாகவும் கருதப்படுகின்றது. HAL உற்பத்தி செய்த HAL HF-24 Marut என்ற fighter-bomber விமானம் ஆசியாவின் முதலாவது ஜெட் விமானமாகும். 1971-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரில் அது சிறப்பாகச் செயற்பட்டது. இந்த பெருமை மிகு HAL என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விமான உற்பத்தி நிறுவனத்தை இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வஞ்சித்தாரா என்ற கேள்வி இந்திய அரசியலை இப்போது உலுப்புகின்றது. படைத்துறை நிபுணர்களின் கருத்துப்படி ஒரு வல்லரசின் நம்பகத்தன்மைக்கு அதன் பாதுகாப்பு உற்பத்தித் துறை முக்கியமானதாகும். ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போது படைக்கல இறக்குமதியில் தங்கியிருப்பது உகந்த ஒன்றல்ல.

இந்தியாவிற்கு தேவப்பட்ட பற்பணி (Multi-role) விமானம்
இந்தியா படைக்கலன்களை வாங்கிக் குவிப்பது பாக்கிஸ்த்தானுடன் போர் செய்வதற்கும் சீனாவுடன் போரைத் தவிர்ப்பதற்குமாகும். 2007இல் பாக்கிஸ்த்தானிடமுள்ள F-16 போர்விமானங்களையும் சீனாவின் J-10 போர்விமானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தமக்கு நடுத்தர பற்பணி தாக்குதல் போர்விமானங்கள் (Medium multi-role combat aircraft ) வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய அரசிடம் விடுத்தது. அமெரிக்கா அப்போது இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை வழங்குவதில்லை. அமெரிக்கா இந்தியாவிற்கு போக்குவரத்து விமானங்களான C 130, C 17ஆகியவற்றையும் ரோந்து விமானமன P 8I  ஐயும் விற்பனை செய்தது. இந்தியாவிற்கு தற்காப்பு படைக்கலன்களை மட்டுமே வழங்குவது என்ற கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்தது. அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்கினால் அது சிலசமயம் அரசியற் காரணங்களுக்காக தடைகளையும் எதிர்பாராத நேரத்தில் செய்யலாம் என்ற அச்சம் இந்தியாவிடம் இருந்தது. இரசியா இந்தியாவிற்கும் விற்பனை செய்யும் விமானங்களுக்கு அதிக விலை கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச் சாட்டும் அப்போது இருந்தது.

கேள்விக்குப் பல பதில்கள்
2007இல் இந்திய அரசு 126 விமானங்களுக்கான கேள்விப்பத்திரம் விடுத்தது
பதிலளித்தவை 1. பிரான்ஸின் ரஃபேல் விமான உற்பத்தி நிறுவனமான டசோ (Dassault), 2. இரசியாவின் மிக்-39 3. சுவீடனின் சாப் நிறுவனத்தின் JAS-39 Gripen 4. அமெரிக்க லொக்கீட்டின் F-16, அமெரிக்க போயிங்கின் F/A-18 Super Hornet, பிரித்தானியாவில் இருந்து Eurofighter Typhoon ஆகியவையாகும்.  1998-ம் ஆண்டு இந்திய அணுக்குண்டு பரிசோதனை செய்த போது பிரான்ஸ் பொருளாதார மற்றும் படைத்துறைத் தடையை இந்தியாவிற்கு எதிராக விதிக்கவில்லை. அப்போது பிரான்ஸ் இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் நம்பகரமான பாங்காளியாகக் கருதப்பட்டது. அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்ய இருந்த Javelin AT missile இல் தடை வருமா என்ற நிலை இருந்தது. இந்தச் சூழலில் பிரான்ஸின் டசோ நிறுவனத்தின் ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவு இந்தியாவில் எடுக்கப்பட்டது. அது பல விமர்சனங்களுக்கும் உள்ளானது. இரசியப் படைத்துறை நிபுணர்கள் தங்களது Su27, Su30 ஆகிய போர் விமானங்களுக்கு முன்னர் ரஃபேல் ஒரு நுளம்பு என்றனர்.

ரஃபேலை நம்பிய இந்தியா
அமெரிக்காவின் F-18 பிரெஞ்சு Rafaelஉம் மணிக்கு 587மைல் வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருந்தன. ஒரு பறப்பில் பறக்க வல்ல ஆகக் கூடிய தூரம் என்பதைப் பார்க்கையில் F-18 587 மைல்கள் ரஃபேல் 1150 மைல்கள். அப்போது இருந்த நான்காம் தலைமுறைப் போர்விமானங்களில் ரஃபேல் சிறந்தது என இந்தியப் படைத்துறை நிபுணர்களும் இந்திய அரசும் கருதின. ஏற்கனவே மிராஜ் போர்விமானங்களை உற்பத்தி செய்த அனுபவம் டசோ நிறுவனத்திற்கு இருந்தது. நம்பகத் தனமை, படைகலன்களை காவும் அளவு, பல்வகை உணைர்கள் போன்றவற்றில் ரஃபேல் சிறந்தது என்பதும் அவர்களின் கணிப்பு. ரஃபேலின் களமுனை அனுபவம் என்று பார்க்கும் போது ஆப்கானிஸ்த்தான், லிபியா, மாலி போன்ற நாடுகளில் வலிமை குறைந்த எதிரிகளுக்கு எதிராகவே அது தாக்குதல்களைச் செய்துள்ளது. அப்போது ஒரு ரஃபேல் விமானத்தின் விலை 526 கோடி என ஒத்துக்கொள்ளப்பட்டது.

தேர்தல்: ஆதலால் ஊழல் செய்வீர்
2003-ம் ஆண்டு நடந்த சதாம் ஹுசேய்னுக்கு எதிரான ஈராக் போரில் புலப்படா விமானங்கள் அமெரிக்காவால் பாவிக்கப்பட்டது. அப்போது போர் விமானத் துறையில் புலப்படா விமானங்கள் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கும் என உணரப்பட்டது. ஆனால் 2007-ம் ஆண்டு புலப்படாத் தன்மையற்ற ரஃபேலை வாங்கும் முடிவை இந்த்யா எடுத்தது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று. பொதுவாக ஒரு நாட்டில் தேர்தல் நடக்க முன்னர் ஆளும் கட்சிக்கு நிதி தேவைப்படும் போது பெரிய அளவில் படைக்கலன்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஆளும் கட்சி தனது தேர்தல் நிதியை ஊழல் மூலம் பெற்றுக் கொள்வது இலகுவானது.

ரஃபேலோடு தொடங்கிய Reliance Aerospace Technologies
 2007-ம் ஆண்டு ரஃபேல் விமானம் வாங்கும் முடிவை எடுத்த பின்னர் 2008 செப்டம்பரில் முக்கேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Reliance Aerospace Technologies Ltd. (RATL) என்னும் புதிய நிறுவனத்தை உருவாக்குகின்றது. அப்போதே டசோ நிறுவனமும் அம்பானியும் இணை உற்பத்தைப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட்ன்டன என ஐயங்கள் வெளிவிடப்பட்டன. 2011-ம் ஆண்டு இந்திய விமானப்படை டசோவின் ரஃபேலைத் தெரிவு செய்தது. 18 ரஃபேல் விமானங்கள் பறப்புக்குத் தயாரான நிலையில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டன. எஞ்சிய 108விமானங்களும் இந்திய அரசுக்குச் சொந்தமான Hindustan Aeronautics Ltd (HAL) உடன் இணைந்து உற்பத்தி செய்யப் பேச்சு வார்த்தை நடந்தது ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 2014 மார்ச்: விலை, தொழில்நுட்பம், படைக்கல முறைமை, பராமரிப்பு போன்றவை பற்றி உரையாடப்பட்டது. HAL நிறுவனமும் டசோவும் எப்படி வேலைகளைப் பகிர்வது என்பது பற்றி உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இவை யாவும் காங்கிரசு கட்சி இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் போது நடந்தவை. இறுதியானதும் உறுதியானதுமான முடிவு காங்கிரஸ் ஆட்சியின் போது இறுதி உடன்படிக்கை எட்டப்படவில்லை.

ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்
2014 மே 26 நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து இந்தியாவில் உற்பத்தி என்னும் திட்டத்தை அறிவிப்பு விடப்பட்டது. 2015 மார்ச் அம்பானியின் Reliance Defence உருவக்கப்பட்டது. 2015 ஏப்ரல் 10 மோடி பிரான்ஸ் சென்றார் 36 ரஃபேல் வாங்க உடன்பட்டது. 2015 ஜனவரி பிரெஞ்சு அதிபர் ஹொலண்டே இந்தியா பயணம் செய்து ஜனவரி 26 குடியரசு நாளில் கலந்து கொண்டார். அதே வேளை ஹொலண்டேயின் பங்காளி நடிகை Julie Gayet யும் ரிலையன்ஸும் இணைந்து திரைப்படம் தயாரிக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 2015 ஜூன் இந்திய பாதுகாப்புத் துறை பழைய ரஃபேல் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. 2016 ஒக்டோபர் டசோ ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிரெட் (DRAL) நிறுவனம் உருவாக்கம் செய்யப்பட்டது.

உற்பத்தி வேறு கழுவித் துடைத்தல் வேறு
விமான உற்பத்தியில் எந்த முன் அனுபவமும் இல்லாத அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் ரஃபேல் உற்பத்தி வழங்கப்பட்டது என்ற கேள்விக்கு மோடியின் ஆதரவாளர்கள் ஒரு பதிலை முன்வைக்கின்றார்கள். அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது பிரிவின் கலன்களைப் பராமரிக்கும் பொறுப்பை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அம்பானியிடம் ஒப்படைத்துள்ளது என்பதே அவர்களின் பதிலாகும். ரிலையன்ஸை அமெரிக்கா நம்பும் போது நாம் ஏன் நம்பக் கூடாது என அவர்கள் பதில் கேள்வி எழுப்புகின்றார்கள். ஏழாவது பிரிவின் கலன்கள் மோடியின் மாநிலமான குஜாராத்தில் வைத்தே பராமரிக்கப்படும். இப்போது இன்னொரு கேள்வி எழுகின்றது. ஒரு வாகனத்தை உற்பத்தி செய்வதும் அதை கழிவித் துடைத்து எண்ணெய் விடுவதும் ஒன்றா?

பிரெஞ்சு அதிபரின் பேட்டி
2018 செப்டம்பர் முன்னாள் பிரெஞ்சு அதிபர் மீடியாபார்ட் ஊடகத்துக்கு பேட்டி மோடியின் வற்புறுத்தலால் அம்பானியுடன் கூட்டு உற்பத்தி ஒப்பந்தம் செய்து கொண்டதாகச் சொன்னார். இந்திய அரச நிறுவனமான HALஇற்கு மோடி வஞ்சனை செய்து விட்டு தனக்கு தேர்தல் நிதி வழங்கும் அம்பானிக்குச் சார்பாக நடந்து கொண்டார் என்ற குற்ற சாட்டு இப்போது முன் வைக்கப்படுகின்றது. அதனால் HAL எனப்படும் இந்துஸ்த்தான் ஏரோனோட்டிக்கலுக்கு இழப்பு ஏற்பட்டது எனக் கருதப்படுகின்றது. அது மட்டுமல்ல காங்கிரசு ஆட்சியில் ஒத்துக் கொள்ளப்பட்ட விலையிலும் பார்க்க மூன்று மடங்கு விலையான 1670 கோடி இப்போது கொடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ரஃபேலில் புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என மோடி அரசு பதிலளித்தது. அவை எந்த அம்சங்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது பாதுகாப்புக் காரணங்களுக்காக அவை வெளியில் சொல்ல முடியாது என்கின்றது மோடி அரசு. 2017 டிசம்பரில் இருந்தே காங்கிரஸ் கட்சியினர்  அம்பானிக்கு சார்பாக மோடி அரசு நடப்பதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கின்றனர்.

தொடரும் ஒத்துழைப்புக்கள்
அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் Rafael Advanced Defence Systems Ltd என்னும் பிரெஞ்சு நிறுவனத்துடன் இணைந்து வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் கடைசி இடத்தில் இருக்கின்றது. ஆனால் பிரான்ஸ் உட்பட ஆறு மேற்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து உற்பத்தி செய்யும் மீட்டியோ (Meteor Europe) ஏவுகணைகள் முதலாம் இடத்தில் இருக்கின்றன. அவற்றை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அவை இணங்கியும் உள்ளன. ஆனால் அவற்றை இரசிய அல்லது இஸ்ரேலிய விமானங்களில் பொருத்தக் கூடாது என்ற நிபந்தனையை அவை விதித்துள்ளன. இரசியா அல்லது இஸ்ரேல் தமது தொழில்நுட்பத்தைத் திருடலாம் என்ற கரிசனையால் அப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தியத் தயாரிப்பான தேஜஸ்ஸில் அவற்றைப் பொருத்தலாம். ரஃபேலில் பொருத்துவதற்கு ஆட்சேபணை கிடையாது. அல்லது ஐரோப்பாவிடமிருந்து விமானங்களை இந்தியா வாங்க வேண்டி இருக்கும். ஆனால் மிட்டியோ ஏவுகணைகள் இந்தியாவின் வானாதிக்கத்தை சீனாவிலும் பார்க்க அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அம்பானியின் ஏவுகணைகள் அம்போ ஆகுமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...