Tuesday, 28 August 2018

டிரம்பிற்கு பேரிடிகளாக ஈரிடிகள்


இரசியா ஒரு புறம் ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் மறுபுறமும் என உக்ரேனை யாருடைய ஆதிக்கத்தில் வைத்திருப்பது என்ற போட்டியில் முக்கிய பங்கு வகித்தவர் விக்டர் யனுக்கோவிச். இவர் உக்ரேன் அதிபராக இருந்த போது உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு செய்யவிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்தவர். உக்ரேனில் 2014-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அவரை வெற்றி பெறவைக்க இரசியா கடும் முயற்ச்சி எடுத்தது. அந்தத் தேர்தலில் விக்டரை வெற்றி பெறவைக்க அமெரிக்கப் பரப்புரை வித்தகரான போல் மனபோர்ட் செயற்பட்டார். போல் மனபோர்ட் அரசியல் ஆலோசனைகள் பரப்புரைகள் போன்றவற்றிற்கு என ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருடன் Rick Gates என்பவரும் பணிபுரிந்தார். மனபோர்ட்டிற்கு Rick Gates வலது கரம். அமெரிக்க நலன்களுக்கு எதிராக அவர்கள் செயற்படுவதால் அவர்களை அப்போதே அமெரிக்காவின் சட்ட அமூலாக்க அமைப்பான FBI அவதானிக்கத் தொடங்கியது.

பரப்புரையில்(Lobbying) சம்பாதித்தது பல மில்லியன்
உக்ரேனின் இரசிய ஆதரவு ஆட்சியை அமைப்பதற்காக தேர்தல் பரப்புரைக்கு ஆலோசனைகள் வழங்கியதால் 60மில்லியன் டொலர்களை மனபோர்ட் சம்பாதித்திருந்தார். வருமான வரிப் புகலிட நாடுகளில் அவரது பணம் முதலிடப்பட்டிருந்தது. அவரது செலவுகளுக்கான கொடுப்பனவுகள் அங்கிருந்தும் மேற்கொள்ளப்பட்டன. விக்டர் யனுக்கோவின் ஆட்சி மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்டு அவர் இரசியாவிற்கு தப்பி ஓடிய பின்னர் அவரது வருமானம் பெருமளவில் குறைந்தது அப்போது அவர் தனது வருமானத்தை மிகவும் குறைத்து வருமான வரித்துறையினருக்கு காட்டி வரி ஏய்புச் செய்தார். அவரது பல வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் இருந்த பணமும் முதலீடுகளும் அவர் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கவில்லை. வருமானம் இல்லாமல் இருந்த மனபோர்ட் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தன் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்பின் பரப்புரைக் குழுவில் இணைந்தார். அவரது நீண்ட நாள் உதவியாளரான Rick Gatesஉம் அவருடன் இணைந்து கொண்டார். இரண்டு மாதங்களில் மனபோர்ட் அந்தக் குழுவின் தலைவராகினார். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற மூன்றாம் நாள் டிரம்பின் பரப்புரையின் வெளியுறவிற்கான குழுவின் தலைவராக இருந்த George Papadopoulos  இடமிருந்து டிரம்பை சந்திக்க இரசியா ஆவலாக இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலை மனபோர்ட் Rick Gatesஇற்கு அனுப்பினார். அத்துடன் மனபோர்ட் டிரம்ப் அந்தச் சந்திப்பை மேற்கொள்வது உகந்தது அல்ல என்றும் பரப்புரைக் குழுவின் ஒரு சாதாரண உறுப்பினர் கலந்து கொள்ளலாம் எனவும் Rick Gatesஇடம் கூறியிருந்தார்.

அந்த நாள்
டிரம்பின் வாழ்க்கையில் முக்கியமான நாள் 2016 ஜூன் 9-ம் திகதி என வரலாற்றில் எழுதப்படுவதற்கான வாய்ப்புக்கள் இன்று மிக அதிகமாகக் காணப்படுகின்றது. அன்று போல் மனபோர்ட், டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர், மருமகன் ஜரெட் குஷ்னர் ஆகியோர் சில இரசியர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டனர். சந்திப்பின் நோக்கம் டிரம்பை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் மீது சேறு பூசுவதாகும். பின்னர் விசாரணையின் போது இப்படி ஒரு சந்திப்பு நடந்ததை டிரம்ப் தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது. பின்னர் அச்சந்திப்பு இரசியப் பிள்ளைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பது தொடர்பானது எனத் தெரிவிக்கப்பட்டது.

அம்பலப்படுத்திய நியூயோர்க் ரைம்ஸ்
2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15-ம் திகதி போல் மனபோர்ட்டிற்கு கணக்குகளில் காட்டப்படாத வருமானம் உக்ரேனில் உள்ள இரசிய ஆதரவாளர்களிடம் இருந்து வந்ததாக நியூயோர்க் ரைம்ஸ் அமபலப்படுத்தியது. அந்தச் செய்தி வந்த நான்கு நாட்களில் மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்க மனபோர்ட்டை தனது பரப்புரைக் குழுவில் இருந்து பதவி நீக்கம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் கோபுரம் என்னும் ஆடம்பர அடுக்கு மாடிக்குடியிருப்பில்தான் டிரம்பின் பரப்புரைக்கான தலைமைச் செயலகம் செயற்பட்டது. அதில் உள்ள வீட்டில்தான் மன்போர்ட் பரப்புரைக்காக குடியமர்த்தப்படிருந்தார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அங்கு தொடர்ந்து குடியிருந்து இரகசியமாக பரப்புரைக்குழுவிற்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மனபோர்ட்டின் ஆலோசனையின் பேரிலேயே டிரம்புடன் துணை அதிபராக மைக் பென்ஸ் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. டிரம்ப் தேர்தலில் வெற்றியடைந்த பின்னரும் அவரது அமைச்சரவைத் தெரிவும் போல் மனபோர்ட்டின் ஆலோசனையின் படி செய்யப்பட்டது.

இரசியத் தலையீடு பற்றி விசாரணை
2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டதா என்ற விசாரணையை அமெரிக்காவின் நீதித்துறையின் ஒரு பகுதியான FBI, பாரளமன்றத்தின் மூதவையின் புலனாய்வுக் குழு ஆகியன விசாரணையை ஆரம்பித்தன. போன் மனபோர்ட் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் திகதி தானாகவே சென்று மூதவையின் புலனாய்வுக் குழுவின் முன் மூடிய அறையில் இரகசியமாக சாட்சியமளித்தார். அதற்கு அடுத்த நாள் அதிகாலை FBIஇனர் போல் மனபோர்ட்டின் வீட்டில் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தப்பட்டது.

குற்றச்சாட்டுகள்
2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30-ம் திகதி 12 குற்றச்சாட்டுகள் போல் மனபோர்ட்மீது சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. தேசத்துக்கு எதிரான சதி, பணச்சலவைச் சதி, வெளிநாட்டினருக்காக பதிவு செய்யப்படாத முகவராக செயற்பட்டமை, வெளிநாடுகளில் இருந்து வந்த வருமானத்தை கணக்குக் காட்டாமை, வரி ஏய்ப்பு போன்றவை குற்றச் சாட்டுகளாகும். அவரின் உதவியாளர் Rick Gatesமீதும் அதே போன்ற குற்றச் சாட்டுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. போல் மனபோர்ட்டுடனும்  Rick Gates உடனும் உக்ரேனில் இரசியாவின் நலன்களிற்காகப் பணி புரிந்த Van Der Zwaan  என்பவர் மீது 2018 பெப்ரவரி 20-ம் திகதி வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர் 2018 பெப்ரவரி 22-ம் திகது 32 குற்றச் சாட்டுகளைக் கொண்டு போல் மனபோர்ட் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அது நடந்து மூன்றாம் நாள் மனபோர்ட்டின் உதவியாளரான Rick Gates தனது குற்றங்களை ஒத்துக் கொண்டு உண்மையைச் சொல்லி தண்டனைகளை குறைக்கும் பேரத்தை செய்ய அரசு வழக்குத் தொடுநர்களுக்கு இணக்கம் தெரிவித்தார். இதனால் போல் மனபோர்ட் செய்த பல நிதி மோசடிகளுக்கான ஆதாரங்கள் கிடைத்தன.
தேர்தலுக்கு முன்னரே அம்பலம்
2016-ம் ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்பின் பரப்புரைக் குழுவைச் சேர்ந்த பலர் இரசிய உளவுத் துறையுடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற முன்னரே முன் வைக்கப்பட்டது. டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்ற போது சட்டமா அதிபராக இருந்த சலி கேற் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவில் இருந்த மைக்கேல் ஃபிளைனை அமெரிக்கப் படைத் தளபதியாக நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். மைக்கேல் ஃபிளைன் இரசிய உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்த படியால் இரசியா அவரை பயமுறுத்தி அமெரிக்கப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பது சலி கேற்றின் கருத்து. பின்னர் சலி கேற்றை தனது குடிவரவுக் கொள்கைக்கு நீதிமன்றத்தில் ஆதரவு வழங்க மறுத்ததால் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்.

மைக்கேல் கொஹென்
2018 ஓகஸ்ட் 22-ம் திகதி போல் மனபோர்ட் வருமான வரி மோசடிக்காக ஐந்து குற்றங்களிலும் வெளிநாட்டு வங்கிக் கணக்கை வெளியிடாத ஒரு குற்றத்திற்கும் வங்கி மோசடிக்காக இரண்டு குற்றங்களிலும் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட ஏனைய குற்றங்கள் தொடர்பாக ஜூரர்கள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனது. அதே நாளில் டொனால்ட் டிரம்பினுடைய சட்ட ஆலோசகர் மைக்கேல் கொஹென் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு அரசுடன் ஒத்துழைத்து தண்டனையைக் குறைக்கும் பேரத்திற்கு இணங்கினார். டிரம்ப் அரசியலுக்கு வர முன்னர்  விலை மாதர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இரண்டு விலைமாதர்கள் டிரம்ப் தேர்தலில் போட்டியிட்ட போது அந்த இரகசியங்களை வெளியிடப் போவதாகத் தெரிவித்த போது டிரம்பின் சட்ட ஆலோசகரான மைக்கேல் கொஹேன் அவர்களுக்குப் பணம் கொடுத்து வாய் திறக்காமற் செய்தார். அந்தக் கொடுப்பனவுகளுக்கான நிதி அமெரிக்கத் தேர்தல் சட்டங்களை மீறியதாக இருந்தன. 2018 ஏப்ரலில் மைக்கேல் கொஹேனின் வீடு, விடுதி அறை, பணிமனை என்பன திடீர்ச்சோதனைகளுக்கு உள்ளாகின. அவரும் டிரம்பும் செய்த உரையாடல்களின் ஒலிப்பதிவுகளும் கைப்பற்றப்பட்டன. கொஹேன் தான் டிரம்பின் உத்தரவின் பேரிலேயா விலைமாதர்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்ததாக விசாரணையில் தெரிவித்தார். இந்த இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டமைக்கு முக்கியமாக நின்று செயற்பட்டவர் டெவிட் முல்லர் என்பவர். முன்னாள் FBI இயக்குனரான இவர் இன்னும் இரசியா 2016 நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டமைக்கான காத்திரமான குற்றச் சாட்டு எதையும் முன்வைக்க வில்லை, போல் மன போர்ட் மற்றும் மைக்கேல் கொஹென் ஆகியோர் செய்த குற்றங்களை மட்டுமே சிறப்பு விசாரணையாளர் டேவிட் முல்லர் கண்டு பிடித்துள்ளார்.

விசாரணையை ஆரம்பித்த முல்லர்
FBI அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படுகின்றது. அதன் தலைமை இயக்குனரான ஜேம்ஸ் கொமி டிரம்ப் பதவி ஏற்க முன்னரே அவரது தேர்தல் பரப்புரைக்குழுவிற்கும் இரசிய உளவுத் துறைக்கும் தொடர்புகள் இருந்ததா என்பதைப் பற்றி துப்பறியத் தொடங்கினார்.
மைக்கேல் ஃபிளைன் மீதான குற்றச்சாட்டுக்கள் பல ஊடகங்களில் அடிபட டிரம்ப் மைக்கேல் ஃபிளைனை பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று. பின்னர் டிரம்ப் ஜேம்ஸ் கொமியுடன் தொடர்பு கொண்டு மைக்கேல் ஃபிளைன் அருமையான மனிதர் அவரை விட்டு விடும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் ஜேம்ஸ் கொமியை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு அழைத்த டிரம்ப் தான் விசாரணக்கு உட்படுத்தப்படவில்லை என பகிரங்கமாக அறிக்கை ஒன்றை விடும்படி வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் தனக்கு விசுவாசமாக நடப்பதாக ஒரு உறுதிமொழி வழங்கும் படியும் டிரம்ப் ஜேம்ஸ் கொமியைக் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜேம்ஸ் கொமி டிரம்பினதும் அவரது தேர்தல் பரப்புரைக் குழுக்களினதும் செயற்பாடுகள் தொடர்பான மேலதிகத் தகவல்களை நீதித்துறையிடம் கோரினார். இது டிரம்ப்பிற்கு தெரிய வந்தது. டிரம்ப் வழமையான செயற்பாடுகளுக்கு மாறாக ஜேம்ஸ் கொமியைப் பதவியில் இருந்து நீக்கினார். இதனால் ஏற்பட்ட பரபரப்புக்களுக்கு மத்தியில் அமெரிகாவின் துணைச் சட்டமா அதிபர் டேவிட் முல்லரை 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இரசியா தலையிட்டதா என்பது தொடர்பாக சிறப்பு விசாரணையாளராக நியமித்தார். 

சட்டமாஅதிபரின் சட்டையைக் கழற்ற முடியுமா?
டிரம்ப் சிறப்பு விசாரணையாளர் முல்லரின் விசாரணையை நிறுத்த வேண்டும் அவரைப் பதவி விலக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளார். அவரை நேரடியாக டிரம்ப் பதவி விலக்க முற்பட்டால் அது நீதித் துறையின் செயற்பாட்டில் தலையிட்டதாகக் கருதப்படலாம். முல்லரை சட்டமா அதிபர் ஜெஃப் செஸன் பதவி விலக்கலாம். இரசியா அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது அதில் டிரம்பின் தேர்தல் பரப்புரையாளர்களுக்கு தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்வைத்ததால் அது தொடர்பான விசாரணை எல்லாவற்றிலும் இருந்து சட்டமா அதிபர் ஜெஃப் செஸன் தன்னைத் தானே விலக்கிக் கொண்டுள்ளார். அதை அன்றிலிருந்தே டிரம்ப் விரும்பவில்லை. டிரம்பை. முன்னாள் மூதவை உறுப்பினர் (செனட்டர்) என்ற வகையில் மூதவையில் முல்லருக்கு பல நண்பர்கள் உண்டு. அவர்களில் சிலர் டிரம்பிடம் அவரைப் பதவியில் இருந்து விலக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தனர். 2017 ஜூனில் டிரம்பின் எதிர்க்கட்சியான மக்களாட்சிக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் முல்லரைப் பதவி நீக்கம் செய்தால் டிரம்பை தாங்கள் பதவி நீக்கம் செய்வோம் என மிரட்டியிருந்தனர். அமெரிக்காவில் சட்டமா அதிபர் ஓர் அமைச்சர் ஆவார். அவரின் கீழ் சட்டத்துறை, சட்ட அமூலாக்கத்துறை, நீதித்துறை ஆகியன செயற்படுகின. உள்நாட்டு உளவுத் துறையான யும் சட்டமா அதிபரின் கீழ் உள்ள நீதித்துறையால் மேற்பார்வை செய்யப்படுகின்றது.

முல்லருக்கு எதிராக மூதவை உறுப்பினர்கள்
முல்லரின் விசாரணைகள் தமது கட்சிக்கு பாதகமானது என உணர்ந்த டிரம்பின் குடியரசுக் கட்சியினர் தற்போது சட்ட மாஅதிபர் ஜெஃப் செஸன் பதவி விலக்குவதற்கு ஆதரவாக மாறியுள்ளனர் என Steve Bannon தெரிவித்துள்ளார். இவர் டிரம்பின் தேர்தல் பரப்புரைக் குழுவின் நிறைவேற்று அதிகாரியாக இருந்து தேர்தலில் டிரம்ப் வென்ற பின்னர் வெள்ளை மாளிகையின் தந்திரோபாய வகுப்பாளராகப் பதவி ஏற்றவர். பின்னர் பதவியில் இருந்து விலகிக் கொண்டவர். ஆனால் 2018 நவம்பரில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தால் மக்களாட்சிக் கட்சியினர் டிரம்பை பதவியில் இருந்து விலக்குவார்கள் என்றும் Steve Bannon கூறியுள்ளார். நடாளவிய அடிப்படையில் டிரம்பை ஆதரிப்பவர்கள் 35விழுக்காட்டிலும் குறைவு என்றாலும் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் 85விழுக்காடு ஆக உள்ளது. டிரம்ப் பதவியில் இருந்து விலக்கப்படுவதற்கான வாய்ப்பு 45விழுக்காடாக அதிகரித்துள்ளது.


கவசத்துடன் களமிறங்கப் போகும் கணக்காளர்

டிரம்பின் நிதித்துறைக்குப் பொறுப்பாக இருந்த Allen Weisselbergக்கு தண்டனையில் இருந்து தப்பும் கவசத்தை இரசியாவின் தேர்தல் தலையீடு தொடர்பான விசாரணையைச் செய்தவர்கள் வழங்கியுள்ளார்கள். முறைகேடுகளைத் தேடுவதாயின் பணப் போன பாதைகளைத் தேடு என்பது விசாரணையைப் புலனாய்வு செய்பவர்கள் பின்பற்றும் அடிப்படை விதி. குற்றத்தை ஒப்புக் கொண்ட கொஹென் சொன்னது போல் டிரம்ப் விலைமாதர்களின் வாய்களை அடைக்க கொடுத்த பணம் தொடர்பான தகவல் மட்டுமல்ல டிர்மபின் வருமான வரி தொடர்பாகவும் இவரால் தகவல்களை வழங்க முடியும். இவர் என்ன சொல்லப்போகின்றார் என்பதில் டிரம்பின் எதிர்காலம் தங்கியுள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட கவசத்தை Immunity Deal என அழைக்கின்றார்கள் அந்த Deal என்ற சொல்லுக்குள் பல மறைந்துள்ளன. அவை பலவற்றை வெளிக்கொண்டு வரலாம்

கடைசி அம்பு 
மைக்கேல் கொஹெனும் போல் மனபோர்ட்டும் தண்டிக்கப்படுவது டிரம்பிற்கு நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தப் போவதில்லை. விலைமாதர்களுக்கான கொடுப்பனவை டிரம்பின் வேண்டுதலின் பேரில் செய்தேன் என கொஹேன் தெரிவித்தமை உண்மை என நிரூபிக்கப்படும் வரை டிரம்பிற்கு ஆபத்தில்லை.  டிரம்ப் தான் அப்படிச் செய்யவில்லை என மறுத்தும் உள்ளார், ஆனால் விசாரணையாளர் டேவிட் முல்லர் இன்னும் பலரை நீதியின் முன் நிறுத்துவார். அதில் இறுதி ஆள் டிரம்ப்தான்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...