Monday, 6 November 2017

கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும்

2014-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்வதா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடந்த பின்னர் உலகில் பல நாடுகளில் கருத்துக் கணிப்பு ஒரு தொற்று நோய் போலப் பல நாடுகளிற்குப் பரவியுள்ளது. குர்திஷ்த்தான், கட்டலோனியா அடுத்தது தமிழ் ஈழம் என்ற கூச்சலும் எழுந்துள்ளது. தமிழ் ஈழத்தில் ஒரு பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்துவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்பது உணரப்பட வில்லை. பங்களாதேச விடுதலையில் இருந்து தொடங்கிய அடுத்தது ஈழம் என்ற கூச்சல் இன்றும் தொடர்கின்றது. 2009இல் மெர்சல் ஆகியவர்கள் இப்போதுமெண்டல்” ஆகி தமிழர்களின் பேரம் பேசும் வலு தற்போது அதிகரித்துள்ளது என பிதற்றுகின்றனர். மாறிவரும் உலக சூழ்நிலை ஒரு நாளில் தமிழர்களுக்கு என ஒரு தனிநாட்டை உருவாக்கும் என அமெரிக்க வால் பிடியான பேராசிரியர் வில்சன் சொன்னது ஒரு நாள் நடக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளின் உருவாக வாய்ப்பே இல்லை.

தாலிகழற்றாத இத்தாலி
2017ஒக்டோபர் மாதம் இத்தாலியில் மட்டும் இரண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் நடந்தன. ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் கருத்துக் கணிப்புக்கள் வெவ்வேறு விதமாக நடக்கின்றன. ஸ்கொட்லாந்தில் நடுவண் அரசின் அனுமதியுடனும் ஸ்கொட்லாந்துப் பிராந்தியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பிரிவினைக்கான ஆதரவு கிடைக்கவில்லை. பிரிவினைக்கான ஆதரவு கிடைத்திருந்தாலும் உடனடியாக நாடு பிளவு பட்டிருக்காது. நாட்டைப் பிரிப்பதற்கான சட்டம் இலண்டனில் உள்ள ஐக்கிய இராச்சியத்தின் பாராளமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு ஐக்கிய இராச்சிய அரசுத் தலைவரான எலிசபெத் ராணியில் கையொப்பத்தின் பின்னரே ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்திருக்கும். ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரிவினைக்கான கருத்துக் கணிப்புச் சட்டத்தின் படி ஸ்கொட்லாந்தில் நிரந்தரமாக வாழ்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஸ்கொட்லாந்திற்கு வெளியே வாழும் ஸ்கொட்லாந்தியர்கள் வாக்களிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து ஸ்கொட்லாந்தில் புகலிடத் தஞ்சம் கோரி வாழ்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஐக்கிய இராச்சியம் உதட்டில் வேறு உள்ளத்தில் வேறு
ஸ்கொட்லாந்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் தமக்கே உரிய பாணியில் நயவஞ்சக முகத்திற்கு கனவான் முகமூடிதரித்துக் கையாண்டனர். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்வது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர். இதற்காக அப்போதைய ஐக்கிய இராச்சியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அப்போதைய ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சமண்டுடன் ஒப்பந்தம் செய்து பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஸ்கொட்லாந்திற்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரிவினைக்கு எதிரான நல்ல, கெட்ட, வஞ்சக பரப்புரைகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதனால் பிரிவினைக் கோரிக்கைமக்களாட்சி முறைமைப்படிதோற்கடிக்கப் பட்டது.
அரபுக்கள், துருக்கியர்கள், ஈரானியர்கள் ஆகிய முப்பெரும் இனங்களால் சூழப்பட்ட குர்திஷ் மக்கள் பல நூற்றாண்டு காலமாக அரசுரிமை இன்றி அடக்கப்படும் இனமாக வாழ்ந்து வருகின்றனர். 1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் துருக்கியரின் உதுமானியப் பேரரசைத் தோற்கடித்த பின்னர். மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் நாடுகளின் எல்லைகளை வரையும் போதும் தமது குடியேற்ற ஆட்சிகளை உறுதிப் படுத்தும் போதும் பிரித்தாளும் கொள்கைகளை நேர்த்தியாகக் கையாண்டனர். இனி ஒரு இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது; அடிக்கடி அந்த நாடுகள் தமக்குள் மோதிக்கொள்ள வேண்டும்; தேவை ஏற்படும் போது குர்திஷ் மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி துருக்கியர்களையும், ஈரானியர்களையும் அரபுக்களையும் அடக்க வேண்டும் என்பவை அவர்களது உபாயமாக இருந்தது. அதற்காக சைக்ஸ்பைக்கோ உடன்படிக்கை (Sykes–Picot Agreement) இரகசியமாகக் கைச்சாத்திடப்பட்டது. இது குர்திஷ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு வழிவகுத்தது. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழும் நிலையை உருவாக்கியது.

சிரியாவில் வேறுவிதமான பிரகடனம்.
சிரியாவில் குர்திஷ்களுக்கு குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. அரபு வசந்தப் புரட்சிக்குப் பின்னர் சிரியாவில் உருவான உள்நாட்டுப் போரில் குர்திஷ் மக்கள் தியாகம் மிகு போராட்டத்தை நடத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தைக் கைப்பற்றினர். எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் குர்திஷ் மக்கள் பல தரப்பினராலும் விரும்பப் பட்டவர்களாக இருந்தனர். துருக்கி மட்டும் அவர்களது போராட்டத்தை ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. எஸ் அமைப்புக்கு எதிரான போரில் அவர்களுக்கு உதவியும் செய்தது. குர்திஷ் மக்களின் கடின உழைப்பு சிரியாவின் வடபகுதியில் உள்ள Afrin Canton, Jazira Canton and Kobanî Canton ஆகிய பிராந்தியங்களை அவர்கள் வசமாக்கியது. சிரிய குர்திஷ் மக்களாட்சி ஒன்றியக் கட்சியினர் பல்வேறு குர்திஷ் அமைப்புக்களுடன் இணைந்து 2016 மார்ச் மாதம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தினர். அது தனி நாட்டுக்கான வாக்கெடுப்பல்ல. அது ஓர் இணைப்பாட்சி (Federal) அரசை அமைக்கும் வாக்கெடுப்பு. அந்த வாக்கெடுப்பில் அவர்கள் வெற்றியடைந்து Democratic Federation of Northern Syria என்ற இணைப்பாட்சி அரசை உருவாக்கினர். அவர்களது பிரதேசத்தை ரொஜாவா என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். இணைப்பாட்சி அரசு என்பது சிரிய நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடிய நிலையில் சிரிய அரசும் இல்லை. ஆனால் அதைத் தொடர்ந்து சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் துருக்கியின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டு சிரியக் குர்திஷ் மக்கள் சார்பாக யாரும் அழைக்கப்படவில்லை. தாம் போரில் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டதாக குர்திஷ் மக்கள் உணர்ந்து கொண்டனர். சிரியாவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பஷார் அல் அசாத் உறுதியான ஆட்சி அமைக்கும் போது ரொஜாவா இணைப்பாட்சி அரசு இல்லாமல் செய்யப்படலாம். முன்பு சிரியாவில் உள்ள குர்திஷ் மக்களைப் பாதுகாக்கும் உறுதி மொழியை இரசியா வழங்கியிருந்தது. அப்போது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமடைந்து வரும் நிலையில் அந்த உறுதிமொழிப்படி இரசியா நடக்குமா? நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் படைவலு மட்டும் சுதந்திரம் கொண்டு வராது.


இத்தாலியில் தன்னாட்சி கோரும் வடக்கு
இத்தாலியில் வடக்குப் பிராந்தியம் செல்வம் மிக்கதாகவும் தெற்குப் பிராந்தியம் செல்வமற்றதாகவும் இருக்கின்றது. அதனால் வடக்குப் பிராந்தியத்தில் அறவிடப்படும் வரி தெற்குப் பிராந்தியத்தில் செலவிடப்படுகின்றது. இந்த முறைமையை மாற்றினால் இத்தாலியின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ளவர்கள் செலுத்தும் வரி குறைக்கப்படலாம். வடக்குப் பிராந்திய நகரங்களான லொம்பார்டி மற்றும் வெனிற்றா ஆகிய நகரங்கள் தமக்கு சுயாட்சி வேண்டி கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களைத் தனித்தனியே 2017 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி நடத்தின. இவையும் நடுவண் அரசின் அனுமதியுடனேயே நடந்தது. வடக்குச் செல்வந்தர்கள் தெற்கில் உள்ள பிராந்திய அரசுகள் ஊழல் மிகுந்தனவும் திறனற்றவையும் என ஆத்திரமடைந்ததன் விளைவாகவே இத்தாலியில் இரண்டு அதிக அதிகாரம் கோரும் கடப்பாடற்ற (non-binding)கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. ரோமில் உள்ள இத்தாலிய நடுவண் அரசு அசையவில்லை. பொருளாதார சுதந்திரம் மட்டும் அரசியல் சுதந்திரத்தைக் கொண்டு வராது.

ஈராக்கில் தனிநாடு வேண்டிய குர்திஷ்கள்
தமக்கென ஒரு நிலப்பரப்பு, தமக்கென ஒரு படை, தமக்கு என ஓர் அர்ப்பணிப்புள்ள மக்களைக் கொண்ட ஈராக்கிய குர்திஷ்தான் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை 2017 ஒக்டோபர் 25-ம் திகதி நடத்தினர். இது ஸ்கொட்லாந்தைப் போல் நடுவண் அரசின் அனுமதி பெறவில்லை. மேலும் அந்தக் கருத்துக் கணிப்புக்கு ஈராக், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய அமெரிக்கா ஆகியவை உட்படப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்கள் வந்தன. அதனால் அவர்கள் தமது கருத்துக் கணிப்பை ஒரு கடப்பாடற்ற (non-binding) கருத்துக் கணிப்பாக நடத்தினர். அவர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்திய போது ஈரானும் துருக்கியும் தம் படைகளை ஈராக்கின் எல்லையை நோக்கி நகர்த்தின. அதனால் தனிநாட்டுப் பிரடனம் செய்யாமல் ஈராக்கிய நடுவண் அரசுடன் தனியரசு அமைப்பதற்கான பேச்சு வார்த்தையை குர்திஷ்கள் நடத்த முயன்றனர்.

ஈராக்கிய குர்த்திஷ்தானின் பொருளாதாரத்தின் இதயபூமியாக இருந்தது கேர்க்குக் பிரதேசமாகும். அதில் உள்ள எரிபொருள் மட்டுமே குர்திஷ்தானின் ஒரே பொருளாதார மூலமாகும். அந்தப் பிரதேசம் முன்பு குர்திஷ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அதை சதாம் ஹுசேய்னின் அரபுமயமாக்கல் திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் நிகழ்த்தி அரபுக்கள் பெரும் பான்மையாக்கப்பட்டனர். அதனால் ஈராக்கிய நடுவண் அரசு அங்கு படையினரை அனுப்பி இலகுவாக அதை ஆக்கிரமித்தனர். அதனால் பொருளாதார ரீதியில் குர்திஷ்த்தான் தனிநாடு சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. ஈராக்கிய குர்திஷ்த்தான் நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்டதாகும். குர்திஷ்த்தானுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும் நட்பு நாடுகள் இன்றி அவர்களால் தனிநாடு அமைப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதே,

கட்டறுக்க முயன்ற கட்டலோனியா.
ஸ்பெயினின் வட கிழக்குப் பிராந்தியமான கட்டலோனியாவும் இத்தாலியின் வட பிராந்தியம் போல் செல்வம் மிக்க பிரதேசம். அதுவும் அதிக வரி செலுத்தும் பிரதேசமாகும்.  1714-ம் ஆண்டு கட்டலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கட்டலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கட்டலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். பொது இடங்களில் கட்டலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கட்டலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கட்டலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்களின் பெயர்கள் உட்பட எல்லாக் கட்டலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கட்டலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. இத்தனை மனித உரிமை மீறல்களுக்கு நடுவிலும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது. கட்டலோனியப் பிராந்திய அரசு தனிநாட்டுக்கான கருத்துக் கணிப்பின் போது ஸ்பானிய நடுவண் அரசின் காவற்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். சிரியாவின் ரொஜாவாவிலும் ஈராக்கின் குர்திஷ்த்தானிலும் அப்படிச் செய்ய முடியாதபடி குர்திஷ் மக்களின் படைவலு இருந்தது.

ஆறும் வேண்டும்.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களாலும் வெறும் பிரகடனங்களாலும் ஒரு தனி அரசையோ பிராந்தியத் தன்னாட்சியுள்ள அரசையோ உருவக்க முடியாது. ஒரு நாடு உருவாகுவதாயின் முதற் தேவையானது அந்த நாட்டைப் பாதுகாக்கக் கூடிய படையே. அடுத்துத் தேவையானது அந்த நாட்டை விரும்பக் கூடிய மக்கள், அந்த நாட்டுக்கென ஒரு பொருளாதாரக் கட்டமப்பு, அந்த நாட்டுக்கு நட்பாக இருந்து அங்கீகரிக்கக் கூடிய நட்பு நாடுகள், அந்த நாட்டை வழிநடத்தக் கூடிய அறிஞர்கள், அந்த நாட்டுக்கென பாதுகாப்பான இடம் ஆகிய ஆறும் முக்கியமானவை இந்த ஆறும் குர்திஷ்த்தானுக்கோ, ஸ்கொட்லாந்துக்கோ, வெனிற்றாவிற்கோ அல்லது கட்டலோனியாவிற்கோ இல்லை. அன்று வள்ளுவர் சொன்னது இன்றும் உண்மைஈழத்திற்கு?????

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...