Wednesday, 18 October 2017

சிரியப் போர் இனி லெபனானில் மையம் கொள்ளுமா

மேற்கு கரையில் இயங்கும் ஃபட்டா அமைப்பு, காசா நிலப்பரப்பில் இயங்கும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆகிய மூன்றுமே இஸ்ரேலிற்கு எதிராக உடனடித் தாக்குதல் செய்யக் கூடிய எதிரிகளாகும். இதில் ஃபட்டா அமைப்பு இஸ்ரேலுடன் தற்போது சமாதான நிலையில் உள்ளது. ஈரான் தன்னுடன் ஈராக்கையும் சிரியாவையும் இணைக்கும் திட்டம் சியாப் பிறைத் (Shia Crescent) திட்டம் என அழைக்கப்படுகின்றது. இதை இஸ்ரேல் மிகவும் கரிசனையுடன் பார்க்கின்றது. இந்தப் பிறைத் திட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் செயற்பாடுகளுக்கு லெபனானிய ஹிஸ்புல்லா முக்கிய கருவியாகும்.

ஹமாஸும் ஃபட்டாவும்
நீண்ட காலமாக இஸ்ரேலிய உளவுப் பிரிவினர் காசாவில் செயற்படும் பலஸ்த்தீனிய விடுதலை அமைப்புகளுக்கும் மேற்குக் கரையில் செயற்படும் அமைப்புக்களுக்கும் இடையில் ஒற்றுமை ஒருபோதும் வராது எனக் கருதுகின்றனர். இருதரப்பினருக்கும் இடையில் ஒற்றுமை வந்தால் அது தற்காலிகமானதாகவே இருக்கும் என்பதும் அவர்களது நிலைப்பாடு. ஹமாஸின் இறுதி இலக்கு முழுப் பலஸ்த்தீனியர்களுக்கும் தாமே தலைமை தாங்க வேண்டும் என்பதே. மேற்குக் கரையின் தலைநகரான ரமல்லாவில் இருந்து பலஸ்த்தீனியத் தூதுக்குழு ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காசா நிலப்பரப்பிற்குப் பயணத்தை மேற் கொண்டது. இது அரபு உலக ஊடகங்களால் பாராட்டப்பட்டது. காசா நிலப்பரப்பில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தற்போது ஹமாஸ் அமைப்பு காசா பிரதேசத்தின் முகாமையை ஃபட்டா அமைப்பிடம் கையளிக்க முன்வந்துள்ளது. இதை இரண்டு அமைப்புக்களுக்கும் இடையிலான ஒற்றுமையின் ஆரம்பமாகக் கூடப் பார்க்க முடியுமா?

நித்திய கண்டமாக இருந்த அசாத்திற்கு தீர்க்க ஆயுள்
சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சி அசைக்க முடியாத நிலையை அடைந்துவிட்டது. அவரது ஆட்சியை தக்க வைப்பதில் முக்கிய பங்காற்றியவர்கள் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானில் இருந்து செயற்படும் சியா முசுலிம் அமைப்பான ஹிஸ்புல்லாவாகும். சிரியாவில் அவர்கள் சிறந்த கள அனுபவத்தையும் பலவிதப் படைக்கலன்களை இயக்கும் திறனையும் பெற்றுள்ளனர். அவர்கள் லெபனானை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலவார்கள். லெபனானுடன் கேந்திரோபாய எல்லையைக் கொண்டுள்ள இஸ்ரேல் அதையிட்ட தனது கரிசனையைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.

லெபனானின் முக்கியத்துவம்
மத்திய கிழக்கிலே கிருஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடாக லெபனான் திட்டமிட்டு முதலாம் உலகப் போரின் பின்னர் உருவாக்கப்பட்டது.   பிரான்சின் குடியேற்ற ஆட்சி நாடாக இருந்த லெபனான்1942-ம் ஆண்டு நவம்பர் 22-ம் திகதி சுதந்திர நாடாகியது. பின்னர் கிரிஸ்த்தவர்களும் இசுலாமியர்களும் தேசிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி குடியரசுத் தலைவர் ஒரு மரோனைற் கிருத்தவராகவும் தலைமை அமைச்சர் ஒரு சுனி முசுலிமாகவும் பாராளமன்ற அவைத் தலைவர் சியா முசுலிமாகவும் இருப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. பாராளமன்ற உறுப்பினர்களாக கிருத்தவர்களுக்கு ஆறு முசுலிம்களுக்கு ஐந்து என்ற விகிதாசாரப்படி இருக்க வேண்டும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

மத மோதல்கள் நிறைந்த லெபனான்
1943-ம் ஆண்டிலிருந்து 1956-ம் ஆண்டு வரை மக்களாட்சிப்படி லெபனான் ஆளப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு லெபனானில் வலதுசாரிக் கிரிஸ்த்தவர்கள் தொடர்ந்து ஆட்சி புரியக் கூடிய வகையில் லெபனானிய அரசமைப்பை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ இரகசியமாகத் தலையிட்டு மாற்றியது. அரசமைப்பை மாற்றுவதற்க்கு தேவையான பெரும்பான்மையை 1957 மே-ஜூன் மாதங்களில் நடந்த பாராளமன்றத் தேர்தலில் வலதுசாரிகள் வெற்றி பெறச் செய்ய வாக்குப் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகள் திணிக்கப்பட்டன. இதனால் அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கிருத்தவ வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.  அரபு நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் பொதுவுடமைவாதிகள் (கம்யூனிஸ்ட்டுகள்) என சி.ஐ.அமெரிக்க அதிபரிடமே பொய் சொன்னது. இந்த முறைகேடான தேர்தலைத் தொடந்து லெபனானில் பெரும்  உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. மரோனைற் கிருத்தவர்களும் இசுலாமியர்களும் மோதிக் கொண்டனர். 1956-ம் ஆண்டு எகிப்து சூயஸ் கால்வாய்காக மேற்கு நாடுகள் முரண்பட்ட போது லெபனானிய கிருத்தவர்கள் எகிப்திய ஆட்சியாளர் கமால் நாசர் பக்கம் நிற்காமல் மேற்கு நாடுகளுக்கு சார்பாக நின்றது எகிப்த்திற்கும் லெபனானிற்கும் இடையில் முறுகலை உருவாக்கியது. எகிப்த்தியர்களும் சிரியர்களும் தமது நாடுகளை இணைத்து 1958-ம் ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசை உருவாக்கினார்கள். லெபனானில் இருக்கும் இசுலாமியர்கள் லெபனானும் இந்த அரசில் இணைய வேண்டும் எனவும் கிருத்தவர்கள் லெபனான் தொடர்ந்து தனிநாடாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினர். புதிய ஐக்கிய அரபுக் குடியரசு லெபனானிய இசுலாமியர்களுக்கு உதவியது. இதனால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. லெபனானில் அமெரிக்கா தலையிட்டால் தான் அணுக் குண்டைப் பாவிப்பேன் என சோவியத் அதிபர் குருசேவ் மிரட்டினார். 1958-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா 14000 படையினரைக் கொண்டு நீல வௌவால் என்னும் பெயரில் ஒரு படைநடவடிக்கையை லெபனானில் மேற் கொண்டது.

வலிமை மிக்க ஹிஸ்புல்லா
2006-ம் ஆண்டு கடைசித் தடவையாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மோதிக்கொண்டன. இஸ்ரேலின் கவலை ஹிஸ்புல்லாவிலும் பார்க்க இரசியா இனி லெபனானில் என்ன செய்யப் போகின்றது என்பதே. சிரியாவில் இஸ்ரேல் எதிர்பார்த்தபடி அமெரிக்காவின் நடவடிக்கைகள் அமையவில்லை. 9/11 தாக்குதலுகு முன்னர் அமெரிகவிற்கு பேரிழப்பைக் கொடுத்த தாக்குதல் ஹிஸ்புல்லாவின் தாக்குதலாகும். சிரியாவில் போர் நடக்கும் போது அவ்வப் போது ஹிஸ்புல்லா லெபனானிற்குள் பெருமளவில் படைக்கலன்களை நகர்த்துவதைத் தடுக்க இஸ்ரேலிய வான்படையினர் சிரியாவினுள் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் நடத்தின. ஆனால் இரசியாவுடன் எந்த வித மோதல்களோ முறுகல்களோ நடக்கவில்லை. மாறாக இஸ்ரேலும் இரசியாவும் தமது தொடர்பாடல்களை அதிகப்படுத்திக் கொண்டன. சிரியாவில் செயற்படும் இரசியப் போர் விமானங்கள் இஸ்ரேலுக்குள் தவறுதலாக பறப்பதை இஸ்ரேல் அனுமதித்திருந்தது. ஆனால் சிரியப் போர் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் இரசியாவின் மேற்காசியா தொடர்பான கேந்திரோபாய நிலைப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இரசியாவின் ஓர் அவசியமான சொத்தாக உருவெடுத்துள்ளது. ஈரானின் அடுத்த இலக்கு லெபனானை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும். அது இஸ்ரேலைப் பொறுத்தவரை அனுமதிக்க முடியாததும் ஆபத்தானதுமாகும். ஈரான் இரசியாவிற்கு தற்போது அவசியம் தேவைப்படும் ஒரு நட்பு நாடாகும். அதேவேளை மேற்காசியாவில் ஈரானின் விரிவாக்கத்தை இரசியாவால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

சிரியப் போர் முடியும் ஆனால் முடியாது!
சிரியாவில் போர் முடிவிற்கு வருமா இல்லையா என்பதைப் பற்றி உறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கின்றது. சிரியாவில் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு அங்கு மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என அமெரிக்கா கருதுகின்றது. இரசியா அசாத் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் எனவும் அசாத்தின் அரச படைகள் தவிர மற்ற எல்லா படைக்குழுக்களும் அழிக்கவேண்டும் எனவும்  கருதுகின்றது. இதனால் எப்போது சிரியாவில் நடக்கும் போர் லெபனானை நோக்கி நகரும் என்பதும் சொல்ல முடியாமல் இருக்கின்றது. சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் இத்தனை மோதல்களின் பின்னர் எப்படி சியா முஸ்லிமான அசாத்தால் பதவியில் நீடிக்க முடியும்? சுனி முஸ்லிம்களின் படைப்பிரிவில் ஐஎஸ், அல் கெய்தா, சுதந்திர சிரியப் படை ஆகியவை முக்கியமான படைக்குழுக்களாகும். இவற்றில் ஐஎஸ் படையணியையும் அல் கெய்தா படையணியையும் இரசியாவும் அமெரிக்காவும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் ஒத்துப் போகின்றன. அமெரிக்க ஆதரவு பெற்ற சுதந்திர சிரியப் படைப் போராளிகள் சிறந்த போராளிகள் அல்லர். சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கா ஐஎஸ் அமைப்பு போராளிகளுக்கு எதிரான போரை முன்னெடுப்பதில் குர்திஷ் போராளிகளே முக்கிய பங்கு வகித்தனர். ஈராக்கைப் போலவே சிரியாவிலும் குர்திஷ் போராளிகள் தமக்கென ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றி அங்கு ஒரு உண்மைசார் அரசு ஒன்றை நிறுவியுள்ளனர். ஆனால் துருக்கி ஈராக்கிலுள்ள குர்திஷ் போராளிகளுலும் பார்க்க சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகளை கடுமையாக வெறுக்கின்றது. ஐஎஸ் அமைப்பினர் முற்றாக சிரியாவில் அழிக்கப்பட்ட பின்னரும் சிரியாவில் சியா, சுனி, குர்திஷ் ஆகிய தரப்பினரிடையே மோதல்களைத் தொடர்ப்பண்ணுவதால் தற்காலிகமாக லெபனானை நோக்கி போர் நகர்வதைத் தடுக்க முடியும். அதற்கு அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் ஒத்துழைக்கலாம்.

அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அந்தோனியோ குத்தரஸிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மஹ்மூட் அப்பாஸிலும் பார்க்க இஸ்ரேலிய அதிபர் பென்ஞமின் நெத்தன்யாஹூ பேச்சு வார்த்தை நடத்தக் கடினமானவராக இருக்கின்றார் எனச் சொல்லியுள்ளார். பலஸ்த்தீனிய விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒத்துப் போவதில்லை என வெளியில் காட்டிக் கொண்டாலும். இஸ்ரேலின் இருப்புக்கு ஆதரவு கொடுப்பது அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கையின் முதன்மை அம்சமாகும்.


ஹிஸ்புல்லாவின் நிதி மூலம்
ஹிஸ்புல்லா அமைப்பின் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டொலர்கள் என அமெரிக்க உளவுத் துறை மதிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா தென் அமெரிக்க போதைப் பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றது. சிறந்த பணச்சலவை செய்யக் கூடிய பன்னாட்டுக் கட்டமைப்பையும் வைத்திருக்கின்றது, உலகின் எப்பாப் பாகங்களிலும் அது வியாபித்துள்ளது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் இருந்து நிதி திரட்டுகின்றார்கள். ஹிஸ்புல்லாவின் நிதி மூலத்தை அழிக்க அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகப் பெரும் பாடுபடுகின்றது. 2015-ம் ஆண்டு ஹிஸ்புல்லா நிதித் தடைச் சட்டத்தை அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றியிருந்தது. லெபனானின் நடுவண் வங்கி ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய பல நூற்றுக் கணக்கான வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. போதைப் பொருள் வியாபாரத்திற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் தொடர்பு உண்டு என்பதை முழுமையாக நம்ப முடியாது. ஹிஸ்புல்லாவின் வருமானத்தில் எழுபது முதல் எண்பது விழுக்காடு ஈரானில் இருந்து கிடைக்கின்றது. அவை வங்கிகளினூடாகப் போவதில்லை அமெரிக்கா தடுப்பதற்கு. அவை பணப் பெட்டிகளில் போகின்றன. அவை நேரடியாகவோ அல்லது சிரியாவினூடாகவோ விமானத்தில் அனுப்பப்படும். ஈரானை அடக்காமல் ஹிஸ்புல்லாவை அடக்க அமெரிக்காவால் முடியாது.

முன்கூட்டிய தாக்குதலுக்கு பின்னிற்காது இஸ்ரேல்

2017 செப்டம்பரில் இஸ்ரேல் கடந்த இருபது ஆண்டுகளில் செய்திராத பெரும் போர் ஒத்திகை ஒன்றை தனது முப்படைகளையும் உளவுத் துறையையும் இணையவெளிப் படைப் பிரிவையும் கொண்டு செய்திருந்தது. பத்து நாட்கள் தொடர்ந்த இந்த ஒத்திகை லெபனான் எல்லையிலேயே நடந்தது. இதற்கான காரணம் ஹிஸ்புல்லா முற்றாக லெபனானைக் கைப்பற்றும் என இஸ்ரேல் கரிசனை கொண்டுள்ளமையே. அப்படிக் கைப்பற்றும் போது இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்து பல ஹிஸ்புல்லாப் போராளிகளைக் கொல்ல முயற்ச்சிக்கலாம். அதற்கு எதிராக சிரியாவில் இருந்தும் ஈரானில் இருந்தும் உதவிகள் ஹிஸ்புல்லாவிற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் கிடைக்கலாம். அதைத் தடுக்க சிரியப் போர் தொடர்வது இஸ்ரேலின் விருப்பமாக இருக்கும். அதற்காக திரைமறைவில் சிரியப் போர் தொடர இஸ்ரேல் எல்லாச் சதிகளையும் செய்து கொண்டிருக்கும். முன் கூட்டிய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் என்றும் பின்னிற்பதில்லை. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...