Friday, 1 September 2017

அமெரிக்க ஆட்சிமுறை ஆட்டம் காண்கின்றதா?

அமெரிக்காவில் ஆட்சிமுறை (administration) எனப்படுவது பதவியில் உள்ள அதிபர் நாட்டை நடத்த தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் முறையாகும். அமெரிக்க அரசு என்பது அதன் அதிபர், அதன் பாரளமன்றம், அதன் நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டது. ஆனால் அமெரிக்காவின் பல உளவுத் துறைகள் ஆட்சியில் மறைமுகமாகப் பெரும் பங்கு வகிக்கின்றது. அமெரிக்காவின் அமைச்சரவை என்பது அதிபர், துணை அதிபர், 14 செயலர்கள் (secretaries), சட்டமா அதிபர் ஆகியோரைக் கொண்டது. அமெரிக்காவில் அமைச்சர்கள் செயலர்கள் என்றே அழைக்கப்படுவர். 2015-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்த போது அவருக்கு அமெரிக்க ஆட்சி முறை பற்றித் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பியவர்கள் இப்போது அவருக்கு தெரியாது என்கின்றனர்.

மீண்டும் 19-ம் நூற்றாண்டு
அண்மைக்காலங்களாக அமெரிக்க அதிபர் தலைமைக் கொள்கை வகுப்பாளராகச் செயல்படுவது வழக்கமாக இருந்தது. அவரது கொள்கைக்கு ஏற்ப பாராளமன்றம் சட்டங்களை உருவாக்கும். அமைச்சர்கள் அவரது கொள்கைக்கு ஏற்ப நாட்டை நடத்துவார்கள். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்கப் பாராளமன்றமே கொள்கை வகுக்கும் வேலைகளைச் செய்ய அதிபர் தன் நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து அக் கொள்கைகளுக்கு ஏற்ப வழிநடத்தினார். டிரம்ப் அமெரிக்க ஆட்சிமுறையை 19-ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கின்றார்.

அரசுறவியல் அனுபமில்லாத டிரம்ப்
அமெரிக்க அதிபரின் வதிவிடமும் பணிமனையுமான வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரும் அவரது இருபதிற்கும் மேற்பட்ட ஆலோகர்களுமே அமெரிக்க ஆட்சிமுறையின் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போதைய அமெரிக்க அதிபரின் ஆலோசகர்கள் அடிக்கடி பதவி விலகப்படுவதும் தாமாகப் பதவி விலகுவதும் ஆட்சிமுறையைப் பெரிதும் பாதிக்கின்றது. கட்சி அரசியலில் முன் அனுபவமும் பங்களிப்பும் இல்லாத டொனால்ட் டிரம்ப் தனது ஆலோகர் நியமனத்திலும் அவர்களை நடத்துவதிலும் பல இமாலயத் தவறுகளை விட்டு வருகின்றார். அவரது அரசுறவியல் அனுபவமின்மை வேர்ஜீனியா மாநிலத்தில் வெள்ளை மேலாதிக்கவாதிகளின் ஊர்வலத்தில் ஏற்பட்ட ஓர் உயிரைப் பறிகொண்ட கலவரம் தொடர்பாக அவர் விட்ட அறிக்கைகளில் வெளிப்பட்டது. அவர் தனது கண்டனத்தை மூன்றாவது தடவை வெளிவிட்ட அறிக்கையின் போதுதான் சரியாகத் தெரிவித்தார். இதற்கிடையில் வெள்ளை மேலாதிக்கவாதிகள் தொடர்பான டிரம்பின் நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்த வர்த்தக ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பலர் தமது பதவிகளைத் துறந்தனர்.  
முன்பு டிரம்ப் ஏதாவது நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்னர் அந்த நிகழ்ச்சியின் ஏற்ப்பாட்டாளர்கள் அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அவரது உரை மோசமானதாக இருக்கும். தற்போது வெள்ளை மாளிகையின் உயர் பதவிகளில் இருப்போரும் அதையே செய்கின்றனர்.

வெளுத்து வாங்கும் வாஷிங்டன் போஸ்ற்
வெற்றீகரமான வியாபாரிகள் முன்பு அமெரிக்க அதிபர்களாகத் தேர்தெடுக்கப்பட்ட போது அவர்கள் தங்களது முகாமைத் திறைமையை வெள்ளை மாளிகைக்குள்ளும் காட்டினர். அதனால் சிறந்த ஆட்சிமுறைமை நடந்தது. ஆனால் வெற்றீகரமான வியாபாரியான டிரம்பைப் பொறுத்தவரை அது நடக்கவில்லையா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. டிரம்பைக் கடுமையாக விமசித்துக் கொண்டிருக்கும் வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகை வெள்ளை மாளிகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுகின்றது. அது உதாரணத்திற்கு வெள்ளை மாளிகையில் ஒரு வாரம் மட்டும் நிலைத்த தொடர்பாடல் இயக்குனர் ஸ்கரமூச்சியை காட்டுகின்றது. வெள்ளை மாளிகையில் இருந்து முக்கிய இரகசியங்கள் எல்லாம் கசிகின்றன என்பதால் அதைத் தடுக்க டிரம்ப் ஸ்கரமூச்சியை நியமித்தார். அவர் தனது நண்பரான நியூயோர்க்கர் சஞ்சிகையின் நிரூபருக்கு பேட்டியளிக்கும் போது வெள்ளை மாளிகையில் உள்ள மற்ற அதிகாரிகளைப் பற்றிக் கண்டபடி தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். அவர் தனது நண்பரான நிரூபருக்கு எதை எதைப் பிரசுரிக்க வேண்டும் எதை எதைப் பிரசுரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. நியூயோர்கர் சஞ்சிகை எல்லாவற்றையும் பிரசுரித்து விட்டது. குழப்பத்தை தீர்க்க நியமித்தவரால் பெரும் குழப்பம் உருவானது.

தேர்தல் வாக்குறுதிகள்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை அமெரிக்க மக்களுக்கான தற்போதுள்ள மருத்துவக் காப்புறுதி திட்டத்தை இரத்து செய்து புதிய திட்டத்தைச் செயற்படுத்தல், அமெரிக்காவின் உடகட்டுமானத்தில் பெருமளவு மூதலீடு செய்தல், அமெரிக்காவின் வருமான வரி முறைமையை மாற்றியமைத்து மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைத்தல், குடிவரவைக் குறைத்தலும் அதற்காக மெக்சிக்கோவுடனான எல்லையில் மெக்சிக்கோவின் பணத்தில் சுவர் எழுப்புதல் ஆகியவையாகும். இதில் சுவர் எழுப்புதல் ஒரு நடவாத காரியம் என்பதை அமெரிக்க மக்கள் நன்கு உணர்ந்து இருந்தனர். டிரம்ப் பதவிக்கு வந்ததும் அவர் முதல் செய்த வேலை மருத்துவக் காப்புறுதி தொடர்பான அவரது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முயன்றமையாகும். இதற்கு அவரது கட்சிக்குள் இருந்தும் எதிர்க்கட்சிக்குள் இருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால் அதை பாராளமன்றத்தில் ஒரு சட்டமாக நிறைவேற்றுவதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. மாறாக டிரம்ப் வருவான வரிச் சீர்திருத்தத்தை முதலாவதாக கையில் எடுத்திருந்தால் அவருக்கு அவரது கட்சிக்குள் பெரும் ஆதரவு கிடைத்திருக்கும். உட்கட்டுமானங்களில் முதலீடு செய்யும் தேர்தல் வாக்குறுதியை முதலில் செயற்படுத்தத் தொடங்கியிருந்தால் அதற்கு இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும். மருத்துவக் காப்புறுதியில் டிரம்ப் முதற்கவனம் செலுத்தியமை அவரது கேந்திரோபாயத் தவறாகும். மருத்ஹ்டுவக் காப்புறுதியில் ஏற்பட்ட இழுபறி டிரம்பின் ஆட்சிமுறையில் கடும் அதிருப்தியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது.

மாறு மனமே மாறு
அமெரிக்காவரை அணுக்குண்டுகளுடன் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பரீட்சிக்கும் வட கொரியா, அமெரிக்க அரசுறவியலாளர்களை வெளியேற்றும் இரசியா, தென் சீனக் கடலில் அடங்க மறுக்கும் சீனா, தென் அமெரிக்காவின் அமைதிக்கு அச்சுறுத்தலான வெனிசுவேலா, ஈராக்கிலும் ஈரானிலும் அகலக் கால் பதிக்கும் ஈரான் என அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு பல அச்சுறுத்தல்கள் பல முனைகளில் உருவாகும் போது அமெரிக்காவிற்கு ஒரு ஆளுமை மிக்க அதிபர் தேவை என அமெரிக்க அரசியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கருதுகின்றனர். அதற்கு அமெரிக்க அதிபர் பணிமனையில் உறுதிமிக்க முகாமைக் கட்டமைப்புத் தேவை. ஆனால் டிரம்ப் பதவிக்கு வந்து ஏழு மாதங்களில் இரண்டு தலமை அதிகாரிகள் (chiefs of staff) வெள்ளை மாளிகையில் மாற்றப்பட்டுவிட்டார்கள். அது மட்டுமல்ல இரண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், இரண்டு தொடர்பாடல் இயக்குனர்கள் என பதவி மாற்றங்கள் அடிக்கடி வெள்ளை மாளிகையில் நடக்கின்றது. டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்து எட்டாம் நாள் அவர் இரசிய அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய படத்தைப் போட்டு அதில் அவருடன் இருந்த ஐந்து பேரில் துணை அதிபர் மைக்கேல் பென்ஸைத் தவிர மற்ற நாலவரும் பதவியில் இருந்து விலகிவிட்டனர் என சி.என்.என் செய்தி நிறுவனம் டிரம்பைக் கிண்டலடித்துள்ளது. பராக் ஒபாமாவின் பதவிக் காலத்தில் மூன்று ஆண்டுகளில் மூன்று தலமை அதிகாரிகள் (chiefs of staff) மாற்றப்பட்டதனால் ஒபாமாவின் நிகழ்ச்சிநிரல்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது என 2012-ம் ஆண்டு டிரம்ப் ஒபாமாவைத் தாக்கி எழுதி இருந்தார். வெள்ளை மாளிகையின் தலைமை கேந்திரோபாயர் ஸ்டீவ் பனன் பதவி விலகிய போது டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் ஒஹியோ மாநிலத்தின் ஆளுநருமான ஜோன் கஸிக் வெள்ளை மாளிகையில் நிலவும் குழப்பத்தை டிரம்ப் சீர் செய்ய வேண்டும் எனப் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனுபவம் புதுமை
டொனால்ட் டிரம்ப் அதிபராக வருவதற்கு முன்னர் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. எந்த ஓர் அரச முகாமையிலும் முன் அனுபவம் இல்லாதவர். டொனால்ட் டிரம்ப் பெரிய கட்டிட வியாபார்த்தில் பெரும் பணம் ஈட்டியவர். அது அவரது பரம்பரைத் தொழில். அத்துடன் தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி புகழ் பெற்றவர். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பாவிக்கும் வாசகம் “நீ பதவி நீக்கம் செய்யப்பட்டாய்” என்பதாகும். அந்த நிகழ்ச்சியில் பதவிக்கு ஆட்சேர்க்கும் பணியில் டிரம்ப் ஈடுபட்டிருக்கவில்லை. பணி செய்யும் திறனைப் பொறுத்து பதவி நீக்குவதை மட்டுமே செய்தவர். அதே கதை இப்போது வெள்ளை மாளிகையிலும் நடக்கின்றது.

இரசியாவை விட்டு வைக்கும் டிரம்ப்
2017-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2-ம் திகதி இரசியத் தலைமை அமைச்சர் டிமிட்ரி மெட்வெடேவ் தனது டுவிட்டர் பதிவில் டிரம்பின் ஆட்சிமுறையின் வலிமையின்மையைச் சுட்டிக்காட்டினார். இரசியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கப் பாராளமன்றம் சட்டமாக நிறைவேற்றி டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தைக் கட்டிப் போட்டுவிட்டது என்றார் மெட்வெடேவ்.  இரசியா தொடர்பாக டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அவரது தேர்தல் வெற்றிக்கு இரசியா செய்த உதவியை மனதில் கொண்டு எடுக்கப்படும் என அமெரிக்காவில் பல தரப்பினரும் கருதுகின்றனர். டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து அவர் இரசிய அதிபர் புட்டீனைத் தாக்கி ஒரு வார்த்தை கூடச் சொல்லவுமில்லை. அடிக்கடி டுவிட்டர் பதிவிடும் டிரம்ப் இரசியாவை அதன் ஆட்சியாளர்களையோ தாக்கி பதிவு ஏதும் விடவில்லை. இரசியாவிற்கான அமெரிக்க அரசுறவியலாளர்களின் எண்ணிக்கையை இரசியா அதிரடியாகக் குறைத்த போது டிரம்ப் இரசியாவிற்கு நன்றி கூறிப் பதிவிட்டார். தான் ஆட்குறைப்புச் செய்து செலவைச் சேமிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அதை இரசியா இலகுவாக்கி விட்டதாகவும் டிரம்ப் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டர்.

திறமைகள் தயங்குகின்றன.
வெள்ளை மாளிகையில் பதவி விலக்கப்படுவதும் விலகுவதும் தொடர்வதால் பல முன்னணி முகாமைத்திறன் மிக்கவர்கள் அந்து பதவி ஏற்கத் தயங்குகின்றார்கள். இது மூளை வளம் மிக்க ஒரு வல்லரசு நாட்டுக்கு உகந்த சூழ் நிலையல்ல. அமெரிக்கா போன்ற பெரு வல்லரசு நாட்டின் ஆட்சிமுறையை முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது தெரிவுகள் தாராளமாக இருக்க வேண்டும். தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவைகளாக இருக்கும் போது ஆட்சிமுறைக்கான திறமைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். அது நாட்டுக்குப் பல பின்னடைவுகளைக் கொண்டு வரும்.

அமெரிக்கப் பாராளமன்றத் தேர்தல்
2018 நவம்பரில் முழு மக்களவைத் தொகுதிகளுக்கும் மூன்றில் ஒரு முதவைத் தொகுதிகளுக்கும்  தேர்தல் நடக்கவிருக்கின்றது. டொனால்ட் டிரம்பிற்கு பராக் ஒபாமாவிற்குக் கிடைத்திருக்காத ஒன்று கிடைத்திருக்கின்றது. டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையிலும் மூதவையிலும் பெரும்பான்மை வலு இருக்கின்றது. டிரம்பின் கொள்கைகளும் அவரது செயற்பாடுகளும் அவரது குடியரசுக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைக்கு ஒவ்வொரு மாநிலங்களிலும் இருந்து இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைகான தேர்தல் ஒரேயடியாக நடை பெறுவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மொத்த தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். 2016 நவம்பரில் 34 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. 2018 நவம்பரில் 33 தொகுதிகளுக்கு நடை பெறும். 2020 நவம்பரில் 33 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கும். ஒரு மூதவை உறுப்பினர் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும். அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் என்றும் இல்லாத அளவு டிரம்பை மக்கள் வெறுப்பதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால் டிரம்பின் செய்கைகளுக்கு ஆதரவு வழங்கினால் அது 2018இல் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலில் தங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என குடியரசுக் கட்சியினர் கருத வாய்ப்புண்டு. அதனால் டிரம்பின் பல நடவடிக்கைகளை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்க வாய்ப்புண்டு.

டிரம்ப் திட்டமிட்ட செயலா?

குடியரசுக் கட்சியின் உறுப்பினரில்லாமல் இருந்த டிரம்ப் தன்னிடமுள்ள செல்வத்தைப் பயன் படுத்தி அக்கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி பல எதிர்பார்ப்புக்களை தவிடு பொடியாக்கி அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்ற ஓர் அமெரிக்க அதிபர் தனது கட்சிக்குள் இருந்தே முக்கிய பொறுப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் செய்யப்படும். டிரம்ப் தனது அமைச்சரவைக்கும் வெள்ளை மாளிகைக்கும் வர்த்தகத் துறையில் இருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்தார். தனது மகளையும் மருமகனையும் பதவிகளில் அமர்த்தினார். இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தன் காலை வாரிவிடலாம் என்ற அச்சத்தில் ஒருவருக்கு ஒருவர் முரண்படக் கூடியவர்கள் பலரை பதவியில் அமர்த்தினார். இவர்களுக்கு இடையிலான போட்டியால் அவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என்பதே அவரின் உபாயமாகும். ஆனால் அந்த உள்ளக முரண்பாடு டிரம்பின் ஆட்சிமுறைக்குப் பெரும் முட்டுக் கட்டையாக இருக்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...