Wednesday, 28 June 2017

டிரம்பின் பல போர் முனைகள்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்தவுடன் அடிக்கடி பாவித்த வார்த்தைகள் போலிச் செய்திகள். அவற்றை அவர் தனக்கு எதிராகச் செயற்படும் சி.என்.என், வாஷிங்டன் போஸ்ற், நியூயோர்க் ரைம்ஸ் போன்ற ஊடகங்களுக்கு எதிராகப் பாவித்தார். போலிச் செய்திகள் என்ற சொற்றொடர் உலகெங்கும் பிரபலமடைந்துள்ளது. பிரித்தானியாவில் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் கூட தாம் எழுதும் கட்டுரைகளில் அந்தச் சொற்றொடரைப் பாவிக்கின்றார்கள். தற்போது டிரம்ப் அதிகம் பாவிக்கும் வார்த்தைபழிவாங்கல்கள்”. அவருக்கு எதிராக தற்போது அமெரிக்க நீதித்துறையின் கீழ் செயற்படும் புலனாய்வுத் துறை செய்யும் விசாரணைகளை பழிவாங்கல்கள் என்ற வார்த்தை மூலம் சாடுகின்றார்.

சிரியாவில் மோதல்
2011-ம் ஆண்டு அரபு வசந்தம் என்னும் பெயரில் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போரில் முதற்தடவையாக சிரிய அரச படைகளின் போர்விமானம் ஒன்றை அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க ஆதரவுடன் பல போராளி அமைப்புக்கள் சிரிய மாகாணமான ரக்காவில் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக போர் செய்து கொண்டிருக்கையிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. சிரிய மக்களாட்சிப்படை என்னும் பெயரில் இயங்கு அந்த போராளி அமைப்புக்களின் கூட்டமைப்பின் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக சிரிய அரசுக்குச் சொந்தமான இரசியத் தயாரிப்பு விமானமான எஸ்.யூ-22 தாக்குதல் நடத்தியது. இதனால் அமெரிக்கக் கடற்படையின் F/A-18E Super Hornet . அந்த எஸ்.யூ-22 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. இது குர்திஷ் போராளிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். ஆனால் இரசியா இதனால் கடும் விசனம் அடைந்துள்ளது. சிரியப் போர் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தும் போது இருவகைகளில் இரசியா பாதிக்கப்படுகின்றது. இரசியப் போர்விமானங்களின் மீது உலக படைக்கலச் சந்தையில் நம்பிக்கை வீழ்ச்சியடைகின்றது. இரசியாவின் நட்பு நாடுகள் தமது இறைமையை இரசியாவால் எந்த அளவு பாதுகாக்க முடியும் எனச் சிந்திக்கின்றன. அமெரிக்கா தலைமையில் இயங்கும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஒஸ்ரேலியா, டென்மார்க், இத்தானி ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டுப்படையினரின் விமானங்களுக்கு எதிராக தான் தாக்குதல் செய்யப்போவதாக இரசியா அறிவித்துள்ளது. இது ஏற்கனவே கொதிநிலையில் இருக்கும் சிரியப் போர் முனையை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது. பராக் ஒபாமாவிலும் பார்க்க டொனால்ட் டிரம்ப் ஐ எஸ் அமைப்பினரை ஒழிப்பதில் அதிக தீவிரம் காட்டுகின்றார் போல் இருக்கின்றது. ரக்கா மாகாணம் எரிபொருள் வளமும் பல முக்கிய தெருக்களையும் கொண்டது. தெருக்களைப் பாவிப்பதற்கான வரி மூலமும் எரிபொருள் விற்பனை மூலமும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் தமது தலைநகர் ரக்காவில் பெரும் தொகைப் பணத்தைப் பெறுகின்றனர். அங்கு வாழும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் பாதுகாப்பு வரியையும் வசூலிக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான சுனி அரபுக்களும் குர்திஷ் போராளிகளும் கைப்பற்றுவது ஐ எஸ் அமைப்புக்கு மட்டுமல்ல அசாத்திற்கும் பெரும் இழப்பாகும் என்பதோடு போருக்குப் பின்னரான சிரியாவில் அமெரிக்காவிற்கு ஒரு பிடியுமாகும். 

ஹோமஸ் நீரிணையில் ஈரானும் சீனாவும்
ஈரானின் ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை ஜூன் ஆறாம் திகதி அமெரிக்கப் போர்விமானங்கள் சிரியாவில் வைத்துச் சுட்டு வீழ்த்தின. பின்னர் ஜூன் 20-ம் திகதி மீண்டும் ஒரு படைக்கலன்கள் தாங்கிய ஈரானில் தயாரிக்கப் பட்ட ஆளில்லாப் போர் விமானம் ஒன்றை அமெரிக்காவின் F-15 போர்விமானம் சுட்டு வீழ்த்தியது. அது மட்டுமல்ல உலக எரிபொருள் விநியோகத்தின் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகுப் புள்ளியான ஹோமஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையும் கட்டார் கடற்படையும் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டன. அதே பிராந்தியத்தில் ஈரானும் சீனாவும் இணைந்து கடற்படைப் போர்ப் பயிற்ச்சியில் ஈடுபட்ட்ன. சீனா ஹோமஸ் நீரிணையில் அமெரிக்க ஆதிக்கத்தை இட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது. அங்கு வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் பெரும் பகுதியை அமெரிக்காவால் தடுக்க முடியும் என்பதை சீனா அறியும். சீனாவும் ஈரானும் ஒரு புறமும் மற்ற வளைகுடா நாடுகள் மறுபுறமுகாக ஒரு போட்டிக்களம் ஹோமஸ் நீரிணையில் உருவாகுகின்றது.
சிரியாவிலோ ஈராக்கிலோ அமெரிக்கப் படையினர் கால் பதிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் பராக் ஒபாமா செயற்பட்டார். ஆனால் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்கப்படையினரின் ஈடுபாடு அதிகரித்து வருகின்றது. தரைப்படையைச் செயலில் இறங்க்குவது டிரம்பைப் பொறுத்தவரை பெரும் பிரச்சனை இல்லை ஆனால் படையினர் அப்படி ஒன்றை விரும்பவில்லை. சிரியப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு எதுவுமே இல்லை என்பதை அமெரிக்கப் படைத்துறையினர் அறிவர். ஈராக்கில் 50 விழுக்காடு சியா இஸ்லாமியரும் 48 விழுக்காடு சுனி இஸ்லாமியரும் வாழ்கின்றனர். இஸ்லாமிய அரசு அமைப்பை ஈராக்கில் ஒழித்துக் கட்டிய பின்னர் சியா இஸ்லாமியர்கள் தமக்கு எதிராக சதாம் ஹுசேயினின் ஆட்சிக்காலத்தில் இருந்தே செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு தம்மேல் பழிவாங்கலாம் என ஈராக்கில் உள்ள சுனி இஸ்லாமியர்கள் அஞ்சுகின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது ஈரானிய மதவாத ஆட்சியாளர்களின் கொள்கையாகும். இது நடக்கக் கூடாது என்பது வளைகுடா நாடுகளில் ஆட்சியில் உள்ள மன்னர்களினது நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அமெரிக்காவின் கடப்பாடாகும். ஈரானை மனதில் வைத்துக் கொண்டே டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்டார். ஈரானும் இரசியாவும் நாளுக்கு நாள் ஒன்றிணைது செயற்படுகின்றன. துருக்கியும் இரசியாவிற்கும் இடையிலான உறவு சீரடைந்து கொண்டு வருகின்றது. சிரியாவில் இரசியாவின் படை நடவடிக்கைகளால ஆத்திரமடைந்த ஐ எஸ் அமைப்பினர் தமது போராளிகளை இரசியாவிற்கு அனுப்பாமல் தடுப்பதற்கு துருக்கியினதும் ஈரானினதும் ஒத்துழைப்பு இரசியாவிற்கு அவசியமாகும். இதனால் சிரியாவையும் ஈராக்கையும் மையப்படுத்தி இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகல் நிலை வளர்ந்து வருகின்றது. 

வட கொரியா ஓராண்டுகாலப் பேச்சு வார்த்தையின் பின்?
வட கொரியாவுடன் ஐக்கிய அமெரிக்கா 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மிகவும் இரகசியமாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின்னணியில் சீனா இருக்கின்றது. அது அமெரிக்காவை ஓராண்டு வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதன் அணுக்குண்டு மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தையும் நிறுத்த முயற்ச்சிக்கும் படி வேண்டியுள்ளது. அப்பேச்சு வார்த்தை பயனளிக்காவிடில் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சீனா தடை போடாது என்ற உறுதி மொழி வழங்கியுள்ளது. ஆனால் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்து விட்டு அமெரிக்கா வரை பாயக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றது. வட கொரியாவுடன் ஓராண்டின் பின்னர் அமெரிக்கா போர் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகலாம். ஆனால் வல்லரசு நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அதனால் ஓராண்டு கழித்து அமெரிக்கா வட கொரியா மீது தாக்குதல் நடக்கும் போது சீனா சும்மா இருக்க மாட்டாது.   2017 ஜூன் நான்காம் வாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வட கொரியாவை வழிப்படுத்த சீனா எல்லா முயற்ச்சியும் செய்தது ஆனால் முடியவில்லை எனப்பதிவிட்டார். இந்தப் பதிவு சீன உயர் அதிகாரிகள் வட கொரியா தொடர்பான பேச்சு வார்த்தைக்கு அமெரிக்க செல்லத் தாயாரான வேளை வெளிவந்தது. அத்துடன் அப்பதிவு வெளிவந்த சில மணித்தியாலங்களில் அமெரிக்காவின் B-1 போர் விமானங்கள் இரு கொரியாக்களையும் பிரிக்கும்  38th parallel என்னும் எல்லைக் கோட்டை ஒட்டிப் பறந்து சென்றது. 

புதிதாக ஒரு பெரு வல்லரசு உருவாகும் போது அது ஏற்கனவே இருக்கும் பெருவல்லரசுடன் மோதலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாது. சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரத்தில் உலகப் பெருவல்லரசாக உருவெடுத்தன. அதனால் அவை இரண்டுக்கும் இடையில் நேரடிப் போர் நடக்கவில்லை. பனிப்போர் என்னும் பெயரில் பெரும் போட்டி நிலவியது. ஆனால் உலகப் பெருவல்லரசாக நிலைப்பதற்கு தேவையான பொருளாதார வலு சோவியத் ஒன்றியத்திடம் இல்லாததால் அது சிதைந்து போனது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் வல்லரசாக உருவெடுத்த போது ஸ்பெயினிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் பெரும் கடற்போர் நடந்து ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டது. நெப்போலியன் பிரான்சை பெரு வல்லரசாக்க முயன்றபோது இரசியாவுடனும் பிரித்தானியாவுடனும் போர் புரிந்து தோற்கடிக்கப்பட்டர். உதுமானியப் பேரரசு உலகை ஆள முற்பட்டதால் முதலாம் உலகப் போரும் ஹிட்லர் உலகை ஆள முற்பட்டதால் நடந்தன. அமைதியான எழுச்சி என்னும் பெயரில் பெருவல்லரசாக முயன்று கொண்டிருக்கும் சீனாவிற்கும் ஏற்கனவே உலகப் பெருவல்லரசாக இருக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு போர் நடப்பது தவிர்க்க முடியாது என்பது 2400 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க சரித்திரவியலாளர் துசிடைட் முன்வைத்த துசிடைட் பொறி என்னும் கோட்பாடு எதிர்வு கூறியுள்ளது. இந்த இரண்டு நாடுகளையும் அவர் மனதில் வைக்காமல் ஸ்பார்ட்டா மற்றும் எதென்ஸ் ஆகிய இரு நகர அரசுகளுக்கும் இடையிலான முப்பதாண்டுப் போரை அனுபவமாகக் கொண்டே அவர் துசிடைட் பொறி என்னும் கோட்ப்பாட்டை முன்வைத்தார். ஏற்கனவே வளர்ந்திருந்த ஸ்பார்ட்டா தீடீரென வளர்ந்த எதென்ஸை பார்த்து உருவான பயத்தால் போர் தவிர்க்க முடியாத ஒன்றானது என்றார் துசிடைட். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து புதிதாக உருவான 15 வல்லரசுகளில் 11 பெரும் போரைச் சந்தித்தன. கடந்த பத்து ஆண்டுகளாக பல உலக அரசியல் ஆய்வாளர்கள் சீனாவும் அமெரிக்காவும் Thucydides’s trap அகப்படுமா என்பதைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் மோதல் நடக்கக் கூடிய களங்களின் பட்டியலில் உச்சத்தில் இருப்பது தென் சீனக் கடல் என்றாலும் அந்தப் பிராந்திய நாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக சீனா தனது பக்கம் இழுக்கும் வாய்ப்புக்கள் இருப்பதால் அங்கு ஒரு போ முனையைத் திறக்க அமெரிக்கா விரும்பாது. தென் கொரியா தனது மண்ணில் போர் நடப்பதை விரும்பவில்லை. ஆனால் சண்டப் பிரசண்டனாக இருப்பது ஜப்பான் மட்டுமே. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடக்கலாம் அதில் அமெரிக்கா உடனடியாக களத்தில் இறங்கும். இதனால்தான் சீனா தென் சீனக் கடலில் செய்யும் தீவு நிர்மாணங்களைப் போல் கிழக்குச் சீனக் கடலில் செய்யவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் António Guterres அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்து விலகுவது ஆபத்து எனச் சொல்கின்றார். அமெரிக்கா உலக விவகாரங்களில் இருந்து விலகுவதை தடுக்கும் பொருட்டு தான் அமெரிக்க நாடாளமன்ற உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதை தடுப்பேன் என்றும் சொல்கின்றார். உலகம் உருப்படுமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...