Thursday, 2 February 2017

யேமனில் டொனால்ட் டிரம்பின் முதற் கோணல்

அமாவாசை வரும்வரை ஒபாமா இருக்கவில்லை.
அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியாக யேமனில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக ஒபாமா தான் பதவிக்கு வந்தவுடன் ஒசாமா பின்லாடனைக் கொன்று புகழ் பெற்றது போல் தன் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் யேமனில் உள்ள அல் கெய்தா தலைவர்கள் தங்கியிருக்கும் தளத்தைத் தாக்கி அழித்துப் புகழ் பெற விரும்பினார், ஆனால் அது நிலாக்காலம் என்றபடியால் அமாவாசை வரை காத்திருக்க வேண்டும் என அமெரிக்கப் படைதுறை நம்பியது. அமாவாசைக்குள் அவரது பதவிக்காலம் முடிவடைந்து விட்டது.


புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் யேமன் அல் கெய்தாத் தளத்தை அதிரடியாகத் தாக்கும் திட்டம் அங்கீகாரம் பெறக் கொடுக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் அவரும் அவரது மகளின் கணவரும் பழமைக்கோட்பாடுசார் யூதருமான ஜரெட் குஷ்னர், பாதுகாப்புச் செயலர் ஜிம் மத்திஸ், படைத்தளபதி ஜோசெப் டன்போர்ட், துணை அதிபர் மைக் பென்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிலின் ஆகியோர் இரவு உணவின்போது அத்திட்டத்தை ஆராய்ந்து அங்க்கீகாரம் கொடுத்தனர். அங்கீகாரம் கொடுக்க முன்னர் சட்ட ஆலோசனையும் பெறப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டில் படையினருக்கு அதிக சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பது டிரம்பின் கொள்கையாகும். தாக்குதல் ஜனவரி 31-ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யேமனின் மையப்பகுதியில் உள்ள Bayda மாகாணத்தில் உள்ள அல் கெய்தா முகாமே தாக்குதலுக்கு உள்ளானது.

பாக்கிஸ்த்தான் அபொட்டாபாத் நகரில் ஒசாமா பின் லாடனின் மாளிகையில் தாக்குதல் செய்த அதே அமெரிக்கச் சிறப்புப் படையணியான சீல்-6 படையைச் சேர்ந்தோரே யேமன் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் படையினர் உட்பட பலர் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் தாக்குதல் இலக்கில் இருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள யக்லா என்னும் கிராமத்தில் விமானத்தின் மூலம் இறக்கப்பட்டனர். அன்று பல ஆளில்லாப் போர்விமானங்கள் அந்தப் பகுதியில் பறந்ததை அவதானித்த மக்கள் அல் கெய்தாப் போராளிகளுக்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. இதனால் சீல்-6 படையினரின் தாக்குதலின் முக்கிய உபாயமான “எதிர்பாராத தாக்குதல்” இல்லாமல் போய்விட்டது. அமெரிக்கப் படையினரின் வருகையை அறிந்த போராளிகள் தமது முகாமைச் சுற்றியுள்ள பாடசாலைகள், மருத்துவ நிலையங்கள், வீடுகள் போன்றவற்றில் நிலையெடுத்துக் கொண்டனர்.
 
MV-22 Osprey போர் விமானம்
உதவிக்குச் சென்ற விமானம் அழிக்கப்பட்டது.
சீல்-6 படையணியினரை அல் கெய்தா போராளிகள் சுற்றி வளைத்து பல முனைகளில் இருந்து தாக்குதல் தொடுத்த போது விமானப் படையின் உதவி கோரப்பட்டது. Marine Cobra உலங்கு வானுர்திகளும்  போர்விமானங்களும் சென்று தாக்குதல் நடத்தின. செங்குத்தாக ஏறவும் இறங்கவும் கூடிய MV-22 Osprey போர் விமானம் காயப்பட்டவர்களை மீட்கத் தரையிறங்கிய போது அவசரச் செயற்பாட்டால் நிலத்துடன் மோதல் ஏற்பட்டு அதில் இருந்த மூவர் காயமடைந்தனர். விமானம் சேதமடைந்தது. அந்த 75மில்லியன் டொலர்கள் பெறுமதியான விமானம் எதிரி கைகளில் சிக்காமல் இருக்க இன்னொரு விமானத்தில் இருந்து குண்டு வீசி அழிக்கப்பட்டது.
ஓர் அல் கெய்தா முகாமைத் தாக்குவதாயின் ஆளில்லாப் போர்விமானம்  மூலமாகவோ அல்லது வழிகாட்டல் ஏவுகணை வீச்சின் மூலமாகவோ தாக்கி அழிக்க முடியும். மிகவும் ஆபத்தான படை நடவடிக்கையை அமெரிக்காவின் கடற்படையின் சீல்-6 பிரிவினர் மேற்கொண்டதன் நோக்கம் அங்குள்ள கணினிகளியும் கைத் தொலைபேசிகளையும் கைப்பற்றுவதன் மூலம் அல் கெய்தாவின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களை அறிவதே. பின் லாடனின் அபொட்டாபாத் மாளிகையில் இருந்தும் பல கணினிகளை சீல் படையினர் கைப்பற்றிச் சென்றனர். யேமனில் உள்ள அல் கெய்தா முகாமில் இருந்து கணினிகளையும் கைப்பேசிகளையும் கைப்பற்றியதாக அமெரிக்கப் படையினர் சொல்கின்றனர். அந்த வகையில் அவர்கள் நடந்த தாக்குதல் வெற்றி என்கின்றனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
அமெரிக்கப்படையினர் செய்த தாக்குதலால் யேமனின் யக்லா கிராமத்தின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. அமெரிக்காவால் கொல்லப்பட்ட அமெரிக்கக் குடிமகனான Anwar al-Awlakiயின் 8வயது மகளும் சில்-6 படையணியின் தாக்குதலால் கொல்லப்பட்டார்.  பத்துக்கு மேற்பட்ட அல் கெய்தாப் போராளிகளும் கொல்லப்பட்டனர். பத்துப் பெண்கள் உட்படப் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பயேமனின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மலிக் அல் மெக்லஃபி இது ஒரு நீதிக்குப் புறம்பான கொலை என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...