Monday, 17 October 2016

தெற்கு ஆசிய நன்னீர் ஆதிக்கப் போட்டி

இருபதாம் நூற்றாண்டில் உலக நாடுகள் பெற்றோலியத்திற்குப் போட்டி போட்டது போல் இருபத்தியோராம் நூற்றாண்டில் நன்னீருக்கான போட்டி உலகநாடுகளிடை நிலவும் என சில நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். உலக நீர்க்கோபுரமான இமயமலையை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றது என்றது ஒரு அறிவியல் சஞ்சிகை. ஐக்கிய நாடுகள் சபை 2030-ம் உலகின் நீர்த்தேவையில் 60 விழுக்காடு மட்டுமே திருப்தி செய்யப்படும். என்கின்றது. 2030-ம் ஆண்டில் ஏற்படும் நீர்த் தட்டுப்பாட்டால் பல நாடுகளின் பொருளாதாரம் ஆறு விழுக்காட்டால் வீழ்ச்சியடையும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தட்டுப்பாட்டால் உணவு உற்பத்தி குறைந்து உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கலாம். 

உலகளாவி தட்டுப்பாடு
அறுபது மில்லியன் மக்கள் வாழும் அரபு நாடுகளில் நிலத்துக்கடியில் உள்ள நீர் பெருமளவில் குறைவடைந்து கொண்டு போகின்றது. காவேரி நீர் தொடர்பாக கர்நாடகாவில் நடந்த கலவரம் பற்றிய செய்திக்கு பிபிசி “இந்தியாவின் சிலிக்கன் வலியில் ஏன் போர் வெடித்தது?” எனத் தலைப்புக் கொடுத்தது. இந்தியாவின் 32 பெரு நகரங்களில் 22இல் கடும் நீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றது. உலகில் 148 நாடுகள் 276 நதிகளையும் ஏரிகளையும் பங்கீடு செய்கின்றன. இந்தப் பங்கீடு தொடர்பாக பல போர்கள் உருவாகும் ஆபத்து உள்ளது. தெற்கு ஆசியாவின் பல நதிகள் பல நூற்றாண்டு காலமாக கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

திபெத் பீடபூமி
ஆசியாவின் நீர் விநியோகத்தின் அதிர்ச்சிப் புள்ளியாக சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள திபெத் இருக்கின்றது. ஆசியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகையும் வளர்ச்சியடையும் தொழிற்றுறையும் காலநிலை மாற்றங்களும் நீருக்கான தேவையை அதிகரித்துக் கொண்டே போகின்றது. இமயமலை ஆசியாவின் நீர்க்கோபுரம் என விபரிக்கப்படுகின்றது. அதில் இருந்து பாயும் நதிகளை சீனா கட்டுப்படுத்துகின்றது. உலக மக்கள் தொகையின் 46 விழுக்காடு மக்கள் திபெத் பீடபூமியின் (Tibetan Plateau) ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் நீரில் தங்கியிருக்கின்றனர். சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்திரா நதி, இராவாட்டி நதி, சல்வீன் நதி, மெகொங் நதி (Indus, Ganges, Brahmaputra, Irrawaddy, Salween and Mekong) ஆகியவையே அந்த ஆறு நதிகளாகும். மொத்தத்தில் ஒரு வரண்ட நிலமான சீனாவின் நீர்த் தேவையைக் கருதி சீனா தொலை நோக்குடன் தனிநாடாக இருந்த திபெத்தை ஆக்கிரமித்துத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது 1.36 பில்லியனாக இருக்கும் மக்கள் தொகை 2030-ம் ஆண்டு 1.4 பில்லியனாக அதிகரிக்கும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது. திபெத் பீடபூமியில் குறையும் நீரின் அளவும் சீனாவில் அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன் நீர்த் தேவையும் இமயமலையில் உருவாகும் நதிகள் மீதான சீனாவின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும். சீனாவின் வடக்கு மற்றும் வட மேற்குப் பிரதேசங்களில் அதிகரிக்கும் வரட்சி நிலை திபெத்தில் இருந்து நதிகளைத் திசை திருப்ப வேண்டிய நிலையை உருவாக்குகின்றது. கம்போடியா, லாவோஸ், வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் 60மில்லியன் மக்கள் திபெத்தில் இருந்து பாயும் மேகொங்  ((Mekong River) நதிநீரிலே தமது நீர்த் தேவைக்கும் உணவு உற்பத்திக்கும் தங்கியுள்ளனர். சீனாவின் சல்வின் நதி  (Salween River) உலக விலங்கின வகைகளின் 25 விழுக்காட்டின் உறைவிடமாக இருக்கின்றது. சல்வீன் நதியில் சீனா பல அணைகளைக் கட்டியுள்ளது. மேலும் பலவற்றைக் கட்டவுள்ளது. அந்த அணைகள் அந்த உயிரினங்களுக்கு ஆபத்தானதாகும். சல்வீன் நதிக்குக் குறுக்கே சீனா கட்டும் அணைகளால் மியன்மாரில் கடல் நீர் தரைக்குள் புகும் ஆபத்து உருவாகியுள்ளது.

பிரம்மனுக்குத் தப்பாகப் பிறந்த மகன்
இந்திய மக்கள் தொகை சீனாவைப் போல் அதிகமானதாகும். காலப் போக்கில் இந்திய மக்கள் தொகை சீனாவைலும் பார்க்க அதிகமாகும். ஆனால் சீனாவின் நீர் இருப்பிலும் பார்க்க இந்தியாவின் நீர் இருப்பு அரைவாசியே. இந்தியாவின் நீர் சேகரிப்பு வசதி உலகிலேயே மிகவும் மோசமானதாகும். சீனாவின் நீர் சேகரிப்பு வசதிகள் இந்தியாவிலும் பார்க்க பதினொரு மடங்காகும். The 2030 Water Resources Group என்ற அமைப்பு 2030-ம் ஆண்டு இந்தியாவின் நீர் தேவையின் அரைப்பங்கை மட்டுமே திருப்தி செய்யக் கூடிய நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றது. சீனாவில் உருவாகும் பிம்மபுத்திரா நதி சீனா, இந்தியா பங்களாதேசம் ஆகிய நாடுகளிற்கு நீர் வழங்குகின்றது. இந்த நதியை யார்லுங் சங்போ இந்தியர்கள் புனித பிரம்ம புத்திரா நதி என அழைக்கின்றனர். திபெத்தியர்கள் பிரம்மபுத்திராவை பெரு நதி என்னும் பொருள் படும் சொல்லான சங்போ என்றும் பங்களாதேசத்தவர் ஜமுனா என்றும் அழைக்கின்றனர். திபெத்தியர்கள் பிரம்ம புத்திரா நதி ஒரு ஏரியாக இருந்தது என்றும் அது மற்றப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதால் பெரு வாய்க்காலை உருவாக்கி அதை நதியாக்கினார் என நம்புகின்றனர். உலகிலேயே அதிக உயரமான இடத்தில் உற்பத்தியாகும் நதி பிரம்மபுத்திரா நதி. இந்தியாவில் ஆண் பெயரால் அழைக்கப்படும் ஒரே நதி பிரம்மபுத்திரா. நீரின் அளவைப் பொறுத்தவரை உலகின் ஐந்தாவது பெரிய நதி. கைலாசத்தில் வாழ்ந்த சந்தனு என்ற முனிவரின் அழகிய மனைவி அமுதாவிற்கும் பிரம்மாவிற்கும் பிறந்த மகன் பிரம்மபுத்திரா நதி என இந்து புராணங்கள் சொல்கின்றன. பிரம்மனின் மகன் நீர் வடிவம் பெற்றான் எனக் கதை போகின்றது. இந்த பிரம்ம புத்திரா நதி தன்பாட்டிற்கு தான் போகும் திசையை மாற்றி வெள்ளப் பெருக்கை உண்டாக்கி அழிவையும் ஏற்படுத்தும். இந்தியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் மக்கள் இந்த நதியை ஒரு தடவை கடந்தால் அது தன்னை மீண்டும் கடக்க வைக்கும் என நம்புகின்றனர். அலை இயக்கம் மிகுந்த நதி இது. அதற்குக் குறுக்கேயும் சீனா அணை கட்டுகின்றது. இதனால் இந்தியாவிலும் பங்களா தேசத்திலும் 1.3 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவினதும் பங்களாதேசத்தினதும் மொத்த மக்கள் தொகை விரைவில் சீனாவின் மக்கள் தொகையிலும் பார்க்க அதிகமாகவிருக்கின்றது. இது நீர்த்தேவையையும் நீருக்கான போட்டியையும் அதிகரிக்கும். பிரம்ம புத்திரா நதியும் கங்கா நதியும் சீனாவில் உருவாகி இந்தியாவூடாக பங்களாதேசம் சென்று அங்கு ஒன்றிணைந்து பின்னர் வங்காள விரிகுடாவில் கடலில் கலக்கின்றன. சீனாவினதும் இந்தியாவினதும் செய்கைகளால் பங்களாதேசம் பெரிதும் அவலத்திற்கு உள்ளாகின்றது. நாடுகளின் எல்லைகளைக் கடந்து செல்லும் நதிகள் தொடர்பாக சீனா எந்த நாட்டுடனும் எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை. இருபது மில்லியன் மக்கள் வாழும் சீனத் தலைநகர் பீஜிங் உலகின் நீர்த்தட்டுப்பாடு மிக்க நகரங்களில் ஐந்தாவதாக நிரல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலத்துக்கு அடியிலுள்ள நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்வதால் நிலத்தாழ்வு ஏற்பட்டு பல உட்கட்டுமானங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.

மேகொங் தி
சீனா மேகொங் நதியில் கட்டும் அணைகளையும் திசை திருப்பல்களையும் சிறிய நாடுகளான கம்போடியா, லாவோஸ், வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் பொறுத்துக் கொண்டிருப்பது போல் பிரம்ம புத்திரா நதியை சீனா தனது வட பிராந்தியத்திற்கு திசை திருப்புவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? இந்தியா நீர்ப்பிரச்ச்னையை அடிப்படையாக வைத்து இந்த நாடுகளுடன் சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம். அது படைத்துறைக் கூட்டமைப்பாகவும் அமையலாம். இதில் கிழக்குச் சீனக் கடல் தொடர்பான முரண்பாடும் முக்கிய பங்கு வகிக்கலாம். நீர் கேந்திரோபாயப் பிரதேசமான திபெத்தில் பிரிவினைவாதம் நிலவுவதும் சீனாவிற்குச் சாதகமான ஒன்றல்ல.
இந்தியாவும் பங்களாதேசமும் 54 நதிகளைப் பங்கீடு செய்கின்றன. அவற்றில் கங்கை நதியை மட்டுமே எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்ற உடன்படிக்கையை இரு நாடுகளும் செய்துள்ளன.
சீனாவின் பாலைவனங்கள்   
சீனாவின் நிலப்ரப்பில் 20 விழுக்காடு பாலைமாகும். சீனாவின் பிராந்திங்ளில் ரட்சி மோமாகிக் கொண்டு போகின்து. 1975-ம் ருந்திலும் பார்க்க 21,000 துமைல்கள் சீனாவில் பாலைமாமாறியுள்ன.  
 
இந்தியா பாக்கிஸ்தான் நதி நீர்ப்பங்கீடு
கடந்த ஐம்பது ஆண்டுகளில் நதிநீர்ப்பங்கீடுகள் தொடர்பாக 400 உடன்படிக்கைகள் உலகெங்கும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. 182 மில்லியன் மக்களைக் கொண்ட பாக்கிஸ்த்தான் 1947-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிவடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஆறு நதிகளின் நீர்ப் பங்கீட்டு தொடர்பாகப் பிரச்சனை உருவானது. பின்னர் உலக வங்கி தலையிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் செய்து 1960-ம் ஆண்டு Indus Waters Treaty என்னும் உடன்படிக்கையை இரு நாடுகளும் செய்து கொண்டன. அதன்படி Indus, the Chenab and the Jhelumஆகிய மூன்று நதிகளும் பாக்கிஸ்த்தானின் கட்டுப்பாட்டில் வந்தன. நதிகளின் மூலம் ஒரு நாட்டில் இருக்கும் போது பல நாடுகள் பயன்பெறும் நதிகளால் உருவாகும் பிரச்சனையைத் தீர்ப்பது சிரமமான செயலாகும். பாக்கிஸ்த்தானுடன் சிந்து நதியைப் பங்கீடு செய்வது தொடர்பாக இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இந்தியா தாராள மனதுடன் நடந்து கொண்டதாக இந்தியர்கள் கருதுகின்றார்கள். இரு பெரும் போரை இரு நாடுகளும் செய்த போதும் அந்த ஒப்பந்தம் உயிர்ப்புடன் இருக்கின்றது. சிந்து நதியில் பாயும் நீரில் 90 விழுக்காடு பாக்கிஸ்த்தானுக்கு வழங்கப்படும் என அந்த ஒப்பந்தம் சொல்கின்றது. அதை எந்த விதத்திலும் இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது. இந்த ஒப்பந்தம் செய்த நேருவைப் பிடிக்காத இந்துத்துவாவாதிகள் தற்போது ஆட்சியில் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் என்ற மிரட்டலைப் பாக்கிஸ்த்தானுக்கு விடுத்துள்ளார்கள். உலகின் நீர்த் தட்டுப்பாடு மிக்க 36 நாடுகளில் பாக்கிஸ்த்தான் 31-ம் இடத்தில் இருக்கின்றது. பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரம் நீரில் பெரிதும் தங்கியிருக்கின்றது. பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் விவசாயம் பாக்கிஸ்த்தானிய நீர் வளத்தில் 90 விழுக்காட்டை உள்ளீடாக்கின்றது. 2015-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமாக நாசா செய்த ஆய்வின் படி உலகின் நிலத்துக்கடி நீர் மோசமாகக் குறைந்துள்ள நாடுகளில் பாக்கிஸ்த்தான் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. 

மோடி அரசு
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் திகதி இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த இந்திய பாக்கிஸ்த்தானிய நீர்ப்பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை மீள் ஆய்வு செய்யும் கூட்டத்தில் அவர் இரத்தமும் நீரும் ஒன்றாகக் கலந்து ஓட முடியாது எனச் சொன்னார். ஆனால் உடனடியாக ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்யாது என அங்கு தெரிவிக்கப் பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டு தோறும் இரு தடவைகள் நடக்கும் நதிகளின் நீர்ப்பங்கீடு தொடர்பான கூட்டம் இரத்துச் செய்யப்ப்ட்டுள்ளது என முடிவு செய்யப்பட்டது. பாக்கிஸ்த்தானியத் தலைமை அமைச்சர் நவாஸ் செரிஃப் ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது ஒரு போர் ஆகக் கருதப்படும் என்றார். பாக்கிஸ்த்தான் ஐக்கிய நாடுகள் சபையயும் பன்னாட்டு நீதிமன்றையும் நாடும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாக்கிஸ்தானிற்கான நீரைத் தடை செய்ய முடியுமா?
பாக்கிஸ்த்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிச் செய்யும் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இந்தியா நீர்த்தடையை பாவிக்க முயல்கின்றது.  பாக்கிஸ்த்தானிற்கான நீரை இந்தியா தடை செய்தால் அது ஒரு பன்னாட்டு உடன்படிக்கையை மீறிய செயலாகும். அந்த உடன்படிக்கைக்கு முன்னின்று செயற்பட்ட உலக வங்கி அதை விரும்பாது. இந்தியாவிற்கு சீனாவில் இருந்து வரும் நதிகளை சீனா தடை செய்தால் அதற்கு எதிராக இந்தியாவால் பன்னாட்டரங்கில் ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். சீனாவில் இருந்து 12 நாடுகளுக்கு நதிகள் பாய்கின்ற போதிலும் சீனா எந்த நாட்டுடனும் ஒப்பந்தம் செய்யவில்லை. பாக்கிஸ்த்தானிற்கான நீரை இந்தியா தடை செய்தால் பாக்கிஸ்த்தானில் ஒரு மனிதப் பேரவலம் ஏற்படும். அது உலக அரங்கில் இந்தியாவின் விம்பத்தை பெரிதும் பாதிக்கும். பாக்கிஸ்த்தானில் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மோசமடையும். சிந்து நதியை தடை செய்தால் அதற்கான அணை மற்றும் நீர்த்தேங்கங்கள் கட்ட பல ஆண்டுகள் எடுக்கும். பெரும் செலவும் ஏற்படும். பெருமழை ஏற்படும் போது வட இந்தியாவில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்.

நேருவின் இமாலாத் றுகள்
இந்தியாவின் 18 நதிகளில் 16 நதிகள் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களால் பகிரப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் இடையிலான நதி நீர்ப் பங்கீடு இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுதலாக இருக்கின்றது. சீனா தனது நாட்டில் இருந்து இந்தியாவிற்குப் பாயும் நதிகளிலேயே அணை கட்டுவதில் அதிக அக்கறை காட்டுகின்றது. இது நாடுகளுக்கும் இடையில் மோசமான நீர் போட்டி இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும் வாய்ப்பு அதிகமாகும். சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குப் பாயும் நதிகளின் நீரின் அளவின் மொத்தத்திலும் பார்க்க அதிக அளவு நீர் பிரம்ம புத்திராவாக இந்தியாவிற்கு போகும் சீனாவின் யார்லுங் சங்போ நதியில் இருந்து போகின்றது. அதன் அளவு ஆண்டு ஒன்றிற்கு 165.4 பில்லியன் கன மீட்டர்களாகும். ஜவகர்லால் நேரு விட்ட இரு பெரும் இமாலயத் தவறு சீனா தீபெத்தைத் தன்னுடன் இணைக்க அனுமதித்ததும் பாக்கிஸ்த்தானுடன் செய்த நீர்ப்பங்கீடு உடன்படிக்கையும் ஆகும் என இந்துத்துவாவாதிகள் கருதுகின்றனர். பிரம்மபுத்திராவிற்கு நீர்வழங்கு நதியான (tributary) சியாபுகு நதியில் சீனா செய்யும் உலகிலேயே செலவு மிக்க நீர் மின்சார உற்பத்தித் திட்டம் இந்தியாவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்திய வெளியுறவுத் துறை சீனாவிடம் எடுத்துச் சொல்லியுள்ளது. ஆனால் தனது சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த முயலும் சீனாவிற்கு நீர் மின் உற்பத்தி அவசியமாகும் என்பதால் சீனா 740 மில்லியன் டொலர்களைச் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நதிநீர்ப் பங்கீடு தொடர்பான உடன்படிக்கை இல்லாவிடினும் இரு நாட்டுகளிடையான நதி நீர் தொடர்பான தகவல் பரிமாற்ற உடன்பாடு உண்டு.

சீனா தனது உலக ஆதிக்கக் கனவை நிறைவேற்ற தனது நாட்டில் உற்பத்தியாகும் நதிகளைப் பாவிக்க முடியும். பாக்கிஸ்த்தானிற்கு எதிரான இந்தியாவின் அரசுறவியல் செயற்பாடுகளில் இனிவரும் காலங்களைல் நதிநீர்ப் பங்கீடு முக்கிய இடத்தை வகிக்கும். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...