Friday, 14 October 2016

அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு எதிராக சீறிய சீனாவும் இரசியாவும்

தென் சீனக் கடலில் சீனாவுடனும் சிரியாவில் இரசியாவுடனும் கடுமையான முரண்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் படைத்துறை மேம்பாட்டைச் சமாளிக்க இரசியா சீனாவுடன் ஒத்துழைக்கத் தயாராகவிருப்பதாக இரசியப் படையின் Lt. Gen. Viktor Poznikhir  தெரிவித்துள்ளார். இத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமை விடுத்துள்ள படைத்துறைச் சவாலை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட விருக்கின்றது. சீனாவில் நடந்த சியாங்ஷன் மன்றத்தின் 7வது மாநாட்டிற்கு கலந்து கொள்ளச் சென்ற Lt. Gen. Viktor Poznikhir சீனப் பாதுகாப்புத் துறையினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தினார். Shangri-La Dialogue என அழைக்கப்படும் ஆசியப் பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்க்கு மாற்றீடாக சீனா நடத்துவது தான் சியாங்ஷன் மன்றத்தின் மாநாடு.
அச்சுறுதலான அமெரிக்காவின் தாட்
ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் எதிரி நாடுகளின் முதல் அணுக்குண்டுத் தாக்குதலை (first nuclear strike) எப்படி எதிர்கொளவது தொடர்பாக நீண்டகாலம் திட்டமிட்டுப் பெரும் பணச்செலவுடன் உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை தாட் என சுக்கமாக அழைக்கப் படுகின்றது. அதை ஆங்கிலத்தில் Terminal High Altitude Area Defence (THAAD) என அழைப்பர். தாட் எவுகணை எதிர்ப்பு முறைமை இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவரை கண்காணித்து அந்தத் தொலைவில் இருந்தே வரும் ஏவுகணைகளை அழிக்க வல்லது. தென் கொரியாவில் அமெரிக்கா நிறுத்தியுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமை சீனாவையும் இரசியாவின் பெரும் பகுதியையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்கா எதிரி நாட்டின் அணுக்குண்டுகளை முதலில் தனது ஏவுகணைகளை வீசி அழித்த பின்னர் எஞ்சியுள்ள எதிரியின அணுக்குண்டுகளால் தனக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் மூலம் அழிக்கலாம் என நம்புகின்றது. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரி ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க வல்லது.

சியாங்ஷன் மன்றத்தின் 7வது மாநாடு
சியாங்ஷன் மன்றம் (Xiangshan Forum) 2016 ஒக்டோபர் 10-ம் திகதி முதல் 12 திகதிவரை நடாத்திய  என்னும் பாதுகாப்புத் துறை மாநாடு சீனாவில் நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செய்லாளார் கோத்தபாய ராஜ்பக்ச உட்பட 59 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் நிபுணர்களும் பங்குபற்றினர். ஊழல் வழக்குகில் சிக்கியிருக்கும் கோத்தபாய சீனா செல்ல இலங்கை அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையின் சார்பில் அந்த மாநாட்டில் பாதுகப்புத் துறைச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி உரையாற்றினார். அந்த மாநாட்டில் உரையாற்றிய சீன Maj. Gen. Cai Jun ஐரோப்பாவில் ஐக்கிய அமெரிக்கா நிறுத்தியிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் இரசியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அற்றவை என்பதற்கான சட்டபூர்வ ஆதரங்களை அமெரிக்கா முனவைக்கவில்லை என்றார். மேலும் அவர் சீனாவும் இரசியாவும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் தொடர்பாக ஒரே நிலையில் உள்ளதால் இரு நாடுகளினதும் கேந்திரோபாய நிலைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை ஒருமித்து எதிர்க்கும் என்றார்.
ஐக்கிய அமெரிக்கா ஈரானின் அணுக்குண்டுகளுக்கு எதிராக ஐரோப்பாவிலும் வட கொரியாவின் அணுக்குண்டுகளுக்கு எதிராக தென் கொரியாவிலும் நிறுத்தியுள்ள தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் முறையே இரசியாவினதும் சீனாவினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இரண்டு நாடுகளும் கருதுகின்றன. 2000கிலோ மீட்டர் வரை செயற்படக்கூடிய தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலக கேந்திரோபாயச் சமநிலையைக் குலைத்து பிராந்தியப் பாதுகாப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கின்றது என்றார் சீன Maj. Gen. Cai Jun.  சீனாவின் deputy chief of the Joint Staff Department, Admiral Sun Jianguo உடன் இரசியாவின் பிரதி பாதுகாப்புத் துறை அமைச்சர் அனடொலி அண்டனோவ் இணைந்து சியாங்ஷன் மன்றம் நடத்திய ஏழாவது பாதுகாப்பு மாநாட்டை ஒட்டி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினர். அதில் அமெரிக்காவின் தாட் முறைமைக்கு எதிரான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் ஆசிய பசுபிக் பிராந்தியமே அமெரிக்காவின் தாட் முறைமையால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என சீனர் தெரிவித்தார். மேலும் அவர் அமெரிக்கா மொத்த ஆசிய ஐரோப்பிய மக்களை கேடயமாகப் பாவிக்கின்றது என்றார். இரசியர் அமெரிக்காவின் செயல் அளவிற்கு மிஞ்சியதும் திமிரானதும் என்றார். தாட் ஏவுகணை முறைமை இதுவரை போர் முனையில் பரீட்சிக்கப் படாதது என்பதல் அதன் உண்மையான தாற்பரியம் இன்னும் தெரியாது. ஆனால் இரசியாவும் சீனாவும் அதுபற்றி கொள்ளும் கரிசனையும் அதற்கு எதிராக இணைவதும் அது எந்தளவு தூரம் அச்சுறுத்தலானது என்பது பற்றிப் பறைசாற்றுகின்றது. அமெரிக்கா 2002-ம் ஆண்டுச் செய்து கொண்ட Anti-Ballistic Missile உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகிக் கொண்டதையும் இருதரப்பினரும் கடுமையாகக் கண்டித்தனர்.

இணைந்து பயிற்ச்சி
அமெரிக்காவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர் கொள்ள சீனாவும் இரசியாவும் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு முறைமையைக் கையாள்வது தொடர்பான படைத்துறைப் பயிற்ச்சியில் 2017-ம் ஆண்டு ஈடுபடவிருக்கின்றன. 2016-ம் ஆண்டு மே மாதம் இரு நாடுகளும் இணைந்து கணனி ஒப்புச்செய்லாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைப் பயிற்ச்சி (computer-simulated anti-missile drill) செய்தன. இதன் அடுத்த கட்டமாகவே 2017-இல் இரு நாடுகளும் இணைந்து இரண்டாம் பயிற்ச்சியைச் செய்யவிருக்கின்றன. இதன் விபரத்தை சீனா வெளிவிடவில்லை. ஆனால் அது எந்த ஒரு நாட்டையும் இலக்கு வைத்து நடத்தப் படவில்லை என சீனா சொல்கின்றது. சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜின் கன்ரொங் சீனாவும் இரசியாவும் ஏவுகணை எதிர்ப்புத் துறையில் அமெரிக்காவிலும் பார்க்கப் பின் தங்கியுள்ளன. அவற்றிற்கிடையிலான ஒத்துழைப்பு இந்தப் பின் தங்கிய நிலையைக் குறைக்கக் கூடியது என்றார். சீனப் படைத் துறை விஞ்ஞானக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் Luo Yuan தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரு நாடுகளும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.
2016 செப்டம்பர் மாதம் 29-ம் திகதி அமெரிக்காவின் சன் டியாகோ நகரில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றான யூ.எஸ்.எஸ் கார்ல் வின்சனில் நின்று கொண்டு உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தியம் சீனாவின் படைத்துறை வளர்ச்சியை உணர்வதால் அமெரிக்கா தனது படைத்துறை முனையை அங்கு கூராக்க விருக்கின்றது என்றார். அவரது உரை சீனாவின் படைத்துறை வளர்ச்சியாலும் தென் சீனக் கடலில் சீனா செய்து கொண்டிருக்கும் விரிவாக்க நடவடிக்கைகளாலும் கலவரமடைந்துள்ள நாடுகளை ஆறுதல் படுத்த என்றது ஓர் ஹொங்கொங் ஊடகம். அமெரிக்கா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை மேலும் தாக்குதல் திறன் மிக்கவையாக்குவதுடன் நீர் மூழ்கிக் கப்பல்கள் போக முடியாத சிறு கடற்பரப்புகளுக்குள் சென்று தாக்குதல் செய்யக் கூடிய ஆளில்லாக் கலன்களையும் (undersea drones) உருவாக்க விருக்கின்றது என்றார் காட்டர். ஆசிய நாடுகளுடன் அமெரிக்கா கட்ட முயலும் படைத்துறை ஒத்துழைப்பு என்ற மாளிகையின் முதற் பிளவு பிலிப்பைன்ஸில் உருவாகியுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பிலும் பார்க்க சில ஆசிய நாடுகளுக்கு சீனாவின் பணம் அதிகம் தேவைப்படுகின்றது.

படைத்துறைத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா முன்னணியில் இருப்பது சீனாவையும் இரசியாவையும் ஒத்துழைக்க நிர்ப்பந்திக்கின்றது. சீன மூலதனமும் மலிவான ஊழியர்களும் இரசியத் தொழில்நுட்பத்துடன் இணைவது  அமெரிக்காவைக் கரிசனை கொள்ள வைக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...