Thursday, 7 July 2016

ஈராக்கிற்கு சில்கொட் அறிக்கை தமிழர்களுக்கு ஜெனீவாத் தீர்மானங்கள் போலே

மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்கா தொடர்பான கொள்கைகளில் மூன்று அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 1. சீரான எரிபொருள் விநியோகம், 2. மத்திய தரைக் கடலினூடான ஒழுங்கான போக்குவரத்து, 3. இஸ்ரேலின் இருப்பு. இவை அவர்களால் பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்கள் இரகசியமாக ஒரு நோக்கத்தையும் கொண்டுள்ளனர். ஓர் இஸ்லாமிய வல்லரசு உருவாகக் கூடாது என்பதுதான் அவர்களின் இரகசிய நோக்கம்.

முதலாம் உலகப் போரில் தற்போது மேற்கு நாடுகளின் நட்பு நாடாகத் திகழும் உதுமானியப் பேரரசு தோற்கடிக்கப் பட்ட பின்னர் இனி ஓர் இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரித்தானியாவும் பிரான்ஸும் இணைந்து மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளின் எல்லைகளை வகுத்தன. இன மோதல்களுக்கு வழிவகுக்கக் கூடிய வகையில் தேச எல்லைகள் வகுக்கப் பட்டன. கிருஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாக் கொண்ட லெபனான் என்ற நாடும் உருவாக்கப்பட்டது. இன்று அரபு நாடுகளில் உருவாகியுள்ள இரத்தக் களரிக்கு அந்த எல்லைகள் தான் காரணம். ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றி தமது அரசை உருவாக்கியவுடன் தமது சஞ்சிகையில் முதலில் சொன்னது பிரித்தானியாவும் பிரான்ஸும் உருவாக்கிய Sykes-Picot எல்லைகளை நாம் அழித்து விட்டோம் என்பதே.

எகிப்தின் முன்னாள் அதிபர் அப்துல் கமால் நாசர் ஒரு மதவாதி அல்லர். அவர் மதவாதிகளைத் தன்னாட்டில் அடக்கி வைத்திருந்தவர். தன்னை ஒரு இஸ்லாமியராகக் காட்டிக் கொள்ளாமல் தன்னை ஒரு அரேபியராகவும் மூன்றாம் உலக நாடுகள் குழுவில் தன்னை ஒரு பெருமை மிக்க உறுப்பினராகவும் கருதியவர் அவர். சிரியாவின் ஹஃபீஸ் அல் அசாத், லிபியாவின் மும்மர் கடாஃபி, ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் ஆகியோர் நாசரின் வழியை ஒட்டியே நின்றனர். இவர்களின் கடாஃபியைத் தவிர மற்றவர்கள் எவரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்க்கவில்லை. இவர்கள் யாவரும் சோசலிஸம் எனப்படும் சமூகவுடமைக் கொள்கையை அரபு நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றி பாத் எனப்படும் கொள்கையுடன் தமது நாடுகளை ஆண்டு வந்தனர். உலகிலேயே மிகச் சிறந்த சமூகநலத் திட்டங்கள் இவர்களது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. இவர்களது சமூக நலத் திட்டங்களால் நாட்டின் வளம் உச்ச இலாபம் ஈட்டக் கூடிய வகையில் பயன்படுத்தப் படவில்லை.

இஸ்லாமிய நாடுகளிடையே சிறந்த படையணிகளையும் படைக்கலன்களையும் கொண்ட நாடாக ஈராக்கை சதாம் ஹுசேய்ன் உருவாக்கினார். உயர் தரம் வரை கட்டாய இலவசக் கல்வியை நாட்டில் அறிமுகப் படுத்தினார். பல படைக்கலன்களை இரசியாவிடமிருந்தும் மேற்கு நாடுகளிடமிருந்தும் வாங்கினார்.உள்ளூரிலே பல படைக்கலன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். அவரிடம் இருந்த ஏவுகணைகள் இஸ்ரேல் வரை பாயாக் கூடியதாக இருந்தன. மற்ற வளைகுடா நாடுகளை தன்னுடன் இணைத்து ஒரு பெரும் வல்லரசை உருவாக்கும் கனவு அவருக்கு வந்தது அவரின் உயிருக்கு உலைவைத்தது. எரிபொருட்களின் விலை டொலரில் நிர்ணயிக்கப்படாமல் யூரோவில் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த சதாமும் எரிபொருட்களின் விலை இத்தனை கிராம் தங்கம் என நிர்ணயிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க கடாஃபியும் கொல்லப்பட்டனர்.

அல் கெய்தாவுடன் சதாம் எந்தத் தொடர்பையும் வைத்திருக்கவில்லை. மேற்கத்தியப் பாணியில் உடையணியும் சதாம் குடும்பத்தினரை அல் கெய்தா உடபட எல்லா இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களும் எதிர்த்தன. நியூயோர்க் நகரத்தில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் சதாமிற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக தொடர் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டன. அவரே இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும் பொய்ச் செய்திகள் வெளிவிடப்பட்டன. அவருக்கு எதிராகச் சதி செய்த அவரது குடும்பத்தவர்களை அவர் கொன்ற  பழைய கதைகள் கிளறி எடுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு அவரது (character assassination) ஆளுமை அழிப்பு நேர்த்தியாகச் செய்யப்பட்டது. உலகெங்கும் வஹாப்பிஸம் என்னும் பெயரில் திவிரவாத்தைப் பரப்பிக் கொண்டிருப்பது சவுதி அரேபியா மட்டுமே. அதற்கு எதிராக சுண்டுவிரல் கூட அசைக்கப்படுவதில்லை.

ஈராக்கில் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் இருக்கின்றன என்ற கருத்து முதலில் முன்வைக்கப்பட்டது. அதைத் தேடிச்சென்ற ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அங்கு அப்படி ஒன்றும் இல்லை எனத் தெரிவித்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா சதாம் தானது பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களையும் அதன் உற்பத்தி நிலையங்களையும் ஒழித்து வைத்துவிட்டார் எனக் குற்றம் சாட்டியது. சதாம் என்ற பெயரே எதிர்கொள்பவர் என்னும் பொருள் கொண்டது. மீண்டும் ஐநா நிபுணர்கள் குழு வந்து தேடுதல் செய்யலாம் என்றார் சதாம். ஆனால் பேரரசுக் கனவுடன் இருக்கும் சதாம் கொல்லப்பட வேண்டியவர் என்னும் நோக்கத்துடன். அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களைக் கண்டு பிடிப்போம் எனச் சொல்லி ஈராக்கை ஆக்கிரமித்தன.

ஈராக்கை ஆக்கிரமிக்கும் ஜேர்ஜ் புஷ்சின் கொள்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை தனது அமைச்சரவை படைத்துறை போன்றவற்றைக் கலந்தாலோசிக்காமல் ரொனி பிளேயர் வழங்கினார். இவர்களது படையெடுப்பால் அமெரிக்கா என்ற ஒரு நாடு உருவாகுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மெசப்பட்டோமியா என்னும் பெயரில் சிறந்த ஆட்சி முறைமையையும் செழிப்பான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு சின்னா பின்னமானது. வரலாற்றுப் பெருமை மிக்க பாக்தாத் நகரம் சீரழிந்தது.  இவர்களது தாக்குதலால் குழந்தைகள் உட்பட ஐந்து இலட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அங்கு இஸ்லாமியத் தீவிரவாதம் உருவானது. அது முதலில் அல் கெய்தா என்றும் பின்னர் இஸ்லாமிய அரசு என்றும் பெயர் பெற்றது. இவர்களின் படையெடுப்பின் விளைவால் ஈராக் இப்போது மூன்றாகப் பிளவு பட்டுள்ளது. சியா முஸ்லிம்களைப் பெரும் பான்மையினராகக் கொண்ட ஈராக்கில் சுனி இஸ்லாமியரான சதாம் ஹுசேய்னின் ஆட்சியில் இந்த இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் நடப்பதில்லை. இன்று ஒரு தரப்பினரை மறு தரப்பினர் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்கப் போர் விமானங்கள் இன்றும் குண்டு வீசி பல்லாயிரம் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கின்றன.


ஈராக்கின் மீதான படையெடுப்பு தவறானது என்ற கருத்து உலகெங்கும் வலுப்பெற்ற நிலையில் அதை விசாரிக்க ஒரு கண்துடைப்பு விசாரணையை பிரித்தானிய அரசு ஆரம்பித்தது. சேர் ஜோன் சில்கொட் என்னும் முன்னாள் முகாமைச் சேவை அதிகாரி இதற்கு நியமிக்கப்பட்டார். ரொனி பிளேயரின் ஆட்சிக் காலத்திலேயே சில்கொட்டிற்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது.   விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் யாவும் தடையின்றி அவருக்கு வழங்கப்பட்டன. ஆனால் அவரது அறிக்கை ரொனி பிளேயாரைக் குறை கூறுவதாக மட்டுமே அமைந்தது. அவர் மீது குற்றம் சுமத்தவில்லை. பிளேயர் சட்ட விரோதமாக நடந்து கொண்டாரா என்பது பற்றிக் கருத்து வெளிவிடுவதை சில்கொட் தவிர்த்துக் கொண்டார். எல்லாவற்றிலும் மோசமாக ஈராக்கில் பிரித்தானியா இழைத்த போர்க்குற்றம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதற்கான மேலதிக விசாரணை தேவை என்ற கருத்து இப்போது முன் வைக்கப்படுகின்றது. ஈராக்கில் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் இருப்பதாக ரொனி பிளேயர் பொய் சொன்னார் என்பது பரவலான குற்றச் சாட்டு. ஆனால் சில்கொட் அறிக்கை அவர் பொய் சொல்லவில்லை அவருக்கு பிழையான உளவுத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன என பிளேயரைப் பிணை எடுக்க முயல்கின்ற்து சில்கொட் அறிக்கை. வள்ளுவர் தனது ஓற்றாடல் அதிகாரத்தில் முதற்குறளிலேயே ஒற்றாடலும் நன்னூல்களும் அரசின் இரு கண்கள் போன்றன என்றார். ஆனால் பிளேயர் ஒரு கண்ணால் மட்டும் பார்த்தாரா? அல்லது உளவுத் தகவல்களை தனக்கு ஏற்ப மாற்றியமைத்தாரா?

சில்கொட் ஓராண்டில் முடிக்க வேண்டிய விசாரணையை ஆறாண்டுகள் இழுத்தடித்து 12 மில்லியன் பவுண் செலவழித்து 2.6மில்லியன் சொற்களடங்கிய அறிக்கையை தயாரித்துள்ளார். இதை வாசித்தே செத்து தொலையுங்கடா என்பது போன்ற அறிக்கை. அமெரிக்காவுடன் இணைந்து ஆக்கிரமித்திருக்காவிடில் அமெரிக்க பிரித்தானிய உறவு பாதிக்கப் பட்டிருக்குமா என்பது கேள்விக்குரியது என்று சொல்லி நழுவுகின்றது அறிக்கை. பெரியண்ணனை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டதா?

ரொனி பிளேயருக்குக் கிடைத்த அதே உளவுத் தகவல்களை வைத்து அப்போதைய பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரொபின் குக் போர் தொடுக்க உரிய ஆதரங்கள் இல்லை என்ற கருத்தை வெளிவிட்டார். போருக்கு எதிர்ப்புக் காட்டி தன் பதவியில் இருந்து விலகினார்.சில் கொட் அறிக்கை ரொனி தவறான முடிவெடுத்தார் என்று மட்டும் சொல்கின்றது. ஈராக்கின் மீது படையெடுக்கும் போது பிரித்தானியப் பாராளமன்றத்தில் அவரது தொழிற்கட்சி எதிர்க்கட்சியிலும் பார்க்க  167 அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

 2010-ம் ஆண்டு அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடன் 90,0000 அமெரிக்கப் படையினர் வீடு திரும்பப் போகின்றார்கள். ஈராக்கில் மக்களாட்சி மலரப் போக்கின்றது உறுதியான அரசு அமையப் போகின்றது என்றார். ஆனால் இன்று ஈராக் இரத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கின்றது. தற்போதைய ஈராக்கின் அழிவு நிலை பற்றி சில்கொட்டின் அறிக்கை கருத்தில் கொள்ளவே இல்லை. 169 பிரித்தானியப் படையினர் கொல்லப் பட்டமை தொடர்பாகக் கரிசனை காட்டும் சில்கொட் அறிக்கை வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு குண்டு வெடிப்பில் மட்டும் 250இற்கு மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர். சதாமை ஆட்சியில் இருக்க விட்டிருந்தால் இது நடந்திருக்குமா?

தமிழீழத்தில் இருபது நாடுகளின் ஆதரவுடன் சிங்களப் பேரினவாதிகள் செய்த இனக்கொலையை ஒரு மனித உரிமைப் பிரச்சனையாக்கினர். அது போல பிரித்தானியா ஈராக்கில் இழைத்த போர்க்குற்றத்தை சரியாக ஆராயாமல் எடுத்த முடிவு எனக் குறை கூறுகின்றனர். அது மட்டும் தான் விடப்பட்ட பிழை என்பதுபோல் காட்டுகின்றனர். ஈராக்கில் செய்த அழிபாடுகளுக்கோ அல்லது கொல்லப்பட்டவர்களுக்கோ சில்கொட் அறிக்கை நீதி தேட முயலவில்லை. அதற்கான இழப்பீடு யார் கொடுப்பது? பிளேயர் தான் செய்தது சரி என்கின்றார். சிங்களப் பேரினவாதிகளும் அதையே சொல்கின்றனர். ஜெனீவாவின் அறிக்கைகள் போர்க்குற்றம் நடந்திருக்கலாம் அதற்கு மேலதிக விசாரணை தேவை எனச் சொல்லும். ஆனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது போர்க்குற்றம் என்ற வாசகமே இருக்காது. சிங்கள இனக் கொலையாளிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதுடன் அவர்களின் இன அழிப்புத் தொடர ஏதுவான சூழலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் மனித உரிமை மீறல் என்ற குழிக்குள் இனக்கொலைக் குற்றம் புதைக்கப்படுகின்றது. ரொனி பிளேயர் குற்றம் இழைத்தாரா என்பதை நீதி மன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கின்றது சில்கொட் அறிக்கை. ஜெனிவாவிலும் இந்த மாதிரியே சிலர் சொல்கின்றார்கள்.

 What does the Chilcot report say? (Courtesy Guardian)

Sir John Chilcot delivered a devastating critique of Tony Blair’s decision to go to war in Iraq in 2003, concluding that Britain chose to join the US invasion before “peaceful options for disarmament” had been exhausted. His report, which amounts to arguably the most scathing official verdict given on any modern British prime minister, concludes:

   1.  Tony Blair exaggerated the case for war in Iraq
   2. There was no imminent threat from Saddam Hussein
   3.  Britain’s intelligence agencies produced "flawed information"
   4.  George Bush largely ignored UK advice on postwar planning
   5. The UK military were ill-equipped for the task
   6.  UK-US relations would not have been harmed had the UK stayed out of the war

ரொனி பிளேயருக்குக் கிடைத்த அதே உளவுத் தகவல்களை வைத்து அப்போதைய பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரொபின் குக் போர் தொடுக்க உரிய ஆதரங்கள் இல்லை என்ற கருத்தை வெளிவிட்டார். போருக்கு எதிர்ப்புக் காட்டி தன் பதவியில் இருந்து விலகினார்.சில் கொட் அறிக்கை ரொனி தவறான முடிவெடுத்தார் என்று மட்டும் சொல்கின்றது. ஈராக்கின் மீது படையெடுக்கும் போது பிரித்தானியப் பாராளமன்றத்தில் அவரது தொழிற்கட்சி எதிர்க்கட்சியிலும் பார்க்க  167 அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 

ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்புப் போரால் பிரித்தானியப் படையினருக்கு ரொனி பிளேயர் அநீதி இழைத்தார் என்ற திசையில் இப்போது நிலைமை நகர்த்தப்படுகின்றது. ஈராக்கில் பிரித்தானியப் படைகள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றன.  ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் துணை போன குற்றவாளிகள் என பிறீமன் தீர்ப்பாயம் சொன்னது ஜெனீவாவில் மறைக்கப்பட்டு ஈழத்தவர்களுக்கு நீதி தேடுபவர்களாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் தம்மை உலகிற்கிகுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஈராக்கை ஆக்கிரமித்த போது உயிரிழந்த பிரித்தானியப் படையினரின் குடும்பம் இனி பிளேயருக்கு எதிராக வழக்குத் தொடுக்காது. அது அரசுக்கு எதிராக வழக்க்குத் தொடுத்து தமக்கான இழப்பீடாகப் பெரும் தொகைப்பணத்தைப் பெற்றுக் கொள்வர்.

உள்ளக விசாரணை மூலம் தீர்வு கிடைக்கும் என நம்புபவர்களுக்கு சில்கொட் அறிக்கை நல்ல பாடமாகும். 

ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது மீண்டும் அப்படி ஒரு குற்றம் நடக்காமல் இருப்பதற்காகும். ஆனால் ரொனி பிளேயர் தான் மீண்டும் அப்படி ஒரு ஆக்கிரமிப்பை செய்யத் தயங்க மாட்டேன் எனச் சொல்வது தேவையான நேரம் தேவையான நாட்டில் யாரும் ஆக்கிரமித்து அதைச் சின்னாபின்னப் படுத்தலாம் எனச் சொல்வது போல் இருக்கின்றது. ரொனி பிளேயர் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளி. அதை இப்போதைய ஈராக்கிய அரசு செய்ய மாட்டாது.  அமைதிப் படை என்னும் பெயரில் ஒரு கொலைவெறி நாய்ப்படை வந்ததை நாம் அறிவோம். சமாதானத்தை நிலை நாடுகின்றோம் பயங்கரவாதத்தை ஒழிக்கின்றோம் என்னும் போர்வையில் இனி ஒரு நாடு சின்ன பின்னப்படக் கூடாது என்பதில் உலக மக்கள் விழிப்புடன் இருந்து வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழ வேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...