இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவை MTCR எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Missile Technology Control Regime என்னும் கூட்டமைப்பில் ஓர் உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ள அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். MTCR அமைப்பு உறுப்பு நாடுகள் எந்த விதமான ஏவுகணைகளை மற்ற நாடுகளுக்கு விற்பது என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. MTCRஇல் இணைவதற்கு இந்தியா கொடுத்த விண்ணப்பத்திற்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நாள் 2016 ஜுன் மாதம் 6-ம் திகதியுடன் முடிவடைந்ததால் இந்தியாவின் உறுப்புரிமை இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெருங்கிவரும் இந்தியாவும் அமெரிக்காவும்
இந்திய ஆட்சியாளர்களுடனும் அரசுறவியலாளர்களுடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது கடினமான ஒன்று என அமெரிக்க வெளியுறவுத் துறையினர் கருதியிருந்தமை 2000-ம் ஆண்டு பில் கிளிண்டன் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தில் இருந்து சிறிது சிறிதாக மாறத் தொடங்கி தற்போது இரு தரப்பினர்களிற்கும் இடயில் அந்நியோன்யம் துளிர்விடத் தொடங்கியுள்ளது என்பதை மோடி அமெரிக்காவிற்கு செய்த மூன்று நாட் பயணம் சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்கா இந்தியாவுடனான உறவிற்கு 2000-ம் ஆண்டில் இருந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. பராக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாகப் பல கண்டனங்கள் எழுப்பப்பட்ட போதிலும் அவரது இந்தியாவுடனான உறவுக் கொள்கை வெற்றிகரமானது என பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.
நோக்கங்கள் வேறு
உலகில் தொழில்நுட்பப் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதெற்கு என Nuclear Suppliers' Group, the Missile Control Technology Regime, the Australian Group and the Wassenaar Arrangement ஆகிய நான்கு அமைப்புக்கள் இருக்கின்றன. இவை தமது தொழில்நுட்ப ஆதிக்கத்தை நிலைநிறுத சில நாடுகளால் உருவாக்கப் பட்டவையாகும். இஸ்லாமிய நாடுகளுக்கு அதிலும் முக்கியமாக ஈரானிற்கு புதிய தொழில்நுட்பம் போகமல் தடுப்பதும் இவற்றின் பகிரங்கப்படுத்தப்படாத நோக்கமாகும்.
MTCRஅமைப்பின் இரட்டை வேடம்
1987-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட MTCR ஏற்கனவே 34 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஏவுகணைத் தொழில்நுட்பம் பல நாடுகளுக்கும் பரவுவதையும் அணுக்குண்டு தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளை எல்லா நாடுகளும் உருவாக்கக் கூடாது என்பதிலும் இந்த MTCR அமைப்பு கவனம் செலுத்துகின்றது. வட கொரியா அணுக்குண்டை உற்பத்தி செய்த போதிலும் அவற்றைத் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைத் தொழில்நுட்பம் அதனிடம் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. MTCR உறுப்புரிமை இந்தியாவிற்கு இல்லாதிருந்த போது அதற்கு பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டிருந்தது. அதேவேளை பல ஏவுகணைத் தொழில்நுட்பங்களை பாக்கிஸ்த்தானிற்கு சீனா வழங்கிக் கொண்டிருந்தது. 2003-ம் ஆண்டு அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பேய் இது தொடர்பாக MTCRஅமைப்பைக் கடுமையாகச் சாடியிருந்தார். இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தின் தலைவர் சிவ தானு பிள்ளை இந்தியா முழுக்க முழுக்க உள்ளூர் அறிவிலேயே தங்கியிருந்து ஏவுகணைகளை உருவாக்கியது இன்னும் ஒரு சுதந்திரப் போராட்டம் போல் கடினமானதாக இருந்தது என்றார். இந்தியாவின் Defence Research and Development Organisationஇற்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தை உருவாக்க 15 ஆண்டுகள் எடுத்தன. MTCRஅமைப்பு 500கிலோ கிராமும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள குண்டுகளை 300கிலோ மீட்டர்களுக்கு மேல் எடுத்துச் செல்லும் கருவிகளின் விற்பனைக்குக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இது ஏவுகணைகளுக்கும் ஆளில்லாப் போர் விமானங்களுக்கும் பொருந்தும். இத் தொழில் நுட்பம் "பயங்கரவாதிகளின்" கைகளுக்குப் போக்கக் கூடாது என்பதில் "அரச பயங்கரவாதிகள்" அதிக கரிசனை காட்டினர். ஆனால் பிரான்ஸும் பிரித்தானியாவும் சவுதி அரேபியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தக் கட்டுப்பாட்டை மீறி படைக்கலன்களை விற்பனை செய்திருந்தன. ஏவுகணைக் தொழில்நுட்பங்களை சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான், ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டன.
இந்தியாவிற்கு விதிவிலக்கு
அணுப்படைக்கலப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகள் மட்டுமே MTCRஇல் உறுப்புரிமை பெறலாம் என்ற நியதியில் இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா பலவிதமான படைக்கலங்களை அமெரிக்காவிடமிருந்து விலைக்கு வாங்கலாம். அமெரிக்க உளவுத் துறை பரவலாகப் பயன்படுத்தும் Predator drone என்னும் ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்கலாம். ஆனால பாக்கிஸ்த்தானியப் படைட்த்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பாக்கிஸ்த்தானுக்குள் சென்று அங்குள்ள தலிபான் தலைவர்களைக் கொல்லக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்களை அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு விற்பனை செய்யாது என எதிர்பார்க்கலாம்.
இந்திய ஏவுகணை வியாபாரம் இனிக் கல்லாக் கட்டும்
இந்தியாவின் ஒலியிலும் பார்க்க வேகமாகப் பாயக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டில் இருந்தே வியட்நாம் ஆர்வம் காட்டி வருகின்றது. பிரம்மோஸ் இரசியாவுடன் இந்தியா இணைந்து தயாரித்த supersonic cruise missile ஆகும். இனி இந்தியா வியட்நாமிற்கு பிரம்மோஸ்களை விற்பனை செய்யலாம். இந்தோனேசியா, தென் ஆபிரிக்கா, பிரேசில், சிலி ஆகிய நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க அக்கறை கொண்டுள்ளன. மேலும் பிலிப்பைன்ஸ், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து ஆகிய நாடுகளும் பிரம்மோஸை வாங்கலாம். வெளிநாடுகளுக்கு படைக்கலன்கள் விற்பனை செய்யலாம் என்ற நிலை உருவாகும் போது
உற்பத்தித்திறன், தரம் ஆகியவை மேம்படும். உலகிலேயே அதிக படைக்கலன்களை
இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியா இனி படைக்கலன்களை ஏற்றுமதி
செய்வதிலும் முன்னேறலாம். இனிப் படைத்துறை ஏற்றுமதியில் இந்தியா சீனாவிற்கு
சவாலாக அமையும். மேலும் இந்தியாவின் விண்வெளித் திட்டமும் தனக்குத்
தேவையான தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் வாங்கலாம்.
விண்வெளியிலும் இந்தியாவிற்கு வாய்ப்பு
செவ்வாய்க் கிரகத்திற்கு செய்மதி அனுப்புவதில் சீனாவை முந்திய இந்தியாவிற்கு பல விண்வெளித் தொழில்நுட்பங்களை இதுவரை இரசியாவால் விற்பனை செய்ய முடியாமல் MTCR அமைப்பின் விதிகள் தடை செய்திருந்தன. இனி இரசியா இந்தியாவிற்கு விண்வெளிப் பயணத்தில் முன்னணி வகிக்கும் cryogenic rocket engineஐ இரசியாவிற்கு விற்பனை செய்யும். இந்தியாவும் இரசியாவும் இணைந்து ஏவுகணைப் பாதுகாப்பு முறைமைகளை உற்பத்தி செய்தால் பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டுகள் செல்லாக் காசாகிவிடும்.
என்ன இந்த பிரம்மோஸ்?
இந்தியாவும் இரசியாவும் இணைந்து 2004-ம் ஆண்டு முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை (Cruise Missiles) உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது. பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை. அதிகரித்த உயர நிலையில் பாயும் 400 கிலோ மீட்டர் தூரம் பாயக்கூடியது. ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட பாதையில் மட்டும் பயணிக்கும் இடையில் தனது பாதையை மாற்றாது. இடைமறிப்பு ஏவுகணைகளை தவிர்க்கும் நுட்பம் இதில் இல்லை. ஒரு பிரம்மோஸ் ஏவுகணையை இலக்குத் தப்பாமல் அழிக்க அமெரிக்காவின் Sea Sparrow Missiles நான்கை ஏவ வேண்டி இருக்கும். ஒரு அமெரிக்க நாசகாரிக் கப்பலால் 12 பிரம்மோஸ்களை மட்டுமே அழிக்கலாம். இந்தியாவின் கொல்கத்தா வகையைச் சேர்ந்த நாசகாரிக் கப்பலில் 49 பிரம்மோஸ்களும் இந்தியாவின் அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்கள் 24 பிரம்மோஸ் ஏவுகணைகளையும் கொண்டிருக்கும். 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.
ஆத்திரப்படும் பாக்கிஸ்த்தான்
இந்தியா MTCRஅமைப்பில் இணைவதற்கு எதிராக அதன் உறுப்பு நாடுகளிடம் பாக்கிஸ்த்தான் பெரும் பரப்புரைச் செய்தது. இந்தியாவை MTCRஅமைப்பில் இணைத்துக் கொள்வதையிட்டு பாக்கிஸ்தானிய மூதவை உறுப்பினர் முஷாஹிட் ஹுசேய்ன் சயிட் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா எல்லா அரசுறவியல் முனைகளிலும் எம்மைத் தோற்கடித்து எம்மைச் சுற்றி வளைக்கின்றது என்றார் அவர். ஈரானுடனும் ஆப்கானிஸ்த்தானுடனும் பாக்கிஸ்த்தானிற்கு நல்ல உறவு இல்லாத நிலையில் அந்த இரு நாடுகளுடனும் இந்தியா தனது உறவை அபிவிருத்தி செய்கின்றது என்றார் அவர் மேலும். நரேந்திர மோடியின் ஈரானிற்கான பயணத்தின் போது ஈரான், ஆப்கானிஸ்த்தான், இந்தியா ஆகிய நாடுகளிடையான முத்தரப்பு கடப்பு ஒப்பந்தம் ( Trilateral Transit Agreement) 2016-ம் ஆண்டு மே மாதம் -24-ம் திகதி கைச்சாத்திட்டமை பாக்கிஸ்த்தானியருக்குப் பேரிடியாகவும் அமைந்திருந்தத்து. சீனாவும் இந்தியா MTCRஅமைப்பில் இணைவதை விரும்பாத போதிலும் கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லை.
அடுத்த இலக்கு
இந்தியாவின் அடுத்த இலக்கு அணுவலு விநியோககர்கள் குழுவில் - Nuclear Suppliers Group (NSG) இணைவதாக இருக்கும். அதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. MTCRஅமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் Nuclear Suppliers Group (NSG) அமைப்பிலும் உறுப்பினர்களாக இருக்கின்றன. இதனால் NSG அமைப்பில் இணைந்து கொள்வது இந்தியாவிற்கு இலகுவாக இருக்கும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மெக்சிக்கோ, சுவிஸ் போன்ற நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா NSG அமைப்பில் இணைவதற்கு எதிராக சீனா கடும் பரப்புரை செய்கின்றது, நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென் ஆபிரிக்கா, ஒஸ்ரியா ஆகிய நாடுகளும் எதிர்ப்பதாக பாக்கிஸ்த்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டில் இருந்து NSG அமைப்பின் விதிகளில் இருந்து இந்தியாவிற்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டன. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருக்கும் NSG அமைப்பின் கூட்டத்தில் இந்தியாவை அனுமதிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி ஏற்கனவே NSG அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இந்தியாவை அனுமதிப்பதை எதிர்க்க வேண்டாம் எனக் கடித மூலம் கேட்டுள்ளார். NSG அமைப்பில் இந்தியாவை இணைத்தால் பாக்கிஸ்த்தானையும் இணைக்க வேண்டும் என சீனா அடம்பிடிக்கின்றது. ஆனால் அணுப்படைகலன்கள் பரவலாக்குதல் தொடர்பாக பாக்கிஸ்த்தானின் செயற்பதிவும் (track record) இந்தியாவின் செயற்பதிவும் வேறுபட்டவை. அணுக்குண்டு உற்பத்தித் தொழில்நுட்பம் பாக்கிஸ்த்தானிடமிருந்து ஈரானிற்கும் வட கொரியாவிற்கும் கைமாறியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இந்தியா தனது தொழில்நுட்பத்தை எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யவில்லை.
அடுத்த ஏவுகணை
இந்தியாவின் பிரம்மோஸ் திட்டத்தின் தலைவர் சிவதாணு பிள்ளை புராணங்களில் உள்ள அஸ்த்திரங்களைப் போலவே எமது ஏவுகணைகள் அமையும். திருமாலின் கையில் இருக்கும் சுதர்சனாம் என்னும் பெயர் கொண்ட சக்கரத்தைப் போன்று எதிரி இலக்கைத் தாக்கி விட்டு மீண்டும் எமது கையில் வந்து சேரும் ஏவுகணைகளையும் உருவாக்கவுள்ளோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். கடவுள்களின் கட்டிட அமைப்பாளரான விஸ்வகர்மா சூரியனின் துகள்களில் இருந்து சிவபெருமானுக்கு திரிசூலமும், திருமாலுக்குச் சக்கரமும், தேவர்களுக்கு புட்பகவிமானமும் அமைத்தார் எனக் கதைகள் சொல்கின்றன. சுதர்சன சக்கரத்தில் ஒரு கோடி கூர்கள் இருக்கின்றன. ஆனால் சிவபுராணத்தின் படி திருமாலுக்கு சிவபெருமான் சக்கரத்தை வழங்கினார்.
அமெரிக்கா ஏன் இந்தியாவை MTCRஇல் அனுமதித்தது?
இந்தியாவிற்கான அமெரிக்காவின் படைக்கல விற்பனை இனி அதிகரிக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியின்றி இந்தியாவால் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்த முடியும். அதற்கு துணையாக இரசியா இருக்கின்றது. இது இரசிய இந்திய உறவை நெருக்கமாக்குவதுடன் இரசியாவின் படைக்கல விற்பனையை அதிகரிக்கும். இந்தியாவை MTCR அமைப்பின் உறுப்பினராக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பிடிக்காத நாடுகளிற்கு இந்தியா ஏவுகணைகளை விற்பனை செய்வதைத் தடுக்கலாம். மன்மோகன் சிங் - சோனியா ஆட்சியில் இந்தியாவிற்கு அணு வலு உற்பத்தித் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய அமெரிக்கா கடும் முயற்ச்சி எடுத்தது. அதை நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி கடுமையாக எதிர்த்தது. இனி அந்த விற்பனை நடக்கப் போகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடியாது எனத் தடைவிதிக்கப்பட்ட நரேந்திர மோடியை அமெரிக்க நாடாளமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்ற வைத்ததும், அதற்குப் பலத்தை கைதட்டல்கள் கொடுத்ததும், அவருக்குப் பிடித்த ஷெல்ஃபியை பல நாடாளமன்ற உறுப்பினர்கள் அவருடன் நின்று எடுத்தது எல்லாம் ஒரு திட்டமிட்ட செயலா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment