Monday, 11 April 2016

பனாமா பத்திரக் கசிவும் உலக அரசியலும்

விக்கிலீக்ஸினதும் எட்வேர்ட் ஸ்நோடனினதும் இரகசிய அம்பலமாக்குதல்க்ளை விஞ்சும் அளவிற்கு அளவிற்கு இரகசியத் தகவல்களை பனாமாவில் செயற்படும் மொஸ்ஸாக் பொன்சேக்கா நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. பனாமா நாடு உட்படப் பல வருமானவரிப் புகலிடங்களில் இரகசியமாக தமது நிதிகளை மறைத்து வைத்திருப்பவர்கள் பற்றிய தகவலகளை அது அம்பலப் படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறையினர், சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் எனப் பலதரப் பட்டவர்கள் சிக்கலில் சிக்க வைக்கப் பட்டுள்ளனர். 78 நாடுகளைச் சேர்ந்த அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியம் (International Consortium of Investigative Journalists) இந்த இரகசியங்களை வெளிக் கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தது.  7.6 ரில்லியன் அல்லது 7.6 இலட்சம் கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் வருமான வரிப்புகலிடங்களில் ஒளித்து வைக்கப் பட்டுள்ளன. சில தகவல்களின்படி 24 முதல் 36 ரில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் வருமானவரிப் புகலிடங்களில் ஒளித்து வைக்கப் பட்டுள்ளன.

பெயரால் அதிருப்த்தி
பனாமாப் பத்திரக் கசிவு என்னும் பெயரால் பனாமா அரசு  அதிருப்தியடைந்துள்ளது. இது பனாமாவின் கதை அல்ல; பனாமா இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே என்றார் பனாமாவின் துணை நிதியமைச்சர். பனாமா அரசு தனது நாட்டில் செயற்படும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை என பல நாட்டு அரசுகள் ஏற்கனவே தமது ஆட்சேபனையைப் பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் பனாமாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைக் கொண்டுவரப்படும் எனவும் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தது. பனாமாவில் ஒரு நிறுவனத்தைப் (company or corporation) பதிவு செய்வது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலிவானதாகும். பனாமாவில் இருக்கும் மொஸ்ஸா பொன்சேக்கா போன்ற சட்டவாளர் அமைப்புக்கள் பனாமாவில் நிறுவனங்களைப் (company or corporation) பதிவு செய்து அதற்கு முகவரி, தபாற்பெட்டி இலக்கம், பெயரளவு இயக்குனர்கள், ஆகியவற்றை வழங்குவதுடன் சொத்துக்களையும் வாங்கிக் கொடுக்கும்.

ஜேர்மனிய ஊடகம்

பனாமாப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்ட ஜேர்மனி ஊடகம் அப்பத்திரங்கள் எந்த நாட்டு அரச வருமானவரித் துறைக்கும் வழங்கப்படமாட்டாது என்றும் எல்லாப் பத்திரங்களும் பகிரங்கப் படுத்தப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. ஐநூற்றுக்கு மேற்பட்ட பெரு வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வருமானவரிப் புகலிடங்களில் முதலீடு செய்வதற்கு ஆலோசனையும் உதவியும் வழங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்கா உலகில் வேகமாக வளர்ந்து வரும் வருமானவரிப் புகலிடமாகும். எந்த வித மோசமான பொருளாதாரச் சூழலிலும் இலண்டனில் வீடுகளின் விலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு இந்த வருமானவரிப் புகலிட முதலீடுகளே காரணம்.

வருமானவரிப் புகலிடம்
பனாமா என்றால் புகையிலையும் கால்வாயும் தான் எம் நினைவிற்கு வரும். அது வருமானவரிப் புகலிடமாக இருப்பது பலருக்குத் தெரியாது. பலருக்கு வருமானவரிப் புகலிடம் என்றால் என்னவென்று கூடப் பலருக்குத் தெரியாது. ஒரு நாட்டிலோ அல்லது ஒரு நாட்டின் ஒரு பகுதியிலோ வருமானவரி குறைவானதாகவும் இரகசியம் பேணும் சட்டங்களும் இருந்தால் அது வருமானவரிப் புகலிடமாகும். அவை மட்டும் போதாது அந்த நாட்டில் ஒரு நீண்டகால அடிப்படையில் அரசியல் உறுதிப்பாடு இருப்பதும் நிதித் துறையில் அரச தலையீடு இல்லாமல் இருப்பதும் அவசியமாகும். பனாமாவில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் (offshore companies ) தமது பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு வருமானவரி, விற்பனை வரி போன்றவை அரசுக்குச் செலுத்தத் தேவையில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர் கொடுக்கத் தேவையில்லை, தங்கள் நடவடிக்கைகள் பற்றிப் பதிவுகள் வைத்திருக்க வெண்டும் என்ற அரச கட்டுப்பாடும் இல்லை. அவர்களுடைய பதிவுகளை வெளிநாட்டு வருமான வரித் துறையினருக்கு வெளிவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை. உலக வெளிப்படைத் தன்மை உடன்படிக்கையில் பனாமா கையொப்பமிடாத படியால் அது மற்ற நாடுகளுக்கு தனது நாட்டில் முதலீடு செய்பவர்களின் நிதி நிலைமை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லை.  பனாமாவின் வாங்கிகள் தகவல்களை வெளியிட்டால் அது ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தண்டப் பணத்தை பனாமிய அரசுக்குச் செலுத்த வேண்டும். பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்ப முயற்ச்சிப்பவர்களும் ஊழல் மூலம் பெரும் நிதி பெற்றவர்களும் வரி ஏய்ப்புச் செய்பவர்களும் விவாக இரத்துக் கோரும் மனைவியிடமிருந்து சொத்தை மறைப்பவர்களும், சட்ட விரோத நிதியை (அதில் பெரும்பாலானவை போதைப் பொருள் விற்பனையால் பெற்றவையாக இருக்கும்) மாற்றீடு செய்ய அல்லது முதலீடு செய்ய முயல்பவர்களும் வருமானவரிப் புகலிடத்தைப் பெரிதும் விரும்புகின்றார்கள். பனாமா உலகின் மிகப் பழமையான வருமானவரிப் புகலிடமாகும். 1927-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் Wall Street வங்கிகள் பனாமாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் வரி தவிர்ப்பிற்காக தம்மைப் பதிவு செய்யும் முறைமையையும் சட்டங்களயையும் உருவாக்குவதற்க்கு உதவி செய்தன. 1970-ம் ஆண்டு பனாமா அரசு மிகவும் இறுக்கமான இரகசியக் காப்புச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதனால் உலகில் நிதி தொடர்பான இரகசியம் பேணும் நாடுகளின் பட்டியலில் பனாமா 11-ம் இடத்தில் இருக்கின்றது. இப்பட்டியலில் சுவிஸ் முதலாம், இடம், லக்சம்பேர்க் முதலாம் இடம், ஹொங் கொங் மூன்றாம் இடம், கயம் தீவுகள் நான்காம் இடம், சிங்கப்பூர் ஐந்தாம் இடம், ஐக்கிய அமெரிக்காஆறவது இடமும், லெபனான் ஏழாவது இடமும் ஜேர்மனி எட்டாம் இடமும் ஜேர்சி ஒன்பதாம் இடமும், ஜப்பான் பத்தாவது இடமும் பெற்றுள்ளன.  சர்வாதிகாரி மானுவேல் நொரியேகாவின் ஆட்சியில் உலகின் பெரும் மோசடிக்காரர்களின் சொர்க்கமாக பனாமா உருவானது.

பனாமாவும் கப்பல்களும்
1919-ம் ஆண்டில் இருந்தே பனாமாவில் பல நிறுவனங்களும் தனி நபர்களும் தமது கப்பல்களைப் பதிவு செய்யும் முறை உருவாக்கப்பட்டது. பனாமாக் கொடியுடன் உலகக் கடலெங்கும் வலம் வரும் கப்பல்களால் கிடைக்கும் வருமானத்தின் மீதான வரி ஏய்ப்பிற்கு வழிவகுக்கப் பட்டது. பனாமாவில் பதிவு செய்யப் பட்ட கப்பல்களின் தொகையான 8600 ஐக்கிய அமெரிக்காவிலும் (3400கப்பல்கள்) சீனாவிலும் (3700 கப்பல்கள்)பதிவு செய்யப்பட்ட மொத்தக் கப்பல்களின் தொகைக்களிலும் அதிகமாகும்.  ஆரம்பத்தில் அமெரிக்கக் கப்பல்களின் பயணம் செய்பவர்களுக்கு மது விற்ப்பனை செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது. இத் தடையில் இருந்து தப்ப பனாமாவில் அமெரிக்கக் கப்பல் முதலாளிகள் தமது கப்பல்களைப் பதிவு செய்ய 1922-ம் ஆண்டு ஆரம்பித்தனர். 30 இலட்சம் மக்களைக் கொண்ட பனாமாவிற்கு இந்தக் கப்பல் பதிவுகள் மூலம் ஆண்டு ஒன்றிற்கு அரை பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கின்றது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களுக்கு பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் குறைவு எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இதனால் பனாமாவில் பதிவு செய்யப் பட்ட கப்பல்கள் அதிக அளவு விபத்துக்கு உள்ளாகின்றன. பனாமாவில் ஒரு நாளில் ஒரு கப்பலைப் பதிவு செய்ய முடியும்.

வருமானவரிப் புகலிடங்களின் செயற்பாடு
மிகவும் சட்ட பூர்வமானதாகவும் நியாயமானதாகவும் ஒரு நாடோ அல்லது ஒரு நாட்டின் ஒரு புகுதியோ வருமானவரிப் புகலிடமாக இருக்க முடியும். இருப்பதும் உண்டு. உதாரணத்திற்கு கிரேப்ஸ் என்னும் நிறுவனம் அமெரிக்காவில் கைப்பேசிகளை நூறு டொலர்களுக்கு உற்பத்தி செய்து அவற்றை உலகச் சந்தையில் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்தால் கிடைக்கும் நூறு டொலர் இலாபத்திற்கு அமெரிக்காவில் வரி கட்ட வேண்டும். மாறாக அந்த கைப்பேசிகளை வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்துள்ள கிரேப்ஸ் சொந்தமான இன்னொரு நிறுவனத்திற்கு 101டொலர்களுக்கு விற்று இலாபமாகக் கிடைக்கும் ஒரு டொலருக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். பின்னர் வருமான வரிப் புகலிட நாட்டில் இருந்து உலகெங்கும் இரு நூறு டொலர்களுக்கு விற்பனை செய்து கிடைக்கும் 99 டொலர் இலாபத்திற்கு வருமானவரி கட்டாமலோ அல்லது அமெரிக்காவிலும் பார்க்க மிகக் குறைந்த வருமான வரியையோ கட்டலாம். இவை சட்டபூர்வமான வர்த்தகமாகும். ஆனால் அமெரிக்கா இப்படி ஒரு வருமானவரிப் புகலிட நாடு இருப்பதை விரும்பாது. அது அமெரிக்காவின் வருமான வரி மூலம் திரட்டும் நிதியைக் குறைக்கின்றது. ஆனால் நடைமுறையில் ஊழல் செய்வோர்க்கும் சட்ட விரோதமாகப் பணம் சேர்ப்போர்க்கும் தஞ்சமடையும் இடமாகப் பல வருமானவரிப் புகலிடங்கள் செயற்படுகின்றன. வெளி நாட்டு நிறுவனம் ஒன்று ஒரு வருமானவரிப் புகலிட நாட்டில் பதிவு செய்யும் நிறுவனத்தை shell company என அழைப்பர். இது வர்த்தக நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாமல் நிதிப் பரிமாற்றங்கள் செய்வதற்கும் அல்லது எதிர்கால திருகுதாள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வைத்திருக்கப்படும். வருமானவரிப் புகலிடங்களிற்குப் போகும் நிதி பின்னர் உலகின் முன்னணி நிதிச் சந்தைகளான New York, London, Zurich, Geneva, Frankfurt, and,  Singapore, Hong Kong, and Dubai ஆகியவற்றைப் போய்ச் சேரும். பல வருமானவரிப் புகலிடங்களை உருவாக்கிய சிற்பிகள் HSBC, UBS, Credit Suisse, Citigroup, Bank of America, RBS, Barclays, Lloyds, Standard Chartered, JPMorgan Chase, Wells Fargo, Santander, Credit Agricole, ING, Deutsche Bank, BNP Paribas, Morgan Stanley, and Goldman Sachs ஆகிய முன்னணி வங்கிகள் ஆகும். 1970களில் இருந்து இந்த முன்னணி வங்கிகள் தமது பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களின் வருமானங்களிற்கான வரிகளில் இருந்து தப்ப உதவி செய்து பெரும் வருவாயை ஈட்டியுள்ளன. வெறும் நாணயங்களை மட்டுமல்ல தங்கம் போன்ற உலோகங்கள், ஓவியங்கள், பழைய வாகனங்கள், புகைப்படங்கள், உல்லாசப் படகுகள், எண்ணெய்க் கிணறுகள் போன்றவற்றின் வர்த்தக மூலம் வருமானங்கள்  மறைக்கப்படுவதும் உண்டு.

சீனாவும் இந்தியாவும்
சீனாவில் இருந்து ஒருவர் ஐம்பதாயிரம் டொலர்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து இரண்டரை இலட்சம் டொலர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து பெருந்தொகைப் பணம் வருமானவரிப் புகலிடங்களிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் கறுப்புப் பணம் பெரும் பங்கு வகிக்கின்றது.

அமெரிக்கத் தேர்தலில் தாக்கம்
பனாமா பத்திரக் கசிவு அமெரிக்க அதிபர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அமெரிக்க முதலாளித்துவமும் உலகமயமாதலும் அமெரிக்க மக்கள் தொகையின் ஒரு விழுக்காட்டினருக்கு மட்டுமே நன்மை பயக்கின்றது என்பது இப்போது உறுதி செய்யப்படுகின்றது. குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிவாய்பையும் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனின் வெற்றி வாய்ப்பைக் குறைத்து அவரை எதிர்த்துப் போட்டியிடும் Bernard  Sanders இன் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. Trump, ஆகிய இருவரும் அமெரிக்காவின் முதலாளித்துவத்தை வேறு வேறு விதமாகக் கடுமையாக விமர்சிப்பவர்கள்.

பினாமிகள்
வருமானவரிப் புகலிடத்தில் அரசியல்வாதிகள் முதலீடு செய்வதற்கு நம்பிக்கைக்குரிய நண்பர் அல்லது உறவினர் தேவை. அதாவது பினாமி தேவை. ஒரு அரசியல்வாதி தன் நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை தனது பினாமியின் பெயரில் ஒரு இரகசியம் பேணும் வருமானவரிப் புகலிட நாட்டில் முதலீடு செய்யலாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்கள் வருமான வரிப் புகலிட நாடுகளில் உள்ள தமது பினாமி நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து பின்னர் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அதிகரித்த விலைக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதனால் அந்தப் பினாமி நிறுவனம் பெரும் நிதியைத் திரட்டும். பின்னர் இந்த நிதி வெளிநாட்டு முதலீடு என்னும் முகமூடியுடன் இந்தியாவிற்கு வரும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு நெருக்கமான ரமி மக்லவ் என்பவரது நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதை அமெரிக்கா தடை செய்திருந்தது. ஆனால் ரமி மக்ல வருமானவரிப் புகலிட நாடுகளில் தனது பெயரில் நிறுவனங்களைப் பதிவு செய்து தனது வர்த்தகத்தைத் தொடர்வது பனாமா பத்திரக் கசிவால் அம்பலமாகியுள்ளது.

பணச் சலவையும் வருமானவரிப் புகலிடமும்.
உலகில் அதிக அளவு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் பதிவு செய்த பிராந்தியமாக ஹொங் கொங் இருக்கின்றது. பிரித்தானியாவின் முடிக்குரிய பிராந்தியாமான வேர்ஜின் தீவுகள் இரண்டாம் இடத்திலும் பனாமா நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. பனாமாவில் தற்போது 350,00இற்கும் அதிகமானா நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  பனாமாவில் சட்ட விரோத நிதிகளை சட்டபூர்வ நிதியாக மாற்றுவதை பணச் சலவை (money laundering) செய்தல் என்பர். பனாமா புவியியல் ரீதியாக உலகின் பெருமளவு போதைப் பொருள் உற்பத்தி செய்யும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கும் உலகில் முதலீட்டுக்குப் பாதுகாப்பான இடமான ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கின்றது. பனாமா ஊடகவியலாளர் ஒருவர் பணச் சலவை என்று வரும் போது எமது நாட்டில் நன்றாக நனைத்து துவைத்துக் காய வைத்துக் கொடுப்போம் என்றார். சிறந்த வருமானவரிப் புகலிடமும் பணச்சலவை செய்யும் இடமுமான பனாமா நிதி மோசடியாளர்களின் சொர்க்கமாகும். பனாமாவில் வருமான வரி தொடர்பாகவும் சட்டம் தொடர்பாகவும் வல்லுனர்களைக் கொண்ட பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனைகளும் உதவிகளும் செய்து பிழைப்பு நடத்துகின்றன. அவற்றில் ஒன்றுதான் மொஸ்ஸாக் பொன்சேக்காவினுடையது.  அதுதான் இப்போது பெருமளவு இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது.  11.5 மில்லியன் பத்திரங்கள், 200,000இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான தகவல்கள் மொஸ்ஸாக் பொன்சேக்காவினால் வெளியிடப்பட்டுள்ளன. 1977-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டின் இறுதிவரை இத்தகவல்கள் செல்கின்றன. இதில் இடைத் தரகர்களாகச் செயற்பட்டா 14,000  சட்டவாளர்கள் நிறுவனங்களினதும் கணக்காளர்களின் நிறுவனங்களினதும் பெயர்களும் அம்பலமாகியுள்ளன. பணச்சலவைக்கு எதிரான பன்னாட்டுக் கூட்டமைப்பான நிதி நடவடிக்கைப் பணிப் படை { Financial Action Task Force (FATF)} பனாமா நாட்டை தனது சாம்பல் நிறப்பட்டியலில் சேர்த்துள்ளது. இலகுவாக வர்த்தக நிறுவனங்களைப் பதிவு செய்தல், நடவடிக்கைப் பதிவேடுகள் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் இன்மை போன்றவை பனாமாவை இந்தப் பட்டியலில் வைத்திருக்கின்றது. அனாமதேய சமூக அமைப்பு (anonymous society) என வகைப்படுத்தி பனாமாவில் பெயர்கள் வெளிவிடாமல் நிறுவனங்களைப் பதிவு செய்யலாம். அப்படிப் பதிவு செய்யப் பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், சொத்துக்கள் பற்றிய விபரம் யாருக்கும் வெளிவிடப்படமாட்டாது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் (Corporations) தமது கணக்குகளை சட்டப்படி ஆய்வு செய்யத் தேவையில்லை. வாருமானவரித் துறைக்கு தமது வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பன்னாட்டு வர்த்தக நடவடிக்கைக்களுக்கு பனாமாவில் வரி கட்டத் தேவையில்லை.

அம்பலத்திற்கு வந்தோர்
பனாமாவின் மொஸ்ஸோ பொன்சேக்காவின் பத்திரக் கசிவினால் இதுவரை அம்பலத்துக்கு வந்த பெயர்கள் ஐஸ்லாந்தில் பதவியில் இருந்து விலகிய தலைமை அமைச்சர் சிக்மண்டுர் டேவிட் குன்லக்சன், (Sigmundur Gunnlaugsson )உலக காற்பந்தாட்டக் கழகத்தின் தலைவர் ஜியன்னி இன்பன்ரினோ,  உக்ரேனின் சொக்லட் அரசர் பெற்றோ பொரசெங்கோ, பிரித்தானியத் தலைமை அமைச்சரின் (காலம் சென்ற) தந்தை இயன் கமரூன்,பாக்கிஸ்த்தானியத் தலைமை அமைச்சர் Nawaz Sharif எச் எஸ் பி சி உட்படப் பல முன்னணி வங்கிகள், அமெரிக்காவின் தடையையும் மீறி சிரிய அதிபர் அசத்திற்கு எரிபொருள் வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள், சீன அதிபரின் மனைவியின் உடன்பிறப்பு உட்படப் பல முன்னணித் தலைகள், காற்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி, இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய், இந்தியத் தலைமை அமைச்சருக்கு நெருக்கமான செல்வந்தக் குடும்பமான அதானி குடும்பத்தில் ஒருவர், ஹொங் கொங் நடிகர் ஜக்கி சான். மேலும் கிளறப்படும் போது இலங்கை, இந்தியா உட்படப் பல நாடுகளின் அரசியல்வாதிகளின்  பெயர்களும் வெளிவரும். இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மொஸ்ஸோ பொன்சேக்காவின் அம்பலப் படுத்தல் தொடர்பாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் விசாரணை என்ற சொல்லுக்கு இழுத்தடித்தல் என்ற பொருள் உண்டு.  சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தினது பெயரும் உண்டு. உலகின் முன்னணி செல்வந்தரான இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனின் பெயர் இல்லை. ஆனால் அவரது நெருங்கிய நண்பரும் அவருக்கு அவரது முன்னாள் மனைவியை அறிமுகச் செய்து வைத்தவரும் அவரது மகனின் ஞானத் தந்தையுமான ஒரு பெரும் செல்வந்தரின் பெயர் வெளிவந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் கறுப்புப் பட்டியலில் இடப்பட்ட 33 நிறுவனங்கள் தொடர்பான தகவல்களும் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த 33 நிறுவனங்களும் அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரான், வட கொரியா, சிரியா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் புரிந்த நிறுவனங்களாகும்.

சினமடைந்த சீனா
ஊழல் ஒழிப்பிற்கு எதிராகப் பெரும் குரல் கொடுத்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மைத்துனரின் பெயரும் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன  வெளியுறவுத் துறை அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என அதை விபரித்தது. ஜி ஜின்பிங் பதவிக்கு வர முன்னர் சீனப் பொதுவுடமைக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் தாம் ஊழல் மூலம் சம்பாதித்த நிதியை பெருமளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருந்தனர். சீனாவின் முன்னாள் தலைமை அமைச்சரின் சொத்து விபரங்களை வெளிவிட்ட அமெரிக்க ஊடகமான நியூயோர்க் ரைம்ஸ்ஸின் இணையத்தளம் இணைய வெளி ஊடுருவிகளால் முடக்கப்பட்டடது. அது சீனாவின் பழிவாங்கல் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இப்போது பனாமா பத்திரங்களின் அம்பலப் படுத்தல் தொடர்பான  எல்லாத் தகவல்களும் சீன இணைய வெளியில் தடைசெய்யப் பட்டுள்ளன. சீனத் தேடு பொறிகள் பனாமா என்ற சொல்லுடைய எல்லாத் தகவல்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றது. சீனப் "பொதுவுடமைக்" கட்சியின் உயர்மட்டக் குழுவில்லும் ஆட்சியிலும் உள்ள எட்டுப் பேரின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அக்காவினதும் மைத்துனரினதும் பெயரில் பிரித்தானிய வேர்ஜின் தீவில் மூன்று நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளான. அவற்றின் பெறுமதி பல மில்லியன் டொலர்களாகும். பொதுவாக சீனாவின் "பொதுவுடமைக்" கட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் மிகவும் வெற்றீகரமான வியாபாரிகளாகும். "பொதுவுடமைக்" கட்சி அதன் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வதைத் தடை செய்துள்ளது.

தன்னார்வத் தொண்டு?
அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியம் (International Consortium of Investigative Journalists) என்னும் அமைப்பு மெஸ்ஸோ பொன்சேக்காவிடமிருந்து திரட்டிய தகவல்களை ஜேர்மனிய ஊடகம் ஒன்றிற்குப் பகுதி பகுதியாக அனுப்பியது. ஆனால் அனைத்துலகப் புலனாய்வுச் செய்தியாளர்களின் சேர்ந்தியத்தை உருவாக்கி அதன் பின்னால் நின்று செயற்படுவது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பொதுத்துறை நேர்மைக்கான நிலையம் என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்கா,  தன்னார்வத் தொண்டு அமைப்பு ஆகிய இரண்டு பதங்களையும் சேர்த்துப் பார்த்தால் வருவது அமெரிக்காவின் உளவுச் சதி என்பதாகும். இதனால் பனாமாப் பத்திரப் பகிரங்கத்தின் பின்னால் அமெரிக்க உலக ஆதிக்கச் சதி இருக்கின்றதா என்ற ஐயம் எழுவது இயல்பே. 2008-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார்  நெருக்கடியின் பின்னர் பல மேற்கு நாட்டு அரசுகள் வரி ஏய்ப்புச் செய்வோரால் தமது வரி வருமானங்களை இழந்து கொண்டிருக்கின்றன. மேலும் அண்மைக்காலங்களாக உலக அரங்கில் அமெரிக்காவிற்குத் தலை குனிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் ஆகியோருக்கு வைத்த பொறியில் பலரும் மாட்டிக் கொண்டனரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...