Saturday, 29 August 2015

வட துருவத்தில் ஓர் ஆதிக்கப் பனிப்போர்

பூமியின் வட பகுதியில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகை வரையுள்ள வட்டப் பகுதியானது ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படுகிறது. ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1 மில்லியன் சதுரமைல் பிரதேசம் ஆர்க்டிக் கண்டம் எனப்படும். உதவாத பனிப்பாறைகளைக் கொண்ட பிராந்தியம் எனகப் பல ஆண்டுகளாக கருதப்பட்டு வந்த ஆர்க்டிக் கண்டம் தற்போது உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
முன்னை நட்ட கொடி
1909-ம் ஆண்டு ஆர்க்டிக் கண்டத்துக்கு முதலில் சென்ற அமெரிக்கரான ரொபேர்ட் பியரி வடதுருவம் எனப்படும் பூமியின் வட முனையில் அமெரிக்கக் கொடியை நாட்டி இந்தப் பிராந்தியம் அமெரிக்காவினுடையது எனப் பிரகடனப் படுத்தினார். தற்போது நோர்டிக் நாடுகள் என அழைக்கபடும் டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளும் இரசியாவும், கனடாவும் ஐக்கிய அமெரிக்க்காவும் இந்த ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செய்யப் போட்டி போடுகின்றன.
ஆடாத ஆர்க்டிக் சபை
பூமியின் தென் துருவத்தை ஒட்டிய அண்டார்டிக்கா கண்டத்தை ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் சில நாடுகள் ஆய்வுகளை அங்கு மேற்கொள்கின்றன. ஆர்ஜெண்டீனா, ஒஸ்ரேலியா, பெல்ஜியம், சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, நோர்வே, தென் ஆபிரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் அண்டார்டிக் கண்டத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட விஞ்ஞான ஆய்வு மையங்களை நிறுவி ஆராய்ச்சிகள் செய்கின்றன. ஆனால் ஆர்க்டிக் கண்டம் தொடர்பாக ஒரு காத்திரமான உடன்படிக்கை ஏதும் செய்யப்படவில்லை. கனடா, டென்மார், ஃபின்லாந்து, ஐஃச்லாந்து, நோர்வே, இரசியாசுவீடன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூடி ஆர்க்டிக் சபை என ஒன்றை நிறுவியுள்ளன. இவை ஆர்க்டிக்கின் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் அங்கு சிக்குப்பட்டவர்களை மீட்பது தொடர்பாகவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தச் சபை ஒரு அதிகாரமற்ற சபையாகும். ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமைக்கு என ஒரு பன்னாட்டுச் சட்டமோ அல்லது உடன்படிக்கையோ இல்லை. இந்த ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஆர்க்டிக் சபை அமெரிக்காவின் தலைமையில் கீழ் இயங்கவிருக்கின்றது. உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து ஆர்க்டிக் சபையின் மற்ற நாடுகள் இரசியாவுடன் கடுமையாக முரண்படுகின்றன.
இரசிய அமெரிக்கப் போட்டி
ஐக்கிய நாடுகள் சபையின் கடற்சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி ஆர்க்டிக் பிராந்தியம் யாருக்கும் உரித்தானது அல்ல. ஆனால் ஆர்க்டிக் கண்டத்துடன் எல்லையைக் கொண்டுள்ள நாடுகளுக்கு 200 கடல்மைல்கள் தூரம் வரை பொருளாதார உரிமம் உண்டு. கடற்படுக்கைக்கும் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாது. அது ஐக்கிய நாடுகளின் கடற்படுக்கைச் சட்டத்திற்கான உடன்படிக்கையின் படி உலக மக்களுக்கு சொந்தமானது. இதனால் ஆர்க்டிக் கண்டத்தின் கடற்படுக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடற்படுக்கை அதிகாரசபைக்கு சொந்தமானதாகின்றது. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2-ம் திகதி ஆர்க்டிக்கா 2007 என்னும் பெயரில் இரசியா ஆர்க்டிக் கடற்படுக்கைகு சிறு நீர்மூழ்கிக்கப்பல்களை அனுப்பி அதன் இயந்திரக் கரங்கள் மூலம் கடற்படுக்கையில் தனது கொடியை நாட்டி அங்கிருந்து மணலையும் நீரையும் ஆய்வுகளுக்காக அள்ளிக் கொண்டது. ஆய்வில் கலந்து கொண்ட நிபுணர் ஆதர் சிலிங்கரோவ் ஆர்க்டிக் கண்டம் என்றும் இரசியாவிற்குச் சொந்தமானது என்றார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது  Coast Guard icebreaker, the USCGC Healy என்னும் கப்பலை ஆர்க்டிக் கண்டத்திற்கு அனுப்பியது.
எல்லாமே எண்ணெய்க்குத்தான்.
ஆர்க்டிக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்து பல நாடுகளும் முயல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அங்கு இருக்கும் பெருமளவு எரிபொருள் வளம். இரண்டாவது அங்கு பனிப்பாறைகள் தொடர்ந்து உருகிக் கொண்டிருப்பதால் அதனூடாக கப்பற் போக்கு வரத்துச் செய்ய வாய்ப்புண்டு. இதனால் வட அமெரிக்கா, வட ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடையான வர்த்தகம் இலகுவாகவும் மலிவாகவும்  நடக்க வாய்ப்புண்டு. ஆர்க்டிக் கண்டத்தினூடாக ஐந்து வேறு வேறு கடற்ப்பாதைகள் இனம் காணப்பட்டுள்ளன. உலகின் கைத்தொழில் உற்பத்தியில் 80 விழுக்காடு உலகின் வட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் ஆர்க்டிக்கில் பெரும் கடலுணவுகளும் கனிம வளங்களும் இருக்கின்றன. ஆனால் ஆர்க்டிக்கில் எண்ணெய் அகழ்வு செய்வது செலவு மிகுந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சியடையும் நிலையில் அங்கு எண்ணெய் அகழ்வது இலாபகரமானது அல்ல. ஆனால் காலப்போக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது அங்குள்ள எரிபொருள் மிகவும் தேவையானதாக மாறும்.  அத்துடன் சூழல் வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருக எரிபொருள் அகழ்வது மலிவானதாக மாறலாம். உலகின் பாவனைக்கு உட்படுத்தப்படாத எண்ணெய் வள இருப்பின் 13 விழுக்காடும், எரிவாயு இருப்பின் 30 விழுக்காடும் ஆர்க்டிக் கண்டத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றது. யூரேனியம், இரும்பு, செப்பு, நிக்கல் ஆகிய உலோகங்களும் ஆர்க்டிக்கில் இருக்கின்றன. நெதர்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி எரிபொருள் நிறுவனமான றோஜல் டச் ஷெல் ஆர்க்டிக் கண்டத்தில் எண்ணெய் அகழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆளில்லாக் கண்டத்தில் ஆளில்லாப் போர்விமானங்கள்.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசியா 80,000படையினரையும், 220 போர் விமானங்களையும் 41 கப்பல்களையும் 15 நீர்மூழ்கிக்கப்பல்களையும் கொண்டு ஒரு பாரிய போர் ஒத்திகையை ஆர்க்டிக் பிராந்தியத்தில் செய்தது. 2018-ம் ஆண்டளவில் ஆர்க்டிக் கண்டத்தில் ஒரு தன்னிறைவான படைத்தளம் ஒன்றை அமைக்கும் திட்டம் இரசியாவிடம் உண்டு. நோர்வேயும் "Operation Cold Response"என்னும் குறியீட்டுப் பெயருடன் பல படைத்துறைப் பயிற்ச்சிகளில் நேட்டோப் படைகளுடன் இணைந்து செய்து வருகின்றது. இரசியாவை ஒட்டிய ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள எரிபொருள் வளங்களை பெறுவதற்கு அது ஆண்டு தோறும் 100பில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்ய வேண்டும். அமெரிக்காவின் செய்மதிப்படங்களில் இருந்து இரசியா தனது ஓர்லன் - 10 என்னும் உத்திசார் ஆளில்லாப் போர்விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் நிறுத்தியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. கனடாவும் தனது ஆளில்லாப் போர் விமானங்களை ஆர்க்டிக் கண்டத்தில் பறப்புகளில் ஈடுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் பி-52 போர்விமானங்கள் 2015 ஏப்ரல் முற்பகுதியில் ஆர்க்டிக் கண்டத்தில் பறக்க வைத்தது. இது பயிற்ச்சி நோக்கங்களுக்காக என வெளியில் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் இரசியாவிற்கு சவால் விடுவதாகும். இந்தப் பயிற்ச்சி நடவடிக்கைக்கு அமெரிக்கா துருவ உறுமல் எனப் பெயரிட்டிருந்தது. ஆர்க்டிக் பிராந்தியத்தை ஒட்டிய தனது நட்பு நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது. ஆர்க்டிக் கண்டத்திற்குப் போட்டி போடும் எட்டு நாடுகளில் இரசியாவைத் தவிர மற்றவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளாகும்.
அடிமாட்டு விலைக்குப் போன அலாஸ்க்கா
ஐக்கிய அமெரிக்காவின் ஆர்க்டிக் கண்டத்தின் மீதான உரிமை கோரல் அதற்குச் சொந்தமான அலாஸ்க்கா நிலப்பரப்பில் இருந்து உருவானது. இரசியாவிற்குச் சொந்தமாக இருந்த அலாஸ்க்கா என்னும் வடதுருவப் பிரதேசத்தை அமெரிக்கா ஐம்பது ஏக்கர் ஒரு டொலர் என்ற விலைப்படி 1867-ம் ஆண்டு வாங்கியது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அலாஸ்க்காவைப் பிரித்தானியப் பேரரசு ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் இரசியா அமெரிக்காவிற்கு மொத்தம் 7.2 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்தது. ஆனால் அலாஸ்க்கா அமெரிக்காவிற்கு ஒரு பொருளாதார ரீதியில் இலாபமளிக்கக் கூடிய ஒன்றாக இதுவரை இருந்ததில்லை. ஆனால் அலாஸ்க்காவிலும் எரிபொருள் வளம் உண்டு. இரசியாவுடன் அமெரிக்கா எல்லையைக் கொண்டுள்ளது என்றால் அது அலாஸ்க்கா பிரதேசத்தில்தான்.  கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததன் பின்னர் இரசியாமீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியர்கள் மத்தியில் அமெரிக்காவிற்கு எதிரான குரோதம் வளரத் தொடங்கியது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற குரல் இரசியாவில் ஒலிக்கத் தொடங்கியது. அலாஸ்க்காவை மீளக் கையளிக்கும் கோரிக்கை 37,000 பேர்களால் கையொப்பம் இடப்பட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டது. "கிறிமியா எங்களுடையது. அலஸ்க்கா அடுத்தது" என்ற பதாகையுடன் பென்குவின் பறவைகள்  பல ஊர்வலம் போவது போல ஒரு படம் கணனியில் இரசியர்களால் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டது. ஆனால் பென்குவின் பறவைகள் ஆர்க்டிக் கண்டத்திலோ அல்லது அலாஸ்க்காவிலோ வாழ்வதில்லை இரசியர்களின் மொக்கை இது என அமெரிக்கர்கள் நையாண்டி செய்தனர். ஆனால் கிறிமியாவை இணைத்ததன் மூலம் ஒரு பெரும் வரலாற்றுத் தவறைச் சீர் செய்த விளடிமீர் புட்டீன் அடுத்த வரலாற்றுத் தவறான அலாஸ்கா விற்பனையையும் சீர் செய்ய வேண்டும் என பல இரசியர்கள் கருதுகின்றார்கள். அலாஸ்க்காவின் முப்பது இரசிய மரபுவழிக் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் உள்ளன. அலாஸ்க்காவின் ஸ்புரூஸ் தீவு இரசியத் திருச்சபைக்குச் சொந்தமானது என்றும் அதை விற்கவோ அல்லது வாங்கவோ யாராலும் முடியாது என்றும் ஒரு இரசிய சரித்திர அறிஞர் வாதிடுகின்றார். இரசியாவின்  மிக் - 31, ரியூ- 95 ஆகிய போர்விமானங்கள் அலாஸ்க்காவை ஒட்டிய வான்பரப்பில் பறப்பது அண்மைக்காலங்களாக அதிகரித்து வருகின்றது. 2014-ம் ஆண்டு பத்துக்கு மேற்பட்ட தடவைகள் அமெரிக்காவின் F-22 போர்விமானங்கள் இரசிய விமானங்களின் அலைவரிசைகளை குழப்பி திருப்பி அனுப்பியுள்ளன. இரசியா தனது போர்விமானங்களை அலாஸ்க்கா எல்லையை ஒட்டிய வான்பரப்பில் பறப்பதன் மூலம் ஆர்க்டிக் மீதான தனது ஆளுமையை உறுதி செய்ய முயல்வதுடன் கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளையும் செய்கின்றது.
சீனாவா கொக்கா
சீனாவும் ஆர்க்டிக் கண்டத்தில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. ஆர்க்டிக் சபையில் 2007-ம் ஆண்டில் இருந்து ஒரு பார்வையாளராக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு ஐஸ்லாந்துடன் சீனா ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்து கொண்டு. ஐஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள ஆர்க்டிக் பிராந்தியத்தில் பனி உடைக்கும் கப்பல்களைச் சேவையில் ஈடுபடுத்தியது. அத்துடன் நோர்வேயின் Spitsbergen தீவில் ஒரு ஆய்வு மையத்தையும் உருவாக்கியுள்ளது. தரைவழிப் பட்டுப்பாதை கடல்வழிப்பட்டுப்பாதை என தனது கொள்வனவுகளுக்கும் விநியோகங்களிற்க்குமான பாதையில் அதிக அக்கறை காட்டும் சீனாவிற்கு ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் குறுகிய ஒரு தூர வழி மிகவும் கவர்ச்சிகரமானதாகும். ஆர்க்டிக்கின் ஊடான பாதையின் நீளம் தற்போது பாவிக்கும் பாதையிலும் பார்க்க 30 விழுக்காடு குறைவானதாகும். ஆர்க்டிக் பிராந்திய ஆய்வுகளிற்காக சீனா அறுபது மில்லியன் டொலர்கள் செலவு செய்கின்றது. இது அமெரிக்கா செய்யும் செலவீனத்திலும் பார்க்க அதிகமானதாகும்.
இந்தியா, சிங்கப்பூர், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளும் கூட ஆர்க்டிக் கண்டத்தில் அகழ்வு செய்வதற்கும் கடற்பயண உரிமத்திலும் அக்கறை காட்டுகின்றன. ஆனால் இரசியா மற்ற நாடுகளிலும் பார்க்க ஆர்க்டிக் கண்டத்தில் முன்னணியில் இருக்கின்றது. அது அங்கு ஏற்கனவே எரிபொருள் அகழ்வைத் தொடங்கிவிட்டது.

Tuesday, 25 August 2015

அரபு நாடுகளின் பெருமையும் சவுதி அரேபியாவின் தலைமையும்

பாக்தாத், கெய்ரோ, டமஸ்கஸ் ஆகியவை வரலாற்றில் பெரும் இடத்தை பிடித்த நகரங்கள். அறிவில் மேன்மை, உலக நாடுகளுடன் வர்த்தகம், படைவலிமை ஆகியவற்றால் அந்த நகரங்களின் ஆட்சியாளர்கள் தமது அரசுகளை உலக வல்லரசுகளாக நிலை நிறுத்தினர். எகிப்த்தின் வரலாற்றுப் பெருமை நிகரில்லாதது. முகம்மது நபி இஸ்லாமிய மார்க்கத்தை உருவாக்கிய பின்னர் கிபி 661ம் ஆண்டு டமஸ்கஸில் நிறுவப்பட்ட உமய்யிட் வம்ச அரசு கிபி 750ம் ஆண்டு வரை பல நாடுகளை ஆளும் பேரரசாக இருந்தது. அதைத் தொடர்ந்து பாக்தாத்தில் உருவான அப்பாஸிட் வம்ச அரசு ஐநூறு ஆண்டுகள் ஒரு பேரரசாக ஆட்சி புரிந்தது. இந்த ஆட்சிக்காலம் அரபுக் கலாச்சாரத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. ஆனால் இன்று சிரியாவும் ஈராக்கும் நாடுகள் என்ற தகுதியை இழக்கும் அளவிற்கு அங்கு உள்நாட்டுப் போர் நடக்கின்றது. எகிப்து தனது பெருமையை இஸ்ரேலுடனான போர்களில் தோல்வியடைந்து தனது பெருமைகளை இழந்து நிற்கின்றது.

அரபுலகம் பின்தங்குமா?
இன்று ஐரோப்பிய நாடுகள் உலகின் முன்னணி நாடுகளாகவும், ஆசிய நாடுகள் எல்லாத் துறையிலும் முன்னேறும் நாடுகளாகவும் மற்ற ஆபிரிக்க நாடுகள் வேகமாக அறிவிலும் பொருளாதாரத்திலும் வளரும் வேளையில் பெருமை மிக்க அரபு நாடுகள் பின் தங்கிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் மோசமான உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சிரியா சிதறுபடுமா என்ற அச்சமும் இருக்கின்றது. ஆசியாவில் மக்களாட்சி முறைமை மேம்பட்டுக் கொண்டிருக்கையில் மற்ற ஆபிரிக்க நாடுகள் மக்களாட்சி முறைமையில் ஆட்சியை சிறப்பாக நடத்தும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் அரபு நாடுகளில் மக்களாட்சி வரும் நிலை அண்மையில் இல்லை. துனிசியா மட்டும் மக்களாட்சியை மிகவும் சிரமப் பட்டு  நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மொரிட்டானியா, மொரொக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, சாட், லெபனான், எகிப்து, சூடான், ஜோர்தான், சிரியா, ஈராக், குவைத், பாஹ்ரேய்ன், கட்டார், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், யேமன் ஆகிய 19 நாடுகள் அரபு நாடுகளாகும். ஈரான், துருக்கி, கிழக்கு ஆபிரிக்கா தென் அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலும் அரபுக்கள் வசிக்கின்றனர். அரபுக்களில் 93 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாகும். அரபு மொழிபேசும் யூத மதத்தினரை அரபுக்கள் என ஒத்துக் கொள்ளப்படுவதில்லை. கிறிஸ்த்த மத்தைத்தழுவிய அரபுக்கள் இப்போதும் அரபுக்களாகவே கருதப்படுகின்றனர்.

ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு
அரபு நாடுகளிடையே ஒரு ஒற்றுமை என்றும் இருந்ததில்லை. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் அரபு நாடுகளை ஒன்று படுத்த முயன்றார். முதற்கட்டமாக அவர் சிரியாவையும் எகிப்தையும் இணைத்தார். ஆனால் அந்த இணைப்பு நீடிக்கவில்லை. அப்போது அரபு நாடுகளில் சிலவற்றில் மன்னர் ஆட்சியும் சிலவற்றில் மன்னர்களைப் பதவியில் இருந்து விலக்கிய படைத் தளபதிகளின் ஆட்சியும் நிலவின. இந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெறுத்தனர். அப்போது எகிப்தின் கமால் நாசர், சிரியாவின் ஹஃபீஸ் அல் அசாத். லிபியாவின் மும்மர் கடாஃபி, ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் ஆகியவர்கள் உலக அரங்கில் தம்மை இஸ்லாமியர்களாக முன்னிறுத்தாமல் அரபுக்களாக முன்னிறுத்தினர். தமது நாடுகளிலும் மத சார்பற்ற ஆட்சியை நடாத்தினர்.

முரண்பாடுகள்
அரபுக்களின் இரு பெரும் புனித நகரங்களையும் தன்னகத்தே கொண்ட சவுதி அரேபியா அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல இஸ்லாமிய உலகத்திற்கே தலைமை தாங்க வேண்டிய ஒரு நாடு.  ஆனால் அது தன்னை அரபு சுனி இஸ்லாமிய நாடாக முன்னிறுத்துவதால் பல பிரச்சனைகளை உருவாக்கும் நாடாக இருக்கின்றது. அரபுக்களைக் கொண்டிராத துருக்கியுடன் அது இன ரீதியில் முரண்படுகின்றது. சியா முஸ்லிம்களைக் கொண்ட ஈரானுடன் அது இனரீதியாகவும் இஸ்லாமிய மதக் கோட்பாட்டு ரீதியாகவும் முரண்படுகின்றது.  இஸ்லாமிய அரசு என்பதைப் பிரகடனப் படுத்தியுள்ள ஐ எஸ் அமைப்பு தனது இஸ்லாமிய அரசில் ஈராக், சிரியா, லெபனான், பலஸ்த்தீனம், ஜோர்தான், துருக்கியின் ஒரு பகுதி போன்றவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது என்கின்றது. அத்துடன் தாம் முழு உலகையும் கைப்பற்றுவோம் என்றும் பாரிஸ், இலண்டன், நியூயோர் நகரங்களின் வீதிகளில் நாம் படுகொலை புரிவோம் என்கின்றது.

இடைவெளியை சவுதி நிரப்புமா?
மற்ற அரபு நாடுகள் பொருளாதாரப் பிரச்சனையாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் மோசமான நிலையில் இருக்கையில் வலுவான நிலையில் இருக்கும் சவுதி அரேபியாவால் அரபு நாடுகளுக்கு தலைமைத்துவம் வகிக்க முடியுமா? ஐக்கிய அமெரிக்காவும் அரபு நாட்டு உறுதி நிலையைப் பேண சவுதி அரேபியாவும் தோள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது. அதன் முதற்படியாக யேமனின் உள்நாட்டுக் குழப்பத்தைத் தீர்க்கும் (தீர்த்துக் கட்டும்) பொறுப்பை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டது. ஐக்கிய அரபுக் குடியரசும் சவுதி அரேபியாவிற்குக் கை கொடுக்கின்றது.  ஐ எஸ் அமைப்பு சவுதி அரேபியாவிற்கு எதிராகவும் தாக்குதல்கள் செய்கின்றது. ஐ எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 431பேர் சவுதியில் கைசெய்யப்பட்டுள்ளனர். சுனி முஸ்லிம்களைக் கொண்ட பல அரபு நாடுகள் தமக்கு இஸ்ரேலிலும் பார்க்க சியா ஈரானாலும் ஹிஸ்புல்லா அமைப்பினாலும்  அதிக ஆபத்து எனக் கருதுகின்றன. அந்த ஆபத்தில் இருந்து சவுதிதான் தம்மைப் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இவை ஈரானை அடக்குவதற்கு இஸ்ரேலுடன் இப்போது  பகிரங்கமாக ஒத்துழைக்கின்றன. தற்போது அரபு நாடுகளில் நிலவும் மோசமான சூழ்நிலை ஒரு புவிசார் அரசியல் மீளமைப்பை வேண்டி நிற்கின்றது. ஆனால் அமெரிக்காவின் ஓத்துழைப்பு சவுதி தலைமை தாங்குவதற்கு அவசியமாகும். ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருங்கிய உறவைப் பேணுவது மட்டுமல்ல ஈரானுடனும் தனது உறவை மேம்படுத்த விரும்புகின்றது.

பணத்தில் படைவலிமை
சவுதி அரேபியா ஒரு வலிமை மிக்க படைத்துறையைக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவிடமிருந்த்து பல புதிய தர படைக்கலன்களை வாங்கிக் குவித்துள்ளது. ஆனால் சவுதியின் படையினருக்கு போர்க்கள அனுபவம் மிகக் குறைவானதே. இந்த அனுபவமின்மை யேமனில் தற்போது வெளிப்படுகின்றது. அமெரிக்காவின் F-15 போர் விமானங்கள், பிரித்தானியாவின் Paveway IV எனப்படும் துல்லியமாகத் தாக்கக் கூடிய வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற படைக்கலன்கள் சவுதி அரேபியப் படைகளின் முக்கிய படைக்கலன்களாகும் 2020-ம் ஆண்டு உலகின் படைத்துறைச் செலவீனப் பட்டியலில் சவுதி ஐந்தாவது இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சவுதியின் பொருளாதாரம் எதிரிக்குச் சகுனப்பிழை
சவுதி அரேபியா பல நாடுகளுடன் நல்லுறவைப் பேணுகின்றது. அதன் அரசுறவு(இராசதந்திரம்) காசோலை அரசுறவு என விபரிக்கப்படுவதுண்டு. சவுதி அரேபியா தனது பணத்தின் மூலம் பன்னாட்டரங்கில் நட்பை வாங்குகின்றது என்பதற்காக இப்படி விபரிக்கப்படுவதுண்டு. சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் பொறுப்பைக் கூட எடுக்க முயற்ச்சித்தது. எகிப்து, பாக்கிஸ்த்தான், ஜோர்தான், பாஹ்ரேய்ன் போன்ற நாடுகளின் நட்பு சவுதியின் பணத்தால் பெற்ற நட்புக்களே. சவுதியின் பணத்திற்கு ஐக்கிய அமெரிக்காவின் அரசுறவியலாளர்களே விலை போவதுண்டு.

சவுதியின் பொருளாதாரம்
சவுதி அரேபிய மன்னர்   குடும்பம் வெறுக்கும் சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைற் இனத்தைச் சேர்ந்தவரான பஷார் அல் அசாத்தை சிரிய ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற சவுதி பெரிதும் விரும்புகின்றது. அதற்கு இரசியா தடையாக இருக்கின்றது. இதனால் இரசியாவிற்குப் பாடம் போதிக்க சவுதி முயல்கின்றது. சவுதி தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து உலகச் சந்தையில் எரிபொருள் விலையை விழச் செய்து கொண்டிருக்கின்றது.  எரிபொருள் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் இரசியப் பொருளாதாரம் அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இது சவுதியின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது. சவுதியின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பு இன்னும் ஒரு நோக்கத்தைக் கொண்டது. எரிபொருள் விலை வீழ்ச்சியடைவதால் புதிய எரிபொருள் அகழ்வு முயற்ச்சிகள் பல இடை நிறுத்தப்படுகின்றன. எரிபொருள் வீழ்ச்சி சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது. சவுதி இப்போது 27பில்லியன் டொலர் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளது. சவுதி நீண்ட கால எரிபொருள் விலை ஆகக்க் குறைந்தது 85 டொலர்களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றது ஆனால் தற்போது 50 டொலர்களுக்கும் குறைவாக இருக்கின்றது. இது சவுதியின் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. ஈரான் தனது நிதி நிலைமையைச் சமாளிக்க எரிபொருள் விலை 130 டொலர்களுக்கு மேலும் இரசியாவிற்கு 105 டொலர்களுக்கு மேலும் இருக்க வேண்டும்.

உறுதியான மன்னர் ஆட்சி தொடருமா
சவுதி அரேபியாவின் மன்னராக தற்போது இருக்கும் சல்மன் பின் அப்துலஸீஸ் அல் சவுத் அவர்களுக்குப் பின்னர் ஓர் வாரிசுப் போட்டி உருவாகலாம். முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் நயீஃபிற்கும் துணை இளவரசர் மொஹமட் பின் சல்மனுக்கும் இடையில் வாரிசுப் போட்டி உருவாக வாய்ப்புண்டு என அரசியல் நோக்குனர்கள் கருதுகின்றனர். மன்னர் ஓய்வு பெறும் போது அவருக்குப் பிடித்தவரும் அவரது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் துணை இளவரசரை அரசராக முடி சூட்டலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஒரு வழமைக்கு மாறான செயலாகும். இதனால் சவுதியில் ஒரு வாரிசுப் போட்டியும் உள்நாட்டுக் குழப்பமும் உருவாகலாம்.

அரபு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் போல் ஆசியான் போல் தமக்குள்ளே வலுவான ஒரு நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். வளைகுடா ஒத்துழைப்பு ஒன்றியம் தற்போது உள்ளதிலும் பார்க்க சிறந்த  ஓர் அரசியல், பொருளாதார மற்றும் படைத்துறைக் கூட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே இது பற்றிய முன்மொழிவுகள் மற்ற நாடுகளால் முன்வைக்கப்பட்ட போது சவுதி அரேபியா அதை எதிர்த்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் போல் ஒரே மாதிரியான மனித உரிமை நிலைப்பாடு, எல்லைப் பிரச்சனை இன்மை, ஒருவருக்கு ஒருவர் பொருளாதாரக் கைகொடுப்பு , பொதுவான கலாச்சாரம் ஆகியவற்றை அரபு நாட்டில் உருவாக்க முடியும்.

Monday, 24 August 2015

வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் ஒலி பெருக்கிப் போர்


நாடுகளுக்கு இடையிலான எல்லையில் பல காரணங்களுக்காக மோதல் நடப்பதுண்டு. ஆனால் வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் விசித்திரமன ஒரு காரணத்திற்காக மோதலும் அது தொடர்பான உயர்மட்டப் பேச்சு வார்த்தையும் நடந்தது. தென் கொரிய தனது பகை நாடான வட கொரிய எல்லையில் ஒலிபெருக்கிகள் மூலம் வட கொரியாவின் அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்தது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா தென் கொரியாவின் ஒலிபெருக்கிகள் மீது எறிகணைகள் வீசியது. பதிலுக்கு தென் கொரியாவும் எறிகணைகள் வீசியது. இதைத் தொடர்ந்து வட கொரியா தனது படைகளை ஒரு போருக்குத் தயாராகும் படி உத்தரவிட்டு நாட்டில் ஓர் அரைப் போர் நிலைப் பிரகடனம் செய்தது. இத்தனையும் தென் கொரியாவும் அதன் நெருங்கிய நட்பு நாடான ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து ஒரு போர் ஒத்திகை செய்து கொண்டிருக்கும் போது நடந்தது. ஒத்திகையின் குறியீட்டுப் பெயர்  வடகொரியத் தலைநகர் "பியாங்யாங்கை ஆக்கிரமித்தல்"

கண்ணி வெடியில் இருந்து ஒலிபெருக்கி
2015-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி ஆரம்பமான ஒலிபெருக்கிகளூடான பரப்புரை இருநாடுகளுக்கும் இடையில் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. 11 நிலைகளில் இருந்து தென் கொரியா ஒலிபெருக்கி மூலமான பரப்புரையைச் செய்தது. பரப்புரை பெரும்பாலும் மக்களாட்சியைப் பற்றியதாக இருந்ததுடன். உலகச் செய்திகள் கால நிலை அறிக்கை ஆகியவற்றையும் உள்ளடக்கி இருந்தது. இரு நாடுகளும் எல்லையில் மற்ற நாட்டுக்கு எதிராக ஒலிபெருக்கி மூலம் பரப்புரைகள் செய்து ஒன்றை ஒன்று ஆத்திரபப்டுத்துவதில்லை என 2004-ம் ஆண்டு உடன்பாட்டுக்கு வந்தன. ஓகஸ்ட் மாதம் 4-ம் திகதி வட கொரியப் படையினர் வைத்த கண்ணி வெடிகளால் தென் கொரியப் படையின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தென் கொரியா தனது ஒலிபெருக்கிகளூடான பரப்புரையைத் தொடங்கியது.
+
இரு கொரியாக்களின் வலிமை
உலகிலேயே இரு மோசமான அயல் நாடுகளாக தென் கொரியாவும் வட கொரியாவும் இருக்கின்றன. ஓர் இனம். இரு நாடு. பிளவுபட்டு அறுபது ஆண்டுகள் ஆகியும் அமைதியற்ற அயலவர்களாக வாழ்கின்றனர். உலகிலேயே அதிக அளவு படையினர் குவிக்கப்பட்ட எல்லையாக வட மற்றும் தென் கொரிய எல்லைகள் இருக்கின்றன. 28,500 ஐக்கிய அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் இருக்கின்றன. வட கொரியாவின் மக்கள் தொகை 24 மில்லியன்கள் தென் கொரியாவின் மக்கள் தொகை 49 மில்லியன்கள். நாடுகளின் படைவலுவை மதிப்பீடு செய்து தரப்படுத்தும் Global Fire Power Ranking இன் கணிப்பின் படி படைவலுவில்  வட கொரியா 36-ம் இடத்திலும் தென் கொரியா 7-ம் இடத்திலும் இருக்கின்றன.
தென் கொரியாவிடம் 23 நீர்மூழ்கிக் கப்பல்களும் வட கொரியாவிடம் 72 நீர்முழ்கிக் கப்பல்களும் இருக்கின்றன. Frigates வகைக் கப்பல்கல் தென் கொரியாவிடம்14 வட கொரியாவிடம் 3. நாசகாரிகள் எனப்படும் Destroyers போர்க்கப்பல்கள் தென் கொரியாவிடம் ஆறு வட கொரியாவிடம் ஏதுமில்லை
இரு நாடுப் படைகளையும் 80 கிலோ மீட்டர் தூர படையற்ற பிரதேசம் பிரிக்கின்றது.  வட கொரியாவின் படைக்கலன்கள் பழையவை எனச் சில படைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தென் கொரியாவில் அமெரிக்க பாணி மக்களாட்சி முறைமையும் வட கொரியாவில் ஸ்டாலின் பாணி ஆட்சியும் நடக்கின்றன. உலகிலேயே ஊடக சுதந்திரம் குறைந்த நாடாக வட கொரியா கருதப்படுகின்றது. வட கொரியாவில் ஒரு இலட்சம் அரசியல் கைதிகள் சிறையில் இருக்கின்றனர்.
Transparency International என்னும் அமைப்பின் 2014 ஆண்டிற்கான பட்டியலின்படி corruption perception index இல் உலகிலேயே ஊழல் நிறைந்த ஆட்சி வட கொரியாவில் நடக்கின்றது.  மக்களின் சராசரி ஆயுள் வட கொரியாவில் 69ஆகவும் தென் கொரியாவில் 79ஆகவும் இருக்கின்றது. அதே வேளை வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட தென் கொரியாவில் தற்கொலைகள் மிக அதிகமானதாகும். உலகிலேயே பொருளாதார ரீதியில் மிக மோசமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வட கொரியா இருக்கின்றது.
உலகிலேயே பொருளாதார ரீதியில் மிக மோசமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக வட கொரியா இருக்கின்றது. வட கொரியாவின் மொதத் தேசியப் பொருளாதார உற்பத்தியிலும் பார்க்க தென் கொரியாவின் பொருளாதாரம் 36 மடங்கு பெரியதாகும்.

ஒன்றாக இருந்த கொரியத் தீபகற்பத்தை சீனாவும் ஜப்பானும் மாறிமாறி ஆக்கிரமித்து தமது அட்டூழியம் மிக்க ஆட்சியின் கீழ் வைத்திருந்தன. ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கொரியாவை இரண்டாம் உலகப் போரின் பின்னர் வட கொரியாவை சோவியத் இரசியாவும் தென் கொரியாவை அமெரிக்காவும் ஜப்பானிடமிருந்து பிடுங்கிக் கொண்டன. ஈர் அரசுகள் உருவாக்கப் பட்டன. 1950-ம் ஆண்டு சீனாவினதும் சோவியத்தினதும் ஆதரவுடன் வட கொரியா தென் கொரியா மீது படை எடுத்தது. கொரியப் போரில் முதல் முறையாக விமானங்கள் வானில் ஒன்றின் மீது ஒன்று ஏவுகணைகள் வீசுவது நடந்தது. மூன்று ஆண்டுகளின் பின்னர் போர் முடிவிற்கு வந்தது. இரு நாடுகளும் போரின் பின்னர் மோசமான எதிர்களாகின. வட கொரியா அணுக்குண்டு உற்பத்தி செய்தது. தென் கொரியாவில் அமெரிக்கா தனது படைத்தளத்தை அமைத்தது.

2015 ஓகஸ்ட் மாதம் ஒலிபெருக்கியால் உருவான முறுகலில் தென் கொரியா முன்பு எப்போதும் இல்லாத அளவு கடும் நிலைப்பாட்டில் இருக்கின்றது. தென் கொரியா செய்யும் ஒலிபெருக்குப் பரப்புரை எல்லையில் உள்ள வட கொரியாவின் படையினரின் மன உறுதியைக் குலைப்பதாக அமையும் என வட கொரியா கருதுகின்றது. ஏற்கனவே தென் கொரியாவின் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் டிவிடிக்கள் மூலமும் மெமரி ஸ்ரிக் மூலமும் வட கொரியாவிற்குக் கடத்தப்படுவதால் வட கொரியாவிலும் பார்க்க தென் கொரியா பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கின்றது என வட கொரியர்கள் உணர்ந்து அதனால் தமது நாட்டை வெறுக்கின்றார்கள் என வட கொரிய அரசு அச்சமடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரப்புரைப் போட்டி ஒலிபெருக்கிகளால் மட்டுமல்ல தென் இந்திய சினிமா பாணிக் கட் அவுட்டுகளிலும் நடக்கின்றன. வட கொரியாவில் சோஸ்லிச சொர்க்கத்து வாருங்கள் என எழுதப் பட்டுள்ளது. தென் கொரியா இரண்டு நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிட்டு எழுதிக் கட் அவுட் வைத்திருக்கின்றது. பலூன்கள் மூலம் ஒரு நாடு மற்ற நாட்டுக்கு பரப்புரைத் துண்டுப் பிரசுரங்களை வீசுவதும் உண்டு. தென் கொரியாவின் பரப்புரைகளால் பல வட கொரியர்கள் தென் கொரியாவிற்கு இரகசியமாகப் போய்க் குடியேறுவதும் உண்டு.

2015 ஓகஸ்ட் 20-ம் திகதி பிற்பகல் நான்கு மணியளவில் வட கொரியா 76.2மில்லி மீட்டர் எறிகணைகளை தென் கொரியாவை நோக்கி வீசியது. பின்னர் இருபது மணித்துளிகள் கழித்து மேலும் எறிகணைகள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து தென் கொரியா தனது பீராங்கிகளில் இருந்து 120 மில்லி மீட்டர் எறிகணைகளை வட கொரியா மீது வீசியது. தென் கொரியாதான் முதலில் எறிகணைகளை வீசியது எனச் சொல்லிய வட கொரியா எறிகணை வீசியதற்கான தண்டனையில் இருந்து தென் கொரியா தப்பாது எனச் சூளுரைத்தது.

ஐக்கிய அமெரிக்காவின் நான்கு F-16 தாக்குதல் போர் விமானங்களும் F15K போர் விமானங்களும் வானில் பறந்து தமது வலுவைக் காட்டின.

அமெரிக்கா வரை பாயக்கூடிய அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகணைகளைத் தன்னிடம் வைத்திருக்கும் வட கொரியா ஈரானை அடிபணிய வைத்தது போல் தன்னை  அடிபணிய வைக்க முடியாது என்றது.

இப்படிப்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள படைகளற்ற பிரதேசத்தில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடாத்தின. வட கொரியாவின் சார்பில் அதிபர் கிம் ஜோங்கின் வலது கையாகக் கருதப் படும் குவாங் பியோங் சோ (Hwang Pyong So) கலந்து கொள்வது இரு நாடுகளிடையான் நோக்குனர்களை ஆச்சரியமும் ஆறுதலும் அளிக்க வைத்துள்ளது. இவர் பேச்சு வார்தையில் பங்கு பற்றுவதால் அங்கு எடுக்கும் முடிவு காத்திரமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால் வட கொரியா எல்லையில் செய்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மன்னிப்புக் கோராவிடில் ஒலிபெருக்கி மூலமான பரப்புரை தொடரும் எனவும் சொல்லியுள்ளது. இது பேச்சு வார்த்தைகளைச் சிக்கலாக்கியுள்ளது.

பிந்திக் கிடைத்த செய்தி  
இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளன. கண்ணிவெடிகள் வைத்தமைக்கும் ஆத்திரமூட்டக் கூடிய வகையில் படைகளை நகர்த்தியமைக்கும் வட கொரியா வருத்தம் தெரிவித்துள்ளது. தென் கொரியா தனது ஒலிபெருக்கிகள் மூலமான பரப்புரைகளை நிறுத்த ஒத்துக் கொண்டுள்ளது.

இரு கொரியாக்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நிலைக்குப் போய் பின்னர் சுமூக நிலைக்குபோவதும் அடிக்கடி நடக்கின்ற ஒன்று. ஓநாய் ஓநாய் என மிரட்டப்பட்டுக் கொண்டிருப்பது ஒரு நாள் உண்மை ஓநாயில் முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...