Thursday, 16 July 2015

ஈரானுடனான யூரேனிய உடன்படிக்கை

ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதைத் தடுப்பது படை நடவடிக்கையின் மூலமா அல்லது அரசுறவுக்(இராசதந்திர) காய் நகர்த்தல் மூலமா என்ற நீண்ட காலக் கேள்விக்கு இறுதியில் ஒரு விடை வியன்னா நகரில் கிடைத்து விட்டது போல் இருக்கின்றது. பராக் ஒபாமா ஒரு புதிய போர் முனையைத் திறக்க விரும்பாத நிலையில், ஈரானுக்கு எதிரான ஒரு படை நடவடிக்கையின் மூலம் உலக அரங்கில் இஸ்லாமியத் தீவிரவாததிற்கு எண்ணெய் ஊற்ற விரும்பாத நிலையில் ஈரானுடன் அதன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. P-5+1 எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் இணைந்து ஈரானுடன் 12 ஆண்டுகளாக அணுக்கு குண்டு உருவாக்குவதற்கான அதன் யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பாக தொடர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தன.

பல பொருளாதாரச் சிக்கல்கள் சவாலகள் மத்தியில் ஈரான் மிகவும் உறுதியுடன் நின்று பேச்சு வார்த்தை நடாத்தியது. ஈரான் மீது தாக்குதல் நடாத்தினால் நாம் மேற்கு நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவோம் என ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்தது. ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையை நீக்குவது தொடர்பான எமது எல்லா நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டதுடன் குடிசார் தேவைகளுக்காக ஈரானின் அணுத்திட்டம் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்றார். ஈரானிலும் பார்க்க P-5+1 நாடுகளே அதிக அளவு விட்டுக்கொடுப்புகளைச் செய்தன.

ஈரானுடனான உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
1. ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும். ஈரானுடனான உடன்பாடு நிறைவேற்றப்பட்டால் முடக்கப்பட்டிருக்கும் ஈரானின் 100பில்லியன் விடுவிக்கப்படும். ஈரான் மீண்டும் சுதந்திரமாக எரிபொருள் ஏற்றுமதி செய்யலாம். உடன்பாடு எட்டிய செய்தி வெளிவந்தவுடன் உலகச் சந்தையில் எரிபொருள் விலை இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
2. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள்  ஈரானில் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பான நிலையங்களை பார்வையிட ஈரான் அனுமதி வழங்குவதற்கு அந்த நிலையங்களில் அணுக்குண்டு தொடர்பான நடவடிக்கைகள் நடப்பதற்கான ஆதாரங்களை கண்காணிப்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கட்டுப்பாடற்ற பரிசோதனை செய்யும் உரிமை ஐநா கண்காணிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஈரான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுப்பாடற்ற அனுமதி ஈரானின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகமானது என ஈரான் எதிர்த்தது.
3. உடன்பாட்டை ஈரான் மீறினால் 65 நாட்களில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும்
4. ஈரானுக்கான ஐநாவின் படைக்கல ஏற்றுமதித் தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும். இதை இரசியாவும் சீனாவும் எதிர்த்த போதிலும் தடை நீக்கப்படவில்லை. மரபுப் படைக்கலன்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை உடன் நீக்க வேண்டும் என ஈரான் அடம் பிடித்திருந்தது.
5. The International Atomic Energy Agency என்னும் பன்னாட்டு அணு வலு முகவரகமும் ஈரானும் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலின் படைத்துறை மயமாக்கலைத் தடுத்தல் தொடர்பாக Roadmap எனப்படும் ஒரு பாதைத்திட்டம் ஒன்றிற்கான உடன்படிக்கை 2015-ம் ஆண்டின் இறுதிக்குள் செய்ய வேண்டும். இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
6. ஈரான் யூரேனியத்தை 5 விழுக்காடு மட்டுமே பதப்படுத்தலாம். அணுக்குண்டு செய்வதற்கு 98 விழுக்காடு பதப்படுத்த வேண்டும் .
7. ஈரானில் உள்ள நட்டான்சில் நிலத்துக் அடியில் உள்ள யூரேனியம் பதப்படுத்தும் நிலையத்தை விஞ்ஞான ஆய்வு நிலையமாக ஈரான் மாற்றும். அங்கு தற்போது இருக்கும் யூரேனியப் பதப்படுத்தும் 10,000உருளைகளில் 5000 உருளைகளை மட்டுமே அங்கு பாவனையில் இருக்கும். ஆனால் இன்னும் எட்டு ஆண்டுகளில் ஈரான் மேம்படுத்தப்பட்ட உருளைகளை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ளது..
8. ஈரானிடமிருக்கும் மேலதிக யூரேனியங்களை நாட்டை விட்டு வெளியில் அனுப்ப வேண்டும். தற்போதைய பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தின் இருப்பை 98 விழுக்காட்டால் குறைக்க வேண்டும்.

ஈரானுக்கு எதிரான தடைகள்

தொடர்ந்து 1995-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் தனது ஆணை மூலம் ஈரானில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தடை விதித்தார். 1996-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை ஈரானில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஈரானின் யூரேனியம் பதப்படுத்தலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஈரானுடன் அணு உற்பத்தி தொடர்பான எந்தவித வர்த்தகமும் செய்யக் கூடாது என்ற தடை 2006-ம் ஆண்டு விதிக்கப்பட்டது. இத்தடை 2007-ம் ஆண்டு மேலும் இறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது. ஐநா பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக 2008-ம் 2010-ம் ஆண்டுகளில் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

ஈரானுடனான உடன்பாட்டில் பல குறைபாடுகள் இன்னும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. பெரிய பிரச்சனைகள் பாதியளவுதான் தீர்க்கப்பட்டுள்ளன (big issues only semi-resolved) என்பது ஒரு பரவலான கருத்தாக இருக்கின்றது. ஈரான் தன்னிடம் இருக்கும் பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தை அணுக்குண்டாக்க முயற்ச்சிக்கக்கூடாது என்பதில் உடன்படிக்கை உறுதியாக இருக்கின்றது.

ஈரானுடனான உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க நட்பு சுனி முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடனும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுடனும் தொலைபேசியில் உரையாடினார். சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கையை பெரிதும் வலியுறுத்தி வந்தன. ஈரானுடனான உடன்படிக்கைக்கு இரசியா வழங்கிய ஒத்துழைப்பு அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். உடன்படிக்கை பற்றிக் கருத்துத் தெரிவித்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் உலகம் இன்று நிம்மதியாக மூச்சு விடுகின்றது என்றார். ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக ஒரு பரந்த கூட்டணியை இனி அமைக்கலாம் என்றான் இரசியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்.

இந்த உடன்படிக்கை பராக் ஒபாமாவிற்கும் ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானிக்கும் பெரு வெற்றியாகக் கருதப்படுகின்றது. ஈரானுடனான உடன்படிக்கையை சரித்திரச் சரணாகதி என இஸ்ரேல் கண்டித்துள்ளது.  பராக் ஒபாமாவின் எதிர்க்கட்சியும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலுவைக் கொண்டதுமான குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஈரானுடனான உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். The American Israel Public Affairs Committee எனப்படும் அமெரிக்க இஸ்ரேலியப் பொதுவிவகாரக் குழு ஈரானுடானான உடன்பாடு ஈரானின் அணுக்குண்டு உற்பத்திப்பாதையைத் தடுக்கத் தவறிவிட்டது என்கின்றது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவைத் தலைவர் ஜோன்ன் பௌனர் உலகத்தை குறந்த அளவு அபாயகரமானதாக மாற்றுவதை விட்டு இந்த உடன்படிக்கை ஈரானை ஓர் உறுதி மிக்க நாடாக மாற்றி அதன் பயங்கரவாதத்திற்கான ஆதரவை ஊக்குவிக்கின்றது என்றார்.

 அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவைத் தலைவர் இந்த உடன்படிக்கையை எதிர்த்துள்ளார். இந்த உடன்படிக்கையை அமெரிக்க்ப் பாராளமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்தால் பராம் ஒபாமா தனக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து பாராளமன்றத்தின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் நிறைவேற்று ஆணையப் பிறப்பிப்பார் எனத் தெரிவித்துள்ளார். போர் விரும்பும் பழமைவாதிகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான குடியரசுக் கட்சியினர் சிலரும் இந்த உடன்பாட்டைக் குழப்ப ஒபாமா அனுமதிக்கப்போவதில்லை. ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் உடன்பாட்டிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

உடன்பாடு ஏற்பட்டவுடன் ஈரானியர்கள் தெருவில் இறங்கி மகிழ்ச்சி ஆராவாரப்பட்டனர். ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி தனது நாட்டை மக்களாட்சியை நோக்கி நகர்த்தும் முயற்ச்சிக்கும் இந்த உடன்படிக்கை வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர், உச்ச மத சபை ஆகிய மூன்று அதிகார மையங்கள் இருக்கின்றன. ஈரானிய உச்சத் தலைவரின் அங்கீகாரம் உடன்படிக்கைக்கு அவசியமாகும். ஈரான் மனித உரிமைகளை மீறுகின்றது, பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றது போன்ற காரணங்களுக்காக அதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தடைகள் தொடர்ந்து இருக்கும்.

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் போது அது அதிக நிதியைப் பெறும். அதைக் கொண்டு அது மத்திய கிழக்கின் சமநிலையைக் குழப்ப பெரும் முயற்ச்சி எடுக்கலாம் என சில சுனி முஸ்லிம் தலைவர்கள் கரிசனை கொண்டுள்ளனர். ஆனால 400 பில்லியன் பெறுமதியான ஈரானிற்கு மற்ற நாடுகள் ஏற்றுமதி செய்யத் தொடங்கும் போது உலகப் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வாய்ப்புண்டு. அத்துடன் எரிபொருள் விலை குறைவதும் பல நாடுகளுக்கு வாய்ப்பாக அமையும்.

சவுதி ஒரு புறம் இஸ்ரேல் மறுபுறம்
ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாக இஸ்ரேல் மட்டுமல்ல சவுதி அரேபியாவும் அதிக கரிசனை கொண்டிருந்தது. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்தால் சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானின் உதவியுடன் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யலாம் என அஞ்சப்பட்ட்டது. இதனால் ஒரு அணுப் படைக்கலப் பரவலாக்கம் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்படலாம் எனவும் அஞ்சப்பட்டது . லிபியா, துனிசியா, அல்ஜீரியா, பாஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சவுதி அரேபியாவின் முக்கிய எரிபொருள் வளப் பிரதேசங்களைத் தான் கைப்பற்ற வேண்டும் என்ற கனவு ஈரானிய மதவாத ஆட்சியாளர்களுக்கு உண்டு என சவுதி அரேபியா கருதுகின்றது. ஈரானின் இந்தக் கனவை அது அணுக்குண்டு மூலம் சாதிக்க நினைக்கிறது என்று சவுதி அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது போல் ஈரானையும் ஆக்கிரமிக்க வேண்டும் என சவுதி விரும்பியது. ஈரான் அணுக்குண்டைத் தயாரித்தால் முதலில் செய்வது சவுதியில் இருக்கும் புனித நகர்களான மக்காவையும் மதீனாவையும் கைப்பற்றுவதாகும். இத்னால் சவுதியும் இஸ்ரேலும் இரகசியமாக இணைந்து ஈரானின் அணு ஆய்வு நிலைகளைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. சவுதி அரேபியாவின் வான் பரப்பினூடாக பறந்து சென்று ஈரான் மீது தாக்குத நடத்துவது இஸ்ரேலுக்கு பெரும் வாய்ப்பாக அமையும். சவுதி அரேபிய விமானத் தளங்களைப் பாவித்தால் இஸ்ரேலுக்கு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தும் நிலையங்களைத் தாக்குவது மேலும் இலகுவாகும். 1981-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி இஸ்ரேலிய விமானங்கள் சவுதி அரேபிய வான் பரப்பினூடாகப் பறந்து சென்று ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலைகளைத் தாக்கி அழித்தன. மலைகளும் பாறைகளும் நிறைந்த ஐந்து இடங்களில் ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களை அமைத்துள்ளது.

புவிசார் அரசியல் நிலை மாறுமா
உடன்பாட்டைத் தொடர்ந்து  அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையிலான உறவு சீரடையலாம்.  இது மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் புவிசார் அரசியலைத் தலைகீழாக மாற்றலாம். துருக்கி-ஈரான் - அமெரிக்கஆகியவற்றின் முக்கூட்டு உறவு ஒன்று உருவாகும் சாத்தியம் உண்டு. இதன் மூலம் தற்போது உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் சிரியா, ஈராக், லெபனான், காசா நிலப்பரப்பு, யேமன் ஆகிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் மாற்றுக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஈரானுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி ஈரானில் உள்ள வலது சாரிகளையும் மேற்கு நாடுகள் சார்பானவர்களையும் ஊக்கப்படுத்துவதும் அமெரிக்காவின் ஒரு நோக்கமாக இருந்தது. 1979 இல் முறிந்து போன ஈரானிய அமெரிக்க உறவை மீண்டும் புதுப்பித்து வளைகுடாப் பிராந்தியத்தில் அமைதி பேணலில் ஈரானையும் ஒரு பங்காளியாக்கும் ஒபாமாவின் கனவு நிறைவேறுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது.

Monday, 13 July 2015

ஐ எஸ், அல் கெய்தா, அல் ஷபாப், பொக்கோ ஹரம் ஆகியவற்றின் இடையிலான உறவும் தொடர்பும்

சோமாலியாவில் இருந்து செயற்படும் அல் ஷபாப் அமைப்பினர் 2015 ஜூலை மாதம் 7-ம் திகதி கென்யா நாட்டிற்குள் புகுந்து ஒரு தாக்குதலை நடாத்தி 14 அப்பாவிகளைக் கொன்றதுடன் மேலும் 11 பேரைக் காயப்படுத்தியுள்ளனர். கொல்லப் பட்டவர்களில் பெரும் பான்மையானவர்கள் கல் அகழ்வு செய்யும் ஏழைத் தொழிலாளர்கள். அல் கெய்தாவின் இணை அமைப்பாகக் கருதப்படும் அல் ஷபாப் அமைப்பு சோமாலியாவிலும் அதைச் சூழ உள்ள நாடுகளிலும் உள்ள பல வலுவற்ற இலகு இலக்குக்கள் மீது தாக்குதல்கள் நடாத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.  சோமாலிய எல்லையை ஒட்டிய கென்யாவின் மந்தேரா நகரில் அதிகாலை ஒரு மணியளவில் கடும் வெப்பம் காரணமாக வெளியில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது முதலில் கைக்குண்டுகளாலும் பின்னர் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடாத்தப் பட்டது. தாக்குதல் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் கென்யாவின் காவற்துறையினர் அவ்விடத்திற்குச் சென்றனர். அதற்குள் தாக்குதலாளிகள் தப்பி ஓடிவிட்டனர். கென்யாவில் பல சோமாலியர்கள் வாழ்வதால் அல் ஷபாப் போராளிகளால் அங்கு இலகுவாக நுழைய முடிகின்றது.

கொடூரமான தாக்குதல்

2014-ம் ஆண்டு டிசம்பரிலும் கென்யாவிற்குள் நுழைந்த அல் ஷபாப் போராளிகள் 36 முஸ்லிம் கற்குழித் தொழிலாளர்களைக் கொன்றிருந்தனர். 2015-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் அல் ஷபாப் அமைப்பினர் தமது தாக்குதல்களிலேயே கொடூரமான ஒரு தாக்குதலை வட கிழக்குக் கென்யாவில் உள்ள கரிஸ்ஸா பல்கலைக்கழக்த்தில் செய்திருந்தனர். அதில் இஸ்லாமியரல்லாத 147 பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். முகமூடி அணிந்த நான்கு அல் ஷபாப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கரிஸ்ஸாப் பல்கலைக்கழகத் தின் அறைகளுக்குள் அதிகாலை 5 மணியளவில் சென்று அங்குள்ள கிறிஸ்த்தவ மாணவர்களைக் கொன்றனர். எந்த ஒரு முன்னேற்பாடோ பாதுகாப்போ எமது தாக்குதல்களில் இருந்து எவரையும் பாதுகாக்க மாட்டாது என அல் ஷபாப் அமைப்பினர் அப்போது சூளுரைத்தனர். நைரோபியில் வெஸ்ற்கேற் கடைத் தொகுதியில் அல் ஷபாப் அமைப்பினர் செய்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் பங்கு பற்றினர். அந்தத் தாக்குதலின் காணொளியை அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களிடம் காட்டி மேலும் பல கடைத் தொகுதிகளில் தாக்குதல் செய்வதற்கு போராளிகள் தேவை எனப் பரப்புரை செய்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டது.

யார் இந்த அல்-ஷபாப் அமைப்பினர்?
ஹரகட் அல்-ஷபாப் அல்-முஜாகிதீன் (Harakat al-Shabaab al-Mujahideen) என்னும் பெயருடைய அமைப்பை சுருக்கமாக அல்-ஷபாப் என அழைப்பர். அல்-ஷபாப் என்றால் இளையோர் எனப் பொருள்படும். மத ரீதியாக அல்-ஷபாப் அமைப்பு சவுதி அரேயாவின் வஹாப் வகை இசுலாமை தமது இறை நம்பிக்கையாகக் கொண்டவர்கள். இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஒன்றியம் எனப்படும் மதவாத அமைப்பின் இளைஞர் பிரிவில் இருந்து அல் ஷபாப் உருவானது. இதை அல் கெய்தா அமைப்பின் சோமாலியக் கிளை எனவும் சொல்லப்பட்டதுண்டு. 2006-ம் ஆண்டில் இருந்து சோமாலியாவின் பெரும்பகுதியை அல்-ஷஹாப்  தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. பின்னர் அமெரிக்க நிதியுதவியுடன் ஆபிரிக்க ஒன்றியப்படைகள் பல பிரதேசங்களில் இருந்து விரட்டினர். இப்போதும் பல கிராமப் பகுதிகள் அல்-ஷஹாப்  அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது அல் ஷபாப் அமைப்பில் ஒன்பதினாயிரம் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அல் ஷபாப்பின் மீது அமெரிக்கா நேரடித் தாக்குதல்.
2013-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கக் கடற்படையின் சீல் பிரிவினர் சோமாலியக் கடற்கரையில் இரவில் இரகசியமாகத் தரையிறங்கி அல் ஷபாப் போராளிகளின் நிலை ஒன்றின் மீது ஓரு ஈரூடகத் தாக்குதல் நடாத்தினர். இவர்களின் நகர்வை அல் ஷபாப் அமைப்பின் போராளி ஒருவர் அவதானித்து மற்றப் போராளிகளை உசார் படுத்தி விட்டார். இதில் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்கர்கள் தேடிச்சென்ற அல் ஷபாப் தலைவர் அஹ்மட் கொடேன் அகப்படவில்லை. இத்தாக்குதல் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த படியால் இடை நிறுத்தப்பட்டது. அமெரிக்கப்படையினர் 15 நிமிடச் சண்டையின் பின்னர் பின்வாங்கி விட்டனர். இருந்தும் அமெரிக்க தரப்பில் எந்தவித ஆளணி இழப்பும் ஏற்படவில்லை.

கவன ஈர்ப்புப் போர்

அல் ஷபாப் அமைப்பினர் ஆபிரிக்க மக்களின் கவனத்தைத் தம்பக்கம் ஈர்ப்பதற்கும் நிதி திரட்டுவதற்கும் அடிக்கடி தாக்குதல்களை நடாத்துகின்றனர். அடிக்கடி செய்தியில் அடிபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கையாக இருக்கின்றது. நிதி திரட்டலில் அவர்கள் அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா அமைப்பினருடனும் மக்ரப் பிராந்தியத்திற்கான அல் கெய்தா அமைப்பினருடனும் அவர்கள் போட்டி போட வேண்டி இருக்கின்றது. ஐந்த் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இருந்தும் வட அமெரிக்காவில் இருந்தும் இளைஞர்கள் அல் ஷபாப்பில் இணைந்தனர். ஆனால் தற்போது அது குறைந்து பலர் ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பில் பலர் இணைகின்றனர்.

ஐ எஸ்ஸின் பின்னால் பொக்கோ ஹரம்

2015 மார்ச் மாதம் நைஜீரியாவில் இருந்து அபுபக்கர் செக்கௌ தலைமையில் செயற்படும் பொக்கோ ஹரம் அமைப்பு தாம் அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக ஐ எஸ் அமைப்பினரும் ஒலி நாடா மூலம் பிரகடனப் படுத்தினர். நைஜீரியா, நிஜர், கமரூன் ஆகிய நாடுகள் இணைந்து பொக்கோ ஹரம் அமைப்பினருக்கு எதிராகத் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தியதால் ஏற்பட்ட அழுத்தத்தால் பொக்கோ ஹரம் அமைப்பினர் இப்படி அறிவித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் பொக்கோ ஹரம் அமைப்பினர் வலுவிழந்து விட்டவில்லை என அவர்கள் அண்மைக்காலங்களாக நடாத்தும் தாக்குதல்கள் சுட்டிக் காட்டுகின்றன. பொக்கோ ஹரம் அமைப்பின் வலுவின்மை என்பது அதன் ஒற்றுமை இன்மையாகும். மற்ற இஸ்லாமிய மதவாத அமைப்புக்களில் இல்லாத அளவிற்கு பல உட் பிரிவுகளும் பிளவுகளும் பொக்கோ ஹரம் அமைப்பிற்குள் இருக்கின்றன. பொக்கோ ஹரமினரின் நட்பை ஏற்றுக் கொண்ட ஐ எஸ் அமைப்பினர் அவர்களது தாக்குதல்களை எதியோப்பியா, தன்சானியா ஆகிய நாடுகளிற்கும் விரிவு படுத்தும் படி கூறினர்.

எடுத்த உறுதி மொழி
அல் ஷபாப் அமைப்பினர் அல் கெய்தா அமைப்பினருடன் இணைந்து செயற்படும் தமது விருப்பத்தை 2009-ம் ஆண்டு தெரிவித்திருந்தனர். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2012-ம் ஆண்டு அல் கெய்தா அமைப்பினர் அல் ஷபாப் அமைபினருக்கு பயிற்சிகளும் படைக்கலங்களும் புதிய தொழில்நுட்பங்களும் வழங்கத் தொடங்கினர். ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் பல அல் ஷபாப் போராளிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அல் கெய்தாத் தலைவர் அய்மன் அல் ஜவஹிரிக்குத் தமது கீழ்ப்படிவை உறுதி செய்வதாகத் தெரிவித்து அல் ஷபாப் அமைபினர் ஒரு காணொளிவை வெளியிட்டனர். அரபுக்களைக் கொண்ட அல் கெய்தா, ஐ எஸ் அமைப்பு போன்றவற்றிற்கு அரபுச் செல்வந்தர்களிடமிருந்து கிடைக்கும் நிதி உதவி போல் பொக்கோ ஹரமிற்கோ அல்லது அல் ஷபாப்பிற்கோ கிடைப்பதில்லை. இதனால் பொக்கோ ஹரம்  எஸ்ஸிற்கும்  அல் ஷபாப் அல் கெய்தாவிற்கும் தமது கரங்களை நீட்டிக் கொண்டனர்.

வளரும் ஐ எஸ்ஸும் தேயும் அல் கெய்தாவும்
அல் கெய்தா அமைப்புத் தேய்ந்து கொண்டும் ஐ எஸ் அமைப்பு வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் அல் ஷபாப் அமைப்பு ஐ எஸ் உடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து அல் ஷபாப் அமைப்பினரிடையே வலுத்து வருகின்றது. அமெரிக்க உளவுத் துறையினர் அல் கெய்தாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து அதன் தொடர்பாடல்களை முடக்கியிருக்கையில் ஐ எஸ் அமைப்பு உலகெங்கும் தனது கிளைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏற்கனவே அல் கெய்தாவுடன் இணைந்து கொள்வதாக உறுதி மொழி எடுத்த அல் ஷபாப் அந்த மத ரீதியான உறுதி மொழியை மீற முடியாததாக இருக்கின்றது. ஆனால் பொக்கோ ஹரம் அந்த மாதிரியான உறுதி மொழி எதையும் அல் கெய்தாவிற்குச் செய்யவில்லை. அல் ஷபாப்பின் அரசியல் பிரிவினர் அல் கெய்தாவிடம் அதிக பாசமும் அல் ஷபாப்பின் படைப் பிரிவினர் ஐ எஸ்ஸிடம் அதிக நாட்டமும் வைத்திருக்கின்றனர். அல் ஷபாப்பின் உறுப்பினரான கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகரான அபு சல்மன் என அறியப்படும் ஷேக் ஹசன் ஹுசேய்ன் ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து செயற்படுவதற்கு மத ரீதியான தடைகள் ஏதும் இல்லை என்றார்.

பிளவு பட்ட அல் கெய்தாஈராக்கிற்கான அல் கெய்தாவாக இருந்தவர்கள் தலைமைப் பீடத்துடன் முரண்பட்டுக் கொண்டு தமது பெயரை ஈராக்கிற்கும் சிரியாவிற்குமான இஸ்லாமிய அரசு எனப் 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பெயர் மாற்றிக் கொண்டனர். அல் கெய்தா அமைப்பு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் வட அமெரிக்கா நாடுகளுக்கும் எதிரானதாக உள்ளது.ஆனால் ஐ எஸ் அமைப்பு சியா முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றது. அமெரிக்கா அடக்கப் பட்ட பின்னரே ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப் படலாம் என்பது அல் கெய்தாவின் கொள்கை. ஆனால் ஐ எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு இஸ்லாமிய அரசைப் பிரகடனப்படுத்தி விட்டது.  

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
ஆப்கானிஸ்த்தானில் செயற்படும் தலிபான், பாக்கிஸ்த்தானிய உளவுத் துறையுடன் இணைந்து செயற்படும் ஹக்கானி வலையமைப்பு மற்றும் இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சி மீள் நிலை நிறுத்தப்படவேண்டும் என்ற கொள்கையுடைய லக்சர் இ தொய்பா ஆகியவை நெருக்கமாக உள்ளன. சிரியாவில் இருந்து செயற்படும் ஜபத் அல் நஸ்ரா அமைப்பு அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாகும். இது ஐ எஸ் அமைப்புடன் அடிக்கடி மோதிக் கொள்வதுண்டு.  ஆனால் இஸ்ரேலுக்கு எதிராகவோ அல்லது பலஸ்த்தீனியப் போராளிகளுக்கு ஆதரவாகவோ இந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் காட்டும் அக்கறை போதாது என்ற குறையும் உண்டு. அல் கெய்தா அமைப்பு தனது போக்கை விரைவில் தனது நிதிவளம் படை வலு மற்றும் தாக்குதல்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அல்லது அல் ஷபாப் போன்ற இணை அமைப்புகள் திசை மாறலாம்.

Sunday, 12 July 2015

ஸ்ரெப்ரெனீட்சா இனக்கொலை

போல்கன் பிராந்தியம் என்பது தைரேனியன் கடல், மத்திய தரைக் கடல், கருங்கடல் ஆகியவற்றின் இடையில் உள்ள ஒரு குடாப்பிராந்தியம் ஆகும். குரோசியா, பொஸ்னியா, ஹெர்ஜெகோவியா, சுலேவெனியா, சேர்பியா, மொன்ரினிக்ரோ, கொசோவா, மசடோனியா, பல்கேரியா, அல்பேனியா, கிரேக்கம் ஆகிய நாடுகளும் துருக்கியின் ஒரு பகுதியும் போல்கன் பிராந்தியத்தினுள் அடங்கும். மேற்கு போல்கன் பிராந்தியத்தில் உள்ள வியாபார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர் ஸ்ரெப்ரெனீட்சா ஆகும். மேற்கு போல்கன் பிராந்தியத்தில் அகழப்பட்ட வெள்ளித் தாதுகளின் வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமாக ஸ்ரெப்ரெனீட்சா இருந்தது. ஸ்ரெப்ரெனீட்சா என்பதன் பொருள் வெள்ளி நகரம் என்பதாகும்.

ஸ்ரெப்ரெனீட்சா நகரம் ரோமாபுரியின் ஆட்சிக்குக் கீழும் பின்னர் 13-ம் 14-ம் நூற்றாண்டுகளில் பொஸ்னியாவின் ஆட்சிக்குக் கீழும் இருந்தது. உதுமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் ஸ்ரெப்ரெனீட்சா நகரம் அதன் வர்த்தக முக்கியத்துவத்தை இழந்தது. இதனால் அங்கிருந்து கிறிஸ்த்தவர்கள் வெளியேற அங்கு இஸ்லாமியர்களின் தொகை அதிகரித்தது. தேவாலயங்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது
ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பல சேர்பியர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1941-ம் ஆண்டு செட்னிக்குகள் ஸ்ரெப்ரெனீட்சா நகரத்துக்குள் சென்று பல இஸாமியர்களைக் கொன்றனர்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் சுலோவேனியா(Slovenia), குரோசியா (Croatia), பொஸ்னியாவும் ஹெர்ஜெகொவினாவும் (Bosnia and Herzegovina), சேர்பியா (Serbia), மொண்டெநிக்ரோ (Montenegro), மசெடோனியா (Macedonia) ஆகிய நாடுகளை இணைத்து யூக்கோஸ்லாவியா என்னும் சோசலிச கூட்டாட்சிக் குடியரசு (Socialist Federal Republic of Yugoslavia) உருவாக்கப்பட்டது. மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த பொருளாதாரமாக யூக்கோஸ்லாவியா இருந்தது. 1980களின் ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பாவின் உருவான அரசிய நெருக்கடியில் யூக்கோஸ்லாவியாவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

1992-ம் ஆண்டிற்கும் 1995-ம் ஆண்டிற்கும் இடையில் நடந்த பொஸ்னியப் போரின் போது ஸ்ரெப்ரெனீட்சா நகரம் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. 1992 ஏப்ரல் மாதம் ஸ்ரெப்ரெனீட்சா நகரம் சேர்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. எறிகணைகளை மழைபோல் பொழிந்த சேரியப்படையினர் ஸ்ரெப்ரெனீட்சா நகரத்திற்கு உணவு செல்லாமல் தடுத்தனர். 1993-ம் ஆண்டு ஸ்ரெப்ரெனீட்சா நகரம் பாதுகாப்பு வலயமாக ஐக்கிய் நாடுகள் சபையால் பிரகடனப் படுத்தப்பட்டது. 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இருந்த டச்சுப் படையினரை சேர்பியர்கள் விரட்டினர். 30 ஐநாவின் அமைதிப் படையினரை பணயக் கைதிகளாகவும் பிடித்தனர். டச்சுத் தளபதி நேட்டோப்படையினரை விமானத் தாக்குதல் செய்யும் படி வேண்டு கோள் விடுத்தார். ஆனால் நேட்டோப் படையினர் ஏதும் செய்யவில்லை. டச்சு விமானங்கள் சேர்பியரின் இரு நிலைகள்மீது குண்டுகள் வீசின. தம்மிடம் பணயக் கைதிகளாக இருப்பவர்களைக் கொன்றுவிடுவோம் என சேர்பியர்கள் மிரட்டியதால் டச்சு அமைதிப் படையினர் பின்வாங்கினர். தம்மிடமிருந்த 11 டச்சுப் படையிரனை விடுவிக்க முகாம்களில் தஞ்சமடைந்து இருந்த 5,000 முஸ்லிம்களை சேரிப்யப் படையினரிடம் டச்சுப் படையினர் ஒப்படைத்தனர். சேர்பியப் படையினர் இஸ்லாமிய சிறுவர்களை இனிப்பு வழங்க அழைத்து அவர்களை பெரியவர்களிடமிருந்து பிரித்தனர். பின்னர் 12 வயது முதல் 77 வயதுவரையான ஆண்களைத் தனிமைப் படுத்திக் கொன்றனர். பின்னர் 25,000 இற்கும் 30,000இற்கும் இடைப்பட்ட தொகையைக் கொண்ட பெண்களும் சிறுவர்களும் ஸ்ரெப்ரென்ஈட்சா நகரில் இருந்து விரட்டப்பட்டனர். இறுதியில் தம்மிடமிருந்த படைக்கலன்களைக் கைவிட்டு டச்சுப் படையினர் ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தில் இருந்து வெளியேறினர்.

நேட்டோப் படைகளுக்கு ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் கொல்லப்படப் போகின்றார்கள் என அறிந்தும் அதைத் தடுக்க அவர்கள் ஏதும் செய்யவில்லை.

பொஸ்னியப் போரின்முன்னர் ஸ்ரெப்ரெனீட்சா நகரின் இருந்த 36,666 மக்கள் தொகையில் 27,572 பேர் பொஸ்னிய முஸ்லிம்களாகும். தற்போது இருக்கும் பத்தாயிரம் மக்களில் பெரும்பான்மையினர் சேர்பியர்களாகும். மீள் குடியேறச் சென்ற ஆயிரம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டுவிட்டனர்.
2004-ம் ஆண்டு யூக்கோஸ்லாவியாவிற்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal for the former Yugoslavia) ஸ்ரெப்ரெனீட்சாவில் 8,000 ஆண்களைத் தனிமைப்படுத்திக் கொன்றது ஒரு இனக்கொலை எனத் தீர்ப்பளித்தது. 2007-ம் ஆண்டு பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) இத்தீர்ப்பை உறுதி செய்தது.
ஸ்ரெப்ரெனீட்சா நகரத்தில் நடந்தது ஒரு இனக்கொலை என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்துவிட்டது.

போல்கன் பிராந்தியம் தற்போது மேற்கு நாடுகளுக்கும் இரசியாவிற்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக மாறிக் கொண்டிருக்கின்றது. இதன் ஓர் அமசமாகவே பிரித்தானியா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதே காரணத்திற்காக இரசியா இரத்துச் செய்து விட்டது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...