Tuesday, 27 October 2015

ஸ்பெயினில் இருந்து பிரிந்து போக விரும்பும் கடலோனியர்கள்

இங்கிலாந்தில் இருந்து ஸ்கொட்லாந்தும், ஸ்பெயினில் இருந்து கடலோனியாவும், இத்தாலியில் இருந்து வெனிசும், டென்மார்க்கில் இருந்து பரோத் தீவுகளும், பிரான்ஸில் இருந்து கோர்சிக்காவும், பெல்ஜியத்தில் இருந்து பிளண்டேர்சும், ஜேர்மனியில் இருந்து பவரியாவும் பிரிந்து செல்ல வேண்டும் என அவ்வப்பகுதிகளில் வாழும் மக்களில் கணிசமான அளவு மக்கள் விரும்புகின்றார்கள்.  இதில் அண்மைக்காலங்களாக செய்திகளில் கடலோனியாவின் பிரிவினைவாதம் அதிகமாக அடிபடுகின்றது. 2010-ம் ஆண்டு கடலோனியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக இருந்தனர். 2013-ம் ஆண்டு 48விழுக்காட்டினர் ஆதரித்தனர்.

மொழிப்பிரச்சனைதான் முதற்பிரச்சனை
பொருளாதார அடிப்படையில் உலகின் 14வது நாடான ஸ்பெயின் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியில் மோசமாகப் பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றாகும். அந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கையில் அங்கு கடலோனிய மக்களின் பிரிவினைவாதம் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. 1714-ம் ஆண்டு கடலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கடலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கடலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். இவருக்கு இத்தாலியிலும் ஜேர்மனியிலும் உள்ள பாசிஸ்ட்டுகளின் ஆதவரவும் இருந்தது. ஸ்பெயினில் 190 சித்திரவதை முகாம்களை வைத்திருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோ நான்கு இலட்சம் பேரைக் கொன்று குவித்தவர். பொது இடங்களில் கடலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கடலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கடலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்க்ளின் பெயர்கள் உட்பட எல்லாக் கடலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கடலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சிக்கு நாஜிகள் ஆதரவு வழங்கினாலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது.

வருமான மீள்பங்கீடு

ஏனைய ஸ்பானியப் பிரதேசத்தை மேற்கிலும் பிரான்சை வடக்கிலும் மத்திய தரைக் கடலைக் கிழக்கிலும் கொண்ட ஒரு முக்கோண வடிவப் பிராந்தியமே கடலோனியா ஆகும். ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு மாகாணமாகும். அங்கு 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியில் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயற்பட வேண்டும் என்ற விருப்பம் 19-ம் நூற்றாண்டில் இருந்து உருவாகியது. இதற்கான போராட்டங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு. 2012-ம் ஆண்டு ஸ்பானியத் தலைமை அமைச்சர் ரஜோய்யிற்கும் கடலோனிய மாநில ஆட்சியாளர் ஆதர் மார்ஸிற்கும் இடையிலே முறுகல் நிலை தோன்றியது. தலைமை அமச்சர் கடலோனிய மாநிலத்தின் வருவாயில் இருந்து ஸ்பெயின் வறுமை மிக்க மற்றப் பிராந்தியங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என வேண்டியது முறுகலை உருவாக்கியது.

வளம் மிக்க கடலோனியா
ஸ்பெயின் மற்றப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கடலோனியாவில் தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள பார்சலோனாவில் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய விமான நிலையம் உள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3 ஆவது பெரிய துறைமுகமாகும். உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் மத்தியதரைக்கடற் கரைப் பிரதேசமும் கடலோனியாவில் உண்டு. ஸ்பெயினின் மொத்த மக்கள் தொகையில் கடலோனியர்கள் 16 விழுக்காடாகும். ஆனால் அவர்களது உற்பத்தி மொத்தத் தேசிய உற்பத்தியில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். ஸ்பானிய ஏற்றுமதியில் இருபத்தைந்து விழுக்காடு கடலோனியாவினதாகும். கடலோனியா பிரிந்து சென்றால் ஸ்பெயின் நாட்டின் கடன் பளு அதிகரிக்கும் எனச் சொல்லப் படுகின்றது. ஸ்பெயின் நாட்டின் கடன்பளுவில் எத்தனை விழுக்காட்டை கடலோனியா ஏற்கும் என்பது பேச்சு வார்த்தைகளால் மட்டும் தீர்கப்பட வேண்டிய ஒன்று. ஸ்பானிய அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத நிலையில்  பேச்சு வார்த்தை மூலம் கடன் பளு பகிரப்படாமல் விட்டால் ஸ்பெயினின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 125 விழுக்காடாக அதிகரிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனையால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் மோசமாகலாம்.

கலந்தாலோசனையான கருத்துக் கணிப்பு

2014-ம் ஆண்டு கடலோனியப் பிராந்திய அரசு ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்த முன்வந்தது. அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு அரசமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு என்ற் பெயரை பொதுக் கலந்தாலோசனை என்னும் பெயரில் கடலோனியா பிரிந்து செல்வதா இல்லையா என வாக்கெடுப்பு நடந்தது. அதையும் அரசு தடை செய்த போது கடலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடாத்தியது. வாக்களித்தவர்களில் 80 விழுக்காட்டினர் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் கடலோனியப் பிராந்திய அரசு எத்தனை விழுக்காடு மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர் என்பதை அறிவிக்கவில்லை. மொத்தக் கடலோனிய மக்களில் 42 விழுக்காடு மக்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்கு பற்றியதாகச் சொல்லப் படுகின்றது. பதினெட்டு வயதிற்குக் குறைந்தோரும் வந்தேறு குடிகளும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

 Barcelonaவை மிரட்டும் Madrid
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கடலோனியப் பிராந்தியக் கட்சிகள் தமக்குள்ளே ஓர் உடன்பாட்டிற்கு வந்தன. அதில் முக்கியமாக வலதுசாரி கொன்வேர்ஜென்சியாக் மக்களாட்சிக் கட்சியும் எஸ்கியூரா குடியரசு இயக்கமும் ஒத்துழைக்க முடிவு செய்தது முக்கியமானதாக அமைந்தது. அவர்கள் 2015 செப்டம்பர் 27-ம் திகதி நடந்த பிராந்திய அவைக்கான தேர்தலை தாம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக கருதி மக்கள் தமக்கு ஆணையத் தரவேண்டும் எனச் சொல்லிப் போட்டியிட்டனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் அவர்கள் காத்திரமான வெற்றியைப் பெறவில்லை என ஸ்பானிய நடுவண் அரசு அறிவித்தது. ஆனால் கடலோயினப் பிரிவினைவாதிகள் தேர்தல் முடிந்தவுடன் தாம் 18 மாதங்களுக்குள் தனிநாட்டுப் பிரகடனம் செய்வோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் ஸ்பானிய நடுவண் அரசு அப்படி ஒரு பிரகடனம் செய்யுமிடத்து நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோயினியப் பிராந்திய அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்தது. அத்துடன் வாக்கெடுப்புச் செய்தமைக்காக கடலோனிய அதிபர் ஆதர் மாஸிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொது நிதியைத் தவறாகக் கையாண்டமை போன்ற குற்றங்களுக்காக ஆதர் மாஸ் மீது வழக்கும் தொடுத்துள்ளது.

ஸ்கொட்லாந்து பிரிவதா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு பிரித்தானிய அரசின் அனுமதியுடன் நடந்தது. அது கடலோனியர்களுக்கு ஒரு உந்து வலுவாக அமைந்தது. கடலோனியர்களின் பிரிவினை இனி ஸ்கொட்லாந்திற்கு உந்து வலுவாகலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...