Tuesday, 11 August 2015

சீனாவில் உருவாக்கப்பட்ட பல அம்பாந்தோட்டைகளால் அவதியுறும் பொருளாதாரம்

சீனாவின் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்கின்றது. இந்த வளர்ச்சிக்கு அதன் ஏற்றுமதியும் அதனது உள்நாட்டு முதலீடும் நல்ல பங்களிப்பைச் செய்கின்றன. 2008-ம் ஆண்டின் பின்னர் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்த பின்னர் வேகமாக வளர்ந்து வந்த சீன பொருளாதாரம் தனது வேகத்தை இழந்து விட்டது. சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல கீன்சிய முறைமையும் நிதிக்கொள்கையாளர்களின் முறைமையையும் சேர்த்துக் கடைப்பிடிக்கின்றது. அதன்படி சீனாவில் பணப் புழக்கம் அதிகரிக்கச் செய்ததுடன் அரச முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டன.

அரச செலவீனம்
சீன ஏற்றுமதி 2009-ம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டு தோறும் 19 விழுக்காடு வரை வளர்ந்து கொண்டிருந்தது.  2009-ம் ஆண்டு சீன ஏற்றுமதி இருபத்தைந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதை ஈடு செய்ய சீனா தனது அரச செலவீனங்களைக் கண்டபடி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு செலவீனத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதாயில் அது திறன்மிக்க வகையில் முதலிடப்பட வேண்டும். ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அவர்களைக் கொண்டு ஒரு பாரிய கிடங்கை வெட்டச் செய்து பின்னர் மேலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அக் கிடங்கை மூடச் செய்வது பொருளாதாரத்திற்குப் பயனளிக்காது. சீனாவின் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலில் காத்திரமானதுதான். ஆனால் பல பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரம் தொடர்பான புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல என்கின்றனர்.

சீனக் கூட்டாண்மைக் கடன்
சீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன்(14,200 கோடி) அமெரிக்க டொலர்களாக இருந்தது.  20ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. 2015இல் சீனக் கூட்டாண்மைகளின் மொத்தக் கடன் 16.1 ரில்லியன்கள் ஆகும்.  சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 160 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது.  கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை; 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன. சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி விழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும்(debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

வர்த்தகத்தைக் கணனி மயமாக்கும் முயற்ச்சி
சீனாவின் தொழிற்துறையில் ஏற்றுமதி அதிகரிப்பை நோக்காகக் கொண்டு அதிக முதலீடு செய்யப்பட்டது. ஆனால் தொழில் துறையில் முப்பது விழுக்காடு ஏற்றுமதி வீழ்ச்சியால் செயற்படாமல் இருக்கின்றது.  வளர்ச்சியடைந்த நாடுகளில் செய்வது போல இலத்திரனியல் வர்த்தகத்தை (e-commerce) வளர்ப்பது,  திறன்படு கைப்பேசிகளில் (smart phones) செயலிகள் (apps) மூலம் வர்த்தகங்களைப் பெருக்குவது, முகில் கணனிப் பயன்பாடு (cloud computing) போன்றவற்றிலும் 2015 மார்ச் மாதத்தில் இருந்து சீனா கவனம் செலுத்தி வருகின்றது.

வட்டிக்குறைப்பு வேலை செய்வதில்லை
பங்குச் சந்தையில் விலைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் சீனப் பொருளாதாரத்தைத் தூண்டவும் சீனாவில் வட்டி விழுக்காடு 2014 நவம்பருக்கும் 2015 ஜூனுக்கும் இடையில் நான்கு தடவை குறைக்கப்பட்டது. சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அரசத் துறை பெரும் பங்காற்றுகின்றது. அரசுத் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் வட்டி குறையும் போதோ அல்லது குறையும் போதோ பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. முதலாளித்துவ நாடுகளில் வட்டிக் குறைப்பு பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதுபோல் அரச முதலாளித்துவ நாடுகளில் அதிகரிப்பதில்லை.

சீனாவின் லோக்கர் முயற்சி

சீனா தனது பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்ட உள்ளூராட்சி மட்டத்தில் செலவுகளைக் கூட்டியது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரச வங்கிகள் கடன் கொடுத்து அவற்றின் முதலீடுகள் மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரிக்க சீனா முயன்றது. உள்ளூராட்சி மன்றங்களும் அவற்றை நடாத்தும் பொதுவுடமைக் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளைச் செய்தனர். இதனால் உற்பத்தி பெருகியதுடன் அதிக வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டன.

சீன அம்பந்தோட்டைகள்
சீனாவின் உள்ளூராட்சி மன்றங்கள் செய்த முதலீட்டினால் அதன் மூலதனங்கள் அதிக வினைத்திறன் தரக்கூடிய வகையில் பகிரப்படவில்லை. பொதுவாக அரச முதலாளித்துவ நாடுகளில் முதலீடுகள் வினைத்திறனாகச் செய்யப்படுவதில்லை என்பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் முதலீட்டினால் அம்பாந்தோட்டையில் செய்தது போல போதிய அளவு பயன்படுத்தப் படாத நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள் பல உருவாக்கப்பட்டன.  சீனாவின் அபிவிருத்திக்கும் சீர்திருத்தத்திற்குமான ஆணைக்குழு 2014-ம் ஆண்டு வெளிவிட்ட அறிக்கையின் படி 2009இற்கும் 2014இற்கும் இடையில் 6.8 ரில்லியன்(68 இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வினைத்திறன் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.  கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனாவில் செய்யப்பட்ட வினைத்திறனற்ற முதலீடுகள் பத்து ரில்லியன் (நூறு இலட்சம் கோடி அல்லது கோடானுகோடி) அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.  சீன உள்ளூராட்சி மன்றங்களின் கடன் ஐந்து ரில்லியன் (ஐம்பது இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களானது. இந்தக் கடன் பளுவைத் தணிக்க சீன அரசு உள்ளூராட்சி மன்றங்கள் கடன் முறிகளை விநியோகித்து நிதி திரட்ட அனுமதி வழங்கப்பட்டது.

திறனற்ற முதலீடு
தேவையற்ற கட்டிட நிர்மாணங்கள், மிகையான உட்கட்டுமானங்கள், பயனுறா(idle) உற்பத்தித்துறையில் முதலீடு ஆகியவற்றில் அரசு செய்த செலவுகளே 2008-ம் ஆண்டின் பின்னர் சீனப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பகுதியாக அமைந்தது. எழுபது விழுக்காடு செயற்திறன் கொண்ட தொழிற்துறையால் போதிய அளவு இலாபம் ஈட்ட முடியவில்லை. இதனால் சீனாவின் பங்குச் சந்தை ஜுலை மாதத்தில் கடும் வீழ்ச்சியைக் கண்டது. சீன அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளையும் மீறி பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. சீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்தித்தது. இந்த இழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது.

கண்டு பிடி சீனா கண்டுபிடி
கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்த போதிலும் (சில கணிப்பீடுகளின் படி முதலாவது) சீனா இன்னும் ஒரு அபிவிருத்தியடையாத நாடாகவே இருக்கின்றது. அது இப்போதும் ஒரு வளர்முக நாடாகவே இருக்கிறது. ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization),  பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே  அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.
Sony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.


சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புப் பிரச்சனை
சீனாவின் பிரச்சனைகளுக்குள் பெரும் பிரச்சனையாக இருப்பது அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பு. அங்கு வேலை செய்யும் மக்கள் தொகைக்கும் வயோதிபர்களின் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாசாரம் மோசமடைந்து கொண்டு போகின்றது.   வேலைசெய்வோரின் தொகையுடன் ஒப்பிடுகையில் வேலை செய்ய முடியாத வயோதிபர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு போகின்றது. இதை ஈடு செய்ய அங்கு உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். ஆனால் சீன உற்பத்தித் திறனும் குறைந்து கொண்டே போகின்றது.  பார்க்க
எதையும் பிளான் பண்ணிச் செய்யும் சீனர்களால் முடியும்
சீனாவில் வருமான வரி செலுத்துவோரின் தொகை சீன மக்கள் தொகையில் 2 விழுக்காட்டிலும் குறைவானவர்களே. இது சீன பொருளாதாரம் மந்த நிலையை அடையும் போது அரச நிதி நிலைமையில் ஒரு மோசமான நிலையைத் தோற்றுவிக்கலாம்.  தற்போது 7 விழுக்காடு வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் 2017-ம் ஆண்டு 4 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தப் பின்னணியில் சீனாவில் அரச நிதி நிலையில் பாரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் வரவிருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்பத் திட்டமிட்டு அத்திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றும் திறமையும் அனுபவும் சீனர்களிடம் நிறைய உண்டு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...